Home » Politics » தமிழக அரசியல் வரலாறு

தமிழக அரசியல் வரலாறு

kjp044

தமிழக அரசியல் வரலாறு, (2 பாகங்கள்), ஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், ரூ 600

தமிழக அரசியல் கட்சிகளின் வரலாற்றை இரண்டு பாகங்களாக ஆர். முத்துக்குமார் பதிவு செய்திருக்கும் புத்தகம்தான் ‘தமிழக அரசியல் வரலாறு’. பெரியார், எம். ஜி. ஆர் போன்றவர்களது வாழ்க்கை வரலாறுகள் மொழிப்போர், திராவிட இயக்க வரலாறு என்று தமிழக அரசியல் வரலாற்றோடுத் தொடர்புடைய சில புத்தகங்களை எழுதியிருப்பதால் அவர் எடுத்துக் கொண்டத் தலைப்போடு மிகுந்த பரிச்சயமானவர்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரசுக்குள் இருந்த குழு ஆதிக்க நிலைகள், காமராஜரின் ராஜதந்திரம், பெரியாரோடு காமராஜரின் நட்பும் ஆதரவும், பெரியாரோடு அண்ணாவின் முரண்பாடும் மதிப்பும் எதிர்ப்பும், அண்ணா-காமராஜர் முட்டல் மோதல்கள், திமுக-காங்கிரஸ் எதிர்நிலைகள், எமர்ஜென்சிக் காலத்தில் கலைஞரின் எதிர்ப்புக் குரலும், எம். ஜி. ஆரின் மழுப்பல்களும், இந்திரா காந்தியுடனான கலைஞரின் முரண்களும், எம். ஜி. ஆரின் சமரசங்களும் என்று முதல் பாகம் முழுக்க தமிழக அரசியல் வரலாற்றில் தான் எடுத்துக்கொண்ட கால வரையறைக்குட்பட்ட நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார்.

இரண்டாம் பாகம் எடுத்துக்கொண்ட கால வரையறைக்குள் எம். ஜி. ஆரின் ஆட்சிக்காலம் துவங்கி 2000 ஆம் ஆண்டை நெருங்கும் சமயத்தில் நிலைத்தன்மையற்றுத் தடிமாறிக் கொண்டிருந்த மத்திய அரசு நிலைபெறத் துவங்கிய காலகட்டம் வரையும் பதிவு செய்திருக்கிறார். எம். ஜி. ஆரின் ஆட்சிக்காலம், இடஒதுக்கீட்டுக்கு எதிரான அவரின் நிலைப்பாடு, தலைநகர் மாற்ற முயற்சிகள், எம். ஜி. ஆர் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள், அ. தி. மு. க வின் பிளவுகள், உலகத் தமிழ் மாநாடுகள், ஈழ அரசியல், சர்க்காரியா வர்மா ஜெயின் ஷா கமிசன்கள், காவிரி நீர் சிக்கல் என்று எடுத்துக்கொண்ட காலவரையறையின் முக்கிய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசியல் வரலாற்றைப் பற்றிப் பேசும் போது தவிர்க்க முடியாத தேசிய அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களைப் பேசும்போது தேவையான நிகழ்வுகளை மிகச் சுருக்கமாக அலசிவிட்டு மீண்டும் ஒழுங்காகத் தமிழக அரசியல் வரலாற்றுக்குள் புகுந்து விடுவது புத்தகத்தின் நல்ல அம்சங்களுள் ஒன்று. இந்தப் புத்தகத்திலேயே (2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டப் புத்தகம். ) தமிழகத்தில் சில நாட்கள் முன்பு வரை பிரபலமாக இருந்த மக்களின் முதல்வர் என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறார் முத்துக்குமார். காமராஜரை அப்படி அழைத்திருக்கிறார்.

வரலாறு எழுதுதலில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. காலக்கோட்டை நீட்டி முழக்கிச் சொல்லும் பள்ளிப் பாடப்புத்தக வரலாறு எழுதுதல் ஒருவகை (NCERTயின் பழைய பாடப்புத்தகங்களில் R. S. ஷர்மா, பிபன் சந்திரா எழுதிய புத்தகங்களை இவ்வகையில் சேர்க்க முடியாது). நிகழ்வுகளைப் பதிவு செய்து வைக்கும் முறையிலான வரலாறு எழுதுதல் ஒன்று இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளோடு, காலக்கோட்டை அலசி ஆராய்ந்து பகுப்பாய்வு செய்யும் முறை ஒன்றும் இருக்கிறது. மார்க்சியத்தை வரலாறெழுதுதலுக்கானப் பகுப்பாய்வு கருவியாகக் கொண்டு எழுதும் முறை ஒன்று இருக்கிறது. இன்னும் சில வகையிலான வரலாறு எழுதுதல் முறைகள் இருக்கின்றன. இவை எல்லாம் போக வார இதழ்களுக்காக எழுதப்படும் வரலாறு இன்னொரு வகை. மிகவும் பிரபலமான வகை இம்முறைதான். இந்தப் புத்தகமும் அவ்வகையில் எழுதப்பட்ட வரலாறுதான்.

புத்தகத் தலைப்பிலேயே முதல் சிக்கல் தொடங்குகிறது. ‘தமிழக அரசியல் வரலாறு’ முதல் பாகம் ‘சுதந்தரம் முதல் எமர்ஜென்சி வரை’ என்பதாக இருக்கிறது. முதல் கோளாறு தமிழக அரசியல் வரலாறு சுதந்தரத்திலிருந்து துவங்கியது இல்லை. தமிழகத்தின் நவீன அரசியல் வரலாறு அதற்கும் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு துவங்குகிறது (The Madras Dravidian Association, திராவிடர் சங்கம் போன்ற அமைப்புகளைக் கணக்கில் கொள்ளும்போது), அல்லது சுதந்தரம் கிடைத்த காலகட்டத்துக்குப் பத்து ஆண்டுகள் முன்பு தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின்/நீதிக்கட்சியின் ஆட்சிக்காலம் இங்கு இருந்திருக்கிறது. குறைந்தபட்சம் நவீனத் தமிழக அரசியல் வரலாறு நீதிக்கட்சியில் இருந்தாவது துவங்கியிருக்க வேண்டும். இப்படி ஒரு காலகட்டத்தைச் சேர்க்காதபோது புத்தகத்தின் தலைப்பு அதற்கேற்றபடி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது சிறு மாற்றமாவது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

புத்தகத் தலைப்பின் இரண்டாவது கோளாறு, தலைப்பில் இடம்பெற்றிருக்கும் ‘வரலாறு’ என்ற வார்த்தைதான். நிகழ்வுகளின் தொகுப்பாக மட்டுமே இருக்கும் ஒரு புத்தகத்தை வரலாறு என்று அழைப்பதை என்னளவில் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். புத்தகத்தின் மொழிநடையே பல இடங்களில் இது வரலாறாக இருக்க முடியாது என்று ஆங்காங்கே காட்டிக்கொண்டே இருக்கிறது.

உரிய தரவுகளே இதுவரை கிடைக்கவில்லை, அத்தகையத் தரவுகளே இல்லாதபட்சத்தில் மட்டுமே வரலாறு எழுதுதலில் பயன்படுத்தப்பட வேண்டிய சில வார்த்தைகளான, அது குறித்து இன்றுவரை தெரியவில்லை’, ‘அப்படியாக இருக்கலாம்’, ‘தெரியவில்லை’ புத்தகத்தில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வரலாறு எழுதும் ஒரு ஆசிரியன் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் போது அது குறித்து கிடைக்கக்கூடிய ஆகச்சிறு தரவையும் பதிவு செய்து வைப்பார்கள். பிற்காலத் தலைமுறை அங்கிருந்து முன்னெடுப்பதற்கான வாய்ப்பாக அது அமையும்.

மிகச் சமீப காலத்து வரலாற்றைக் குறித்த புத்தகத்தை எழுதுவதிலேயே இத்தகையத் தரவுகளைத் தேடிப்போகாததை என்னவென்று சொல்வது. இத்தனைக்கும் திராவிட இயக்கங்களோடு தொடர்புடைய தலைவர்கள் பலரும் எட்டும் தூரத்திலேயே இருக்கிறார்கள். வே. ஆனைமுத்து, இரா. செழியன் போன்றவர்களைத் தொடர்பு கொண்டிருந்தால் இத்தகைய வரலாறு எழுதுதலுக்கு எதிரான வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம்.

இத்தகைய நிலைக்கான காரணமாக நான் கருதுவது, முதன்மை ஆதாரங்களாக செய்தித்தாள், இதழ்கள், புத்தகங்களை மட்டுமே பயன்படுத்தி இருப்பதுதான். சமீப கால நிகழ்வைப் பதிவு செய்திருக்கும் போது அதனோடு தொடர்புடைய பலரையும் பேட்டி எடுத்திருக்கலாம். புத்தகம் முழுக்க பகுப்பாய்வாகவும் இல்லாமல் கள ஆய்வாகவும் இல்லாமல் நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்துவிட்டது.

வார இதழ் ஒன்றில் எழுதும் போது காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் இது போன்ற பெரும் உழைப்புகளைத் தடை செய்துவிடும். அதனாலேயே பல இடங்களில் பல்லிளித்துவிடும். (இதே போன்று வேறு ஒரு வார இதழில் வரலாற்றுத் தொடர் ஒன்றை எழுதிய சிறுகதையாளர், உரையாசிரியர், நாவலாசிரியர், இலக்கிய ஆளுமை Colonel XYZ என்பவர் பெயரை கலோனியல் XYZ என எழுதியிருந்தார். இது நிச்சயம் எழுத்துப்பிழையாக இருக்க முடியாது. அடுத்த சில பக்கங்களில் அது கர்னல் ஆக மாறியிருந்தது. ) வார இதழ்களில் வரலாறு எழுதப்படும் போது அது இப்படியான பல சிக்கல்களைத்தான் கொண்டிருக்கும்.

தமிழக அரசியல் வரலாறு என்பதை தமிழக அரசியல் கட்சிகளின் வரலாறாக ஆசிரியர் சுருக்கிக் கொண்டிருக்கிறார். அதனால், தமிழகம் சந்தித்த சில சிக்கல்களில் இரு பெரும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை மட்டும் பதிவு செய்கிறார். சில சமயம் மூன்றாம் நிலை நான்காம் நிலை கட்சிகளின் நிலைப்பாட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். இதனால் அது காவிரி நதி நீர் சிக்கலாக இருக்கட்டும், 69% இடஒதுக்கீடு தொடர்பான சிக்கலாக இருக்கட்டும், அவையெல்லாம் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசின் செயற்பாடுகளை ஒட்டியே விவாதிக்கப்பட்டிருப்பது ஒரு முழுமையான சித்திரத்தை வழங்காமல் போகிறது.

பெரும் அரசியல் கட்சிகளது வரலாற்றை மட்டும் எடுத்துக்கொள்வதால் தமிழக அரசியலோடு தொடர்புடைய பல சிறு சிறு இயக்கங்களும், தமிழ்த் தேசிய இயக்கங்களும் கட்சிகளும், நக்சலிச இயக்கங்கள் தொடர்பான வரலாறுகள் பதிவு செய்யப்படாமல் போயிருக்கின்றன. உதாரணத்துக்கு பெரும் அரசியல் கட்சிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும் பார்வையை நூலாசிரியர் எடுத்துக்கொள்வதால் மண்டல் கமிசன் அமலாக்கத்துக்கு திராவிடர் கழகம் மட்டுமே வெகுவாகப் போராடியதைப் போன்ற தோற்றம் புத்தகத்தில் ஏற்படுகிறது. வே. ஆனைமுத்து என்ற பெயரோ அவரது முயற்சிகளோ எங்குமே பதிவு செய்யப்படவில்லை. இத்தனைக்கும் ஆய்வுக்கு உதவிய நூல்களில் அவருடைய நூல்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இரண்டாம் பாகத்தின் இறுதி அத்தியாயங்கள் தமிழக அரசியல் களத்திலிருந்து தேசிய அரசியல் களத்துக்கு நகர்ந்துவிடுகிறது. தமிழக நிலவரங்களைவிட நிலையற்றுத் தடுமாறிக் கொண்டிருந்த மத்திய அரசின் நிகழ்வுகளைப் பதிவு செய்துவிடுகிறார். இத்தனைச் சிக்கல்களையும் கடந்து தமிழக அரசியலின் நிகழ்வுகளை காலவரிசைக்கிரமமாகத் தொகுத்து வழங்கும் ஓர் ஆவணமாக இப்புத்தகத்தைக் கருதிக்கொள்ளலாம்.

– மாமூலன்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-786-2.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: