Home » Short story » அனிச்ச மலர்கள்

அனிச்ச மலர்கள்

இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. இந்த நூலில் மொத்தம் 17 சிறுகதைகள் உள்ளன. அதில் உள்ள கடைசி சிறுகதையின் தலைப்புதான் இந்த நூலின் தலைப்பான அனிச்ச மலர்கள்.

இந்த சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவர் தேமொழி (தேன்மொழி அல்ல). திருச்சியில் பிறந்து அமெரிக்காவில் வசித்துவருபவர். பல மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். தற்பொழுது இணையத்தில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

அனிச்ச மலர்கள், தேமொழி, கௌதம் பதிப்பகம், ரூ. 80

சிறுகதை எழுதும் முறையில் பல வகைகள் உள்ளன. நடந்த சம்பவத்தை சுருக்கமாகக் கூறுவது, ஒரு நாளில் ஒருவன் வாழ்வில் நடந்ததைக் கூறுவது, ஒரு ஆரம்பம் ஒரு பிரச்சனை, முடிவு என கொஞ்சம் பெரிய சிறுகதையாகக் கூறுவது என பலவகையில் உள்ளன. சுஜாதா போல சாதாரண கதையில் கிளைமாக்ஸில் சின்ன திருப்பம்/அதிர்ச்சி/டுவிஸ்ட் வைப்பது என்பது பொதுவான சிறுகதை பாணியாகும்.

இந்த நூலில் முதல் கதை “சிலை அழுதது”. ஒரு ராணுவ வீரனின் மரணத்துக்குபின் அவன் காதல்மனைவி எடுக்கும் முடிவைப் பற்றியது. உணர்வுபூர்வமான கதை. முடிவு எதிர்பாராதது மற்றும் ஒரு வார்த்தையில் பல விஷயங்களைப் புரியவைக்கும் அழகான முடிவு. ஆனால் இந்தக் கதையின் ஆரம்பத்தில் வரும் இறுதிச்சடங்கு பற்றிய வர்ணனை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா என கேட்கத் தோன்றுகிறது. 31 பக்க சிறுகதையில் (!) 7 பக்கங்கள் இந்த வர்ணனையே போய்விடுகிறது. ஆனாலும் அதில் வரும் தகவல்கள் பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவுகிறது என்பதை மறுக்கமுடியாது.

உதாரணமாக சவப்பெட்டியை எப்படித் தூக்கி வருவார்கள், அதில் உள்ள தேசியக்கொடியை எப்படி அகற்றவேண்டும், எப்படி மடிக்க வேண்டும் என விரிவாகக் கூறியுள்ளார்.

இரண்டாம் கதை இன்றைய “படித்த” இளைஞர்கள் பற்றியது. ஆர்க்கிடேக் படித்த இஞ்சினியரை விட சாதாரண கொத்தனார் தெளிவாகக் கணக்கு போடுவார் என்பார்கள், அதுபோல இந்தக் கதையில் கணக்கில் புலி என சொல்லக்கூடியவர் காலரைக்கால், முக்காலே அரைக்கால் என்ற அளவை எல்லாம் எப்படி எழுதவேண்டும் என்று தெரியாமல் முழிப்பது இன்றைய கல்விமுறையை தோலுரித்துக் காட்டுகிறது.

மூன்றாம் கதை மிகச் சாதாரணமானது. வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு பெண்மணி தன் தம்பி, தம்பி மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட வீட்டில் தனியாக இருக்கிறார். முன்பு தன் தாய் இருந்தபோது வீடு கலகலப்பாக இருந்தது, இப்போது இல்லை என வருத்தப்படுகிறார். இதில் என்ன புதுமை என எனக்குத் தெரியவில்லை? ஒருவேளை வெளிநாட்டில் எழுத்தாளர் இருப்பதால் அவருக்கு பிரிவுத் துயரம் பெரிதாக இருக்கலாம்.

நூலில் தலைப்பாக வந்துள்ள சிறுகதை, ஒரே வகுப்பில் படிக்கும் மூன்று மாணவிகள் பற்றியது. அதில் ஒருவர் அய்யர், ஒருவர் முஸ்லிம். பள்ளி விழாவில் நடனமாட உள்ள பெண்ணுக்கு சலங்கை தேவைப்பட அதை எடுக்க மூவரும் அய்யர் பெண் வீட்டுக்குச் செல்கின்றனர். அங்கு பல இடங்களில் உள்ளது போல ஒரு பழைய பஞ்சாங்கப் பாட்டி இருக்கிறது. வீட்டினுள் கால் வைக்க வரும் பெண்ணை அதட்ட அவர்கள் கோபப்பட்டு திரும்பிச் சென்றுவிடுகின்றனர். உண்மையில் மிக அருமையான கதை இது.

இந்தக் கதை முதல்கதையாக இருந்திருக்கலாம். இதை கடைசியில் வைக்கும் ஐடியாவைக் கொடுத்த புண்ணியவான் யாருன்னு தெரியல. மாணவிகளின் குடும்பச் சூழல், அவர்களின் குணநலன்கள் அனைத்தையும் கதை நடக்கும்போதே அழகாகப் புரியவைத்துவிடுகிறார் ஆசிரியர். முஸ்லிம் பெண்களை அவர்கள் வீட்டார் அதிக தூரம் நடக்க விடமாட்டார்கள் என்பதைக்கூட அழகாகச் சொல்லியுள்ளார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடம் மாட்டிக்கொண்டு வாட்ச்மேன்கள் படும்பாட்டைக்கூட விடவில்லை. இப்படி கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தைப் படிக்கத் துவங்குபவர்கள் கடைசிக் கதையில் இருந்து வருதல் நலம்.

எல்லா கதைகளையும் பற்றி எழுதினால் இந்த நூலைவிட அதிகம் எழுதவேண்டி வரும். இதில் என்னைக் கவர்ந்த கதைகள் என்றால்,
1. அனிச்ச மலர்கள்
2. பழங்கணக்கு
3. காசியில் பிடித்ததை விடணும்
4. உண்மைக்காதல்
5. சற்றே இளைப்பாற

சில கதைகளில் சில வார்த்தைகள் தூய தமிழில் வருகின்றன. அடுத்த வார்த்தை சாதாரண ஆங்கிலத்தில் வருகிறது, இரண்டையும் ஆங்கிலம் அல்லது தூய தமிழ் என எழுதியிருக்கலாம். இதுபோல சில குறைகள் இருந்தாலும் பாராட்டப்படவேண்டிய சிறுகதைத் தொகுப்பு இது.

ராஜராஜன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-409-2.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


1 Comment

  1. […] மதிப்புரை வழங்கிய mathippurai.com க்கு மனமார்ந்த […]

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: