Home » Cookery » ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல்

ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல்

சமைப்பது என்பதே அரிதாகிவிட்ட காலத்திலும் புத்தகத் திருவிழாக்களில் சக்கைப்போடு போடும் புத்தக வகைகளில் ஒன்று சமையல் புத்தகங்களே. பாரம்பரியமான சமையல் முறைகள் முன்பு கூட்டுக் குடும்பம்/ குடித்தனத்தின் வாயிலாகப் பரவலாக அறியப்பட்டன. இன்றோ தனிக்குடும்பங்கள் பெருகிவிட்டன. இன்றைய பெற்றோர்கள்கூட பாரம்பரியமான மரபு உணவுவகைகளை அறிந்திருப்பதில்லை என்பது கண்கூடு. இந்தச் சூழலில்தான் ஜன்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் ஆகியவற்றின் ஆபத்து உணரப்பட்டு ஆரோக்கியமான உணவு வகைகளை நோக்கி உணவுப் பிரியர்களின் கவனம் திரும்பியுள்ளது. இளந்தலைமுறையினரோ நவீன உணவுக் கலாசாரத்திலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. இவ்விரு பிரிவினருக்கும் ஏற்ற சத்தான உணவு வகைகளைப் பரிந்துரைக்கின்ற தரமான நூலின் தேவையை கிழக்கு பதிப்பகம் தீபா சேகரின் சிறுதானிய சமையல் என்னும் புத்தகத்தின் வாயிலாக நிறைவேற்றியுள்ளது.

ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல், தீபா சேகர், கிழக்கு பதிப்பகம், ரூ. 100

கிராமங்களில் அரிசிச்சோறு என்பது மிகவும் அரிதானதாகும். விழா, பண்டிகை நாட்களில் நெல்லுச்சோறு உண்பது அரிய ஒன்று. இந்த நிலை இன்று மாறிவிட்டது. அரிசிச்சோறு தவிர ஏனைய தானிய வகைகளைப் பயன்படுத்தி ஆரோக்கியமான உணவுகளை உண்டுவந்த கிராமத்துச் சத்தான உணவு முறைகளை நவீனவுலகின் தலைமுறைகளுக்கு மடைமாற்றம் செய்வதுபோல அமைந்த சிறு நூலே தீபா சேகரின் சிறுதானிய சமையல்.

தினை, சாமை, கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி அரிசி, சோளம் ஆகிய தானியங்களைக்கொண்டு பாயசம், பணியாரம், அடை, தோசை, போண்டா, கொழுக்கட்டை, பக்கோடா ஆகிய உணவு வகைகளை சமைத்து ருசிக்கும் வண்ணம் செய்முறைகளுடன் விவரணப்படுத்துகின்றது இந்நூல். முதன்மை உணவாகவும் சிற்றுண்டி வகையாகவும் இனிப்பு வகையாகவும் சூப், சுண்டல், கஞ்சி, குழம்பு என பலவகையான சமையல் குறிப்புகள் குழந்தைகளை உண்ணவைக்கப் போராடும் தாய்மார்களுக்குக் கைகொடுக்கும் கருவி எனலாம்.

பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி உண்ணும் தோசை, அடை முதலான உணவு வகைகளுக்குச் சிறுதானியங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு வயிறு நிறைவதோடு வேண்டிய ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

தமிழ்நாட்டின் உணவு வகைகளே அல்லாமல் வடநாட்டு உணவு வகைகளையும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யலாம் என்பதை ராகி டிகியா, சோள பராண்டா ஆகியவற்றையும் செய்து உண்ணலாம் என்று பரிந்துரைக்கின்ற இந்நூல் சிறுதானியங்களைக் கொண்டு ஜெல்லி முதலான மேனாட்டு உணவு வகைகளையும் செய்யும் முறைகளை எடுத்தோதுகின்றது.

உணவு வகைகளை அறிமுகப்படுத்துமுன் மூலப்பொருட்களான சிறுதானியங்கள், அவற்றின் ஆங்கிலப் பெயர்கள், குணங்கள், மருத்துவப் பயன்கள் ஆகியனவும் குறிக்கப்பட்டுள்ளன. கடையில் ஸ்வீட் சாப்பிடும்போது கொசுறாகக் காரம் வைப்பதுபோல் ஸைட் டிஷ் வகை நான்கு பற்றியும் இந்நூலின் இறுதியில் ஆசிரியர் தந்துள்ளார்.

மரபு ரீதியான உணவு வகைகளே மக்களுக்குத் தேவை. அதே நேரம் அவை இன்றைய இளம்தலைமுறைகளை எளிதில் கவர்வதில்லை. உணவுப் பிரியர்களின் ஆரோக்கியமான உணவுத் தேவைகள், இளம்தலைமுறையினரின் உணவு முறைகள், மரபுசார்ந்த உணவுமுறைகள் என பலதரப்பட்ட கதம்பக் கூட்டுபோல் இந்நூல் திகழ்கின்றது. மரபுரீதியான சிறுதானியங்களை நவீன உணவு வகைகளாக மாற்றுவதன்மூலம் ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கமுடியும் என்று நிரூபித்துள்ளார் சிறுதானிய சமையலின் ஆசிரியர் தீபா சேகர்.

டாக்டர் ஜே. பிருந்தாஸ்ரீ

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-5135-198-6.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: