Home » Novel » கள்ளம்

கள்ளம்

“கலை பரிமாணம் கொள்ள வேண்டும். விதவிதமாய் வெளிப்பட்டு கலைஞனின் தனித்துவ பிழிவாய் தன் தரத்தை மெய்ப்பிக்க வேண்டும். தேங்கி, முடங்கி, மழுங்கிவிடக் கூடாது. இந்த அற்புதக் கலை ஆயத்த நகலாகும் ஆபத்தான கள்ளத்திற்கெதிராய் கலக வடிவமெடுத்திருக்கும் இந்த நாவலை, ப்ரகாஷ் தவிர வேறெந்தக் கொம்பனாலும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது என்பதை வாசிக்கிறவர்கள் உணர்ந்து கொள்ளும் அனுபவத்தைத் தருவதே இந்தக் கள்ளம் நாவலின் உன்னதம்.” இப்படியாகத்தான் தஞ்சை ப்ரகாஷின் கள்ளம் நாவலின் பின்னட்டை சொல்கிறது. உண்மைதான்; இப்படி ஒரு அபத்தமான நாவலை அவரைத் தவிர வேறு யாரும் எழுதியிருக்க முடியாதுதான்!

கள்ளம், தஞ்சை ப்ரகாஷ், நடுகல் பதிப்பகம், ரூ. 210

தஞ்சாவூர் சித்திரப்படம் எனும் கலையைப் பற்றிய நாவலாக விரியும் இருநூற்றுச் சொச்சம் பக்கம் உள்ள இந்நாவலில் அந்தக் கலையைப் பற்றி வரும் பக்கங்கள் ஐந்தோ அல்லது ஆறோதான் இருக்கும். மற்றபடி பிற பக்கங்களில் காமமே நிரம்பி விந்தாக வழிந்து ஓடுகிறது. அதுவும் அந்தக் கலையைப் பற்றிய உயரிய சித்தரிப்புகள் எதுவும் ப்ரகாஷின் எழுத்துகளில் வெளிப்படவில்லை.

அந்தக் கலையைக் கட்டிக் காப்பதாக தன்னைக் கூறிக்கொள்ளும் பரந்தாமராஜூ அந்தக் கலைக்காக செய்யும் காரியங்களை விடவும் பெண்கள் சூழ காமத்தில் மூழ்கியிருப்பதே அவன் செய்யக்கூடிய சேவையாக இருக்கிறது. அகிலனின் சித்திரப்பாவை நாவலைப் பற்றி சொல்லும்போது சுந்தர ராமசாமி அதில் வரும் நாயகனை ஓவியன் அல்ல ‘ட்ராயிங் மாஸ்டர்’ என்று குறிப்பிடுவார். இந்நாவலில் பரந்தாமராஜூவைப் பற்றி சித்தரிப்புகள் அப்படியான ஒரு தோற்றத்தையே நமக்குத் தருகிறது.

கன்னிப் பெண்கள், திருமணமான பெண்கள், திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்கள் என்று எல்லாத் தரப்புப் பெண்களும் பரந்தாமராஜூவுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்! அதில் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளும் முன் அவன் குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்! நாவலின் முன்னுரையில் மங்கையர்க்கரசி ப்ரகாஷ் இதைப் பற்றி ப்ரகாஷிடம், “பெண்கள் ஏனிப்படி லகுவில் சோரம் போகிறார்கள்?” என்று கேட்டதற்கு ப்ரகாஷ், “நீ வளர்ந்த சூழ்நிலையில் இவ்வாறு கேட்கிறாய். ஆனால் சமுதாயம் அப்படி இல்லை. அங்கே இவைகள் நடந்தேறிக் கொண்டுதான் உள்ளன” என்று பதில் சொன்னதாகக் குறிப்பிடுவது நம்மை புல்லரிக்கச் செய்கிறது! தஞ்சாவூர் சித்திரப்படம் என்ற கலையும், அதைப் பரந்தாமராஜூ காப்பதற்காக செய்யும் முயற்சிகளும் நாவலில் வெளிப்பட்டிருப்பதை விடவும் அவன் இந்தப் பெண்களுடன் கொள்ளும் காமமே நாவலில் மலிந்திருக்கிறது.

நடுகல் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை அற்புதமாக வெளியிட்டிருக்கிறது. எழுத்துப் பிழைகளும், திரும்பத் திரும்ப அச்சாகியுள்ள வாக்கியங்களும், பத்திகளைப் பிரிக்கும்போது முன்னும் பின்னும் அந்தரத்தில் தொங்கும் வாக்கியங்களும் வெகு சிறப்பு! மேலும் பின்னால் வரும் பக்கங்கள் சில நாவலின் முன்பகுதியில் வேறு பக்க எண்களுடன் அச்சாகி நம்மை இன்பத்தில் ஆழ்த்துகிறது! நாவலும் அதன் கதையும் ஒருபக்கம் கிடக்கட்டும் ப்ரகாஷின் எழுத்தாற்றல் நம்மை திகைப்பில் தள்ளுகிறது. வாக்கியத்திற்கு வாக்கியம் வரும் ஆச்சரியக்குறிகளும் கேள்விக்குறிகளும் வானவீதியில் பரந்துகிடக்கும் நட்சத்திரங்களாய் நம் கண்களையும் கருத்தையும் கவர்கிறது!

இருளில் இருந்து ஒளிக்கு
சேய்மையிலிருந்து அண்மைக்கு
சிறிதிலிருந்து பெரிதிற்கு
பெரிதிலிருந்து உண்மைக்கு
உண்மையிலிருந்து நுண்மைக்கு
இந்தப் பயணம்
என்னிலிருந்து உனக்கு

எனும் தத்துவ விசாரத்தில் ப்ரகாஷ் நாவலை முடித்திருக்கும் விதம் அருமை; நம்மை புல்லரிக்கச் செய்வது. எந்தக் கொம்பனாலும் இப்படி ஒரு நாவலை எழுதியிருக்க முடியாது. என்ன ஒரு ஞான ஒளியை நம்முள் பாய்ச்சுகிறார் ப்ரகாஷ் என்ற வியப்பு இன்னும் அடங்கவில்லை! தான் இருக்கும் இடத்திலிருந்து இடம்பெயர்ந்து பரந்தாமராஜூ இரு பெண்களுடன் அந்த ஊரிலிருந்து தஞ்சாவூர் கலையைக் காக்க புறப்பட்டுச் செல்கிறான். அவன் செல்லுமிடத்தில் இன்னும் எத்தனை எத்தனை பெண்கள் அவனுக்காக காத்திருக்கிறார்களோ?

இதைப் படிக்க நான்கு நாட்களாக அவ்வப்போது நான் செலவழித்த நேரங்களை என் வாழ்வில் வீணான நேரங்களாக உணர்கிறேன்.

கேசவமணி.

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-266-0.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


1 Comment

  1. Subramanian says:

    Will anyone purchase this book after seeing this type of review report?

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: