Home » History » சங்க காலம்

சங்க காலம்

வரலாறு என்று நாம் படித்த புத்தகங்கள் எல்லாம் மற்ற நாடுகளின், இனங்களின், தலைவர்களின் வாழ்க்கையையே நமக்கு காட்டின. நம் முன்னோர்களின் வரலாற்றைப் படிப்பதற்கு நம் பழந்தமிழ் இலக்கியங்களே உள்ளன. அவையும் தீவிரமான செய்யுள் வடிவிலேயே இருப்பதால் நம்மால் அவற்றை எளிதில் படித்துவிடமுடியாத சூழலே இருந்துவருகிறது. இந்த குறை(?)யைப் போக்குவதற்காகவே முனைவர் ப. சரவணன் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

சங்க காலம், முனைவர் ப. சரவணன், கிழக்கு பதிப்பகம், ரூ. 180

உங்களுக்கு வரலாறு பிடிக்குமா? உங்களுக்கு பழந்தமிழ் இலக்கியங்களை அறிந்துகொள்ள விருப்பமா? நேரடியாக தமிழ் செய்யுள்களைப் படிக்க கொஞ்சம் கஷ்டமா? இம்மூன்று கேள்விகளுக்கும் உங்கள் பதில் ‘ஆம்’ என்றால்… இது உங்களுக்கான புத்தகம்.

சங்க காலத்தின் கால வரையறை என்று ஆசிரியர் எடுத்துக்கொண்டிருப்பது, கி.மு. 4ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை (600 ஆண்டுகள்). இதற்கான தன்னுடைய விளக்கத்தையும் ஆசிரியர் கொடுத்திருக்கிறார். வரலாறென்று நாம் எவற்றையெல்லாம் நினைப்போமோ, அவை அனைத்தையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. (என்ன நாம் தான் அவற்றை அணுகவில்லை (அ) தாமதமாக அணுகியிருக்கிறோம்). அரசியல், உணவு, வாழ்வுமுறை, அதிகாரம், விழாக்கள்… அனைத்தையும் சங்ககால நூல்களின் வழியே நாம் கண்டுணர முடிகிறது.

படிப்போருக்கு நேரடியாக செய்யுளாகக் கொடுத்து சிரமம் தராமல், எல்லாப் பாடல்களின் எண்ணைக் கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களையே எடுத்தாண்டு இருக்கிறார்.

புத்தகத்தில் பல தலைப்புகளில் சங்ககாலம் விவரிக்கப்பட்டிருந்தாலும், சில தலைப்புகளை இங்கே விவரிக்க எடுத்து இருக்கிறேன்.

காதல் – இக்காலத்தைப்போலவே அப்போதும் கண்டதும் காதலிருந்திருக்கிறது. தலைவனுக்கும் தலைவிக்கும் அவர்தம் தோழன்/தோழி தூது போனார்கள். அப்போதும் காதலர்க்கு எதிர்ப்புகள் இருந்தன. அவை நிலம், பொருளாதாரம் சார்ந்தவையாக இருந்தன. ஒவ்வொரு தகப்பனும் தன் மகன்/மகள், தன்னுடைய நிலப்பகுதியை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) விட்டு வேறு இடத்தில் எப்படி இருப்பான்(ள்) என்பதற்காக கவலைப்பட்டு, அதன்பொருட்டு காதலை எதிர்த்தனர்.

திருமணம் – திருமணங்கள் இரு குடும்பத்தால் நடத்தப்பட்டன. காதலர்கள் தாமாகவும் திருமணம் செய்தும் கொண்டார்கள். திருமணங்கள் நடத்தப்பட்ட விதங்களை சங்கப்பாடல்களில் படிக்கும்போது, நமக்கும் அதுபோன்றே திருமணம் நடக்கவேண்டும் என விழைகிறது மணம். இக்காலத்தைப்போலவே அப்போதும் புகுந்தவீட்டிற்குச் சென்றுவிட்ட மகளை எண்ணி அம்மா/சிற்றன்னைகள் (செவிலித்தாய்) வருந்தினார்கள்.

குடும்பம் – குடும்பத்தில் தலைவன் பொருளீட்டுபவனாகவும், தலைவி குழந்தைகளைப் பராமரித்தும் வந்திருக்கின்றனர். தலைவன் பொருள் தேடி பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும் சென்றான். அவனுக்காக தலைவி காத்துகொண்டிருந்ததை பல பாடல்கள் கவித்துவமாகப் பதிவு செய்திருக்கின்றன. தலைவன் இறந்தபின் தலைவி உடன்கட்டை ஏறுவதை பெரும் கற்பியல் மாண்பாக பார்த்திருக்கின்றனர்.

பழந்தமிழர் சமூகத்தில் விலைமகளிர் இல்லை. ஆனால் நிறைய சின்னவீடுகள் இருந்தார்கள். ஒவ்வொரு தலைவனும் நிறைய சின்னவீடுகளை வைத்திருந்தார்கள். ஆனால் தலைவி அந்த சக்களத்தியருடனும் நட்போடே பழகியதற்கும் சான்றுகள் உள்ளன.

போர் – மூவேந்தர்கள் எப்போதும் போர்புரிந்துகொண்டே இருந்தனர். போர்கள் பெரும்பாலும் தற்காப்பு மற்றும் எல்லை விரிவாக்கத்திற்காக நடத்தப்பட்டன. போர்க்களத்தில் பயன்படுத்தும் மற்றும் வேட்டையாடப் பயன்படுத்தும் ஆயுதங்களுக்கு தனித்துவமான சொற்களை பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

விவசாயம் – பழந்தமிழரின் முக்கிய விவசாய விளைபொருட்களாக, நெல், கரும்பு, தானிய வகைகள் இருந்திருக்கின்றன. நன்செய் மற்றும் புன்செய் நிலத்தில் விவசாயம் செய்தனர்.

உணவு – பழந்தமிழர் சைவ மற்றும் அசைவ உணவுகளை எப்போதும் சாப்பிட்டனர். முக்கியமான அசைவ உணவாக மாட்டிறைச்சி (பசு) இருந்திருக்கிறது. ஆண், பெண் இருபாலருமே, மது அருந்தியிருக்கிறார்கள்.

வெளிநாட்டினர் தொடர்பு & அந்நிய செலாவணி – பண்டைய தமிழகத்துக்கும் சீனா, மலேசியா, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா போன்ற ஆசிய நாடுகளுக்கும் நல்ல வாணிபத்தொடர்பு இருந்திருக்கிறது. ரோமப்பேரரசிற்கும் நமது விளைபொருட்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. பொதுவாகவே பண்டமாற்றுமுறை பயன்பட்டிருக்கிறது. முத்திரைக்காசுகளும் பயன்பட்டிருக்கின்றன.

* எழுத்துக்கள் எல்லாம் ‘தமிழி’ என்ற முறையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. தமிழியிலிருந்தே தமிழ் என்னும் சொல் வந்திருக்கிறது.

* நாட்டை ஆள்பவர்க்கு மன்னன், வேந்தன் என்ற சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும், இவ்விரு சொற்களுக்கிடையே, நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. இன்னும்கூட இரண்டு சொற்கள் பயன்பட்டிருக்கின்றன – கோ & அரசு.

* தமிழகம் என்ற சொல்லை சங்ககாலத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

* பழந்தமிழர் விருந்தோம்பலில் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். விருந்து வைப்பதற்காக விதை நெல்லையும் கொடுத்தவர்களாக அறியப்படுகிறார்கள்.

இன்னும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன, இப்புத்தகத்தில். கண்டிப்பாக ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய புத்தகம்.

மொத்தத்தில் பழந்தமிழரின் வரலாற்றை அறிந்துகொள்ள நாம் இந்தப் புத்தகத்தையும் இதன் தொடர்ச்சியாக சங்க இலக்கியப்பாடல்களையும் படிப்போமானால், அதுவே இதன் ஆசிரியருக்கும், இப்புத்தகத்துக்கும் கிடைக்கும் வெற்றியாகும்.

வி. இராஜசேகர்

 

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-8414-906-2.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: