Home » History » தமிழ்நாட்டில் சதி என்னும் தற்பலி வழக்கம்

தமிழ்நாட்டில் சதி என்னும் தற்பலி வழக்கம்

“கணவனின் மரணத்துக்குப்பிறகு ஒரு பெண் எப்படியெல்லாம் தன் வருங்கால வாழ்க்கையைப் பற்றி தீர்மானிக்கலாம் என்பதை பார்ப்போம். கணவனின் மீது அந்தப்பெண் வைத்திருக்கும் அன்பின் ஆழம், அவளது உணர்வு போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க அவளுக்குப் பல வழிகள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலானது கணவன் இறந்த பின் உடனே உயிர் விடுவது.” (பக்கம் 42)

“கணவன் மறைந்தபின் விதவை மனைவி, தான் விரும்புவதுபோல் உயிர் விடவேண்டும். இது ஒரு பத்தினிப்பெண் செய்யக்கூடிய மிகச்சிறந்த போற்றத்தக்க செயல்.” (பக்கம் 44)

தமிழ்நாட்டில் சதி என்னும் தற்பலி வழக்கம், மு. அருணாசலம், சந்தியா பதிப்பகம், ரூ. 60

ராஜபுத்திரர்களால் அதிகம் கொண்டாடப்பட்டதும் வட இந்தியாவில் அதிகம் பின்பற்றப்பட்டதுமான சதி-யை முகலாயர்கள் எதிர்க்க, ராஜாராம்மோகன் ராய் எதிர்த்துப் போராட அதன் மூலம் வில்லியம் பிரபுவால் தடை செய்யப்பட்டது என்பது வரை சதி பற்றி ஏற்கெனவே தெரியும். தற்பலி என்பதும் சதி என்பதும் என்ன? தற்பலியும் சதியும் ஒன்றா என்ற கேள்விக்கு விடை சொல்லவே பாதி பக்கம் செலவழித்தது உண்மையில் என் கையில் இருப்பது பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகமா என சந்தேகத்தை விதைத்தேவிட்டது!

ஆண்களும் தற்கொலை செய்துகொண்டதைக் காட்ட எடுத்துக்காட்டாக சில சம்பவங்கள்(?) சொல்லப்பட்டது. அவையாவன:

1. கிழக்கிந்திய கம்பெனியுடன் நடந்த போரில் ஆர்க்காட்டு படையுடன் சேர்ந்து பாளையக்காரர்களும் தோற்றதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையில் பின்வாங்க முயற்சிக்க, முடியாததன் காரணமாக படைத்தலைவன் நபிகான் என்பவன் கோயிலுக்குள் நுழைய முயற்சிக்கிறான். இது விரும்பாத கோயில் அர்ச்சகர் கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

2. மதுரை மீனாட்சி கோயிலுக்கு மானியமாக வழங்கப்பட்ட கிராமங்களிலிருந்து நியாயமற்ற முறையில் வரிவசூல் செய்யப்படுவதை எதிர்த்து கோயில் சிப்பந்தி மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான்.

3. இடதுகரத்தால் குடுமியைப் பிடித்துக்கொண்டு வலதுகரத்தால் தலையைத் துண்டித்து உடல் மட்டும் கூப்பிய நிலையில் காளிக்கு தன்னை பலிகொடுத்த ஒருவனின் நிலை பரணியில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

4. தேவரடியாளின் மகன் இளவெண்மதிசூடியவன் என்பவன் கோயில் மண்டபம் கட்டி முடிக்கப்படாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்ட, உடனே மண்டபமும் கட்டப்பட சபதம் செய்தவாறே தற்கொலை செய்ய, அவன் குடும்பத்துக்கு 1000 குழிகள் நிலம் வழங்கப்பட்டது.

5. டெரன்ஸ் மேக்ஸ்வீன்சி என்ற அயர்லாந்து நாட்டவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தன்நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார்.

சதி பற்றிய புத்தகத்தில் சம்பந்தமே இல்லாமல் ஏன் இப்படி சம்பவங்கள் சொல்லப்பட்டுள்ளது என்பதற்கான விடை அடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது “தலையை வெட்டி பலியாக கொடுத்தல், கோபுரத்தின் உச்சியிலிருந்து கீழே குதித்தல், நீரில் குதித்தல், சாலேகனம் எனப்படும் சாகும்வரை உண்ணா நோன்பு மேற்கொள்ளுதல் போன்ற பல வழிகளில் தற்பலிகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் சதி (உடன்கட்டையேறுதல்) என்பது மேற்கூறியவற்றிலிருந்து வேறுபட்டது. சதி என்பது தீயில் புகுந்து அதாவது தன்னைத் தானே எரித்துக்கொண்டு உயிர் விடுவது.’’

நல்லவேளை, வெறும் 80 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் சதி என்றால் என்னவென்று 21ஆம் பக்கத்திலாவது சொன்னார்கள். இல்லை என்றால் என்னவென்றே தெரியாமல் போயிருக்கக் கூடும்! சதி என்பது என்னவென்றும், மேலே கூறப்பட்ட உதாரணங்கள் சதி இல்லை என்றும் தெரியாத அளவில் உள்ள வாசகர்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்கக்கூடும் என்ற அடிப்படையில் புத்தகம் தயாரிக்கப்பட்டதாக என்னால் நினைக்க முடியவில்லை.

“சில சூழ்நிலைகளில் உயிர்த்தியாகம் செய்வதைக் காட்டிலும் மிகப்பெரிய கழுவாய் வேறொன்றும் இல்லை. அப்படி செய்வதும் தற்பலிதான்” பக்கம் 21ல் சொல்லப்பட்ட இந்த வரியைக் கண்டதும் உண்மையில் முகம் சுளித்தேன். சதியின் கேவலத்தை நியாயப்படுத்தவே இந்த வரிகள் உதவுமே தவிர வேறொன்றுமில்லை. பொதுப்பிரச்சனைகளுக்காக உயிர் துறந்தவர்களின் முட்டாள்தனங்களை ’தியாகம்’ என்றும் மெச்சுவது உண்மையிலேயே எரிச்சலூட்டியது. சதி என்ற நூலில் இதுக்கு என்ன வேலை என்றும் தெரியவில்லை…

இன்னொரு இடத்தில் (பக்கம் 23) தூக்குக் கயிறு முதல் ஸிங்க் ஸல்பைட், பாலிடால் வரை தற்கொலைக்கு என்னென்ன விஷயங்கள் இருக்கோ அதெல்லாம் குறிப்பிட்டு இப்படியும் இந்தக் காலத்தில் பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என பாரா நீளும்போது தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை!

சரி… ஒருவழியாக சதி பற்றி விஷயத்துக்கு வந்தாகிவிட்டது 29 வது பக்கத்திற்கு மேல்! வட இந்தியாவில் அதிகமாக சதி நடக்க என்ன காரணம் என சொல்லப்பட்ட விஷயம் என்னவெனில் – “மொகலாயர்களின் படையெடுப்பு காரணமாக ராஜபுத்திரர்கள் அனைத்து சமயங்களிலும் சதியை வலியுறுத்தி கட்டாயமாக்கியுள்ளார்கள்.”

நம் தவறுக்கு அடுத்தவர்களை கைகாட்டுவதுதானே வழக்கம்? ராஜபுத்திரர்கள் கோழைகளா? தன் பெண்களை பாதுகாக்கத் தெரியாதவர்களா? பெண்கள் இழிவுக்காளாக்கப்படுவார்கள் என்ற நோக்கமெனில் ராஜபுத்திர பரம்பரையின் அனைத்துப் பெண்களுமல்லவா உயிர் நீத்திருக்கவேண்டும்? ஏன் கணவன் இறந்த பெண் மட்டும் இறக்க வேண்டும்? பெண்களை சீரழிப்பவர்கள் மொகலாயர்கள் எனில் பாதுகாக்கத் தெரியாமல் உயிர் நீக்க கட்டாயப்படுத்துவது அதனை விட கொடூரமல்லவா? அக்பருக்கு முன்பே சீக்கிய குருமார்கள் சதியை எதிர்த்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் எதிர்த்ததற்கும் மேலே சொன்ன காரணங்களா?

அடுத்ததாக ஆசிரியர் இதனை சொல்லியுள்ள விதத்தை பார்க்கவும் : “…அப்பெண்கள் தங்களை மாய்த்துக்கொண்டபின் மொகலாயர்களின் அந்தப்புரத்திற்கு இழுத்துச்செல்ல அங்கு பெண்களே இல்லை. இதனால் ஏமாற்றமடைந்த மொகலாயர்கள் ஆத்திரமடைந்தனர். எனவே சதி என்ற தற்பலி வழக்கத்தை எதிர்த்தனர்” (பக்கம் 34). இந்த வரியை புத்தகத்தில் சேர்க்கும் முன் குறைந்தபட்சம் காதில் பூ சுற்றியவர்களிடம் வாசித்து அவர்கள் நம்பிய பின்னராவது அச்சிட்டிருக்கலாமே? இப்புத்தகத்தை வாசிக்கும் தமிழர்கள் மடையர்கள் என ஆசிரியர் நினைத்துவிட்டாரா? நாட்டில் பெண்களே இல்லாமல் போய்விட்டார்களா? அப்படி என்றால் போரில் ராஜபுத்திரர்கள் இறக்கும்போது மனைவிகள் மட்டுமல்லாது நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களும் தீயிலிட்டு கொளுத்தப்பட்டார்களா? அதனால் இத்தடையை முதன் முதலாக கொண்டு வந்தார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய்?

இன்னொரு முக்கிய விஷயம், மொகலாய அரசர் முகம்மது பின் துக்ளக்தான் முதலில் சதிக்கு தடை விதித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 34). அதுவல்ல விஷயம்… துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த முகம்மது எப்போது மொகலாய அரசரானார்? இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் இதே ரகம்தானா? பிரிண்டிங் மிஸ்டேக் என சமாளித்துவிடலாம் தான்!

அதன் பின்னர்தான் முன்னுரையில் சொல்லப்பட்டபடி தமிழ் இலக்கியங்களில் உள்ள சதி பற்றிய தகவல்களைக் கொடுத்துள்ளார்கள். அதாவது தனது ஆய்வை சமர்ப்பித்துள்ளார். ஈட்டியால குத்திக்கிட்டது, கோவலனுக்கு தவறான நீதி வழங்கியதால் இறந்த பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்து உயிர்விட்ட ராணி என சதியில் அடங்காத தற்கொலைகள் முதல் ஆதிரை தீயில் புகுந்த சதி வரை சில உதாரணங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. சோழ சேர பாண்டியர்களின் வரலாறுகளில் இருந்தும் சம்பவங்களைத் தொகுத்துள்ளார்கள். முன்னுரையில் குறிப்பிட்டபடியான புத்தகத்தின் கான்சப்ட் கடைசி 20 பக்கங்களில்தான் காண முடிகிறது.

அடுத்ததாக கைம்பெண்ணின் நிலை என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட நிகழ்வுகள் அனைத்திலும் நெஞ்சை கனக்க வைத்துள்ளார் ஆசிரியர். சதியில் உயிர் விட முடியாதவர்கள் மொட்டையடித்துக்கொள்ள வற்புறுத்தப்பட்டதும், ரவிக்கையல்லாத சேலைகளை மட்டுமே அணிய அனுமதிக்கப்பட்டதும் கொடூரம். அத்துடன் உடன்கட்டை ஏறும் பெண்களின் வீரதீர செயலைக் குறிப்பிட்டும், அரிதாகவே நடந்த நிகழ்வு என்று நிறுவியும், சிவகங்கை மறவர் இனத்தவர்களின் பெண்கள் சதி ஏற கட்டாயப்படுத்தப்பட்டனர் என்ற தகவலோடும் முடிவுரை வருகிறது.

வடநாட்டில் நடந்த ஒரு சதி நிகழ்வோடும் முடிகிறது “தமிழ்நாட்டில் சதி என்னும் தற்பலி”.

கணவனை இழந்த பெண்கள் நிச்சயம் படிக்கக்கூடாத புத்தகம்!

ஆமினா முஹம்மத்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-326-9.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


1 Comment

  1. பானு says:

    பெண்களை இழிவுபடுத்தும் இவை போன்ற புத்தகங்கள் தடை செய்யப்பட வேண்டும். காரசாரமான விமர்சனம் அருமை.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: