Home » Religion » ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம் என்பது நாத முனிகளால் ஆரம்பித்து வைத்திருக்கப்பட்டாலும் அவருக்கு முன்பே ஆழ்வார்களால் பாடப் பெற்று நாத முனிகளால் தொகுக்கப்பட்ட ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ மட்டுமே ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஆதாரமாய் இருக்கிறது.

ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரண்டு பெயர்களாவர். பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்திருந்தாலும் ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டுகளில் இவர்களின் காலம் மதிப்பிடப் பெறுகிறது. இன்றைய வைஷ்ணவத்தின் அனைத்து சம்பிரதாயங்களும் ஆழ்வார்களின் முதற்கொண்டே நடைமுறைக்கு வருகின்றது. (ஸ்ரீ ராமானுஜரே இவற்றை முறைப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வந்தவராவர்.)

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள், வேணு சீனிவாசன், கிழக்கு பதிப்பகம், ரூ. 400

ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் தொகுக்கப்பட்டு ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என வழங்கப்படுகிறது. திவ்ய பிரபந்தத்தின் நாலாயிர பாடல்கள் ஸ்ரீ நாராயணனைப் பற்றி பாடப்பட்டாலும் இந்தப் பாடல்கள் அன்றைய தமிழகத்தில் இருந்த முக்கிய நாராயண தலங்களைப் பற்றிய பாடல்களாகும். ஆழ்வார்களின் பாடல்களால் பெருமை பெற்ற இத்தலங்களே ‘திவ்ய தேசங்கள்’ என்று வழங்கப்படுகின்றன.

வேணு சீனிவாசன் அவர்களால் எழுதப்பட்டிருக்கும் ‘ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்’ என்னும் இந்நூல் இவ்வாறு பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்ற இந்த திவ்ய தேசங்களைச் சென்று வழிபட நினைப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.

திவ்ய தேசங்களைப் பற்றிய சிறு குறிப்போடு 108 திவ்ய தேசங்களின் வரலாறு, தெய்விகச் சிறப்பு, செல்லும் வழி, தங்கும் வசதிகள் என பல தகவல்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.

“ஈரிருபதாஞ் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர்பதின்மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம் – சீர்நடுநாடு
ஆறோடீரெட்டுத் தொண்டை அவ்வட
நாடாறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாக் கொள்.”

என்னும் பாடல் கூறுவதுபோல் இந்தப் புத்தகம் ஒவ்வொரு நாட்டின் திருப்பதிகள் பற்றிய குறிப்புகள் ஒன்றாய் திரட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம் என்பது சாதி சமயமற்றது. எவனொருவன் தன்னை விஷ்ணுவுக்கு அடிமை என்று நினைக்கிறானோ அவனே வைஷ்ணவனாவான். இக்கருத்தை மனதில் கொள்பவர்கள் எக்குலத்தவராய் இருந்தாலும் அவர்கள் வைணவர்களே.

இதற்கான உதாரணங்கள் ஒவ்வொரு திவ்ய தேசத்தின் வரலாற்றிலும் இருக்கிறது. ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் ஒருவன் ஸ்ரீ வைஷ்ணவனா என்ற ஒரு கேள்வியின் மூலம் மட்டுமே அதன் வரலாறு முன் எடுக்கப்படுகிறது. அவன் குலமோ, சாதியோ இங்கு ஒரு பொருட்டாக கருதப்படவில்லை. பன்னிரு ஆழ்வார்களின் வரலாறும் இதற்கு உதாரணமாகும்.

ஒவ்வொரு திவ்ய தேசத்தின் வரலாறும் சுருக்கமாக விளக்கப்பட்டு, அந்தத் தலத்தின் சிறப்புகள் கூறப்படுகிறது. அதன் பின் அந்த திவ்ய தேசத்தைச் சென்று தரிசிப்பதன் பலன்களும், அந்தக் கோயிலை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் பற்றிய சிறு குறிப்புமாக விரிகிறது. அதன் பின், அந்த திவ்ய தேசத்தைச் சென்று தரிசிப்பதற்கான வழியும், அங்கு தங்கும் வசதிகள், தரிசன நேரம் என பல தகவல்களும் சொல்லப்படுகிறது.

சரித்திரச் சிறப்பு வாய்ந்த திவ்ய தேச திருத்தலங்களுக்குச் செல்லவேண்டும் என நினைப்போர் இந்தக் கையேட்டினை உறுதியாக பயன்படுத்தி பயனுறலாம். அருமையான முறையில் அச்சிடப்பட்டிருந்தாலும் சில சிறு குறைகள் தென்படவே செய்கின்றன.

எல்லா கோயில்களுக்கும் இல்லை என்றாலும் ஒரு சில முக்கிய கோயில்களின் புகைப்படங்கள் சற்று சிறப்பாக இருந்திருக்கும். மேலும் பல இடங்களில் சொற்பிழைகள் மலிந்து காணப்படுகிறது. உதாரணத்திற்கு, 59ஆம் பக்கம் – முன்கோபுரம் பூர்த்தியாகாமல் உள்ளது என இரு முறை அச்சிடப்பட்டுள்ளது, 61ஆம் பக்கம் – ‘விஷ்ணூ’, 63ஆம் பக்கம் – ‘கோள்ளிட’ நதி (கொள்ளிடம்) போன்ற சிறு பிழைகள் சாதத்தில் கல் போல் நெருடாமல் இல்லை. இவற்றை ஒரு முறை சரி பார்த்து களைந்துவிட்டால் இன்னமும் இன்பமாக வாசித்து அனுபவிக்கலாம்.

மொத்தத்தில், சிறு குறைகள் இருப்பினும் திவ்ய தேச வழிபாட்டிற்கு இந்த நூல் மிக்க உதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

முத்து பிரகாஷ் ரவீந்தரன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-5135-197-9.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: