Home » Short story » பாதரஸ ஓநாய்களின் தனிமை

பாதரஸ ஓநாய்களின் தனிமை

இருபது சிறுகதைகள், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், வண்ணநிலவன், சி.சு. செல்லப்பா, தஞ்சை பிரகாஷ், கண்மணி குணசேகரன்… என இருபது கிளாசிக் ஆசிரியர்கள், ஒரே மையக்கரு – திருட்டு. உண்மையில் ஒரு மிக ஆச்சர்யமான, பொக்கிஷப்படுத்தவேண்டிய தொகுப்பு.

பாதரஸ ஓநாய்களின் தனிமை, ஆ. பூமிச்செல்வம், அன்னம் பதிப்பகம், ரூ. 200

திருட்டு என்பது ஒரு வித சாகசம். திருட்டு குறித்த கதைகளையும் பெரும்பாலும் நாம் சாகசக் கதைகளாகத்தான் அணுக விரும்புகிறோம். மாறாக இங்கே, திருடனின் தர்மப்பண்பு (சங்குத்தேவரின் தர்மம்), திருந்தி வாழ நினைக்கும் முன்னாள் திருடன் (ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது), திருட்டுக்கு முந்தைய மனநிலை (களவு), கஞ்சா அடித்து வரும் பித்த நிலை (பறக்கும் திருடனுக்குள்), முன்னோரின் திருட்டின் வடுக்களை உணரும் திருடன் (சனிக்கிழமை திருடன்)… என பெரும்பாலும் இவை உளவியல் கதைகளாகத்தான் விரிகிறது.

இவை தவிர, ‘பூட்டு பாம்படம்’ எனுமொரு நகைச்சுவைக் கதையும், சி.டி. சட்டம் பற்றி பேசும் ‘குற்றப் பரம்பரை’யும், பஞ்சத்தின் குடைச்சலில் செய்யும் திருட்டைப் பேசுவதோடு ஒரு பசுவிற்கும் மனிதனுக்கும் உள்ள பிணைப்பையும் பேசும் ‘புத்துயிர்ப்பு’ம் இந்தத் தொகுப்பிற்கு ஒரு வெரைட்டியைத் தருகின்றன.

‘சுருக்கு’ எனும் கதையின் தலைப்பு தூக்கு போட்டுக்கொள்வது என்ற பொருளில் வைக்கப்பட்டிருந்தாலும், கதையின் கடைசி வரி சுருக்கென முடிவதால், வைக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். வேல.இராமமூர்த்தியின் ‘இருளப்ப சாமியும் 21 கிடாயும்’ எஸ்.ரா.வின் நூறு சிறந்த சிறுகதைகள் தொகுப்பிலும் இடம்பிடித்திருக்கும் ஓர் அட்டகாசமான கதை. வண்ணநிலவனின் க்ளிஷே நாயகியொருத்தி வரும் ‘திருடன்’ கதை அக்மார்க் அவரது பாணி.

நாம் எதிர்பார்த்திருக்கும் சாகசக் கதை தஞ்சை ப்ரகாஷ் மூலம் கிடைக்கிறது. ‘தண்டி’. இவன் சாகசக்காரன் என்பதைத் தாண்டி கிட்டத்தட்ட ஒரு சூப்பர்-ஹீரோ போலவே வலம் வருகிறான். ஊரில் இருக்கும் வரை அவனை பொறிந்துதள்ளும் ஊரின் பெரிய தலைகள் அவன் பக்கத்து ஊர்களில் கைவரிசையைக் காட்ட சென்றபின், அவர்களும் அவனை சாகசக்காரனாகப் பார்ப்பதோடு கதை முடிகிறது. முன்னுரை சொல்வதுபோல, திருடர்கள் மகாமனிதர்கள் எனும்தொனியில் வந்துள்ள கதை இது. பவா.செல்லதுரை மற்றும் ஜி. நாகராஜன் சார்பாக வந்திருக்கும் கதைகள் கொஞ்சம் ஓவர்டோஸ் குறியீட்டுத் தன்மையால் அரைகுறையாகத்தான் புரிந்தது.

பூனையும் ஓநாயும் இலக்கியவாதிகளின் செல்ல மிருகங்கள் போல. ஓநாய் குலச் சின்னம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (மிஸ்கின் இலக்கியவாதிதானே?), சமீபத்தில் சுதாகரின் 7.83 ஹெர்ட்ஸ் என ஒரே ஓநாய் படலம். இங்கே எழுத்தாளர் கோணங்கியின் படைப்பான ‘பாதரஸ ஓநாய்களின் தனிமை’ என்று ஒரு கதை. ஜெயமோகன் ஒருமுறை சமகால எழுத்தாளர்களில் சுஜாதாவின் தாக்கம் இல்லாதவர் கோணங்கி மட்டுமே என எழுதியிருந்தார். அவரின் மதினிமார்கள் கதை படிக்கும்போது எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. இப்போது இந்த பா.ஓ.த படிக்கும்போதுதான் ஜெயமோகன் சொன்னது கண்டிப்பாக பாராட்டாய் இருக்கமுடியாது என்று தோன்றியது. என்னால் படிக்கமுடியாமல் கைவிட்ட ஒரே கதை இந்தத் தொகுப்பின் தலைப்பாய் வந்த கதை என்பதுதான் சோகம். அனேகமாக அது வாசிப்பு தீவிரவாதிகளுக்கு மட்டுமே உரிய கதை; உங்களால் முடிகிறதா என்று பாருங்களேன்,

‘கண்புலம்பும் செம்பாலை தனத்திருந்த முதுவேனில் துயரம் பொழுதின் விளிம்பில் திரிந்து புகையாய் சூழ்ந்துள்ள முன்பனிக்காலம் வண்டார்க்கும் புதரெல்லாம் உதிர்முல்லை அரும்பில் கோர்த்த பனித்துளிகள் பாத்ரஸ கண்களாகி உள்சுழலும் குளிர்ந்தாபாலை. நிலா எரிக்கும் ராக்கால மணல் வடுக்களில் ஆறலைக்கள்வர்…’ – இப்படியே கிட்டத்தட்ட முப்பது பக்கங்களுக்குப் போகிறது.

250 பக்கங்களிலான திருட்டு குறித்த கதைத் தொகுப்பில் ஒரு பக்க அளவிற்குக்கூட போலீஸ்காரர்களுக்கு வேலையில்லை. ஏனெனில் இவற்றில் எதுவும் பெரிதாக துப்பறியும் ஏஜண்ட் கதைகள் இல்லை. அத்தனையும் நாட்டுப்புறக்கதைகள். பெரும்பாலும் களவுபோவதெல்லாம் ஆடுகள், கரும்பு, மாங்காய், கிழங்கு, வாழை, மாட்டுத்தீவனம், அவ்வப்போது நகைகள், புடவை, கொஞ்சமேனும் பணம். அவ்வளவே. Collateral damage ஆக கொலையோ கற்பழிப்போ நடப்பதில்லை. தேவர், கோனார், கள்ளர், செட்டியார்… என நாட்டுப்புறக் கதைகளுக்கே உரித்தான சாதிச் சாயங்கள் கதைகளில் உண்டு.

திருட்டு குறித்த உளவியல் பேசும் கதைகள், பல்வேறு வட்டார வழக்குகள், ஒரே மாதிரியான நடையிலல்லாது வெவ்வேறு ஆசிரியர்களால் அவர்களுக்கான பாணியிலான கதைகள் என ஒரு தொகுப்பாக நிச்சயம் ஒரு வாசிப்புப் பரவசத்தைக் கொடுக்கமுடியும் புத்தகம். சிறுகதை விரும்பிகளுக்கு இப்படி genre வாரியாக தொகுப்புகள் கிடைப்பது மகிழ்ச்சியான விஷயம்.

மயிலன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-460-2.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: