Home » Short story » நீர்ப்பறவைகளின் தியானம்

நீர்ப்பறவைகளின் தியானம்

10 சிறுகதைகளின் தொகுப்பு.

மென்மையான அட்டையின் தரம், வாசிப்பதற்கு வாவென்பது போல வசீகரிக்கிறது. 208 பக்கத்திற்குள்ள எடை என்பதை நம்ப மறுக்கும் அளவுக்கு வடிவமைப்பு. ஆனால் இன்னும் கொஞ்சம் காகிதத் தரம் கூடியிருந்தால் தொடர்ந்து படிக்கும்போது கண்களின் சோர்வைத் தவிர்த்து இருக்கலாம்!

நீர்ப்பறவைகளின் தியானம், யுவன் சந்திரசேகர், கிழக்கு பதிப்பகம், ரூ. 200

இந்தக் கதைத் தொகுப்பை வாசிப்பவர்கள் நிச்சயம் ஒரு புது அநுபவத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் எழுதப்படாத விதியெனலாம்! அதைவிட என்னைப் போன்று இந்தத் தொகுப்பின் ஆசிரியர், யுவன் சந்திரசேகரை முதன் முதலாக வாசிப்பவர்கள் என்றால் நீங்கள் கதை வாசிப்பின் புதிய தளத்துக்குப் பயணிக்கப் போகிறீர்கள் என்பது எழுதப்பட்ட விதி!

எப்பொழுதும் போல ஒரு கதைப் புத்தகத்துக்குத் தரப்படும் முன்னுரை, பதிப்புரை என்ற வழக்கமான ஆபத்து எதுவுமில்லாமல் ‘நனவிலிருந்து கனவுக்கு’ என்று ஆசிரியர் தன்னைப்பற்றித் தான் எழுதும் முறை பற்றியும் பேசுகிறார்…

‘ஞாபகங்களிலிருந்து கற்பனைக்கு நகர்வதும், சிந்தனையின் ஒரு தெறிப்பைப் பற்றிக்கொண்டு ஞாபகத்தின் அடியாழத்தில் எதையோ தேடிச் செல்வதுவுமான இருவழிப் போக்குவரத்து பிறப்பிக்கும் சம்பவத் தொடர்களே என் கதைகள்.’

முதல் கதை: அந்நியம் (உயிர்மை, அக். 2009)

தான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது விழுந்த சீனியம்மாள் என்ற பெண் பற்றிய ஞாபக முடிச்சை, தனது 46 வயதில் தான் சந்திக்கும் ஆஃப்ரிக்காவிலிருந்து வந்து தன்னைச் சந்திக்கும் நாகநாதன் எனும் வாசிப்பாளனின் பார்வையில் சொல்லப்படும் ஒரு சம்பவத்துடன் இணைக்கும்போது அவிழ்க்கப்படுவதான உணர்வில் விதமான கதைப் பின்னல் நகர்ந்து முடிகிறது.

மிகச் சாதாரண வட்டார வழக்குச் சொல்லுடன் நம்மைக் கட்டியிழுத்துச் செல்லும் இந்தக் கதையின் புனைவில், தனது இளம் வயதுக்கும் இப்போது தன் முன் நிற்கும் அநுபவத்திற்கும் இடையேயுள்ள கால இடவெளியை மிக நூதனமாக நகர்த்தும் ஆசிரியர் தன்னைச் சந்திக்கும் நாக நாதன் பார்வையிலும் தனது வர்ணிப்பைத் (பக்கம் – 28) தொடர்வது லேசாய் நெருடுகிறது.

இரண்டாம் கதை: இடம் பெயர்தல் (உயிர் எழுத்து, ஜூலை 2008)

இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த முதல் கதை .

உங்களுக்கு இறந்து போன யாருடைய உயிர் சேரல் பற்றியும் அதன் தொந்தரவுகளைப் பற்றியும் எதாவது அநுபவம் உண்டா ? இல்லையெனில் இந்தக் கதை சொல்லும் ஆம்.

‘இருபத்தி சொச்சம் வருடங்கள் தனக்குள் அமர்ந்துகொண்டு தன் முன்னே நடனமாடும் ஒரு கருப்பு உருவம் என்னைக் கேலி செய்வதுவும் மிரட்டுவதிலும் அலாதி சுகம் கண்டு வந்தது என்பதுவும் மிக அழுத்தமாக நினைவிருக்கிறது.’ (பக். 35)

நான்கு அத்தியாயங்களாகப் பிரிந்து பேசும் இந்தச் சீனு என்ற பாத்திரத்துக்குள் கலந்த வேறு ஓர் உயிர் கலப்பின் தீவிர விளைவுகளின் அனுபவம் பேசும் கதை இது. வாசிப்பவனைத் தனது மனப் பிறழ்வின் கோணத்தில் இழுத்துப் பிடித்துப் பயணிக்க வைக்கும் வித்தியாசமான கதை நடையில் நகரும் கதை, இதன் காரணம் முடிவில் தொடங்குவது போல ஒரு பிரம்மை தவிர்க்க முடியாது .

மூன்றாம் கதை: இரண்டே அறைகள் கொண்ட வீடு (வார்த்தை, ஜூன் 2008)

ஓர் எழுத்தாளனின் உள் மன உணர்வுகளையும் அவன் உள் மனத்தேடலின் இயல்புகளையும் பற்றிப்பேசும் கதை இது. ஒரு கிராமத்தின் குருவித்துறை சகோதரர்கள் என்ற இசை மேதைகளின் வாழ்வில் ஒரு பெண்ணால் ஏற்பட்ட தற்கொலையும் அதை அறியாது அந்தக் கிராமம் வாழ்ந்து கொண்டு இருக்கும் போது திடீரென எங்கிருந்தோ ஓர் இரவில் வந்து தங்கிச் செல்லும் எழுத்தாளன் அந்தப் புதிரை விடுவிக்கும் கதை .

‘பெரியவரு பீப்பியைக் (நாத சுரம்) கையிலே பிடிச்சிருக்கிறதே மனசுக்கு பிடிச்ச பொம்பளையை ஆம்பளெ நயமாய் பிடிச்சு இருக்கிற மாதிரி இருக்கும்’ (பக். 62) என்ற வருணனை – வட்டாரச் சொல்லில் ஒரு விடுகதையின் முடிவைப் போல மிக அழகாக இருந்தது .

நான்காம் கதை: காணாமல் போனவனின் கடிதங்கள் (வார்த்தை, 2009)

கடிதம் எழுதும் வழக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுவும் அதன் சம்பவங்கள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதையும் பாடம் போலச் சொல்லப்பட்ட கதை.

கதாசிரியர் யுவன் சந்திரசேகர் நேரடியாகத் தன்னுடைய அநுபவத்தைச் சொல்லும் விதமாகப் புனையப்பட்ட கதையிது. தனது வங்கிப் பணி ரீதியாக வாய்த்த குறுகிய கால ‘நாடோடி நண்பன்’ என ஆசிரியரால் வருணிக்கப்படும் சிவசந்திரன் என்ற பாத்திரம் எழுதிய ஆறு கடிதங்களின் பின்னணியில் நகரும் கதையிது. இந்தக் கதையின் கடித நண்பன் தன் கதை புனைவுக்கு எப்படி உதவினான் என்பதை இப்படிச் சொல்கிறார்.

‘கதைக்குள் சம்பவத்தை ஒத்திப்போடுவதன் மூலம் வாசக மனதை கட்டிப்போடும் உத்தியை எனக்குச் சொல்லித்தந்த கடிதம் அது கதைகளில் வரும் விவரணைகளின் தன்மையையும் விகிதமும் என்னவாய் இருப்பது உசிதம் என்பதையும் அந்தக் கடிதத்தில்தான் கற்றுக்கொண்டேன்.’ (பக். 78)

எட்டு வருடங்களாகத் தனக்குள் சுமக்கும் ஒரு வலியை தனது கதையில் அதை அடையாளமாக வைப்பதுபோல எட்டு பகுதிகளாகப் பிரித்துக் கதை நகர்கிறது வழக்கம் போலத் தனது கதை முடிவில் அர்ஜூன் மிஸ்ரா என்ற ஒரு குருத் துரோகி பாடகனைப் பற்றிய மறைத்து வைத்த உண்மையைக் கொட்டிக் கவிழ்க்கிறார். எங்கோ நடக்கும் இரு வேறு சம்பவங்கள் எப்படி உரசாமல் சேர்க்கப்படுகிறது என்பதைக் கதை ஓட்டத்தில் பிரித்து அறிய முடியாமல் சேர்க்கும் ஆசிரியரின் எழுத்து நுட்பம் ஆச்சர்யத்தைத் தருகிறது.

ஐந்தாம் கதை: கிறக்கம் (அகநாழிகை, அக் 2009)

சிறு வயதில் தாத்தா பாட்டி அல்லது யார் மூலமோ கதை கேட்டு வளர்ந்து வந்த எவருக்கும் கதை புனையும் ஆற்றல் உள்ளவர்களாக வளர்வார்கள் என்பது எழுதப்படாத இயற்கை நிதி. இந்தச் சிறுவயது நினைவுகளுக்குச் சிறகு முளைக்கும்போது படைப்பு ஆற்றல் இயல்பாக மலரும் என்ற உண்மை அடிப்படையில் பேசப்படும் கதையிது.

இங்குத் தனக்கு இளம் பிராயத்தில் கதை சொல்லி வளர்த்த முனியன் என்பவரை நினைவுகூறும் ஆசிரியர், ‘தான் எழுதுகிற எல்லாக் கதைகளையும் முனியனும் வாசிக்கிற மாதிரி ஒரு பிரம்மை எப்போதும் வந்து இருக்கிறது’ (பக். 99 ) எனத் தன் கதை எழுதும் ரிஷி மூலத்தை விவரிக்கும் கதாசிரியர் அப்படித் தனக்குச் சொல்லப்பட்ட குவாலியர் சமஸ்தானத்தின் எல்லை ஒட்டி இருந்த துல்ஸிப்பூர் (ஜமீன் ) சாம்ராஜ்யத்தைப் பற்றியும் அதன் மன்னன் பற்றிக் கேட்ட கதை மூலம் துவங்கி, பதின் பருவத்தில் கிடைத்த தனது நண்பன் மருந்தீஸ்வரன் பற்றிய உண்மை ஆசிரியரின் வாழ்வில் நடந்த சம்பவமாகக் கதை விரிகிறது.

தனது கதை எழுதும் அல்லது புனையும் யுத்தியை பல இடங்களில் பேசும் ஆசிரியர் அதற்கு ஒரு வாய்ப்பாக பென்சில்வேனியாவின் உளவுத்துறை பேராசிரியரின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

‘மனம் மூன்றடுக்கு சல்லடைகளால் ஆனது. மேலடுக்கு உடனடி நிகழ்காலத்திலும் இரண்டாம் அடுக்கு அந்தத் தனி மனதின் இறந்த காலத்திலும் மூன்றாவது அடுக்கு மனித குலத்தின் இறந்த காலத்திலும் வேர் ஊன்றி இருப்பவை.’ (பக். 112 )

‘நனவிலிருந்து கனவுக்கும் கனவின் விளிம்பு தாண்டி யதார்த்தத்துக்கும் என்ற கடிகார ஊசல் போல அசைந்தாடுவது மிகுந்த சுவாரசியம் தருகிறது எனக்கு.’ (பக். 11)

ஆறாம் கதை: நான்காவது கனவு (காலச்சுவடு, அக். 2009)

‘ஒரு தலைமுறைக்கு அமானுஸ்யமாகத் தெரிவது இன்னொரு தலைமுறைக்கு நடைமுறையான விஷயமாக இருக்கிறது என்பதற்காகத்தான்’ (பக். 116) என்று தொடங்கும் இந்தக் கதை 61 வயதுவரை சுந்தரேசன் என்ற கதாபாத்திரத்தின் வாழ்வில் பயணங்களில் சேகரிக்கும் சம்பவங்களில் ஒன்றான கடப்பைக்கு அருகே எதிர்பாராவிதமாகப் பயணம் செய்த ரயில் நின்று போனதால் அதனால் கேட்ட ஒரு சிற்பியின் கதை இங்கு பேசப்படுகிறது. நான் இரண்டு மூன்று எனப் பல தடவை படித்தும் ஏன் இந்தக் கதை எழுதப்பட்டது என்ற கேள்விதான் முன் நின்றது.

காரணம் கதையின் முடிவில் நான்கு ஜாமங்களைப் பற்றிப் பேசும் கதை முற்றுப்பெறாமல் சுந்தரேசன் குறிப்பில் முடிவடைகிறது. அதே சமயம் பல கேள்விகளை வைத்து முடியாமல் வழிதெரியாத ஊருக்குப் பயணம் செய்த ஒரு வாசிப்பாளன் அறியவேண்டிய முடிவு அந்த ரயிலின் பயணம் போல இடையில் நின்று போய்விட்டது !

ஏழாம் கதை: நீர்ப்பறவைகளின் தியானம் (உயிர்மை, ஜூன் 2009)

எனக்கு இந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்த இரண்டாவது கதை.

இதைக் கதை என்று சொன்னால் இதன் கனம் குறைந்துவிடுமோ என்ற தயக்கம் இருக்கிறது. ஒரு வேளை கட்டுரைக்குள் பொதிந்த கதை எனலாம். இதன் (கீழேயுள்ள) பின் குறிப்புகள் வாசிக்கப்படும்போது ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையோ என்ற பிரம்மை தவிர்க்க முடியவில்லை. கதை சொல்லும் யுக்தி தமிழில் (சொற்பமான அளவுக்கு) படித்ததில் என்னைக் கவர்ந்த கதை. அதனால்தானோ என்னவோ இந்தத் தொகுப்பில் கவிதை இருப்பதுபோல இந்தத் தலைப்பே புத்தகத் தலைப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது!

ஒரு பழைய புத்தகக் கடையில் கிடைத்த ‘யூரோ போரஸ்’ பத்திரிகையின் ‘Dhyana – The Key Hole to the Cosmic Womb’ என்ற கட்டுரைக்கு வந்த மூன்று விமர்சனக் கடிதங்கள் மூலம் கதை விரிகிறது.

முதல் கடிதம் – க்ளாட்லூமியா பேராசிரியர் தனக்கும் தன் மனைவி லூசிக்கும் இடையில் நிகழும் வாழ்வியல் போராட்டத்தில்,

‘மனம் செல்லும் அதே திசையில் உடம்பு செல்லும் என எதிர்பார்ப்பது தவறு’ (பக். 138) என்ற மனைவியின் கருத்துக்கு எதிராக யோசிக்கும் அவர் அந்த உண்மையை மனைவியின் இறப்புக்குப் பின் தன் வாழ்வில் உணர்கிறார்.

இரண்டாவது கடிதம் – தனது தந்தையின் மரணத்தை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் தாயின் சித்தப் பிறழ்வுக்கு சிகிச்சையில் ஈடுபடும் மகனின் கதை. ஒரு வகையில் மறுபிறப்புக் கொள்கை போலத் தனது அம்மாவை விட்டுப் போன தனது தந்தை ஆவி அவருக்கு மகனாகப் பிறப்பது போலக் கதை முடிகிறது.

மூன்றாவது கடிதம் – என்னை மிகவும் கவர்ந்த கடிதமிது. ஒரு பாத்திரத்தின் பெயர் கூட அவசியம் இல்லை என்று நகரும் கதை.

‘அரசியலுக்கு வந்ததே சம்பாதிக்கத்தான் என்பதால் அனாவசிய குற்ற உணர்ச்சி இல்லாதவர் என்று சொன்னால் போதும்’ (பக். 146) என்ற தன் மன உணர்வு உள்ள தந்தையின் 3 ஆவது மனைவியின் (?) 5 ஆவது மகன் இந்தக் கடித நாயகன். வீட்டை விட்டு ஒருவித ஞானத்தேடலுக்காகத் திபெத்தின் – பூமியின் மட்டத்திற்கு 12000 அடி உயரத்தில் உள்ள – ஒரு மடத்தில் தனது வாழ்வைத் தொடர விரும்புகிறான்.

ஆனால் அங்கு நிராகரிக்கப்பட்டு வேறு ஒரு மடத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு சந்திக்கும் குருவும் ‘அவரவர் வாழ்க்கையை விட மேலான குரு கிடையாது’ என்று சொல்லி நிராகரித்து ஓர் இரவு மட்டும் தங்கிச்செல்ல அனுமதிக்கிறார். ஆனால் அந்தத் திபெத்திய குருவின் சிறு மரக் குடில் ‘காலமும் இருப்பும்’ அற்ற ஒரு மன நிகழ்வைத் தந்ததைத் தனது கடைசி வரியில் சொல்கிறார்.

ஆசிரியரின் ‘பெயரற்ற யாத்திரீகன்’ – ஜென் கவிதைகளின் மொழிபெயர்ப்பு கருத்துகளின் தாக்கம் இந்தக் கதை முழுவதுவும் நிரம்பி வழிகிறதோ?

எட்டாம் கதை: சொன்னால் நம்ப மாட்டீர்கள் (உயிர் எழுத்து, 2009)

’பொதுவாக என்மீது ஒரு புகார் இருக்கிறது ஏதாவது ஒன்றைச் சொல்ல ஆரம்பித்துவிட்டு எங்கெங்கோ அலைந்து திரிய கிளம்பி விடுகிறேன் என்று. இந்த முறை அந்தத் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளப் போகிறேன்.’ ( பக். 154 )

இப்படித் தொடங்கும் கதை அதன் போக்கைச் சொல்கிறதோ இல்லையோ ஆசிரியர் அப்படித்தான் போகப்போகிறது என்பதாக மெல்ல ஒரு நூலை விடுகிறார்.

தன் கேரக்டரை மறைத்துக்கொண்டு அதை மற்றவர்களுக்குப் பொருத்தி கதை பண்ணும் தனது அந்த நண்பனின் ‘தற்செயல்களின் ரசவாதம்’ கதையை எதிர்பாராவிதமாகப் பார்க்க நேரிடுகிறது. அந்தக் கதையில் அவன் விரும்பியது கிடைக்காதபோது அதைப் பற்றித் தவறாக எழுதுவது வழக்கம். அந்த மாதிரி இவர் மனைவியை (தனது கதையில்) அந்த எழுத்தாளன் இறந்து போவதாக எழுதப்பட்டது படிக்கிறார். படிக்கும்போது தனக்கும் இப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டதைப் பொருத்திப் பார்க்கிறபோது கதை முடிகிறது. ஆனால் தனது மனைவி அனு அந்தக் கதையில் வருவதுபோல இறந்துவிடுகிறாள்.

‘சில சமயம் வாழ்நாள் முழுவதும் தற்செயல்கள் மூலம் கடந்து வந்து இருக்கிறதோ என்றுகூடத் தோன்றியதுண்டு.’ (பக். 168)

ஆசிரியரின் இந்த வரிகள் மூலம் நமக்குக் கதையின் முடிச்சை அவிழ்க்க நினைக்கிறார் .

ஒன்பதாம் கதை: சுவர்ப்பேய் (உயிர்மை, ஜூன் 2008)

தன்னுடைய நிஜ (வங்கி) உலகத்திலிருந்து சொல்லப்படும் இரண்டாவது கதை. தன்னுடைய ராஜு வாத்தியார் பற்றியும் அவர் தனது நினைவுகளில் விட்டுப்போன இடங்களை அதே நினைவு கூறல் மூலம் நம்மை வைத்தே பூர்த்தி செய்துகொள்ளும் கதையமர்வு இது. இந்த யுக்தியினால் இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் இதுவும் ஒன்று. இந்தக் கதை ஐந்து பேரின் பேச்சிலிருந்து சொல்லப்படுகிறது.

முதல் பேச்சு: சீனியர் அருணாசலம்

‘ம்ஹூம் விடு, நல்ல மனுசங்களத்தானே தெய்வம் தொரத்தி தொரத்தி அடிக்குது’ (பக். 175)

இரண்டாவது பேச்சு: அம்மா

‘கொழந்தையில்லாத வீடு இல்லையா? நிசப்தமாகத்தான் இருக்கும், ( அம்மா) சுலபமாகச் சொன்னாள்.’ (பக். 183)

மூன்றாவது பேச்சு: முத்தாச்சி

‘அவன் ஓடுன சீரப் பார்த்தா களவாங்க வந்தவனெ மாரித் தெரீல. ஆனா அவன் சீவரங் கொளத்தான் இல்லேன்றது மட்டும் நிச்சயம். அவிங்க ஆளுமேல கைவய்க்க மாட்டாங்ய.’ (பக். 182)

நான்காவது பேச்சு: மனைவி பத்மினி

‘ஒவ்வொருத்தர் ருசியும், பசியும் ஒவ்வொரு மாதிரி.’ (பக். 187 )

ஐந்தாவது பேச்சு அல்லது எழுத்து: ராஜு வாத்தியார் மனைவி

‘இவ்வளவு இருந்தும் என் அக ஆழத்தில் ஒரு பள்ளம் இருப்பது போலவும் அது நிரம்பாமயே என் வாழ்நாள் கழிந்து கொண்டிருக்கிறது என்கிற மாதிரியும் உணர ஆரம்பித்தேன். ஏழு வருடங்கள் இப்படியே கழிந்தன.’ (பக். 187)

‘இன்னொரு உண்மையும் நான் மறைக்க விரும்பவில்லை. எனக்குள் ஒரு பள்ளம் நிரந்தரமாக இருந்து வந்தது என்று சொன்னேனில்லையா அது நிரம்பியதும் அந்து விபத்து நடந்த இரவில்தான்.’ (பக். 188)

இப்படி முடியும் அல்லது இப்படி முடிய வேண்டுமென்ற எந்த நிர்பந்தமும் இல்லாது மரபு என்ற சுவர்ப்பேயை விரட்டிய கதை மரபு இது.

கதை பத்து: விசக்கோப்பை (வார்த்தை, ஜூன் 2009)

தனது சித்தியின் மரணத்தின் பொருட்டு ரயிலில் போகும்போது தான் எங்கோ பார்த்த ஒரு நினவின் தேடலில் கல்லூரிக் காலத்தில் சிறுகதைத் தொகுப்பை எழுதிய சலபதி ராவைச் சந்திக்கிறார். அதில் ஒரு கதை (இந்தக் கதையின் தலைப்பு) விசக்கோப்பை.

இந்தக் கதை பற்றிச் சிலாகிக்கும் தனது நண்பன் அங்குச்சாமி சொன்ன தேங்கியிருந்த சந்தேகக் கேள்விகளை அவரிடமே கேட்கிறார்…

ஓடும் ரயிலில் அந்தக் கதையின் முடிச்சு மெல்ல தளர்கிறது (ஆனால் கதையின் முடிவிலது இறுகுகிறது என்பது வேறு விஷயம்.)

கதையில் சொல்லப்பட்ட ஸ்வர்ணலிங்கம் பந்துலு – வசந்த் ராவ் பாண்டேவாகவும், செஞ்சு லதா நிர்மலாவாகவும் நிஜ வாழ்வில் இருப்பதைச் சொல்லும் சலபதி ராவ் காலத்திற்கு ஏற்றவாறு அந்தக் கதையைப் பொய்யாகப் புனைந்ததால் ஏற்பட்ட இழப்பையும் சொல்கிறார்.

‘எழுதும்போது லகுவாய் இருந்த ஆதரிசங்கள் நடமுறை என்று வரும்போது கடைப்பிடிக்க எவ்வளவு கடினமானவை தெரியுமா சார்?’ (பக். 204)

இப்படி வெங்கடாசலபதி ரயிலை விட்டு இறங்கிப் போகும்போது ஒரு பெண்ணுடன் போகிறார். அவளது வலது கை சலபதி ராவ் இடுப்பையும் இடது கை போர்த்தியிருந்த சால்வைக்குள் மறைந்திருந்தது சரியாகப் பார்க்க இயலாதபடி என்று அது நிர்மலாவாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை நமக்குள் (கதை முடிவு வரிகளில்) இறக்கி வைத்துவிட்டு ஆசிரியர் ரயில் நிலையத்துக்குப் போகிறார்! ஆனால் நம்மைதான் முடிவு தெரியாமல் போற வர்ர ரயிலை பார்த்துக்கொண்டு நிற்க வைத்துவிடுகிறார்!

சு. கிருஷ்ணமூர்த்தி

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-5135-189-4.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: