Home » Short story » பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும்

பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும்

பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும், ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், ரூ 125

இப்புத்தகம் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. எழுத்தாளர் ஜெயமோகன் அமானுஷ்யம் என்னும் எல்லையையும் தாண்டி மனிதனுள் இருக்கும் துரோகம், பெருங்காமம், குற்ற உணர்ச்சி போன்ற உணர்வுகளை மிக நுட்பமாகக் கையாண்டிருக்கிறார். மருத்துவம் என்ன செய்வதென்று யோசித்து, அதை ஆராய்ந்து, அதற்கு அவர்கள் மொழியில் அவர்கள் சொல்லும் தீர்வுகளையும் சேர்த்து நாம் பார்த்தால், சாதாரண மனிதர்களுக்கு அது அலுப்பையே தருகிறது. ஆனால் அதையே புனைவாக்கி நமக்குக் கொடுத்தால், அது நிறைய நமக்கு உள்ளீடுகளையும், மதிப்புகளையும் புகுத்துகின்றன.

எந்த கதையை எடுத்தாலும் அதன் இறுதி கட்டமே நம் மனதில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி என்னுள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கதை ‘ரூபி’. அதில் குதிரை ஓட்டும் ஜாக்கியையும், ‘ப்ளாக் வைன்’ என்னும், ஜெயிக்கும் என எவரும் நம்பாத ஒரு குதிரையுமே மையப் பாத்திரங்கள். இவர்கள் இவரையும் மையப்படுத்தி நகரும் கதை. இடையிடையே ரூபி என்னும் குதிரையின் மரணம் பற்றி பேச்சு வருகிறது. இதில் மனிதனின் மன ஆற்றலையும் மிருகங்களைப் பழக்கப்படுத்துவதையும் மையமாகக் கொண்டு நகர்கிறது கதை. கடைசியில் தேவதையாய் தெரியும் ரூபி என்ன செய்தது என அறிந்த பொழுது, என்னையும் மீறி அதை நேரில் கண்டதைப் போல் கத்தினேன். இதுவே இப்புத்தகத்தின் கடைசி கதை. இதை படித்து முடித்து புத்தகத்தை மூடிய போது ஏனோ மனதில் ஒரு வித்தியாசமான உணர்வு.

நான் விரும்பிய இன்னொரு கதை ‘பாதைகள்’. ஒரு பெரிய வீடு, அதுதான் கதையின் மையப் பகுதி. குடியில்லாமல் பூட்டியிருக்கும் ஒரு வீட்டைப் பற்றி பலவித கதைகள் உலாவுவதை நாம் அன்றாட வாழ்க்கையில்கூடப் பார்த்திட முடியும். அந்த வீட்டில் தனியாளாய் தங்கிய ஓவியனையும் ஒதுக்கும் மக்கள், ஆனால் அவனைக் காணச் செல்லும் ஒரு இளைஞன் கூறுவதாய் நகருகிறது இக்கதை. அதன் பிற்பாதியில் சுவர் முழுவதும் கதவுகள் அமைத்து பல பாதை இருப்பது போன்றதொரு பிரமையை உருவாக்குகிறார் அந்த ஓவியர். பின்னால் திரும்பி அவ்வீட்டிற்கு செல்லும்போது அவனுக்குள் ஏற்படும் பயவுணர்ச்சியை திகில் கலந்து காட்டுகிறது.

‘அறைகள்’ ஒரு தனிமனிதனின் மனத்தையும், அவன் அந்தரங்கமாய் வைத்திருக்கும் ஒரு பெண்ணை நோக்கியும் கதை செல்கிறது. அவன் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சியும், அவளின் மீது அவனுக்கு இருந்த ஆசையையோ பரிதாபத்தையோ அவன்மீது வைக்காத அவளை தனியாய் ருசிக்கிறார். அவரின் இறுதி மூச்சில் அவர் பேசும் வார்த்தைகள் குடும்பம் இன்றி வாடும் மனிதர்களின் மன நிலையைக் காட்டுகிறது.

‘தம்பி’ மீண்டும் ஒரு குற்ற உணர்ச்சியால் வாடும் அண்ணனின் கதை. ‘இமையோன்’, ‘இரண்டாவது பெண்’, ‘குரல்’ ஆகிய மூன்றும் பெண்களையும் மனித மனங்களின் உரையாடலையும் அடித்தளமாய் அமைத்து நகரும் கதை. கதையைச் சொல்ல அதன் பின்னால் ஒவ்வொரு காரணமும், ஒவ்வொரு நிகழ்வும் இருக்கிறது. ‘ஐந்தாவது நபர்’ ஆவியிடம் பேசுவதாய் நகர்ந்து கடைசியில் ஒரு மனிதனின் துரோகத்தை துகிலுரிப்பதாய் முடிகிறது. ‘யட்சி’யும் ‘ஏழுநிலைப் பந்தலு’ம் நம் ஊர்களில் திரியும் பல கதைகள் போன்றதொரு கதை. ஆனால் நுட்பமான கோணங்களில் கதையைச் சொல்லி நகர்கிறது.

இப்புத்தகத்தின் கதைகள் பெரும்பாலும் நம்மைச் சுற்றியே சுழலுகிறது. நம் மனதில் பேய்களைப் பற்றிய ஆவலை விதைக்கிறது, அதைக் குறித்து யோசிக்க வைக்கிறது. நம்மை திகிலடைய வைக்கும் சமயங்கள் ஆகட்டும், ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் சமயங்கள் ஆகட்டும், தன் கடமையை வர்ணனைகளும், உரையாடல்களும் நன்றாகச் செய்கின்றன. பல பிராந்திய உரையாடல்களை என்னால் முதல்முறை புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்காக அவைகளை இரு முறை, மூன்று முறைகூடப் படிக்க வேண்டியதாயிற்று. ஆனால் எனக்கு அந்த பிராந்திய மொழி அறிமுகம் இல்லாததால்தான் இப்படி ஒரு பிரச்சினை இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

மொத்தத்தில் வேறொரு உலகத்திற்கு நம்மைக் கடத்திச் சென்று, இவ்வுலகத்தின் அமானுஷ்யங்களைப் புரிய வைக்கிறது. அவற்றை நம் மனதில் வேரூன்ற வைக்கிறது, அவைகளை வெறுத்து ஒதுக்காமல் நம்மை இருக்க வைக்கிறது.

– மா. ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-503-5.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


2 Comments

  1. அற்புதமான விமர்சனம் .நன்றாக படித்து உள்வாங்கிக் கொண்ட தன்மை மதிப்புரையாய் வெளிடுவதன் மூலம்தான் நாம் இந்த பகுதிக்கு செய்யும் நன்றி .

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: