Home » History » அர்த்தசாஸ்திரம்

அர்த்தசாஸ்திரம்

மானுட வாழ்வில் அடைய வேண்டியனவாக “அறம், பொருள் மற்றும் இன்பம்” ஆகிய மூன்றும் கருதப்பட்டன. குறிப்பாக அரச குமாரர்கள் அவசியம் தெரிந்துகொள்ள அவற்றை நூல்களில் விளக்கி கற்பித்தனர். செல்வம் பற்றி விளக்கும் நூல் அர்த்தசாஸ்திரம். இந்நூல் தானே சொல்லிக்கொண்டபடி “ஒரு மனிதரின் வாழ்க்கையின் மூலாதாரம் செல்வமே. அதாவது மனிதர்கள் வாழும் இந்த பூமியே. அந்த பூமியைக் கையகப்படுத்தலும் காத்தலுமே அர்த்தசாஸ்திரம்.”

அர்த்தசாஸ்திரம், தாமஸ் ஆர். டிரவுட்மன், கிழக்கு பதிப்பகம், ரூ. 125

மேலைச்சிந்தனைகளில் இந்தியாவின் பண்டைய ஆட்சியாளர்களை கொடூரமாக வர்ணித்து உள்ளனரே அது உண்மையா? கிரேக்கர்கள் அவர்கள் வாழ்க்கை நிலையை உயர்த்திப் பிடிக்க “ஆசிய நாடுகளில் அரசருக்கே எல்லாம் சொந்தம், மற்றவர்கள் அவரின் அடிமைகள்” என்றனரே? பேராசான் மார்க்ஸ் இந்நிலையை, கீழ்த் திசை சர்வாதிகாரம் என்ற சொல்லை உருவாக்கி ஆசிய நாடுகள் உறங்குவதற்கு இந்நிலைதான் காரணம் என்றாரே? நிஜம்தானா? அன்று ஆசியாவின் பொருளாதாரம் அவ்வளவு மட்டமாக இருந்ததா?

ஒரு வணிகர் சேர்த்து வைத்த செல்வத்தை ஓரிரவில் அரசன் கொள்ளையிட்டுச் சென்றுவிட முடியுமா? வணிகரோடு ஒப்பந்தம் செய்துகொண்டு விலை ஏற்றத்திற்கு ஆதரவு, பொது இடங்களை வியாபாரத்திற்கு குறைந்த விலையில் கொடுத்தல் என அரசன் கூட்டுக் கொள்ளை அடித்தானா? மக்கள் பாதிக்கப்பட்டனரா? தாமஸ் டிரவுட்மனின் இந்நூல் தெளிவைத் தருகிறது.

பொதுவாக வரலாற்று ஆசிரியர்கள் மன்னனின் பார்வையில் இருந்தே விஷயங்களைப் பார்ப்பார்கள். மனோ தத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள், ஒரு குழந்தை தன்னுடைய ஆரம்ப மாதங்களில் தன்னை தாயுடன் சேர்த்தே நினைத்துக் கொள்கிறது, வளர வளரதான், அதற்கு தான் தனி என்ற எண்ணம் வரத் தோன்றுகிறது. மக்களும் தங்களை அரசனோடே சேர்த்து எண்ணிக் கொண்டிருந்திருக்கலாம். ஏனெனில் அவன் தோல்வியும் வெற்றியும் அவர்களை நேரடியாக பாதிக்கிறது. இன்று ஒரு கட்சி தோற்றுவிட்டால் அதன் தொண்டர்களைத் தவிர வேறு எவருக்கும் வருத்தமில்லை.

இந்தப் பின்னணியுடன்தான் அர்த்த சாஸ்திரம் மன்னனை மட்டும் கணக்கில் கொள்வதைப் பார்க்கவேண்டும். இந்நூல் அரசரை மட்டுமே மையமாகக் கொண்டு சிந்திப்பதால் பல அம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளன. கைவினைத் தொழிலாளர்களின் மோசடிகளைக் கண்காணிப்பது என்ற தலைப்பில் மண் பானைகள் பற்றி குறிப்பேதும் இல்லை பெரும்பாலானோர் உபயோகித்த பொருள் ஆனாலும், அர்த்தசாஸ்திரம் கணக்கில் கொள்ள மண் பானைகளுக்கு தகுதி இல்லை.

அர்த்தசாஸ்திரம் வெறும் ஏட்டுச்சுரைக்காய் அல்ல. மிகுந்த நடைமுறை அறிவுடன் எழுதப்பட்டுள்ளது. ஆபத்துக் காலங்களில் தப்பிச் செல்வதற்காக குறிப்பிட்ட நிதியை நாட்டின் எல்லையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மூலம் புதைக்கச் சொல்கிறது. ரகசியம் காக்கப்பட இப்படி ஓர் ஏற்பாடு. பண்டக சாலை இயக்குநரே சிறைச் சாலையையும் கட்டினார். அதற்குக் காரணம் அவர் பலமான, பாதுகாப்பான பண்டக சாலைகள் கட்டிய அனுபவமோ அல்லது தானியக் களஞ்சியத்தில் இருந்து கைதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பதாகவோ இருக்கவேண்டும்.

இதைவிட காய்கறிகளையும் இறைச்சியையும் பயன்படுத்தி செய்யவேண்டிய குழம்பில் போடப்பட வேண்டிய பொருட்களின் அளவுகூட சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு சொல்லியும் “நீரில் நீந்துகின்ற மீன் தண்ணீரைக் குடிக்கிறதா இல்லையா என்று எப்படி அறிய முடியாதோ அதுபோல பணிகளை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பண மோசடி செய்வதை அறிய இயலாது” என்று கூறி தன்னுடைய நடைமுறை அறிவை வெளிக்காட்டுகிறது.

தாமஸ் டிரவுட்மனின் இந்நூல் செல்வத்தின் அறிவியல், முடியரசுகள், பொருட்கள், பணியிடங்கள் மற்றும் சந்தைகள் என ஐந்து தலைப்புகளில் அர்த்த சாஸ்திரம் கூறுவதைப் பிரித்து விளக்குகிறது. கடைசி அத்தியாயத்தில் தொலைநூக்குப் பார்வையில் அர்த்தசாஸ்திரம் எவ்வாறு பார்க்கப்படவேண்டும் என ஆசிரியர் விளக்கும்போது, ஆலோசனைகளுக்காக வாசிக்காமல், நமது இன்றைய நிலையை ஒரு விரிவான நோக்கின்மூலம் அறிந்துகொள்ள பயன்படுத்தலாம் என்கிறார்.

அணிந்துரையில் இருந்து, இந்நூல் இந்திய வணிகம் பற்றி எழுதப்படும் தொடர் நூல்களில் முதல் நூல் என அறிகிறோம். தலையானது என்ற பெயரையும் பெறும். ஏனென்றால் “நாக்கில் வைக்கப்பட்ட தேனையோ விஷத்தையோ சுவைக்காமல் இருக்க முடியாது. அதுபோல அரசனுடைய பணத்தைக் கையாளும் ஒருவனால், சிறிதளவே ஆனாலும் பணத்தை சுவைக்காமல் இருக்க முடியாது” என்ற எக்காலத்திலும் பொருந்தக்கூடிய எச்சரிக்கையை எப்படி நிராகரிக்க முடியும்?

எம். சட்டநாதன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-5135-192-4.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: