Home » Health » என் சிந்தனையில் சித்த மருத்துவம்

என் சிந்தனையில் சித்த மருத்துவம்

மூலிகை என்றால் என்ன? அது எவ்விதம் தோன்றியது? சித்தர்கள் அதை எவ்வாறு பெற்று, மருத்துவ முறையைத் தோற்றுவித்தனர்… என்று சித்த மருத்துவம் பற்றி ஆதியோடு அந்தமாக, அதன் முழுமையான வரலாற்றை எடுத்துச் சொல்கிறது புத்தகம்.

என் சிந்தனையில் சித்த மருத்துவம், மருத்துவர் C.A.ரவி, தி சுசான்லி பப்ளிகேஷன்ஸ், ரூ. 350

உலகில் மிகப்பழமையான நாகரிகம் தமிழர் நாகரிகம். சித்த மருத்துவம் தமிழர் நாகரிகத்துடன் ஒன்றியது. அதே போல், உலகிலே முதன்முதலில் தோன்றிய மருத்துவ முறையும் சித்த மருத்துவம்தான் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. சித்தர்கள் தோற்றுவித்த மருத்துவ முறையை முறையாக ஏடுகளில் எழுதியும் வைத்துள்ளனர். ‘அகத்தியர் குண வாகடம்’, ‘திருமூலரின் திருமந்திரம்’, ‘தன்வந்தரி நிகண்டு’, ‘போகர் நிகண்டு’ போன்ற நூல்கள் தாவர மூலிகைகள், மருத்துவ குணங்கள் பற்றி தெளிவாக விளக்கியிருக்கின்றன. மூலிகையானது தமிழர்களது பண்டைய பாரம்பரிய பண்பைக் குறிப்பதாகவே இருந்து வந்துள்ளது. தாவரங்களில் மருத்துவ குணம் உள்ளதைப்பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது.

மனிதர்கள் நலமுடன் வாழ நமக்காக மூலிகைகள் தம் இரத்தத்தை பாலாக்கித் தரும் தாய் போல் இருக்கின்றன. அவற்றை நேசிக்க வேண்டும், சுவாசிக்க வேண்டும், ரசிக்க வேண்டும், வளர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதால் வருங்காலச் சந்ததியினர் இன்னும் நலமுடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை. இதையே சித்தர்களின் கூற்றான ‘உணவே மருந்து, மருந்தே உணவு’, இது இன்றைய சூழலுக்கேற்ப பின்பற்றக்கூடிய நிலையிலேயே இருப்பது கவனிக்கத்தக்கது என்று தெளிவாக முன்வைக்கிறார் ஆசிரியர்.

மனித வாழ்க்கையுடன் கலந்ததே சித்த மருத்துவம். எனவேதான் சித்தர்கள் நமது உடலை 96 தத்துவங்களாகப் பிரித்து இதுதான் உடல்கூறு என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள். மனித உடலை கையினால் அளந்தால் எட்டு ஜாண் உயரமும், நான்கு ஜாண் அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதுதான் சித்தர்களின் வாக்கு.

மனித சரீரத்தில் 72000 நாடி நரம்புகள் பின்னிப் பிணைந்துள்ளதை சித்தர்கள் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். உடலின் 16 பாகங்களில் நாடியைப் பார்க்க முடியும் என்பது வியப்பான செய்தி. எல்லோருடைய உடலிலும் நாடி இருக்கிறது. ஆனால், வேகமாக ஓடி வந்தவருக்கு, முதல் நாள் உடலுறவு கொண்டவர்க்கு, மாமிச உணவு சாப்பிட்டவுடன் வந்தவருக்கு, கடுமையான பட்டினியால் வந்தவருக்கு, தீய வஞ்ச எண்ணங்கள் உள்ளவர்க்கு, நாடி பார்க்கும்போது கால் மேல் கால் போட்டு அமர்ந்தவர்க்கு, குளித்தவுடன் வருவோருக்கு எல்லாம் நாடி சரியாகத் தெரியாதாம்.

ஆய கலைகள் 64லிலும் உள்ள நாடிகளின் தன்மைகள், சித்த மருத்துவ சிகிச்சை முறைகள், அதற்கான உணவு முறைகள், சித்தர்கள் வகுத்த ரகசிய மூலிகை பாஷைகள், மூலிகைகளைக்கொண்டான சமையல் குறிப்புகள்… என்று நீள்கிறது விவரங்கள்.

புத்தகத்தில் மொத்தமாய் கவர்வது 300 மூலிகைகளைப் பற்றி வண்ணப்படங்களுடன், அவற்றின் common name, local name, Botanical Name, Useful parts, Chemical constituents, Medicinal Uses ஆகியவற்றின் விவரங்கள்தான்.

உலகில் ஏறத்தாழ 3,63,730 பூக்கும் மற்றும் பூவாத தாவர பேரினங்கள் உள்ளன. சுவீடன் நாட்டைச்சார்ந்த கரோலஸ் லினேயஸ் என்பவர் கி.பி.1707-1778 தாவரங்களுக்கு இரு பெயரிடும் முறையை முதன் முதலில் உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு நாட்டிலும் பின்பற்றப்படும் மொழிகளில் பல்வேறு உள்ளூர்ப்பெயர்கள் (VERNACULAR NAME) ஒரு தாவரத்திற்கு மட்டும் சூட்டப்படுவதால் உலகம் முழுவதும் பின்பற்றக்கூடிய ஒரு பொது பெயரிடுவதற்குத் தாவர வல்லுநர்களால் ஒருமித்த கருத்தோடு உலகளவில் சில விதிமுறைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தாவர அறிவியற் பெயர் (BOTANICAL NAME) இலத்தீன் மொழியிலுள்ளது. இவ்விதிமுறைப்படி ஒவ்வொரு தாவரத்திற்கும் பேரினப்பெயர் (GENUS NAME), சிற்றினப்பெயர் (SPECIES NAME) என இனப் பெயர்கள் சூட்டப்படும். சிற்றினப்பெயர் குறிப்பிட்ட சிறப்புக் குணங்களுடைய ஓர் இனத்தாவரத்தைக் குறிக்கும். இவைகளை அறிவியல் மிகத்தெளிவாக முறைப்படுத்தி இருக்கிறது. சித்தர்களின் மூலிகை ஆய்வின் அடிப்படை, மூலிகை தாவரங்களின் அறிவியல் ஆய்வுக்கு முன்னோடியாக அமைந்துள்ளது. BOTANICAL NAME என்பது ஒரு தாவரத்தின் GENUS NAME மற்றும் SPECIES NAME ஆகியவற்றின் சேர்க்கைதான் என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

உதாரணம் – நெல்லிக்காய் NELLIKAI
இதன் GENUS NAME – EMBELICA
இதன் SPECIES NAME – OFFICINALIS
ஆக BOTANICAL NAME என்பது GENUS NAME + SPECIES NAME
அதாவது EMBELICA OFFICINALIS.

புத்தகத்தில் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் எழுத்துப்பிழைகள் மட்டும் பல் இடுக்கில் சிக்கிய பாக்குத்தூளாய் லேசாக உறுத்துகிறது.

பக்க வடிவமைப்பிலும், பளபள தாளுக்கும், வண்ணப்படங்களுக்கும் மெனக்கெட்டவர்கள் பிழை திருத்தங்களையும் கவனித்து இருக்கலாம், தரம் கூடியிருக்கும்.

சித்த மருத்துவம் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.

‘எனக்கு என் தாய் பிடிக்கும்
தாய் போன்ற மூலிகையை பிடிக்கும்
அம் மூலிகையை வணங்கும் அனைவரையும் எனக்கு பிடிக்கும்’ என மருத்துவர் ரவி தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

நிச்சயம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் அனைவருக்கும், இந்தப் புத்தகம் பிடிக்கவே செய்யும்.

ஸ்ரீநிவாஸ் பிரபு

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-409-1.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: