Home » Politics » ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

ஒரு அதிமுக்கியமான அரசியல் ஆவணம்

இன்றைய இளைஞர்கள் இணையத்தில் மிகத்தீவிரமாக இயங்கத் துவங்கிய காலத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. கலைஞர், மன்மோகன், ராகுல் காந்தி, அ.ராசா, கனிமொழி… என அத்தனை பிரமுகர்களையும் இரண்டு வரி கீச்சிலும், நான்கு வரி ஸ்டேட்டஸ்களிலும் புரட்டி எடுத்தோம். ஆட்சி பீடத்தில் இருப்பவர்களின் ஒவ்வொரு அறிக்கையையும் அசைவையும் விமர்சிக்கும் அந்தப் போக்கு ஜனநாயகத்தின் வெற்றிகரமான உத்வேகமாக தோன்றியது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் காட்சிகள் மாறின. விசைப்பலகையில் வெகுவீரியமாக இயங்கிய அரசியல் விமர்சன விரல்கள் அப்படியே மணிக்கட்டோடு முடமாகிவிட்டது. ஜெயலலிதா எனும் ஆளுமையின் பிம்பம் அத்தகையது. விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட யோக்கியரெல்லாம் இல்லை. சென்ற ஆட்சியைக் காட்டிலும் அதிக விமர்சனம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. ஆனால் ஏனென்றே தெரியாமல் உள்ளூர ஒரு தயக்கம், பயம். இது ஊடகங்களுக்கும் அப்படியே பொருந்தும். அவதூறு வழக்குகள் வினாடிக்கு ஒன்று பதிவாகும் நிலை.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, கோமல் அன்பரசன், கிழக்கு பதிப்பகம், ரூ. 140

இப்படியான நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியென தீர்ப்பு. ஜாமீனில் விடுதலை. மேல்முறையீட்டு நாடகங்கள். கிட்டத்தட்ட எந்தமாதிரியான திசையில் வழக்கு போகிறது என்று எல்லோருக்கும் தெரியும். மீண்டு வந்தால், அவரின் ருத்ரதாண்டவம் எப்படியிருக்கும் என்பதற்கு அஞ்சி ஊடகங்கள் இன்னமும் அடக்கியேதான் வாசித்துக்கொண்டிருக்கின்றன. எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லும் இலக்கியவாதிகள் இன்னும் உத்தமம். மூச்சே இல்லை. ஸ்வராஜ்யா தளத்தில் சாரு ஒரு பாமரப்பதிவை ஆங்கிலத்தில் எழுதிவிட்டு, அதற்கே தான் கொலை செய்யப்படலாம் என கிச்சுக்கிச்சு மூட்டினார். இத்தனைக்கும் நடுவில் கிழக்கு வெளியீடாக கோமல் அன்பரசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் ஒரு மிகத் துணிச்சலான படைப்பு.

அத்தியாயங்களைக் கட்டமைத்திருக்கும் விதத்திலேயே ஒரு விறுவிறுப்பைத் தொற்றவைக்கிறார் அன்பரசன். ஒரு பரபரப்பான குற்றவியல் நாவல் போல சிறு தொய்வும் இல்லாதவகையில் அத்தனை புள்ளிவிபரங்களையும் சிரத்தையெடுத்துத் தொகுத்திருக்கிறார். முதல் அத்தியாயம் தீர்ப்பு நாள் காட்சிகள். இரண்டாவது அத்தியாயம் நேராக தி.மு.க ஆட்சி 90’களின் துவக்கத்தில் கலைக்கப்பட்டு ஜெ. அரியணை ஏறியதிலிருந்து விரியத் தொடங்குகிறது. அந்த ஐந்தாண்டுகளில், அவரின் நெறிகெட்ட போக்கு புட்டுப்புட்டு வைக்கப்படுகிறது. பதினெட்டு ஆண்டுகள் கழித்து சிறைக்குச் செல்வதற்கே செய்ததுபோல சுதாகரனின் திருமணத்தை நடத்தியிருக்கிறார். அப்படியொரு பட்டவர்த்தனமான ஆதாரமாகத்தான் அது அமைந்துபோய்விட்டது.

அங்கிருந்து சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தது, கூடவே தி.மு.க தரப்பிலிருந்து மேலும் சில வழக்குகளும், ஜெ. ஒரு முறை சிறைக்குச் சென்றதும், டான்சி வழக்கும், அதன் பின்னர் தன்னகங்கார வெளிப்பாடாய் நான்கு தொகுதிகளுக்கு மனு தாக்கல் செய்ததும், மீண்டும் சிம்மாசனத்திற்கு வந்ததும் நிகழ்த்திய பழிவாங்கும் படலங்களும், கிட்டத்தட்ட வழக்கை முடிக்க வாய்ப்பிருந்தும் தன் அடங்காத போக்கினால் நீதிமன்றத்தை போயஸ் தோட்டத்திற்குக் கொண்டுவந்ததும், இதை காரணமாக வைத்தே அன்பழகன் தரப்பு வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரியதும்… என காட்சிகள் கச்சிதமாக நகர்கின்றன. எந்த இடத்திலும் நிறுத்தமுடியாத நடை.

உச்சநீதிமன்றம் வழக்கை கர்நாடகத்திற்கு மாற்றியதுதான் இந்த வழக்கைப் பொருத்தவரை ஜெ’விற்கு மிகப்பெரிய பின்னடைவு. அதற்குப் பின்னர் ஜெ தரப்பு, வழக்கை சாதகமாக்கும் முயற்சிகளைவிட வாய்தா வாங்கவே அதிக சிரத்தை எடுத்திருக்கிறார்கள். அத்தனை உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக வாய்தாவிற்குமேல் வாய்தா. நீதிபதிகள் பொறுமையிழந்திருக்கிறார்கள். தொடர் அழுத்தத்தினால் சிலர் பின்வாங்கியிருக்கிறார்கள். வாழ்நாள் முழுதுமே வாய்தாவிலேயே கழித்துவிட்டுப் போய்விடலாம் என்ற ரீதியில்தான் ஜெ தரப்பின் போக்கு இருந்திருக்கிறது. ‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்’ என்ற தினசரியை, கோடிகளை சம்பாதித்ததற்கான மூலமாக காட்டிவிடலாம் என்ற எந்த ஞானசூன்யம் ஜெ’விற்கு ஆலோசனை சொன்னதோ தெரியவில்லை.

ராகுல் காந்தியின் பப்ளிசிட்டி ஸ்டன்ட்’ஆக கருதப்பட்ட ஒரு சம்பவம்தான் இன்று இத்தனை அக்கப்போர்களுக்கும் முக்கிய பின்புலம் என்பது எத்தனை வேடிக்கையான நிகழ்வு. லில்லி தாமஸ் என்பவரால், பதவியிலிருக்கும் அரசியல்வாதிகளின் குற்றத்திற்கு தண்டனையளிக்கும் ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்’ என்பதில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தை, காங்கிரஸார் கலைக்கும் விதமாக சட்டதிருத்தம் கொண்டுவர இருந்தபோதுதான், அந்த சம்பவம் நடந்தது. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் திடீரென உள்ளேவந்து ‘என்ன நடக்கிறது’ என்பதுபோல கேட்க, சட்டதிருத்தம் பற்றி அவரிடம் சொல்லப்பட, அவர் அதனை nonsense என்றார். இதனாலேயே அத்திருத்தம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஜெ கைதியாக காரணமும் இதுதான்.

பவானி சிங், குன்ஹா தவிர ஏனைய சில வழக்கறிஞர்கள், நீதிபதிகள் பற்றியும் முக்கியமான குறிப்புகள் புத்தகத்தில் இருக்கின்றன. குன்ஹாவைப் பற்றிய அத்தியாயங்கள் அத்தனை சிலிர்ப்பானவை. மனிதர் ஆகப்பெரிய அழுத்தங்களுக்கு மத்தியிலும் எத்தனை தெளிவாகவும் தீர்க்கமாகவும் செயலாற்றியிருக்கிறார் என்பதை வாசிக்கும்போது, ஜெயா டிவி செய்திகளில் அடர்கறுப்பான ஒரு பெண்மணி தீர்ப்பு வெளியான அன்று அவரை ‘சட்டம் தெரியாத கபோதி’யென வசைமாறிப் பொழிந்தது நினைவில் வந்து போனது. இடையில் ஏ.ஆர். ரஹ்மான், கங்கை அமரன், பிரபு அண்ணன் ஆகியோரின் வாக்குமூலங்கள் வருகின்றன. கங்கை அமரன் அப்பட்டமாக சாட்சியளித்திருக்கிறார். இராம்குமார் பெண்வீட்டார் என்ற முறையில் பூசி மெழுகியிருக்கிறார். கைதுக்குப் பின்னான கலவரங்கள், மேல்முறையீடுகள், அழுகாட்சி பதவியேற்பு, மற்ற கட்சித்தலைவர்களின் கருத்துகள்… என அத்தனையும் கடைசி சில அத்தியாயங்களாய் வந்து நிறைவுபெறுகின்றன.

நாளை ஒரு தீர்ப்பு இந்த ஒட்டுமொத்த புத்தகத்தையே பொருளற்றதாக ஆக்கிவிடும் சாத்தியங்களுமுண்டு. இருந்தும், இது ஒரு அதிமுக்கியமான அரசியல் ஆவணம் என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. அடுத்த பதிப்பு சில திருத்தங்களுடன், இறுதித் தீர்ப்பையும் சேர்த்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம். கண்களுக்கு அயர்ச்சியான தாள் தரம். மற்றபடி, ஓர் அரசியல் வழக்கை விவரிக்கும் புத்தகம் என்ற அடிப்படையில், வாக்குரிமையுள்ளவர் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம். இந்த ஆழம் நிச்சயம் அவசியம். ஓட்டு வெறும் விரல்நுனி மையுடனான செல்ஃபி மட்டுமல்ல.

மயிலன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-5135-190-0.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: