Home » Politics » ஓ பக்கங்கள் 2014

ஓ பக்கங்கள் 2014

ஓ பக்கங்கள் 2014, ஞாநி, அகரம் வெளியீடு, ரூ 180

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதே ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்குச் செல்கிறார் என எழுதிய ஞாநி, விடுதலையே ஆன பின்னர் ஜெயலலிதா வழக்கு பற்றி இனிமேல் ஓ பக்கங்களில் படிக்க முடியாதபடி, முன்னுரையாக ஒரு முடிவுரை எழுதிவிட்டே ஆரம்பிக்கிறார். இது தான் ஓ பக்கங்கள் பத்தியில் கடைசி புத்தகம். 2005 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் பத்திரிக்கை மூலம் ஆரம்பித்த இந்தப் பயணம், 2014 ஆம் ஆண்டு கல்கி இதழின் மார்ச் மாத பதிப்புடன் முடிந்துள்ளது.

எனக்கு ஞாநியை ஓ பக்கங்கள் மூலமாக மட்டுமே அறிமுகம். அதற்கு முன்னால் தூர்தர்ஷனில் பெரியார் பற்றிய தொடர் ஒன்று ஒளிபரப்பானபோது, அத்தொடரின் நடுவே பேசுவார். அப்போது படித்துக்கொண்டு இருந்தேன். சமூகம் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது, இவர் பெயர் ஞாநி என்பதுகூட தெரியாது. ஆனால் ஞாநியின் சிந்தனைகள் என்னையும் அறியாமல் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி உள்ளது என்பதை உணர்கிறேன்.

டெல்லி நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவத்தின்போது, பெண்கள் இரவு நேரங்களில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்தான், ஆனால் அவர் தனது நண்பரோடு சினிமாவிற்கு போய் வந்ததில் என்ன தவறு உள்ளது என்று கேட்டு என்னுடைய டெல்லி வாழ் நண்பர்களால் விநோதமாக பார்க்கப்பட்டேன்.  இந்தப் புத்தகம் தனது சமூக கண்ணோட்டம் கூர்மையாக வேண்டும் என நினைப்போரால் அவசியம் வாசிக்கப்படவேண்டும். நான் படித்த புத்தகம் 2014 ஆம் ஆண்டின் பல்வேறு இதழ்களில் வந்த பத்திகளையும், ஞாநியின் முகநூல் பதிவுகளையும் (டிசம்பர் 2013 முதல் டிசம்பர் 2014 வரை) கொண்ட தொகுப்பாகும். மு. க. அழகிரி பற்றிய முதல் கட்டுரையைப் படிக்கும், தமிழ்நாட்டின் நடப்பு தெரிந்த எந்தப் புதிய வாசகரும் அதிர்ந்துதான் போவார். அதிலும் அழகிரிக்கு மூன்று தீர்வுகளைச் சொல்லி, அதில் கடைசி இரண்டைத் தனது பரிந்துரையாக சொல்லக் கூடிய நெஞ்சுரம் ஞாநிக்கு மட்டும்தான் உண்டு. ஏதோ இது அ தி மு க ஆட்சி என்பதால் அல்ல, பொதுவாகவே அவர் தனக்கு சரி என்று படுவதை எழுதுபவர், கலைஞரின் ஆட்சியின் போது, கண்ணகி சிலை பற்றிக் கருத்து சொல்ல அவர் தயங்கியதில்லை. 

தான் ஆம் ஆத்மி கட்சியில் ஏன் சேர்ந்தேன் என்றும் ஏன் விலகினேன் என்றும் அவர் எழுதி உள்ள பத்திகளும் அவர் காட்டி உள்ள வெள்ளை அறிக்கையும் இன்னும் வரப் போகும் சந்ததியினருக்கு நம்பிக்கையும் பாடமும் ஆகும். “இன்னும் தேவைப்படும் அண்ணா” என்ற கட்டுரை, தலைவர் ஆகும் ஆசை கொண்ட அனைவராலும் படிக்கப்படவேண்டும். தனக்குக் கீழே இருப்பவரை உற்சாகப்படுத்தி எழுத வைப்பது, எல்லாவற்றையும் தானே செய்துவிட வேண்டும் என எண்ணாமல் மற்றவரையும்கொண்டு வந்தது, கட்சியைக் குடும்பமாகக் கருதி, குடும்பத்தைக் கட்சியாக மாற்றாதது எனப் பட்டியலிட்டு, அண்ணா பற்றிய நம் பார்வையை விசாலமாக்குகிறார்.

இன்று உதவி இயக்குநர்களால் மட்டுமே பெயர் பெறும் பல இயக்குநர்கள், எப்படி அவர்களை பயன்படுத்தி தூக்கி எறிகிறார்கள், அதற்கு அவர்கள் செய்யும் தந்திரங்கள் என்ன என்று “திருடாதே” கட்டுரையில் எழுதி உள்ளதைப் படிப்பது சினிமா கனவில் உள்ளவர்க்குப் பாடம்.

தீவிர சமூகவியல் என்பதோடு ஞாநியின் உண்மையான இசை ஆர்வத்தின் ஒரு கீற்றையும் நாம் “கன்னுக்குட்டி காங்கோ” என்ற கட்டுரையில் பார்க்கிறோம். இதை எல்லாம்விட உச்சம், தமிழகத்தின் உச்ச நட்சத்திரம், தமிழக அரசியல் வானில் மின்ன முடியுமா என்ற கட்டுரைதான். கட்டுடைப்பு அல்ல, போட்டுடைப்பு.

ஞாநியின் முகநூல் பக்க பதிவுகளை நான் “Like”  செய்துள்ளதால், பெருமளவு அவரது பதிவுகளைப் படித்திருக்கிறேன். இருந்தாலும் இந்தப் புத்தகத்தில் அவர் சொல்லிய அனைத்தையும் ஒரே இடத்தில் படிப்பது ஒரு சுவைதான். இங்கே உள்ளவை பெரும்பாலும் அவரால் எழுதப்பட்டவை, ஒரு சில பதிவுகள் மற்றவர்களுக்கு பதிலாகச் சொல்லப்பட்டவை. இங்கே ஞாநியின் உணர்வபூர்வமான முகத்தையும் பார்க்கலாம். அவர் வறண்ட சிந்தனைவாதி அல்ல. குறிப்பாக தோழர் பெரியார் சாக்ரடீஸ் அவர்களின் அகால மரணத்தின்போது அவர் எழுதி உள்ளதைப் படியுங்கள்.

நம் காலத்தின் முக்கியமான ஒருவர் எழுதியுள்ளதை இப்படி பகிர வாய்ப்பு கிடைத்ததே மகிழ்ச்சிதான். அதே வேளை இந்தப் புத்தகம் முழுவதையும் படித்து முடித்த பின்னர் ஞாநி அடைவதைப் போன்றே முழு நிறைவும் பெரும் சோர்வும் நம்மையும் ஆட்கொள்கின்றன. தனது உணர்வை அப்படியே வாசகருக்கு கடத்தி உள்ளதுதான் ஞாநியின் வெற்றி. நல்ல விதைகளை ஊன்றிச் செல்கிறார்,  நிச்சயம் அவை முளைக்கும்.

– சட்டநாதன்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-460-1.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: