Home » History » வந்தே மாதரம்

வந்தே மாதரம்

வந்தே மாதரம்… வந்தே மாதரம்… வந்தே மாதரம்… இந்த ஒரு சொல்லே இன்றும் இன்னமும் நமக்குள் ஓடிக் கொண்டிருக்கின்ற தேசிய உணர்ச்சியைத் தூண்டி பெருக வைக்கிறது. இன்றைக்கே இப்படி என்றால் சுதந்திர எண்ணம் ஆறாக ஓடிய அந்த அடிமைக் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை பல உதாரணங்கள், உவமைகளைச் சொல்லி அப்போதைய காலத்திற்கே ஒப்புடன் நம்மைக் கொண்டு சென்றிருக்கிறார் ஆசிரியர் மலர்மன்னன் அவர்கள். அவருடைய அனுபவ வயது இன்றைய இளைஞர்களுக்கு நல்ல பாடமாக அமைந்துள்ளது.

மிகச் சிறப்பாக வந்தே மாதரம் தோன்றிய விதமும் வளர்ந்த விதமும் அது அன்றைய ஆங்கிலேயரிடமும் முகமதியர்களிடமும் பட்ட பாடுகளையும் நெஞ்சுருக விளக்கி இருப்பது அருமை.

வந்தே மாதரம், மலர்மன்னன், திரிசக்தி பப்ளிகேஷன்ஸ், ரூ. 100

ஆசிரியர் பல இடங்களில் தனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டிருப்பது நன்கு தெரிகிறது. ஆனாலும் சுவாரசியமாக ஒரு புதினம் போன்று வந்தே மாதரம் வரலாற்றினைக் கொண்டு போயிருக்கிறார் ஆசிரியர் மலர்மன்னன்.

இதில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல சுதந்திரப் போராட்ட வரலாறுகளை ஊன்றிக் கவனிக்கும்போது மகாத்மா காந்தியார் பல இடங்களில் தவறான முடிவுகளை எடுத்து சறுக்கியிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

எங்கும் எப்போதும் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள். அதற்கு இந்திய சுதந்திரப் போராட்டக் களமும் விதிவிலக்கில்லை. நமது நாட்டை இக்கட்டான சமயத்திலும் காப்பாற்றிய முகமதியர்களும் இருக்கிறார்கள். கைவிட்ட ஹிந்துக்களும் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி அறியும்போது மனது கொஞ்சம் சஞ்சலப்படுவதை ஏனோ தடுக்க முடியவில்லை.

வந்தே மாதரம் சிறப்பான இடத்தை இந்திய வரலாற்றில் இடம் பிடித்த சம காலப்பொழுதில் இல்லாமல் பின்னர் 50 வருடங்கள் கழித்தே தெற்கே தமிழில் சுப்ரமணிய பாரதியார் அதே அளவு சுதந்திரத் தீயை மக்கள் மனதில் ஏற்றி வைத்தார்.

ஆசிரியர் மிக அழகாக இடையிடையே நமது இந்திய பாரம்பரிய கலாசாரங்களையும் கதைகளையும் வரலாறுகளையும் புகுத்தி நமக்கு பல அரிய கருத்துகளை அறியக் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

மகான் ராமகிருஷ்ண பிரம்ம ஹம்சருக்கும் பங்கிம் சந்திரருக்கும் இடையில் இடம்பெற்ற மிக சக்தி வாய்ந்த, சத்து மிக்க, அறிவுபூர்வமான அருமையான உரையாடலை மிக லாகவமாக கையாண்டு நமக்குப் புரியும் அளவில் வழங்கியிருப்பது ஆசிரியரின் தனித்தன்மைதான்.

வந்தே மாதரம் எனும் இந்த தேசபக்திப் பாடலின் வரிகளுக்குத் தூண்டுகோலாக இருந்த பந்தே பந்தினி மாதரங் பற்றிய விளக்கங்கள் அமர்க்களம். வந்தே மாதரம் பாடல் வரிகளின் பின்னணி நமக்கு ஒரு புதிய விஷயமே.

ஆசிரியரின் பரதம் என்னும் பாரதத்தின் பெயர்க் காரண விளக்கமும் அற்புதமானது. தாம் பிறந்த நாட்டை, ஒருவனுக்கு உண்ண உணவும் இருக்க உரையுள்ளும் அளிக்கும் தாய்நாட்டை தெய்வமெனப் போற்றுதல் பிழையாகுமா எனும் ஒரு கேள்வியை நம்மிடத்தில் கேட்டு அதற்கு தக்க பதிலையும் விளக்கமாகக் கொடுத்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் ஆசிரியர்.

பக்கத்திற்குப் பக்கம் மன நிறைவான விளக்கங்கள், திருப்தியான முறையில் நாம் கேட்க நினைக்கும் கேள்விகளுக்கு நேர்த்தியான பதில்களுடன் நம்மை வெள்ளையர்கள் ஆண்ட அந்த இருண்ட காலத்திற்கே கொண்டு சென்றுள்ளார் ஆசிரியர் என்றால் அது மிகையில்லை.

வந்தே மாதரம் பாடலுக்குப் போட்டியாக காங்கிரசே ஸாரே ஜஹான்சே அச்சா என்ற பாடலை முகமதியர்களை சமாதானப்படுத்த அறிமுகப்படுத்தினார்கள் என்பதை அறியும்போது மனது வலித்தது என்பது உண்மையே.

இந்திய தாய்த் திருநாட்டின் சுதந்திரத்திற்காக எவ்வளவோ தியாகங்கள் நம் முன்னோர்களால் செய்யப்பட்டன. அதில் ஒன்று ஒரு சாராரை திருப்திப்படுத்த இறுதியில் வந்தே மாதரம் நமது தலைவர்களால் சிதைக்கப்பட்டது என்பதை அறியும் பக்குவம் நமக்கு வர இன்னும் நீண்ட காலம் ஆகலாம். ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு உண்மை இது. அன்றைய தலைவர்களும் ஏதும் செய்ய முடியாத இக்கட்டில் இதைச் செய்தே இருக்கவேண்டும் என்று அறிந்துகொண்டாலும் மனம் படும் வேதனையை மறைக்க இயலவில்லை.

இந்திய தாய்த் திருநாட்டின் சுதந்திரத்தில் நேரடியாகப் பங்கு பெற்ற ஒரு உணர்ச்சியை இந்தப் புத்தகத்தின் மூலம் வெற்றிகரமாக நமக்கு ஊட்டியுள்ளார் ஆசிரியர் மலர்மன்னன். வாழ்க அவரது தொண்டு.

அசோகராஜ்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0000-805-7.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: