Home » Politics » சீனா வல்லரசு ஆனது எப்படி?

சீனா வல்லரசு ஆனது எப்படி?

உலகப் பொருளாதாரம் சீர்குலைந்து போகும்போது எப்படி சீனா மட்டும் நிலையான பொருளாதார பலம் பெற்ற நாடாக இருக்கிறது என்று நீண்டகாலமாகவே ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. சீனா ஒரு காலத்தில் எந்த நாட்டுடனும் தொடர்பு இல்லாமல் இரும்புத்திரை போர்த்திய நாடாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது உள்ள உலகப் பொருளாதாரச் சூழ்நிலை வேறு. இப்போது இங்கே தனித்து யாருமில்லை. அனைத்து நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. ஜப்பானில் சுனாமி என்றால் இந்திய பங்குச்சந்தையில் இறக்கம் ஏற்படும். அமெரிக்காவில் குண்டு வெடித்தால் இந்திய பங்குச்சந்தையில் இறக்கம் ஏற்படும். இப்படி ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும்போது சீனா மட்டும் எப்படி சரிவைச் சந்திக்காமல் இருக்கிறது! என்ன காரணமாக இருக்கும் என்ற சந்தேகத்தை தெளிவாகத் தீர்த்துவைக்கிறது இந்தச் சிறிய புத்தகம்.

சீனா வல்லரசு ஆனது எப்படி?, ரமணன், கிழக்கு பதிப்பகம், ரூ. 90

பொதுவாக ஒரு புத்தகம் வாங்கினால் அதில் நமக்குத் தேவையான விஷயம் குறைவாக இருக்கும். அதைத்தவிர மற்ற விஷயங்கள் அதிகமாக இருக்கும். உதாரணமாக கம்யூனிசம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள புத்தகம் வாங்கினால் அதில் காரல் மார்க்ஸின் பிறப்பு, இறப்பு, காதல், ஏங்கல்ஸ் உடனான நட்பு போன்ற சம்பிரதாயமான விஷயங்களே அதிகம் இருக்கும். நமக்குத் தேவையான விஷயம் குறைவாகவே இருக்கும்.

இந்தப் புத்தகத்தின் அளவைப் பார்த்ததும் இதுவும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். நினைத்ததைப் போலவே கலாசாரப் புரட்சி, மாபெரும் பாய்ச்சல் போன்ற விஷயங்கள் விரிவாக இல்லை. அதைப் பற்றி ஒருசில விபரங்களை மட்டுமே காணமுடிகிறது. ஆனால் சீனா மட்டும் எப்படி வளர்ச்சி அடைந்தது அல்லது அடைந்துகொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு மிக விரிவாக பதில் சொல்கிறது இந்தப் புத்தகம்.

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் என்ன வித்தியாசம்? இந்தியா சீனாவை மிஞ்சிவிடுமா? என்ற கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் தெளிவான விடை இருக்கிறது. சாதாரணமாக இந்தப் புத்தகத்தைப் படித்தாலே நாம் எங்கே இருக்கின்றோம் என்பதை சொல்லாமல் சொல்கிறார் ஆசிரியர். நாம் வீரமாக என்னவேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம், ஆனால் எதார்த்தம் என்பது வேறு என்பதை இந்தப் புத்தகம் புரியவைக்கின்றது. ஒரு அரசு போடும் திட்டம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உதவுகிறது, அந்தத் திட்டத்தை எந்த நோக்கத்திற்காக உருவாக்குகின்றனர் என்பதைப் பற்றி ஆசிரியர் விளக்கியிருப்பதைப் படிக்கும்போது, நம்முடைய திட்டங்களும் அதை நாம் செயல்படுத்தும் விதமும் தானாகவே ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், சீனாவைப்பற்றி ஆயிரம் குறை சொன்னாலும், சீனாவை மிஞ்சிவிடலாம் என்ற நினைப்பே நமக்கு வராது என்று நினைக்கின்றேன்.

சீனாவைப் பற்றிய மற்றொரு சந்தேகம் அல்லது விவாதம் அடிக்கடி நிகழ்வதுண்டு. சீனாவில் கம்யூனிசமே கிடையாது. கம்யூனிசத்தை விட்டு வெகுகாலம் ஆகிவிட்டது என்றொரு பேச்சு அவ்வப்போது எழுவதுண்டு. அந்த விஷயத்தையும் அதன் வளர்ச்சிப்போக்கையும் மிகத் தெளிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார். மாவோ காலத்தில் இருந்து படிப்படியாக அதன் மாற்றங்களை விளக்கி இப்போது அவர்களின் கம்யூனிச நிலை என்ன என்பதுவரை புரிந்துகொள்ள முடிகிறது. நவீன சீனாவின் தந்தை என்று டெங் ஜியோபிங் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். அவரைப் பற்றியும் அவரின் அரசியல் வாழ்க்கை பற்றியும் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் பெரிதும் உதவியாக உள்ளது.

மாவோ அவர்களின் புத்தகங்கள், கட்டுரைகள் படிக்கையில் கம்யூனிசத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை கண்டித்திருப்பதைக் காணமுடியும். கம்யூனிசக் கொள்கைகளை சீனாவின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்பதை விளக்கியிருப்பார். இந்தப் புத்தகத்தில் டெங் ஜியோபிங் பூனை எலியைப் பிடிக்கிறதா இல்லையா என்பதைத்தான் பார்க்கவேண்டும் என்று கூறியிருப்பதையும் அவரின் அரசியல் நடைமுறைகளையும் படிக்கையில் வெறும் கம்யூனிச வரட்டுவாதியாக இல்லாமல், வெறும் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இல்லாமல், அவர்களின் நோக்கத்திற்காகவும், அவர்களின் வெற்றிக்காகவும் கம்யூனிசத்தை அவர்களின் தேவையின் நெளிவு சுழிவுகளோடு பயன்படுத்தி இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அடுத்த பத்து ஆண்டுகளில் அடையவேண்டிய இலக்கு என்பதைத் தீர்மானித்து அதற்காக இயற்றவேண்டிய சட்டம் என்ன அல்லது இருக்கின்ற சட்டத்தில் கொண்டுவர வேண்டிய மாற்றம் என்ன… என்று ஆரம்பிக்கும் அவர்களின் திட்டமும் அந்தத் திட்டத்திற்கு அடிப்படையான கட்டுமானத் தேவைகள் என்ன என்பதையும் ஒன்றாக இணைக்கும் அவர்களின் சிந்தனை வியக்க வைக்கின்றது. ஒரு திட்டம் உருவாக்கப்படும்போதே அதை அடைய தேவைகளையும் கணக்கில் கொள்கிறார்கள்.

எம்.எஸ். உதயமூர்த்தி எழுதிய ஜப்பானிய அணுகுமுறை புத்தகத்தைப் படித்தோமானால் அதில் ஜப்பானிய வளர்ச்சியை விளக்குவதுடன் அதில் இருந்து தனிப்பட்ட முறையில் நாம் கற்றுக்கொள்ளவும், செயல்படுத்தவும் பல விஷயங்களைச் சொல்லியிருப்பார். அப்படிப்பட்ட விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் குறைவு. மற்றபடி சீனாவைப் பற்றி அடிப்படையான விஷயங்களையும் அதன் வரலாற்று நிகழ்வுகளையும் சுருக்கமாகவும் அதன் வளர்ச்சி பற்றி விரிவாகவும் அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும்.

பா. பூபதி

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-8414-901-7.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: