Home » Short story » ஒரு பூ ஒரு பூதம்

ஒரு பூ ஒரு பூதம்

எல்லா பெற்றோரைப் போலவும் எனக்கும் ‘என் குழந்தைகள் புத்தகங்கள் படிப்பதில்லை’ என்ற ஆதங்கம் இருந்தது. ஓர் ஆசிரியையாக பள்ளியில் மாணவர்களை எந்த விஷயத்தையும் எளிதாகச் செய்துவைத்துவிட முடிந்த என்னால், என் குழந்தைகளிடம் செயல்படுத்த முடிந்ததில்லை. ஆனாலும் என் முயற்சியைக் கைவிட்டதில்லை.

புத்தகக் கண்காட்சியில் கல்கி ஸ்டாலுக்குள் இழுத்த ஒரே புத்தகம் ‘ஒரு பூ ஒரு பூதம்!’ பிரபலமான ஆசிரியர் எழுதிய புத்தகம் என்பதாலும் ஏற்கெனவே நாளிதழில் விமர்சனம் பார்த்திருந்ததாலும் உடனே வாங்கிவிட்டேன். மியாவ் தத்துவம் கதையைப் படிக்க ஆரம்பித்தேன். இத்தனை தெளிவான, அழகான ஜென் கதையை இதுவரை நான் படித்ததில்லை! இருபத்தைந்தாவது ஆடு எங்கே?, ஓர் அதிசயத்தின் கதை! பறவை மொழி, நான் சொல்வதெல்லாம் உண்மை, மூன்று மாணவர்கள் என்று வரிசையாகப் படிக்க ஆரம்பித்து இரண்டு படகுகள் கதையோடு புத்தகத்தை முடித்துவிட்டேன்.

ஒரு பூ ஒரு பூதம்!, மருதன், கல்கி பதிப்பகம், ரூ. 40

கதைகளைப் படிக்கும்போது உண்மையில் நான் ஒரு சிறுமியாக மாறியிருந்தேன். சில வரிகள் மெல்லிய புன்னகையை வரவழைத்தன. சில வரிகள் வாய்விட்டுச் சிரிக்கும் அளவுக்கு அலாதியாக இருந்தன. பெரும்பாலான கதைகள் யூகிக்க முடியாத அளவுக்கு முடிவுகளைக் கொண்டிருந்தன. இந்த முடிவுகளே அந்தக் கதைகளை உன்னத நிலைக்குக் கொண்டு செல்வதாக அமைந்திருந்தன.

12 கதைகளில் ஒரு பூவும் ஒரு பூதமும், ஒரு சிறுமியும் 12 நண்பர்களும் கதைகள் மட்டுமே கடைசி இரண்டு இடங்களைப் பெற்ற கதைகள். மற்ற கதைகள் எல்லாம் நம்பர் ஒன் இடத்தைப் பகிர்ந்துகொள்கின்றன! என்னை ஈர்த்த இந்தக் கதைகள் என் குழந்தைகளையும் ஈர்க்கும் என்ற நம்பிக்கை வந்தது.

மறுநாள் குழந்தைகளை அழைத்தேன். நீண்ட முயற்சிக்குப் பிறகு மகள் வந்து அருகில் அமர்ந்தாள். மகன் கண்டுகொள்ளவில்லை. நாயும் பூனையும் கதையைப் படித்துக் காட்டினேன். மகள் விழுந்து விழுந்து சிரித்தாள். தன் அண்ணனிடம் ‘நாயும் பூனையும் ஏன் சண்டை போட்டுக்குதுன்னு இப்பத் தெரியுது’ என்று கூறினாள்.

அடுத்த நாள் நான் அழைக்காமலே அந்தப் புத்தகத்தோடு என்னிடம் வந்தாள். அன்று இரண்டு படகுகள் கதையைப் படித்துக் காட்டினேன்.

“வெள்ளைப் படகுக்குக் கிலி பிடித்துவிட்டது. இத்தனைக் காலம் சுகமாகக் கரையிலேயே தங்கியிருந்துவிட்டோம். இப்போது திடீரென்று கடலில் இறங்கச் சொன்னால் என்ன செய்வது? என் உடம்புக்கு ஏதாவது ஆகிடுமே! என் பெயிண்ட் கெட்டுடுமே! தன் மூக்கை அது உறிஞ்சிக்கொண்டது. குளிர் வந்தால் என்னாகும்? காய்ச்சல் அடித்தால் என்னாகும்?’”

“இரு கண்களையும் மூடிக்கொண்டது வெள்ளைப் படகு. திசை தெரியவில்லை. ஒன்றுமே புரியவில்லை. தலை சுற்றியது. உடலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது.”

தான் நீலப் படகு என்றும் அண்ணன் வெள்ளைப் படகு என்றும் மகள் கூறினாள். சட்டென்று கோபமான மகன், தானும் நீலப் படகுதான் என்றான். என் மகனும் கதையைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான் என்ற விஷயம் எனக்கு சந்தோஷமாக இருந்தது.

அடுத்த நாள் வீட்டுக்குள் நுழைந்ததுமே, புத்தகத்துடன் என்னிடம் வந்தாள் மகள். வேலை முடித்துவிட்டுப் படிக்கலாம் என்றேன். ‘ஐயோ… நாமதான் லேட். அண்ணன் சிங்கமும் சிறுவண்டும் படிச்சிட்டான்’ என்றாள். அடடா! ஓர் அம்மாவுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்? மீதிக் கதைகளைப் படிக்க மகனுக்கும் மகளுக்கும் பயங்கரப் போட்டி. 10 நாட்களில் 12 கதைகளை முடித்துவிட்டோம். அடுத்த பத்து நாட்கள் கதைகளைப் பற்றியே பேச்சாக இருந்தது. பள்ளியிலும் இந்தக் கதைகளுக்குப் பிரமாதமான வரவேற்பு.

எங்கள் பள்ளியில் கதை சொல்லும் போட்டி நடத்தினோம். நான் குழந்தையாக இருந்தபோது படித்த கதைகளையே இன்றும் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் என் வகுப்பு மாணவி ஒருத்தி, பூனையும் நாயும் கதையைச் சொல்லி முதல் பரிசு வாங்கிவிட்டாள்!

கடந்த வாரம் என் மகனின் நண்பனுக்குப் பிறந்தநாள் பரிசு என்ன வாங்கலாம் என்று யோசித்தபோது, ‘பூவும் பூதமும்’ வாங்கிக் கொடுக்கலாம் என்றான்!

சமீபத்தில் குழந்தைகளுக்கு வெளிவந்த தமிழ்ப் புத்தகங்களில் ‘ஒரு பூ ஒரு பூதம்’ தனித்துவம் வாய்ந்தது. இந்தக் கதைகளைப் படித்தால் சந்தோஷப்படுவோம்… நினைத்து நினைத்துச் சிரிப்போம்… அந்தக் கதைகளைப் பற்றியே பேசுவோம்… கண்டிப்பாக இன்னொருவருக்குப் பரிந்துரை செய்வோம்…

’ஒரு நல்ல கதையை வாசிப்பதைவிட அற்புதமான ஓர் அனுபவம் இந்த உலகில் ஏதாவது இருக்கிறதா? அதைவிட மகிழ்ச்சியளிக்கக்கூடிய இன்னொரு செயல் இருக்கிறதா?’ – இதை நான் சொல்லவில்லை… ஆசிரியர் மருதன் சொல்கிறார்.

ஆம் வாசிப்பதை விட அற்புதமான அனுபவமும் மகிழ்ச்சியான இன்னொரு செயலும் உலகில் இல்லை!

அரசியல் புத்தகம் எழுதும் ஒருவரால் குழந்தைகளுக்காக இத்தனை அழகாக எழுத முடிகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. தொடர்ந்து குழந்தைகளுக்கு எழுத வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்… அடுத்த ஆண்டு இன்னொரு குழந்தைகள் புத்தகம் உங்களிடமிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…

பா. ஷகிலா

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-340-2.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: