Home » Articles » சாப்பாட்டுப் புராணம்

சாப்பாட்டுப் புராணம்

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘சாப்பாட்டுப் புராணம்’ என்ற பெயரை நாம் கேள்விப்பட்டால் சந்தையில் கிடைக்கும் 32431 சமையல் புத்தகங்களில் இதுவும் ஒன்று என்ற நினைப்புதான் தோன்றியிருக்கும். சமீப காலங்களில் இந்த எண்ணம் ஏற்படுவதில்லை. உணவின் வரலாறு, உணவின் பூகோளம், உணவின் அறிவியல், உணவின் உயிரியல் என்று தமிழில் உள்ள 432 தொலைக்காட்சிகளிலும் 892 நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன, சில புத்தகங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உணவுக் குறிப்புகளும், செய்முறைகளும் கொண்ட காகிதக் குப்பைகளுக்கு மத்தியில் இது போன்ற மோடி பிராண்ட் மாற்றங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.

சாப்பாட்டுப் புராணம், சமஸ், துளிகள் வெளியீடு, ரூ. 80

இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்திருக்கக்கூடிய ஒரு புத்தகமாக சமஸின் ‘சாப்பாட்டுப் புராணம்’ புத்தகம் அமைந்திருக்கிறது. தமிழ் இந்துவில் தேர்தல் சமயத்தில் சமஸ் அவர் மேற்கொண்ட பயணங்கள் மூலம் இந்தியாவின் நீள அகலங்களை அளந்து எழுதினார், அதேபோல தமிழகத்தில் அவர் மேற்கொண்ட பயணங்களின்போது அவர் சாப்பிட்ட உணவுகளைப் பற்றிய அறிமுகங்களாக எழுதியிருக்கும் புத்தகம்தான் ‘சாப்பாட்டுப் புராணம்’.

‘தமிழர் உணவைக் கொண்டாடும் தமிழின் முதல் நூல்’ என்று நூலின் முன் அட்டையிலேயே குறிப்பிட்டுவிடுகிறார். அதேபோல இந்தக் கட்டுரைகள் அனைத்தும் தமிழரின் உணவுகளை மொத்தமாக பிரதிநிதித்துவம் செய்யவே இல்லையே என்ற எண்ணம் மனதில் தோன்றி உறுத்தத் துவங்கும்போது நூல் ஆசிரியரின் உரையில் இந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து பட்டியல் இட்டுக் கொள்ளும் வகைமுறையைக் குறிப்பிட்டிருப்பதும் நினைவுக்கு வருகிறது. எங்கள் ஊர் உணவு இல்லையே, இந்தச் சாப்பாட்டுப் பொருள் இல்லையே எனக் கவலைப்படுபவர்கள் முன்னுரையை முப்பத்து நான்கு முறை படித்துக்கொள்வது நல்லது.

டீ, காபி முதலாவதாகக் கொண்டு ஆரம்பித்து அல்வா, பொங்கல், பக்கோடா, நெய் தோசை, அடை அவியல், பூரி, பாசந்தி, சர்பத், பாதாம் கீர், போளி, சாம்பார் வடை, தவலை வடை, இட்லி, முறுக்கு, பிரியாணி, பாயா, கறி தோசை, கறிப்பிரட்டல் என்று பல வகையான உணவுப் பொருள்களைப் பட்டியலிடும்போதே இந்த ஊர் தரிசனங்களின்போது ஒரு கை பார்த்து விடவேண்டும் என்று தோன்றுகிறது. ரயில் பயணங்களின் போதான உணவுகள் என்றால் நமக்குள் உருவாகியிருக்கும் பொதுப் புத்தி குமட்டலை ஏற்படுத்தும். ஸ்ரீரங்கத்தின் இட்லிப் பொட்டலம் பற்றி சமஸ் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

House of Cards என்ற அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரில் காங்கிரஸின் உறுப்பினராக இருந்து, துணை அதிபர், அதிபர் என்றெல்லாம் மேலே போகும் பிரான்சிஸ் அண்டர்வுட், ஊரின் மிகச் சிறிய, சிறுபான்மை இனத்தவரின் கடையில் கிடைக்கும் பன்றிக் கறிக்காக தக தகவென குதித்து ஓடி வருவார் (எந்தப் பதவியில் இருந்த போதும்). அதுபோல, சமஸ் இந்தப் புத்தகத்தில் அந்த ஊரின் பிரபலமான உணவு வகைகளைப் பேசும் போது அந்த உணவுப் பொருளுக்காகவே பிரபலமான கடைகளையும் பற்றி பேசியிருக்கிறார். (தமிழகத்திலேயே அதிகமான டீ போடும் கடைக்காரர் ஒருவரைப் பற்றிப் பேசியிருக்கிறார்.) இந்தக் கடைகளைக் குறித்து வைத்துக்கொண்டு அங்கெல்லாம் விஜயம் செய்யும் சிலரும் உருவாகியிருக்கிறார்கள்.

புத்தகத்தில் வியாபிக்கப்பட்டிருக்கும் உணவுப் பக்ஷணங்களின் புராணங்கள் குறித்த பட்டியலைப் பார்க்கும்போது சைவப்பிரியர்களுக்கான புத்தகமென்பது நன்றாய் தோன்றியது, தயிர்ச்சாதத்துக்கு ஊறுகாய் தொட்டுக்கொள்வதைப் போல நான்கோ ஐந்தோ அசைவைச் சாப்பாட்டு பற்றிய புராணங்களையும் எழுதியிருக்கிறார். ஸ்ரீமான் மோடியின் நல்லாட்சியில் சைவ உணவுகளின் சாப்பாட்டுப் புராணத்தை பிரஸ்தாபிப்பது நல்லதுதானே. பின் அட்டையில் தினமலர் மிகச் சரியாக சுட்டிக்காட்டியிருக்கிறது ‘நம் உணவுப் பாரம்பாரியத்தை அறிய சிறந்த நூல் இது.’ சரிதான்.

இக்கட்டுரைகள் தினமணி நாளிதழில் வாராவாரம் வெளிவந்தவை. இவ்வாறான கட்டுரைத் தொடர்களை நூலாகத் தொகுக்கும்போது திறன் வாய்ந்த ஒரு தொகுப்பாசிரியர் அவசியம். வார இதழ் வாசகப் பரப்புக்கான வெளி புத்தக வாசிப்புப் பரப்புக்கான வெளியோடு ஒத்தியங்கும் தன்மைகளை ஒத்துப் போகும்படி செய்யவும், முரணாக முயங்கி நிற்பனவற்றை களை எடுக்கவுமான பெரும்பணியைத் தலையின் மேல் போட்டுக்கொண்டு புத்தக உருவாக்கம் செய்பவர் அமைவது புத்தகத்தின் புகழ் ஒளியை மேலும் பிரகாசமாக்கும். அது இந்தப் புத்தகத்துக்கு அவசியம்.

சமஸ் கண்டிப்பாக சூழலியல் அக்கறை கொண்டவராகவோ, அல்லது பதிப்பாளரோ சூழலியல் மீது கவனம் கொண்டவராகவோ இருக்கலாம். பொதுவாக புத்தகங்களில் சமர்ப்பணம் என்ற பெயரில் ஒரு பக்கத்தில் நான்கு வார்த்தை அச்சிடுவார்களே அதுபோல இவர்கள் ஒரு பக்கத்தை வீணாக்காமல் நெருக்கியடித்து ஒரு பக்கத்தின் அடிப் பக்கத்திலேயே முடித்திருக்கிறார்கள், எழுத்துருவின் அளவையும், வரி இடைவெளியையும் அதேபோல குறைத்து சூழலியலுக்கு பேருதவி புரிந்திருக்கிறார்கள்.

தினமணி பத்திரிகை ‘தமிழ் கூறும் நல்லுலகிற்கு புதிய வழித் தடம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ள நூல் இது’ என்கிறது. அதுவும் ஒருவகையில் சரிதான். சாப்பாட்டின் வரலாற்றைக் கூறும் பல நிகழ்ச்சிகளுக்கும் புத்தகங்களுக்கும் சமகால எழுத்து உலகில் இந்த நூல்தான் கால அளவீட்டில் முதன்மையானதாக இருக்கும்.

கார்த்தி

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-372-5.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: