Home » History » பண்டைய நாகரிகங்கள்

பண்டைய நாகரிகங்கள்

வரலாற்றுப் புத்தகங்களுக்கு விக்கிப்பீடியா ஒரு மாற்று என்ற நம்பிக்கை எனக்கு இருந்து வந்தது. இருந்தும் வருகிறது. பண்டைய நாகரிகங்கள் புத்தகத்தைப் பொறுத்தவரை இந்த நம்பிக்கை கொஞ்சம் பொய்யாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். என்ன தேடவேண்டும் என்று தெரிந்தால்தானே இணையமெல்லாம். வெறும் 208 பக்கங்களில், ஏழு நாகரிகங்களைப் பற்றி மிகச் சாதாரணமாக போகிறபோக்கில் சொல்லிச் செல்வதெல்லாம் பாராட்டலுக்குரிய உழைப்பு.

பண்டைய நாகரிகங்கள், எஸ்.எல்.வி. மூர்த்தி, கிழக்கு பதிப்பகம், ரூ. 150

என்னதான் ஏழு நாகரிகங்கள் பேசப்பட்டாலும், என் குறுகுறுப்பு முதலில் எகிப்தியப் பக்கங்களுக்குதான் தாவியது. ஏமாற்றம் என்றுதான் சொல்லவேண்டும். பிரமிடு வடிவத்திலான கட்டுமானத்தின் அறிவியல் மட்டுமே புதிது. மற்றவை கொஞ்சம் பெரும்பான்மையினருக்குத் தெரிந்த சேதிதான். எகிப்தின் ரே கடவுள் பற்றிய குறிப்புகளும், கார்னெட் என்ற அகழ்வாராய்ச்சியாளரைச் சுற்றிய மம்மி சாபமும் சுவாரஸ்ய துணுக்குகள்.

அப்படியே பக்கங்களைப் பின்னோக்கினேன். சீன நாகரிகம். அனேகனில் அமைராவிற்குக் கிடைக்கும் இலோப்பமின் ஒன்று இந்தப் புத்தகம் முடித்ததும் எனக்குக் கிடைத்திருந்தால், ஏதோவொரு சீனவம்ச சக்கரவர்த்தியாக hallucinate ஆகியிருப்பேன். கற்காலம் முதல் கம்யூனிசம் வரை அத்தனைப் படிகளும் ஓர் எளிய வாசகனுக்குக் கொண்டுசேர்க்கும் தொனியில் அக்கறையுடன் தொகுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் அதிகப்படியான விவரிப்பிற்கெல்லாம் மெனக்கெடவேயில்லை. பெரும்பாலும் தேவையான அளவு மட்டும். பட்டு உற்பத்தி, வணிகம், மருத்துவம், இலக்கியம், அரசாண்ட வம்சத்தினர், நில அமைப்பு, மொழி, எழுத்து வடிவம், மண்ணாசை, போர், ஐரோப்பியர் வருகை, மக்களாட்சி என செறிவான தொகுப்பாக நிறைவைத் தருகிறது. திருநங்கைகள் அரசு அதிகாரத்தில் இருந்தது, terracota army, ஸிக்கு க்வான்ஷு இலக்கியத் தொகுப்பு முயற்சி போன்றவை குறிப்பிடத்தக்க இடங்கள்.

முதல் விவரிப்பு மெசபடோமிய நாகரிகம். பாய்ந்த இரு நதிகள், வாழ்வு, வளர்ச்சி, கடைசியில் அந்த நதியாலும் போராலும் அழிந்ததில் முடிகிறது. அவர்களின் எண் முறையும், அதற்கு கை மூட்டு கணக்குதான் காரணம் என்பதும் சுவாரஸ்யம். நம்மவர்களின் சிந்துச் சமவெளி நாகரிகம் முழுக்கவே எந்தவொரு தீர்க்கமான ஆதாரமுமின்றி அகழ்வாராய்ச்சியாளர்களால், அரைகுறை சிதிலங்களால் வரலாற்றில் பதியப்பட்டிருக்கும் நாகரிகம். எப்படி அழிந்தது என்பதும்கூட ஆராய்ச்சியாளர்களின் கற்பனையின் மிச்சமாகவே இன்னும் நிற்கிறது.

முழுக்கவே நம் தமிழகத்தையோ, இந்தியாவையோ பற்றிதான் படித்துக்கொண்டிருக்கிறோம் என்ற நினைவைத் தருவது கிரேக்க நாகரிகம். பொருளாதார அடுக்குகள், ஆண் பெண் வரையறை, திருமண வயது, பெண்களின் ஒப்பனைமுறை, சிசு அழிப்பு, திருமணச் சடங்குகள், இழவுச் சடங்குகள் என அத்தனையிலும் நம்மிடம் கிரேக்கச் சாயல் இன்னமும் இருக்கிறது. கலை விளையாட்டு குறித்து அதிக முக்கியத்துவம் கிரேக்க நாகரிகத்தின் பெருமைக்குரிய விஷயம். ஒலிம்பிக் உருவாக்கம் பற்றிய பக்கங்கள் முக்கியமானவை. அலெக்சாண்டரால் இந்தியா வரை அவர்களின் வாழ்க்கை முறை கொண்டுசேர்க்கப்பட்டது என்ற செய்தியுடன் முடிகிறது.

அடுத்ததாக மாயன் நாகரிகம். அதீத கடவுள் பற்று இங்கே நிலவுகிறது. அவர்களின் கணிதமுறை, காலெண்டர் பற்றிய பக்கங்களில் அத்தனை ஆச்சர்யங்கள். அவர்களின் கொக்கோ கொட்டை எப்படி இன்றைய ரமேஷ்-சுரேஷ் கேட்பரி ஆனது என்பது இரண்டு தித்திப்பான பக்கங்களில் சொல்லப்பட்டுள்ளது. இடையில் இரண்டு முயல் கதைகள். ஸ்பெயின் அழித்தது போக மிஞ்சும் மாயன் இலக்கியம் இப்படியானது என்பதுதான் சோகம்.

எகிப்திற்கு அடுத்தபடியாக என் அதிக எதிர்பார்ப்பால் நான் ஏமாந்தது ரோம நாகரிகம். புத்தகத்தின் முடிவை நெருங்கும் தருவாயில் அவசரமாய் பூசி மெழுகியதுபோல முடித்துவிட்டார் என நினைக்கிறேன். ரோம் நகர வீதிகளும் வீடுகளும் ஓரளவிற்கு நமக்கு காட்சிகளாக்கப்படுவதைத் தாண்டி அதிக சுவாரஸ்யம் இல்லை.

புத்தகத்தில் உள்ள முப்பத்து சொச்சம் ‘மெல்ல’களும் ‘மெள்ள’களாக அச்சாகியுள்ளன (இரண்டுமே சரிதான் என்கிறார்கள். பாரதியின் ‘மெல்ல’தான் எனக்கு உவப்பு). ‘இன்டர்நெட்டும் இணையதளமும் வந்தபிறகு…’ என்று விஜய் டிவி கிரிக்கெட் தமிழ் வர்ணனை போன்ற வரிகள் சில ஆங்காங்கே. என்னதான் வரலாற்றுத் தொகுப்பு எனினும், ஆசிரியர் ஒரு கதைசொல்லியாக தன்னை பாவித்துக்கொண்டு எழுதுவது ஒரு தொய்வைத் தவிர்க்கும். ஆனால் இங்கே, ஆசிரியர் பெரும்பாலும் ஒரு தகவற்சொல்லியாக விபரங்களை அடுக்கிக்கொண்டே போகிறார். ஒரு கட்டத்தில், எல்லாமே ஒன்றைப்போல தோன்றிவிடும் வாய்ப்பும் இருக்கிறது. ஏழு களத்திற்கும், நடை, பத்தி அமைப்பு, விபரங்களின் தொகுப்பிற்கான கட்டமைப்பு இவற்றில் கொஞ்சம் வித்தியாசம் காட்ட முயற்சித்திருந்தால் இப்புத்தகம் வெறும் தகவல் பெட்டகம் என்பதைத் தாண்டிய சிறந்த படைப்பாய் வந்திருக்கும்.

மயிலன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-8414-905-5.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: