Home » Articles » பண்பாட்டைப் பேசுதல்

பண்பாட்டைப் பேசுதல்

இந்து அறிவியக்கக் கட்டுரைகள்

இந்து என்பது ஒற்றைச் சொல்லன்று; புராதனமான நாகரிகத்தின் இன்றைய வடிவத்திற்கான குறியீடு. இந்து என்ற சொல் எப்படி வந்தது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு எவன் இசுலாமியனில்லையோ எவன் கிறித்துவனில்லையோ எவன் பௌத்தனில்லையோ எவன் சீக்கியனில்லையோ எவன் ஜைனன் இல்லையோ எவன் பார்ஸி இல்லையோ அவனெல்லாம் இந்துவாக அழைக்கப்பட்டனர் என்பவர்களும் உண்டு. சிந்து – இந்து, சிந்து நதிக்கரை நாகரிகவாசிகளின் புராதனம் என எத்தனை விளக்கம் அளித்தாலும் இந்தியாவின் பழமைக்குக் குறியீடாக இந்து என்பது அமைந்துவிட்டது.

பண்பாட்டைப் பேசுதல், ஹிந்துத்வம் பதிப்பகம், ரூ. 120

ஆகப் பழமையான பாரதவாசிகளின் பண்பாட்டை – கலவையான கோட்பாட்டை – காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வந்த வரலாற்றை – ஒருவன்மேல் ஒருவன் மேலாதிக்கம் செலுத்திய சமூக அமைப்பை இன்றைய நிலையில் ஆராய்வது என்பது பெருஞ்சிக்கல். ஏனெனில் இந்தியப் பண்பாடு அல்லது இந்துப் பண்பாடு என்பது ஆற்றுவெள்ளத்தின் போக்கைப்போல் அமைந்தது. சிற்சில கரையேறல்களை வைத்து ஆறு இப்படித்தான் என்று வரையறைப்பது முடியுமா? இயற்கையான பண்பாடு இயல்பான ஆற்றைப்போலத்தான். அதற்கு வரையறை கட்ட முயன்றவர்கள் எல்லோருமே அதன் விதிவிலக்கான போக்கையும் சுட்டியே செல்கின்றனர்.

இத்தகைய பண்பாட்டைப் பற்றி இதன் சமூகம், அரசியல், வரலாறு, சமயம், இலக்கியம் கலை கலாசாரம், சினிமா எனப் பலதளங்களை முன்வைத்து வந்த கட்டுரைகளின் தொகுப்பே பண்பாட்டைப் பேசுதல் என்னும் நூலாகும். இதன் துணைத் தலைப்பு இந்து அறிவியக்கக் கட்டுரைகள் என்பதாகும். எனவே இந்து என்பவன் அறிவு வழிச் சமுதாயத்தின் வழிவந்தவன் என்னும் கருத்தொற்றுமையே பலர் எழுதிய கட்டுரைகளுக்கான அடிச்சரடு எனலாம்.

இக்கட்டுரைகளை வாசிப்பதன் முன் நமக்கு முன்னே இருக்கும் வழமையான கருத்தியல்களை அதாவது நம்முடைய பாடத்திட்டங்களின் வழி மூளையில் திணிக்கப்பட்ட இந்தியப் பண்பாட்டுத் தரவுகளை எல்லாம் முடக்கிவைக்கவேண்டும். இல்லாவிட்டால் நடுநிலையான ஓர்மையை உணர இயலாது. கோயபல்ஸ் பிரசாரம் போல இடைக்கால பாடத்திட்டங்கள் ஓரம்சார்ந்தே அமைந்துவிட்ட கொடுமையை இக்கட்டுரைகளைப் படிப்பவர் உணரலாம்.

புதிதாக இக்கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தால் இந்துத்வா, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தள் ஆகியவற்றின் கொள்கை விளக்கங்களைக் கட்டுரைகளாக ஆக்கிவிட்டார்களோ என்றுதான் எண்ணத் தோன்றும். சற்றுச் சிந்தித்தால் இந்துப் பண்பாட்டின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுதலிக்கும் மீளத் தம் தரப்புச் செய்திகளை அளிக்கும் வாய்ப்புகள் இந்தியாவில் – மதச் சார்பற்ற இந்தியாவில் இல்லை, அந்த வாய்ப்புகளைக் கையிலெடுத்துக்கொண்டு பேசும்குரல்கள் இக்கட்டுரைகள் எனலாம். இக்கட்டுரைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித் தனி மதிப்புரைகளும் விவாதங்களும் எழலாம். அந்த அளவு காத்திரமானவை. இக்கட்டுரைகளை மறுப்பவர்களும் கூட அவ்வளவு எளிதில் மேம்போக்காக மறுத்துவிட முடியாது. ஆகவே இக்கட்டுரைகளின் சாராம்சத்தைச் சுருங்கச் சொல்வதே சாலும்.

இந்து சமயத்தில் தீண்டாமை என்பது காலங்காலமாக நிலவி வந்தமை போலவே எதிர்ப்புக்குரலும் இதே சமயத்தில் ஒலித்தன. வந்தே மாதர எதிர்ப்பின் போலிக்குரல்கள், இந்தியச் சமயங்களுக்கிடையேயான முரண்பாட்டில் ஏனைய சமயங்களின் நிலையும் அழிவும், இந்தியர்களின் பண்பாட்டு விழிப்புணர்வின்மை, இந்தியாவில் புறச் சமயங்களை நிறுத்துவதற்கான கட்டுக் கதைகள், இந்து சமயத்திற்கு எதிரான கலை சுதந்திரமும் ஏனைய சமயங்களுக்கு ஆதரவான கலைக் கட்டுப்பாடும், திருக்குறள் சமண நூல் அன்று; வைதீக நூல்… இப்படியாக ஒவ்வொரு செய்திகளையும் தகுந்த ஆதாரங்களை முன்வைத்துச் செல்கின்றன இக்கட்டுரைகள்.

அதேசமயம் அளவு கடந்த பிடிப்பு காரணமாகவும் சிலசெய்திகள் ஊடே ஒளிந்துகொண்டுள்ளன என்பதையும் மறுக்கவியலாது. பிற சமயங்களில் இறைவன் உயர்குலத்திலே வந்துதான் பிறக்கவேண்டும். ஆனால் இந்து சமயத்தில் ஆயர்குலத்திலும் வந்து பிறப்பான் என்ற கருத்து மொழியப்பட்டுள்ளது. கண்ணன் ஆயர்குலத்தில் பிறக்கவில்லை. வளர்ந்தான். சாதி தீண்டாமைக் குரல்கள் 1700 வரை மேலை நாடுகளில் எழவில்லை. ஆனால் இந்து சமயத்தில் திருஞானசம்பந்தர் காலத்திலேயே எதிர்ப்புக்குரல் இருந்தது என்ற பதிவின் மறுபக்கம் இந்து சமயத்தில் தீண்டாமை இருந்தது என்பதுதானே.

ஆக இக்கட்டுரைகளை மறுக்கவாவது நுணுகி ஆய்ந்து படித்தால் இந்தியப் பண்பாட்டைப் பற்றி உணரலாம். இந்தியா என்பது காலத்தால் சபிக்கப்பட்ட மறதியாளர்களின் தேசம் என்பதை இக்கட்டுரைகள் உணர்த்திச் செல்கின்றன. சில வழுக்களை வைத்து ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளுவது இயலாது. இக்கட்டுரைகள் இந்துப் பண்பாட்டைப் பேசுவதால் தவிர்க்க இயலாது புறச் சமயச்சாடல்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றை அக்கருத்தியல்களோடு நிறுத்தியும் பொருத்தியும் பார்க்கவேண்டுமே தவிர தனித்த சமய எதிர்ப்பாகக் கொண்டால் ஆட்சியாளர்களின் அருங்கருணை இந்நூலுக்கும் கிடைக்கும்.

முனைவர் சத்யநாராயணன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0001-010-2.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: