Home » Novel » வெளியேற்றம்

வெளியேற்றம்

பிராவோ தியாகராஜனை அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் செல்கிறான். தான் எழுதப்போகும் நாவலின் வரைபடம் கட்டங்கட்டங்களான செயல்திட்டமாக அங்கே நிற்பதைக் காட்டுகிறான். ஓர் அத்தியாயம் எழுதும்போது அடுத்ததிற்கான திட்டம் ஏதுமின்றி எழுதும் தியாகராஜன் (அசோகமித்ரன்) வியந்து நிற்கிறார். இது நாவல் ஒற்றன். அப்படியோர் அட்டகாசமான திட்டமிடலின் பிரதிபலிப்புதான் வெளியேற்றம் நாவலின் செய்நேர்த்தி. எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை ஊர்கள், எத்தனை சாதிகள், எத்தனை வட்டார வழக்குகள், எத்தனை கிளைக்கதைகள், ஒவ்வொரு கிளைக்கும் எத்தனை பக்கங்கள் என அத்தனையும் முன்கூட்டியே வகுக்கப்பட்டு பிரமிப்பூட்டும் கட்டமைப்புடன் படைத்திருக்கிறார் யுவன் சந்திரசேகர்.

வெளியேற்றம், யுவன் சந்திரசேகர், கிழக்கு பதிப்பகம், ரூ. 500

‘இந்த நாவலின் நிஜ மனிதருக்கு சமர்ப்பணம்’ என்று தொடங்குகிறது. அந்த பாத்திரமாக எழுத்தில் வருபவர் வேதமூர்த்தி. திருமணம் முடிந்த அதே நாளில் வீட்டிலிருந்து வெளியேறுகிறார். அவருடைய குருவிடம் தஞ்சமாகிறார். சன்னியாசி என்று சொல்லலாமா என தெரியவில்லை. குருவின் குருவாக சிலர் சொல்லப்படுகிறார்கள். முக்கியமானவர் ஒரு பைராகி.

தேசாந்திரியாகத் திரியும் ஒரு நாளில் அந்த பைராகி திடீரென தன் இறப்பை தானே நிகழ்த்தி மூர்ச்சையாகிறார். இந்த நிகழ்வு தனது குரு மூலம் பல தத்துவ சிந்தனைகளுடன் வேதமூர்த்திக்குள் செலுத்தப்படுகிறது. அந்தத் தேடலுக்கு அவரை ஆயத்தப்படுத்திவிட்டு விடைபெறுகிறார்.

இதற்குப் பின்னர் பல்வேறு கிளைகளில் பல கதைகள் வருகின்றன. ஒவ்வொரு கதையிலும் ஒரு வெளியேற்றம் இருக்கிறது. அந்தந்த கதையின் நாயகர் தாமாய் விரும்பியோ, யாராலோ அழைக்கப்பட்டோ, குடும்பத்தினரால் வழியனுப்பப்பட்டோ, ஏதோவொரு இன்னலிலிருந்து தப்பித்தோடவோ என எப்படியேனும் வீட்டிலிருந்து வெளியேறுகிறார்கள். இந்த வெளியேற்றங்கள் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளான காலப்பொழுதில் ஒவ்வொன்றாய் விவரிக்கப்படுகிறது. வெளியேறியவர்கள் அனைவரையும் வேதமூர்த்தி எனும் புள்ளி இணைக்கிறது. யுவனின் நாயகர்களுள் சிலர் இயக்குநர் பாலாவின் நாயகர்கள் போல தெரிகிறார்கள். சந்தானம் எனும் காப்பீடுத்துறை முகவரின் தற்செயலான ஒரு தேடலில் இவர்கள் ஒவ்வொருவராய் வருகிறார்கள். சந்தானத்தின் தேடலின் முடிவு காசியில் வேதமூர்த்தியில் முடிகிறது.

‘தற்செயல்’களின் தொகுப்புதான் வாழ்க்கை என்றும், இதில் அபத்தங்கள் நிஜத்தில் அபத்தமே இல்லை என்ற தத்துவத்தில்தான் முழு நாவலும் பயணிக்கிறது. இதனை விமர்சனப் பார்வையோடு நிச்சயம் அணுகவேமுடியாது. முழுக்கவே ஹிந்துத்துவ சிந்தனையில் மிதந்தோடும் எழுத்தை உள்ளே சென்று அனுபவிக்க முடிந்தவர்கள் அனுபவிக்கலாம். என்னைப் போன்றவர்கள் வெளியில் நின்றபடியே வெறும் எழுத்தாய் மட்டும் இதனை ஏற்று ஒரு நிறைவைப் பெறலாம். அந்த நிறைவை வார்த்தைகளில் இங்கே விவரிப்பதெல்லாம் இது போன்ற படைப்புகளுக்குச் செய்யும் ஓர் அநீதியாகத்தான் இருக்கமுடியும்.

ஆசிரியரே கதைசொல்லியாக நகர்த்தும் சம்பவங்களை உள்ளே நின்றும் வெளியே வந்தும் கச்சிதமான வெட்டுகளுடன் கட்டுக்கோப்பாக அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட சந்தானம் எனும் பாத்திரம் வாசக மனநிலையிலேயே படைக்கப்பட்டிருக்கிறது. ஏதாவது ஒரு இடத்தில் கதை மாந்தர் யாரேனும் சம்பந்தமில்லாமல் சிரித்தால், அவர் ஏன் சிரித்தார் என புரியவில்லை என்கிறார் சந்தானம். நமக்கு ஏதேனும் தத்துவ சிந்தனை புரியவில்லை என்றால் அது அவருக்கும் புரியவில்லை, நமக்கு ஒரு விளக்கம் போதவில்லையெனில் அது அவருக்கும் போதவில்லை, அனைத்தையும் விட உச்சம், வாசித்துக்கொண்டிருக்கும்போது எனக்கொரு நேரத்தில் கால் மரத்தபோது அவருக்கும் மரத்துவிட்டது. இப்படி நூலாசிரியர் வாசகக்கண்ணோட்டத்திலேயே ஒவ்வொரு வரிக்கும் சிரத்தையெடுத்திருக்கிறார். அதே காரணத்தில்தான் எனக்கு கொஞ்சமும் ஒவ்வாத உள்ளடக்கம் கொண்ட இந்தப் படைப்பை என்னால் எந்தவொரு தொய்வுமின்றி வாசிக்க முடிந்தது. ரசிக்கவும் முடிந்தது.

சந்தானத்திற்கு ஒவ்வொருவராய் சந்திக்கும்போது ஒரு கேள்வி உருவாகிறது. கடைசியாய் ஒருவரிடம் அதனைக் கேட்கவும் செய்கிறார். ‘ஏன் வேதமூர்த்தியால் மீட்கப்பட்டவர்கள் எல்லோரும் உயர்சாதிக்காரர்களாகவே இருக்கிறார்கள்?’ எனக்கு அப்படியான சந்தேகம் வரவில்லை. ஓரிரு கீழ்சாதிகளும், இடைச்சாதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. என்னுடைய சந்தேகம், ஏன் வெளியேறுபவர்களெல்லாம் ஆண்களாகவே இருக்கிறார்கள்? இராமலிங்கம் எனும் பாத்திரம் மட்டும் மனைவியோடு வேறு ஊருக்கு குடிபெயர்கிறார். பெண்களுக்கான அகச்சிக்கலோ தத்துவச் சிக்கலோ கிட்டத்தட்ட 500 பக்கங்கள் கொண்ட நாவலில் எங்குமே இல்லை.

கட்டமைப்பில் துளி குறைபாடில்லை. அப்படியோர் இழைப்பு. ஒரு கட்டத்தில் கதைசொல்லியாக சந்தானமே இருக்கும்போது, ‘சந்தானமும் எழுந்தார்’ என்று வரும் வரியைத் தவிர. பிரச்சனையே உள்ளடக்கம்தான். இடதுசாரிய சிந்தனையுடன் இந்த நூல் அணுகப்படின் விமர்சனத்திற்கு உட்படுத்தமுடியாது. அப்படியே முழுமையாய் புறக்கணிக்கவே முடியும். அப்படியான கதைக்களம் குறித்து எந்த விமர்சனமும் இங்கே முன்வைக்க விரும்பவில்லை.

இரண்டு காரணங்கள். ஒன்று, ஆசிரியர் தான் கடந்த நிஜ மனிதரைப் பற்றி எழுதியுள்ளதாகச் சொன்னது. இரண்டு, பின்னுரை, இந்நூலிற்கான எந்தெந்த சாத்தியக்கூறிலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுமோ அத்தனையையும் நிராகரிக்கும் விதமாக எத்தனை சுயப்பிரக்ஞையோடு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது என்று சொல்லும்விதமாக கட்டமைக்கப்பட்டுள்ள உரை. குறிப்பாக இவ்வாறாக சொல்லுமிடம் ‘இதில் வரும் மாய சம்பவங்கள் யாவும் நிஜம், நடைமுறை சாத்தியமுள்ள சம்பவங்கள் அனைத்தும் புனைவு’. இதற்கு மேல் எதுவும் சொல்லத் தேவையில்லை. ஒரு நிறைந்த வாசிப்பின்பம் வேண்டின் இந்த எழுத்தை எந்தவொரு விமர்சனப் பார்வையுமின்றி அணுகி ரசிக்கலாம். பகுத்தறிவு விவாதங்களோடு வருபவர்கள் தவிர்த்து தாண்டிச் சென்றுவிடலாம்.

மயிலன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-5135-199-3.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: