Home » Short story » அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின?

அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின?

சிங்க ராஜா, தந்திரம் செய்யும் நரி அதற்கு ஒத்தாசையாய் ஓநாய் என காலம் காலமாக சொல்லப்படும் “ஒரு ஊருல…” வகை கதைகள் குழந்தைப் பருவத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி, கற்பனைத் திறனை மேம்படுத்தி, அறிவாற்றலை செறிவாக்குபவை. ஆனால் பாட்டி காலம்தொட்டு இன்று வரை இந்தக் கதைகள் ஒரே மாதிரியான அமைப்புடனே வாழ்ந்து வந்திருக்கின்றன.

இன்றைக்கு யுடியூப்பில் விரும்பிய ரைம்ஸ் பாடலை, இடையே வரும் விளம்பரத்தை மவுஸை இயக்கி அகற்றி பார்க்க இரண்டு வயதிலேயே தெரிந்து வைத்திருக்கும் மழலைகளின் கற்கும் திறனுக்கு ஏற்றவாறு இந்தக் கதைகள் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கின்றனவா என்றால் பதில் சொல்வது கடினம்.

அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின?, பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், ரூ. 45

ஆனால் இப்பொழுது இந்தக் கேள்விக்கு நம்பிக்கையூட்டும் பதிலாக வந்திருக்கிறது குன்றம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கதைத் தொகுப்பான ‘அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின?’ புத்தகம். இதனை பெ. கருணாகரன் திறம்பட எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகம் நெடுகிலும் அதே சிங்க ராஜா, தந்திர நரி, எலி, புலி எல்லாம் இருக்கின்றன. ஆனால் பொதுவான சிறுவர் நீதிக் கதைகளில் வருவதைப் போன்ற மரம் வளர்த்தலின் அவசியம், நீரின் தேவை, அழகிற்காக இயல்பினை இழக்காதிருத்தல், துணிவே துணை, உண்மையான மரியாதை போன்ற கருத்துகளைத் தாங்கிய கதைகள் மட்டும் அல்லாமல் அவற்றுடன் ஓசோன் ஓட்டை, தொழிற்சாலை கழிவு, வீடுகளாக மாறும் விளைநிலங்கள், ஜனநாயகம் என வளரும் தலைமுறையினர் அறியவேண்டிய நவீன கால தலைப்புகளை அலசும் கதைகளும் சொல்லப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் தனித்தன்மை.

அதற்காக கருத்து சொல்கிறேன் என்று மட்டும் இல்லாமல் ஜாலியான கிரியேட்டிவ் கதைகளும் ஆங்காங்கே உண்டு. தவளைக்கு அந்தக் குரல் எப்படி வந்தது என்பதையும் விலங்குகள் ஏன் ஆடை அணிவதில்லை என்பதையும் ஒரு நீதிக்கதையாக சுவையாக சொல்லும் அதே வேளை அமேசான் காடுகள், சஹாரா பாலைவனங்கள் எப்படித் தோன்றின என்கிற சுவாரஸ்ய கற்பனைக் கதையும் உண்டு.

சிறுவர்கள் மட்டும் அல்லாது பெரியவர்கள் படித்தால்கூட இந்தப் புத்தகம் மெல்லிய சிரிப்பினைத் தந்து பல இடங்களில் ரசிக்க வைக்கும் விதத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அழகை கூட்டுகிறேன் என அதிகரித்து வரும் பிளாஸ்டிக் சர்ஜரி, டாட்டூ பொறித்தல் போன்றவற்றை தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ள கடைசிக் கதை இதற்கு ஒரு உதாரணம். விலங்கழகன் போட்டிக்காக புள்ளி மான் தனது புள்ளிகளை அகற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது, ஃபேஷனுக்காக மீசையை அகற்றும் புலி, ஹேர் கலரிங் செய்துகொள்ளும் கரடி என சுவையான கற்பனை. இதைப் போலவேதான் வேறொரு கதையில் வரும் ஓசோன் படல கிழிசல்களைத் தைக்கும் யோசனையும்.

அறிவியல், வரலாற்று கதைப் புத்தகம் போன்ற ஒரு கனமான தலைப்பு. ஆனால் படிக்கத் துவங்கினால் முதல் ஆறு கதைகளும் சிறுவர் நீதிக் கதைகள். இப்படி ஒரு தலைப்பிற்கு எப்படி கற்பனைக் கதையினை சொல்லப் போகிறார் என புத்தகத் தலைப்பில் அமைந்த ஏழாவது கதையைப் படித்தால், ரசனையான ஒரு கருவுடன் தலைப்பிற்கு நியாயம் செய்திருக்கிறார் ஆசிரியர். மரம் செய்தி அனுப்புவது அதற்கு இன்னொரு மரம் பதில் தருவது போன்ற குழந்தைகளை வித்தியாசமாக சிந்திக்கப் பழக்கும் பல அம்சங்கள் ஏறக்குறைய அனைத்துக் கதைகளிலும் கலந்திருக்கிறது.

குழந்தைகளுக்கு படிக்க வாங்கித் தரவும், பிறந்தநாள் போன்ற விழாக்களுக்குச் செல்லும் பொழுது பரிசாகத் தரவும் சிறந்த தேர்வு இந்தப் புத்தகம். ஆனால் அதற்கு முன்னர், பெற்றோர்கள், பெரியவர்கள் நூல் ஆசிரியரின் பணிந்துரையை மட்டுமாவது படித்து விடுதல் நலம். ஒரு குழந்தை வளர்ப்புக் கலை புத்தகத்தினைப் படித்தால் என்னென்ன விஷயங்கள் புரிபடுமோ அதனை எளிமையாகவும் வலிமையாகவும் இந்த ஏழே பக்கங்களில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

எழுத்துக்கள், வார்த்தைகள் மற்றும் வரிகளுக்கு இடையில் தரப்பட்டிருக்கும் சீரான இடைவெளி படிப்பதற்கு உறுத்தாமல் கண்களுக்கு இதமாக இருக்கிறது. முகப்பு அட்டை உட்பட ஒவ்வொரு கதைக்கும் தரப்பட்டிருக்கும் ஓவியங்களை சிறுவர்களை வைத்தே வரைந்ததும் அவர்களது விவரங்களைத் தந்திருப்பதும் என மொத்தப் புத்தகத்தின் லே-அவுட் வறட்சியாய் இல்லாமல் சிறுவர் விரும்பும் வகையில் குளுமையாக அமைந்திருப்பதும் சிறப்பு.

மொத்தத்தில் இன்றைய குழந்தைகளுக்கு ஏற்ற சிறப்பான புத்தகம் தந்த ஆசிரியர் இன்னும் கொஞ்சம் விரிவான கதைகளுடன் அடுத்த நிலை சிறுவர்களுக்காக இன்னுமொரு புத்தகத்தை எதிர்பார்க்க வைக்கிறார்!

சுகுமார் சுவாமிநாதன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-371-8.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: