Home » Politics » கறுப்புப் பணம்

கறுப்புப் பணம்

கறுப்புப் பணம் என்றால் என்ன என்பதிலிருந்து துவங்கி ஆதியோடு அந்தமாக கறுப்புப் பணத்தின் தோற்றுவாய், அதனையொட்டி இயங்கும் உலகம், அதனால் இயங்கும் உலகம், அதன் சுழற்சி, அதன் பயன்பாடு, கறுப்புப் பணம் கடல் கடந்து வெளிநாட்டு வங்கிகளுக்குச் செல்கிறது, அதை எப்படி சலவை செய்து எவ்வாறு மீண்டும் இங்கு கொண்டுவரப்படுகிறது, அரசியல் கட்சிகளின் வயிறுவளர்க்கும் உத்தியாகவும் ஆட்சியைப் பிடிக்கும் கருவியாகவும் கறுப்புப் பணம் எப்படி விளங்குகிறது, கறுப்புப் பணத்தை மீட்கும் வழிமுறை, ஆனால் அதனை மீட்கவே முடியாது, ஏன் மீட்கவே முடியாது என்பன போன்ற பலவற்றையும் அலசுகிறது கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கும் “கறுப்புப் பணம்” என்ற புத்தகம்.

கறுப்புப் பணம், ரமணன், கிழக்கு பதிப்பகம், ரூ. 80

பொதுவாக கையூட்டு பெறும் பணம், அரசுக்கு வரி செலுத்தாது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணமே கறுப்புப் பணம் என்று நாம் சொல்கிறோம், ஆனால் இந்த வரையறை மேம்போக்கான வரையறையே என்பதை ஆசிரியர் விளக்குகிறார். உண்மையில் இந்த வகைப்பட்ட பணம் கறுப்புப் பணத்தின் ஒரு பகுதியே.

இந்தியப் பொருளாதாரத்தில் 50 சதவிகிதத்துக்கும் மேலாக கறுப்புப் பணம் இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வறிக்கை. இதில் சுமார் 20 சதவிகிதம் மட்டுமே வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கிறது. மற்றவை இந்தியாவிலேயே பல வகைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது அல்லது மறைக்கப்பட்டிருக்கிறது.

உலக அளவில் கறுப்புப் பணம் என்ற கருத்தாக்கம் தொடங்கப்பட்ட காலகட்டம் இரண்டாம் உலகப்போரின் காலகட்டம் என்று ஆசிரியர் குறிக்கிறார். இரண்டாம் உலகப்போரில் உணவு உள்பட பல அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்ட சூழ்நிலையைக் குறிக்க பரவலாக உபயோகிக்கப்பட்ட வார்த்தை “பிளாக் மார்க்கெட்” (Black Money) என்ற கறுப்புச் சந்தை. அதைத் தொடர்ந்து கணக்கில் காட்டப்படாத பணத்தை வர்ணிக்க ‘கறுப்புப் பணம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களை, கொலைக் குற்றத்திற்கு ஈடாகவோ அல்லது அதற்கு மேலாகவோ நம் மனதில் வைத்திருக்கிறோம். ஆனால் கறுப்புப் பணம் குறித்து எந்தச் சட்டத்திலும் பேசப்படவில்லை என்பது ஆச்சரியமும் வேதனையும் நமக்கு அளிக்கிறது.

இந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போதுதான் நாட்டின் பொது நிதிநிலை அறிக்கையை அருண் ஜெட்லீ சமர்ப்பித்துக் கொண்டிருந்தார். அதில் கறுப்புப் பணத்தை அயல்நாடுகளில் பதுக்குபவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பதாக அறிவித்தார். இது நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நிகழ்வா அல்லது சட்டமியற்றும் நிகழ்வா என்று சந்தேகம் வந்தது. நிதிநிலை அறிக்கையில் இப்படி ஒரு சட்டம் அறிவிக்கப்படலாமா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால், கறுப்புப் பணப் பதுக்கல் குறித்த ஒரு சட்டம் தொடர்பான பேச்சு பாராளுமன்றத்தில் எழுந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களைப் பார்த்து கொதித்தெழுகிறோம். ஆனால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கறுப்புப் பணத்தை உருவாக்கிக் கொள்ள மறைமுகமாக அரசின் பொருளாதாரக் கொள்கையாலோ, இரட்டை வரி விதிப்பினாலோ தள்ளப்படுகிறான் என்பதையும் புத்தகம் பதிவு செய்து வைத்திருக்கிறது.

கையூட்டு மற்றும் ஊழல்களின் மூலம் சேர்த்த பணத்தை அதாவது ‘கறுப்புப் பணத்தை’ ஹவாலா (Hawala) முறையில் வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்பப்படுகிறது. ஹவாலா என்றால் என்ன? அதற்கு விளக்கம் தரும்போது, பண்டைய காலத்து பண்டமாற்று முறைகளை வைத்து உதாரணம் காட்டும் பொழுது ஹவாலா பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

கறுப்புப் பணத்தை முதலீடு செய்வது குறித்து ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய கதை ஒன்றின் சுருக்கத்தைப் புத்தகத்தில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஒரு நாட்டின் நேர்மையான அமைச்சர் ஒருவரை அந்நாட்டின் அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு வர இவர்தான் சரியான நபர் என்று அந்நாட்டின் அதிபர் அவரை சுவிட்சர்லாந்துக்கு அனுப்பிவைக்கிறார். இது போல எங்கள் நாடு ஏழ்மையான நாடு, அதனால் எங்கள் நாட்டிலிருந்து பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியல் வேண்டும் என்கிறார். அதற்கு எங்கள் வங்கி அதுபோலத் தகவல்களைத் தராது என்று வங்கி அதிகாரி மறுத்துவிடுகிறார். உங்களைக் கெஞ்சிப் பயனில்லை என்று கூறி துப்பாக்கியை எடுத்து அதிகாரியின் நெற்றியில் வைத்து இப்போது பட்டியலைத் தராவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன் என்கிறார் அந்த நேர்மையான அமைச்சர். நீங்கள் என்னைக் கொள்வதாக மிரட்டினால் மட்டுமல்ல, கொன்றால்கூட உங்களுக்குப் பட்டியல் கிடைக்காது. எங்கள் வங்கி வாடிக்கையாளர்களின் ரகசியங்களைக் காக்கும் நம்பிக்கையானது என்கிறார். அப்படியானால் இந்தா ஐம்பது லட்சம் நான் முதலீடு செய்யவேண்டும் என்கிறார் அந்த நேர்மையான அமைச்சர்.

இந்தக் கதையை வங்கிகளின் ரகசியம் காக்கும் தன்மை, வாடிக்கையாளர்களது நம்பிக்கையைக் (ஒரு பிரபல நகைக்கடையின் பிரபல விளம்பர தூதர் கூறும் நம்பிக்கை அல்ல) குறிக்கச் சொல்லப்பட்ட கதையாக இருந்தாலும், என் பார்வையில் இந்தக் கதையின் பொருள் மாறுபட்டே தெரிகிறது. தகவல்களைக் கசியவிட்டால் அவர்களது வியாபாரம் பாதிக்கப்படும், தாங்கள் தொடர்பு கொண்டிருக்கும் நிழல் உலகம் தங்கள் உயிரோடு விளையாடும் என்பதை அறிந்தவர்களாக இருப்பார்கள். இப்படி ஒரு சிலந்திவலைப் பின்னல் கொண்டது கறுப்புப் பணத்தைச் சுற்றியுள்ள உலகம் என்பதை ஆசிரியர் நமக்கே புரிய வைத்திருக்கிறார்.

இ. கார்த்தி

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-8414-907-9.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: