Home » Articles » இசையாய்

இசையாய்

இசைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பற்றியும் இசையோடு பயணித்தவர்கள் பற்றியும் இசைக்கு இசைவான இலக்கியங்கள் படைத்தோர் பற்றியும் வந்த தொகுப்பு நூல் இசையாய். இசை பற்றிய நூலாக இருந்தாலும் இசையின் நுட்பங்களுக்குள் நுழைந்து பாமரனுக்குப் புரியாத மேளகர்த்தா ராகம், ஜன்ய ராகம் என்ற விஷயங்களை விஸ்தாரமாக ஆலாபனை செய்யாமல் இசைக்கு உரிய தொண்டுபுரிந்த சான்றோர்களை அடையாளப்படுத்தும் வகையில் பதின்மூவரைப் பற்றிப் பேசுகின்றது.

இசையாய், சந்திரிகா ராஜாராம், மயிலை முத்துக்கள், ரூ. 100

கல்லூரிப் பேராசிரியரான இந்நூலாசிரியர் சந்திரிகா ராஜாராம் பொதுவான நூலில் எது வாசகனைச் சேரும் என்றறிந்து செய்தியை நிரல்படுத்தி உள்ளார். மகாகவி பாரதியில் தொடங்கி, எம்.எஸ். சுப்புலட்சுமியுடன் கட்டுரை நிறைவு பெறுகின்றது.

கீழ்ஸ்தாயியில் தொடங்கி மேலே பயணித்து மீளவும் கீழேவந்து என ஏற்ற இறக்கமான ஸ்வரப்பிரயோகம் போல நூலின் காலவரிசையும் முன்பின்னாக அமைந்துள்ளது. இசை நூலுக்கு இது பொருந்தும் போலும். 20 ஆம் நூற்றாண்டு மகாகவிக்குப் பின் 16 ஆம் நூற்றாண்டு அருணகிரிநாதர் பின்னர் பாரதிதாசன்… இவ்வாறே நூல் முழுதும் காலப் பிரமாணமின்றிப் பயணிக்கின்றது. காலப் பிரமாணம் அமைய இசைக்கோவைகளா என்ன?

இலக்கியப் பிரபலங்களான பாரதி, பாரதிதாசன் ஆகியோர் இசையிலும் தேர்ந்த புலமையுடையவர்கள் என்பதை அவர்களுடைய இன்ன பாடல் இன்ன ராகத்தில் அமைந்துள்ளது என்ற விளக்கத்தால் அறிமுகப்படுத்துகின்றார். திருத்தசாங்கம் பத்து உறுப்புக்களுடையது. பத்து உறுப்புக்களை ஒரே யாப்பில் பாடாமல் பத்து யாப்பு அமையப் பாடுவதுண்டு. பாரதியார் பத்துவகை ராகத்தில் பாடியுள்ளார் என்று விவரணப்படுத்துகின்றார் ஆசிரியர்.

பாரதிதாசன் கவிதையின் பொருண்மைகள் பலவற்றையும் அலசி இன்னின்ன பொருளுக்கு இந்த ராகம் என்றறிந்து கவிஞர் பாடியமையை எடுத்துரைக்கின்றார். பொதுவாக பாரதிதாசனின் இயல் புலமை அளப்பரியது. எந்த இடத்திலும் யாப்பிலே ஊறு வராதபடி பாட்டுக் கட்டும் பாவலர். அவர் இயல் யாப்புக்களைப் பாடினாலும் கண்ணி, சந்தப்பா ஆகியவற்றிலும் சிறந்தவர் என்பதை ஆசிரியர் அடையாளப்படுத்துகின்றார்.

பல வெண்பாக்களும் ஆசிரியப்பாக்களும் விருத்தப் பாக்களும் அகவல்களும் இயற்றியிருந்தாலும் இவரது மனதைப் பாதித்த ஒன்றைப் பற்றி எண்ணங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து பீறிட்டு வரும்போது அவை அழகான சந்தங்களும் இசையும் அமைந்த இசைப்பாடல்களாகவே உருவெடுக்கின்றன என்பதுதான் உண்மை. (ப.24)

இன்று பிரபலமான பல தமிழ்ப்பாக்களின் ஆசிரியர் ஆரோ, இவர் யாரோ என்ன பேரோ அறியேனே என்ற நிலை உள்ளது. அவற்றை அறிந்துதானோ இன்ன வாக்கேயக்காரர் பாடிய பாடல் இது என்று பல பிரபலமான பாடல்களை நூலாசிரியர் எடுத்துரைக்கின்றார். சில பாடல்களுக்குப் பின்னணியான நிகழ்ச்சிகளையும் இனிதாக விளக்கியுள்ளார். சத்குரு தியாகராஜர் ஆபோகி ராகம் பற்றி மாணவர்களுக்குப் பாடி வகுப்பெடுத்தமையைக் கேட்டு மனம் பறிகொடுத்து அதே ஆபோகியில் சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா என்ற பாடலைப் படைத்தார் என்கின்றார்.

இந்த நூலின் இரு பெரிய கட்டுரைகள் எம்.எல். வசந்தகுமாரி, எம்.எஸ். சுப்புலக்ஷ்மி ஆகியோரைப் பற்றித்தான். எம்.எல். வசந்தகுமாரி ரசிகர் மன்றச் செயலாளர் ஆன இந்நூலாசிரியர் இன்று அவரைப் பற்றி அறிந்துகொள்ளாத இளம்தலைமுறையினருக்கு நன்கு விளக்கமாகவே அறிமுகம் செய்கின்றார். எம்.எல்.வி. கர்நாடக மேடை, திரையிசை என இரண்டிலும் பலவிதமான பாடல்களைப் பாடியவர். திரையிசையின் சூழலுக்குப் பொருத்தமாக நாட்டுப் பாடல் மெட்டுக்களும் செவ்விசை மெட்டுக்களும் பாடவல்லவர் என்பதை உரிய பாடல் சான்றுகளுடன் ஆசிரியர் விளக்குகின்றார்.

எம்.எல்.வி. ஒரே பாடலுக்கு இரு கைகளில் இருவேறு வேறான காலப்பிரமாணத்தில் தாளமிட்டுப் பாடுபவர் போன்ற நுட்பமான செய்திகளையும் பட்டியலிடுகின்றார்.

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி இந்திய இசைவானில் ஒளி நட்சத்திரமாகத் திகழ்ந்தமையை இறுதிக் கட்டுரை அழகாக எடுத்துரைக்கின்றது. சண்முகவடிவின் மகள் வீணை தனம்மாளின் மாணவியாகி, சதாசிவத்தின் மனைவியானபின் அவருடைய இசை வளர்ச்சி மகோன்னதமான நிலையை எட்டியது என்பதையும் உலக அளவில் எம்.எஸ்ஸிற்கு ரசிகர்கள் இருந்தனர் என்பதையும் விவரணப்படுத்துகின்றார் ஆசிரியர் சந்திரிகா ராஜாராம்.

விருது பெறுவது எம்.எஸ்ஸிற்கு அன்றாட நிகழ்ச்சி நிரலாக இருந்தது என்பது ஆசிரியரின் கருத்தை விதைக்கும் மொழிநடைக்கு நல்ல சான்று எனலாம்.

கருணாமிர்த சாகரம் பாடிய ஆபிரகாம் பண்டிதர் பற்றிய அருங்கட்டுரை இசைப்பாவலர்களைக் கடந்து இசை ஆய்வாளராகவும் தமிழின் தொல்லிசை பற்றியும் ஆய்ந்த ஆபிரகாம் பண்டிதரின் இசை அறிவைப் பறைசாற்றும்.

இராமநாதபுரம் சமஸ்தானம் இசைவாணராகிய பாரதி என்பாருக்கு கவிகுஞ்சரம் என்ற விருது அளித்தமை, நூற்றுக்கணக்கான பதங்களை ஆக்கிய க்ஷேத்ரஞர் தம்முடைய பதங்களின் நாயகிகளுக்கு ராகங்களின் பெயரினை இட்டுள்ளமை, மருகேலரா போன்ற கிருதிகளுக்கு ஜி.என்.பி மெருகேற்றிப் பாடி அரங்கங்களில் இன்றும் உலாவரச் செய்தமை, ஆழ்வார்களின் பக்தி என்று பல்வேறு இசைவாணர் பற்றிய செய்திகள் அழகாக நூலின் பொருண்மைக்கு அணிசெய்கின்றன.

பாடும்போது பண்ணுக்கு ஏற்றவாறு பதச்சேதம் செய்வது இசைவாணர்களின் இயல்பு. அதனை இவ்வாசிரியர் ஓரிடத்தில் எடுத்துக் காட்டுகின்றார்.

‘ஆதியந்த வுலாவாசு பாடிய’ என்ற வரியை ‘ஆதி அந்த உலா ஆசு பாடிய’ என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். சிலர் பாடும்போது இந்த வரிகளை ‘ஆதியந்தவு லாவாசு பாடிய’ என்று பிரிப்பர். இது பொருள் தெரியாத காரணத்தினால்தான்… சரியான இடத்தில் பிரித்துத் தமிழுக்கும் பொருளுக்கும் இசைக்கும் சேதமின்றிப் பாடவேண்டும். (ப.15)

இந்தப் பகுதியில் அச்சுக் கோர்ப்பவர் வைத்தார் பாருங்கள் ஒரு முரண். பொருளுக்கும் இசைக்கும் என்பதில் இசைக்- கும் எனப் பிரித்துவிட்டார். நூலாசிரியர் சொல்லவந்ததை அச்சிலே உணர வைத்தார் போலும். இப்படியே பல பக்கங்களிலும் இந்த பதப் பிரிப்பு அமைந்து பாடுபவரின் வேலையைச் செய்கின்றது. மெய்ப்புத் திருத்தத்தில் சரி செய்திருக்கலாம். இல்லையென்றால் கவிகுஞ்சரபாரதியின் தந்தை சப்பிரமணியன் ஆகியிருக்கமாட்டார் அல்லவா?

தமிழிசை மூவர், அண்ணாமலை ரெட்டியார், இராஜாஜி, பாபநாசம் சிவன், ஜி.என். ராமநாதன் என இன்னும் பல இசைவாணர்கள் இசையின் பரந்த பல துறைகளிலும் நிரம்பியுள்ளனர். அவர்களைப் பற்றியும் இவருடைய கைவண்ணத்தில் நூல்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.

முனைவர் ஜெ. பிருந்தாஸ்ரீ

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-366-7.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


1 Comment

  1. புத்தகத்தை விட ,விமர்சனம் ஆழமும் , நுட்பம் மிகுந்து இருக்கிறது.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: