Home » Politics » திராவிட இயக்க வரலாறு – கருணாநிதி முதல் கலைஞர் வரை

திராவிட இயக்க வரலாறு – கருணாநிதி முதல் கலைஞர் வரை


DMK_2-500x500_0

திராவிட இயக்க வரலாறு கருணாநிதி முதல் கலைஞர் வரை, ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், ரூ 210

திராவிட அரசியல் என்றவுடன் இன்று பல இளைய தலைமுறையினர் அசூயை அடைகின்றனர். குறிப்பாக பல பொய்யான / பாதி உண்மையான / ஒரு பக்க சார்பான தகவல்களே முக நூல் போன்ற ஊடகங்களில் பகிரப்படுகின்றன. பத்திரிகைகள் பற்றி பேச விரும்பவில்லை. அந்த வகையில் இந்த நூல் ஒருகோட்டுச் சித்திரத்தை வரைகின்றது. மிக எளிமையான நடை. கிட்டத்தட்ட தினத்தந்தி நடை. தினத்தந்தியின் வரலாற்று சுவடுகள் நூலில் கூறப்பட்ட தகவல்கள், கொஞ்சம் கூடக்குறைய வருகின்றன. யார் தமிழகத்தின் இந்தக் காலகட்டத்தை எழுதினாலும் இதைத்தான் சொல்லமுடியும். மொத்தமாக மூன்று நாளில் படித்து முடித்துவிடக்கூடிய புத்தகம்தான் – என்றாலும் நம்மை சில இடங்கள் நிதானமாக யோசிக்க வைக்கின்றன.

டெல்லியின் முக்கியமான மெட்ரோ ரயில் நிலைய சந்திப்பு, தற்போது கன்னாட் பிளேஸ் என்று அழைக்கப்படும் இடத்தில்  உள்ளது. பெயர் ராஜீவ் சவுக் (நாற்சந்தி). ரொம்ப நாளாக முன்னாள் பிரதமரின் பெயரை வைத்துள்ளார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் தான் தெரிந்தது பெயரின் காரணம். மண்டல் கமிஷனை எதிர்த்து தீக்குளித்து இறந்த மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நினைவாக வைக்கப்பட்ட பெயராம். எந்த அளவிற்கு இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலை என்பதைப் பாருங்கள்.

திராவிட இயக்க வரலாறு நூலின் இரண்டாம் பாகம் – அண்ணாவிற்கு பிறகு என்ற இந்த நூலை எடுத்தவுடன் நான் முதலில் புரட்டியது இட ஒதுக்கீடு பற்றிய அத்தியாயங்களை படிக்கத்தான். திராவிட இயக்கத்தின் மிகப் பெரிய சாதனையே நாம் பெற்று இருக்கும் 69% இட ஒதுக்கீடுதான். ஆண்டவன் பெயரால் உறுதிமொழி எடுத்த முதல் திராவிட இயக்க முதலமைச்சர் ஒருவரை பெரியாரின் திராவிடர் கழகம் ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று விழா எடுத்து கொண்டாட வைத்த சாதனை.

மண்டல் கமிஷன் பற்றி சொல்லும்போது ஆசிரியர் ஏமாற்றவில்லை என்று சொல்ல விரும்பினாலும், போராட்ட விவரங்கள், ஆதரவு மற்றும் எதிர்ப்பு பற்றிய இந்திய நிலவரங்களை அவர் விவரமாக சொல்லாதது ஒரு குறைதான். இத்தனைக்கும் தமிழகத்தின் கதையை மட்டும்தான் சொல்கிறார் என்று சொல்லிவிட முடியாது, கிட்டத்தட்ட அத்தனை அத்தியாயங்களிலும் டெல்லி அரசியல் வருகிறது.   ஆசிரியர் 2009 ஆம் ஆண்டில் இருந்து பின்னோக்கிப் பார்கிறார் என்பதால் சில விஷயங்களை முன் பின்னாக சொல்லக் கூடிய சுதந்திரத்தைப் பெற்றுள்ளார். சில இடங்களில் பொருத்தமாகவும் உள்ளது. ஆனால் வரலாறு என்று தலைப்பில் சொல்லிவிட்டு பல விஷயங்கள் மேம்போக்காக மட்டுமே சொல்லப்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

சர்க்காரியா கமிஷன் அறிக்கை பற்றியும், அந்த வழக்கு பின்வாங்கப்படதையும் இந்நூல் கூறினாலும் அவ்வறிக்கையின் குற்றச்சாட்டுகளின் சாரம் கூடச் சொல்லப்படவில்லை. இதற்காக இப்போது முகநூலில் கருணாநிதியின் சொத்துக்கள் என்ற பெயரில் வரும் தகவல்கள் போன்று எதிர்பார்க்கவில்லை, ஆனாலும் இன்றுவரை அதிமுகவாலும், கூட்டணியில் இல்லாதபோது  காங்கிரஸ் மற்றும் பாமக போன்ற கட்சிகளாலும் விமர்சிக்கப்படும் சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டு, விரிவாக எழுதப்பட தகுதி வாய்ந்ததே.

எம்.ஜி.ஆரின் புனித பிம்பம் எப்படி கட்டமைக்கப்பட்டது, அவர் பெயருக்கு இன்னும் இருக்கும் செல்வாக்கு போன்றவை அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் அவர் கட்சி மாறி கூட்டணி வைத்ததும், சரண் சிங்கை அப்படியே கைவிட்டுவிட்டு ஜனதா கட்சியுடன் பேரம் முடித்ததும் படிக்க வேண்டியவை. திராவிட இயக்கம் பற்றி விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டி, இப்பொழுதுதான் படிக்கத் தொடங்கும் இளையோருக்கு நல்ல அறிமுக நூல்.

– சட்டநாதன்

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


1 Comment

  1. சரவணன் says:

    /// சமீபத்தில் தான் தெரிந்தது பெயரின் காரணம். மண்டல் கமிஷனை எதிர்த்து தீக்குளித்து இறந்த மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நினைவாக வைக்கப்பட்ட பெயராம். ////

    அப்பட்டமான பொய். உள்வட்டம் ராஜீவ் (காந்தி) பெயராலும் வெளி வட்டம் இந்திரா (காந்தி) பெயராலும் அழைக்கப்படுகின்றன. பெயர் மாற்றம் செய்தவர் எஸ்.பி.சவான், நரசிம்மராவின் உள்துறை அமைச்சர். நன்றாக நினைவில் இருக்கும் சமீப வரலாற்றை இப்படியெல்லாம் யார் திரிக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: