Home » Novel » கள்ளம்

கள்ளம்

பாலித்தீன் பை ஒன்றினுள் பிதுங்கி, ‘கிளாசிக்’ அல்லது ‘மகத்தான’ நாவல் வரிசை அப்படி இப்படியென்று எந்தவொரு பகட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட இருபது வருடங்களில் இப்போதுதான் இரண்டாம் பதிப்பைக் காண்கிறது ‘கள்ளம்’. உண்மையென்னவெனில் அப்படியாக விளம்பரம் செய்யப்பட்டு வசூலித்துக்கொண்டிருக்கும் ஒரு சில புதினங்களைவிட கள்ளம் வாசகனுக்கு ஒரு நிறைந்த வாசிப்பின்பத்தைத் தரலாம். நிம்மதியிழப்பு என்பதை இலக்கிய வாசிப்பின் ஒரு கூறாகவே கருதுகிறேன். அப்படியான நிலையில், இந்த நாவல் நமக்குள் கிடத்தும் வன்மையான அலைகள் அதீத அழுத்தம் கொண்டவை.

கள்ளம், தஞ்சை ப்ரகாஷ், எதிர்வெளியீடு, ரூ. 210

கலை, பசி, காமம் என்ற மூன்று புள்ளிகளாலான முக்கோணத்தின் மத்தியில் சுழலும் கருவே கள்ளம். ஏதோவொரு வேஷம்தான் நம் இயல்பாகிவிட்டதோ? அந்த வேஷத்தை எல்லோரிடத்திலும் இல்லாமல் விலக்கி காணமுயலும்போது தன்னுடைய இயல்பும் வேஷமோ எனும் சந்தேகம் வலுக்கத்தொடங்குகிறது.

கலையெனும் சுடர் எரிய காமமெனும் தூண்டுகோள்; காமத்தைக் கட்டுக்குள் வைக்க பசியை விரும்பிப் பழகுதல்; உணர்வொன்றிய நிலையிலல்லாத காமத்தை உதறிக் கடந்து செல்லுதல்; உணர்வுச்ச நிலையில் போகத்தின் எல்லைவரை சென்று லயித்து அடங்குதல் என புதினம் முழுக்கவே இருந்தும் இல்லாமலும் அதிகமாய் இருந்தும் என எப்படியேனும் காமம் இருக்கிறது. ஆனால் மூன்றாம் தர விவரணையாகவோ, வெறுமனே படைப்பை sensationalize செய்ய காமம் ஒரு கருவியாகவோ இல்லாமல் காமம் காமமாகவே இருக்கிறது.

கிட்டத்தட்ட பத்து சதவிகித சொல்லாடல் தெலுங்கில் இருக்கிறது. அறவே தெலுங்கு தெரியாத எனக்கு அது எந்தவொரு வாசிப்பு சிக்கலையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் எழுத்து நடை கடினம் என்பதையும் மறுப்பதற்கில்லை. புதுவிதமான கடினம். வாக்கியங்கள் வெட்டி வெட்டி எழுதப்பட்டுள்ளன. ஒரு வாக்கியத்திற்கான பொருள் அடுத்த வாக்கியத்தில். அதற்கானது அதற்கு அடுத்ததில். இப்படியாக சங்கிலித் தொடர்ச்சியாகச் சென்று சில நேரங்களில் ஒரு பத்தி நிறைவுபெறும்போதே அந்தப் பத்திக்கான முழுப் பொருளும் தெளிவாகிறது. ஒரு சில பத்திகள் மறுவாசிப்பைக் கோருகின்றன. முதல் வாசிப்பிலேயே மறுவாசிப்பும் முடிந்ததுபோல இருக்கிறது. இந்தப் படைப்பு நிச்சயம் அத்தகைய மரியாதைக்கும் உரியது.

தஞ்சாவூர் சித்திரக்கலையின் பெருமையைப் பேசும் நாவல் என்ற அனுமானத்துடன் துவங்கிய எனக்கு இரண்டு அத்தியாயங்களைக் கடப்பதற்குள் முழுதாக இது வேறு களம் என்று விளங்கியது. மூன்றாவது அத்தியாயம் ஜெயகாந்தனின் ‘பாரிசுக்கு போ’வின் சாரங்கனுக்கும் அவன் தந்தைக்கும் நடக்கும் விவாதத்தின் நகல் போலவேதான் தெரிந்தது. கொஞ்சம் சலிப்பும் வந்தது. சில தினங்கள் கடந்து நான்காம் அத்தியாயத்தைத் தொடங்கி பக்கங்கள் செல்ல செல்ல கடைசி அட்டையில்தான் நிறுத்தமுடிந்தது.

ஜம்னா என்ற கதையின் நாயகி பரந்தாம ராஜூ எனும் நாயகனிடம் பிணையும் அந்த காட்சியில் நாம் விரசத்தைத் தேடவேண்டும். அப்படியேதான் இன்னபிற போக தருணங்களும். ஏதோவொரு விதமான அப்பட்டமும் இல்லாமல், இலைமறைக்காயாகவும் இல்லாமல் உணர்வுப்பூர்வமாக பதியப்பட்டுள்ளது. அதுதான் ப்ரகாஷின் மொழியின் வெற்றி. முழுக்கவே பரந்தாம ராஜுவின் அகத்தேடலும் கலை வேட்கையும் மட்டுமே பிரஸ்தாபிக்கப்பட்டாலும், கதை முழுக்க பெண்கள், பெண்கள், பெண்கள்…

ஜம்னா, பாபி, லல்லு, சரளா, கருப்பு, ராமலக்ஷ்மி, ராஜலக்ஷ்மி, வெள்ளையம்மா… இத்யாதி… என எத்தனை எத்தனை பெண்கள் வந்தாலும், அத்தனை பாத்திரங்களும் பரந்தாம ராஜு எனும் புள்ளியையே வட்டமிடினும் அத்தனை பேரும் அவரவராகவே அவரவருக்கான தனி அடையாளத்துடன் நாவல் முடிந்தும் நமக்குள் இருக்கிறார்கள். அச்சுப்பிழையில் சில இடங்களில் இராம/இராஜலக்ஷ்மி குழப்பங்கள் உண்டு. 124, 125, 126 பக்கங்களில் உள்ள அமைப்புப் பிழை பதிப்பகத்தார் கவனத்திற்கு வந்திருக்கும் என நம்புகிறேன்.

எக்ஸிஸ்டென்ஷியலிசம் எனும் இருத்தலியல் சார்ந்த பாத்திரங்களை சு.ரா. முதல் எஸ்.ரா. வரை எல்லோரும் முயன்று பார்த்திருக்கிறார்கள் என தெரிகிறது. பரந்தாம ராஜுவும் அப்படியான முயற்சியே. கிட்டத்தட்ட அந்தப் பாத்திர வடிவமைப்பு வெற்றியும் பெறுகிறது. ஆனால் முடிவை நெருங்கும் அத்தியாயங்களில் அப்பெண்களை அவன் எவ்வாறு கையாள்கிறான் என நாம் நினைத்துக்கொண்டு வருகிறோமோ அப்படியாக இல்லை எனும் விதத்தில் அவனது தர்க்கம் பேசுகிறது. அது அவனை மறுபரிசீலனை செய்யத் தூண்டலாம். அவன் மீது ஒரு சுயநல பிம்பம் கூட தெரிகிறது. அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஜம்னாவிடமும் சரளாவிடமும் இறுதியில் அவன் பேசும் அந்த கனமான காட்சி நாவல் முடியும்போது அதன் முடிவின் தன்மையால் நம்மை கொஞ்சமாக குழப்புகிறது. ஜேஜே அளவிற்கு குழப்பம் இல்லையெனினும், பரந்தாம ராஜுவும் குழப்பமாகவே முடிகிறான். ஆனால் கடைசி அட்டையை மூடியபின்னும், ஒல்லி தேகத்துடனும், தீர்க்கமான கண்களுடனும், தொங்கும் முலைகளுடனும் அந்த நவ்க்ரீ பெண், வெள்ளைத் தோல் மிராட்டிச்சி ஜம்னா நம்முள் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாள். நிச்சயம் தமிழின் unsung Hero தஞ்சை ப்ரகாஷ் என்று தோன்றுகிறது. அவசியம் பரிந்துரைக்கிறேன்.

மயிலன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-266-0.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: