Home » History » அறிவியல் வரலாறு

அறிவியல் வரலாறு

வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த மனிதனின் அரைகுறை அறிவியல் உணர்வில் துவங்கி இந்தப் புத்தகத்தை எழுதி முடித்ததற்கு முந்தைய நாள் வரையிலான அறிவியல் வளர்ச்சியின் போக்குகளை சமூகவியல் கண்ணோட்டத்தில் “அறிவியல் வரலாறு” என்னும் நூலில் ஆர்தர் எஸ். கிரிகர் பல தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்.

அறிவியல் வரலாறு, ஆர்தர் எஸ். கிரிகர், முகம் பதிப்பகம், ரூ. 225

பண்டைய கிரேக்கர்களின் காலத்தில் பூமியின் அமைப்பு, இயக்கம், அமைவிடம் போன்றவை பற்றிய தகவல்களில் அவர்கள் படிப்படியாக தெளிவான புரிதலை நோக்கிச் சென்றதையும், பின்வந்த மத ஆதிக்கம் அறிவியலை எதிர்த்திசையில் சுழலச்செய்து முட்டுச்சந்தில் நிற்க வைத்ததையும், கோபர்நிக்கஸ், கெப்லர், கலிலியோ போன்ற இன்னும் பல விஞ்ஞானிகளின் தாக்கத்தால் அறிவியல் மீண்டெழுந்து வருகிறது.

அலெக்சாண்ட்ரியா நகரத்தில் வாழ்ந்த ஹைப்பேஷியா என்னும் பெண் விஞ்ஞானி பற்றிய வாழ்க்கை வரலாறு ‘அகோரா’ என்னும் பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. ஹைப்பேஷியா பற்றி முதன்முதலில் கேள்விப்பட்டது அப்போதுதான். அப்படத்தில் அவர் சூரியனைச் சுற்றும் கோள்களின் இயக்கங்கள் பற்றியும், புவியின் ஈர்ப்பு விசை தொடர்பான கருத்துகளைக் கண்டறிந்தது போலான தகவல்களும், கிறித்துவ மதத்தின் ஆதிக்கத்தால் ஹைப்பேஷியாவும், அவரது அறிவியல் கருத்துகளும் நசுக்கப்படுவதை நாம் அறிகிறோம். (ஹைப்பேஷியாவின் வரலாற்றை இந்நூலில் மிகச் சுருக்கமாகச் சொல்லிச் செல்கிறார்.) அது போல அறிவியல் கோட்பாடுகளை மதம் நசுக்கிய வரலாறு பற்றி இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

நூலின் கட்டமைப்பில் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதா அல்லது தானாக அமைந்ததா என்று தெரியவில்லை. மிகச்சரியாக புத்தகத்தின் நடுப்பக்கத்தில் (181 ஆம் பக்கத்தில்) இருந்து அறிவியல் மீதான மதத்தின் கட்டுப்பாடுகள் குறைவது பற்றி பேசப்படுகிறது. அதிலிருந்து அறிவியல் கோட்பாடுகளும் சமூகமும் மிகுவேகத்தில் வளர்ச்சி அடையத் துவங்குகிறது.

அரிஸ்டாட்டிலைப் பிடித்துக்கொண்டு தொங்கும் பழைய பத்தாம் பசலிகளே அறிவியலின் முன்னேற்றத்தைப் பல நூற்றாண்டுகளுக்குத் தள்ளிப்போட்டுக் கொண்டு வந்ததையும், எளிய சோதனை முறைகள் பல நூற்றாண்டு கால நம்பிக்கைகளையும் சுக்குநூறாக உடைத்து தூள் தூளாக்குவதையும் பதிவு செய்திருக்கிறார்.

அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் என்ற பெயரில் கிளப்பிவிடப்பட்ட பல கதைகளை இந்தப் புத்தகத்தில் உடைத்திருக்கிறார். நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைப் பற்றி யோசித்தபோது ஆப்பிள் கீழே விழுந்தது, பைசாவின் கோபுரத்தில் இருந்து கலிலியோ அந்தச் சோதனைகளை செய்திருக்கவில்லை; சாய்தளத்தின் மீதுதான் அந்தச் சோதனை நடத்தப்பட்டது, என்று ஸ்டீபன் ஹாக்கிங்கினுடைய “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” (Brief History of Time) புத்தகத்தில் அவர் பதிவு செய்திருப்பாரே இந்தத் தகவல்களை அளிக்க ஒரு வேளை அவருக்கு ஆர்தரும் இந்தப் புத்தகமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

வெறுமனே அறிவியலின் வரலாற்றை மட்டும் பதிவு செய்யும் நூலாக அல்லாது, அறிவியல் வளர்ச்சியோடு தொடர்புடைய சமூக வளர்ச்சியையும், அறிவியல் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் பொறுப்புணர்வோடு நூலில் பதிவு செய்திருக்கிறார். தொழிற்புரட்சி எப்படி மக்கள்தொகைப் பெருக்கத்துக்குக் காரணமாக இருக்கிறது. ஒரு தானியங்கிக் கருவியை முதன் முதலாக கண்டுபிடித்தவனின் வேலை பறிபோகும் நிகழ்ச்சி, இயந்திரமயமாக்கலின் காரணமாய் சமூகத்தில் ஏற்பட்ட தீமைகள் என்று பலவற்றையும் ஆய்வு செய்திருக்கிறார்.

பதினெட்டாம் நூற்றாண்டை நீராவி யுகம் என்றும் அடுத்த நூற்றாண்டை மின்சார யுகம் என்றும் வர்ணித்திருக்கும் ஆர்தர் அவர் வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டின் யுகமான கணிப்பொறியியலைப் பற்றியும் அதன் இன்றைய வளர்ச்சியையும் பற்றிப் பதிவு செய்திருக்கிறார். அடுத்த நூற்றாண்டு மின்னணு எந்திரங்களின் யுகத்தைக் குறிப்பதை நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்புத்தகம் முடியும் இடத்திலிருந்து அறிவியலின் வரலாற்றைத் தொகுத்து எழுதவேண்டியது காலத்தின் தேவை. ஆங்கிலத்தில் சில புத்தகங்கள் இத்தலைப்பில் வெளிவந்திருக்கும் நிலையில் தமிழிலும் கொண்டுவர வேண்டியது அவசியம்.

ஒட்டுமொத்தமாகப் புத்தகம் அறிவியலின் வரலாறு என்று கூறினாலும், புத்தகத்தின் பெரும்பகுதி இயற்பியல் தொடர்பான அறிவியல் வரலாற்றைப் பதிவு செய்வதாகவே இருக்கிறது. வேதியியல், உயிரியல், மருத்துவம், கணிதம் போன்ற பிற துறை சார்ந்த அறிவியல் வரலாற்றுப் பதிவுகளின் அளவு மிகவும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஸ்ரீமான் மோடியின் ஆட்சி பாரதத்தில் வியாபித்திருக்கும் நிலையில் நாம் வெளிக்கொண்டு வந்திருக்கும் நான்காயிரம் ஆண்டு பழமையான இந்தியாவின் அறிவியல் வரலாறுகளைப் பற்றிய ஒற்றைத் தகவலைக்கூட இந்நூல் ஆசிரியர் பதிவே செய்யாதது பெரிய வருத்தம் தரும் நிகழ்வாகும்.

நூலின் மொழிபெயர்ப்பில் சில குறைகளாக சுட்டிக் காட்டலாம். மொழிபெயர்க்கும்போது அந்தப் பிராந்தியந்தின் அளவீட்டு முறைகளைப் பயன்படுத்துவதே முறையானதாக இருக்கும். உதாரணமாக தூரங்களைக் குறிக்கும்போது இப்புத்தகத்தில் மைல் என்ற அளவீட்டையே பயன்படுத்துகிறார், அதை வேறு நாம் பயன்படுத்தும் நம்முடைய அளவீட்டுக்கு மாற்றிப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

பல அறிவியல் அறிஞர்களின் பெயர்களை தமிழ்ப்படுத்துவதில் ஆங்காங்கே பல குளறுபடிகள். ஊரறிந்த அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் அல்லாத சிலரின் பெயரைக் குறிக்கும்போது அவர்களைப் பற்றி மேலும் நாம் அறிந்துகொள்ள தேடலைத் துவங்க இயலாத சூழல் நிலவுகிறது. அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கிலத்தில் பெயர்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மாஸ்கோவிலிருந்து முன்னேற்றப் பதிப்பகம், மிர், ராதுகா போன்ற பதிப்பகங்களின் பழைய புத்தகங்களை தற்போது NCBH பதிப்பகம் புதிய பதிப்புகளாக வெளியிடும்போது அந்நூலை மொழிபெயர்த்தவர்களின் பெயர்களை ஏனோ புத்தகத்தில் குறிப்பிடாமல் இருக்கிறார்கள்.

1964இல் ஹிக்கின் பாதம்ஸ் அறிவியல் வரலாறு புத்தகத்தின் முதல் பதிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் இரண்டாம் பதிப்பை தற்போது முகம் பதிப்பகம் (தங்கள் பதிப்பகத்தின் முதல் வெளியீடு என்று கூறுகிறார்கள்) வெளியிட்டிருக்கிறது. இப்பதிப்பில் மொழிபெயர்த்தவர்(கள்) பற்றிய ஒரு குறிப்பும் இல்லை. இப்படியான போக்கு ஏன் நிலவுகிறது என்பது புரியவில்லை.

சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தை சிறுவர் இலக்கியங்கள் கொண்டு ஊக்குவித்த பிறகு இந்த நூலை சிறுவர்களுக்கு வாசிக்க அளிப்பதன் மூலமாகவோ, இந்நூலின் கருத்துகளைச் சிறுவர்களுக்கு நாம் கூறுவதன் மூலமாகவோ சிறுவர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க முடியும்.

த. பழனி

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0000-502-9.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: