Home » Short story » சாதேவி

சாதேவி

ஒவ்வொரு கதையும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் இருக்கின்றன. ஆனால் படிக்க ஆரம்பித்ததும் சட்டென ஒவ்வொரு கதையும் முடிந்துவிடுகிறது. காரணம் ஹரன்பிரசன்னாவின் எழுத்து தங்குதடையின்றி பாய்ந்து செல்கிறது. ஒவ்வொரு கதையுமே எளிமையான கதையாக இல்லை, அவற்றைச் சொல்வதில் அல்லது வெளிப்படுத்துவதில் மிகவும் சிக்கலானவை. வெவ்வேறு விதமான மனித மனங்களை உளவியல் ரீதியாக உருவியெடுத்து வெளிப்படுத்தும்போது அவற்றை எளிமையாகச் சொல்லிவிட்டு கடந்து சென்றுவிட முடியாது. சொல்லும்விதம் கூடினாலும் பிரச்சனை குறைந்தாலும் பிரச்சனை.

ஹரன்பிரசன்னாவின் எழுத்து மிகவும் கச்சிதமாக அதே சமயத்தில் வெளிப்படுத்த வேண்டியதை தெளிவாக வெளிப்படுத்தியபடி செல்கிறது. கதைகள் ஆபாசமாக இல்லாத அதே சமயத்தில் மனரீதியான அந்த வெப்பத்தை உணரவைக்கத் தவறுவதில்லை.

சாதேவி, ஹரன்பிரசன்னா, மயிலை முத்துக்கள் பதிப்பகம், ரூ. 300

கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வுகள் ஒன்றை ஒன்று சமன்படுத்திக்கொள்ளும் விதமாக எழுதியிருப்பதால் ஒவ்வொரு கதையுமே ஏதாவது ஒருவகையில் படிப்பவரை நிச்சயமாக பாதிக்கும். கதையில் வரும் பலவிதமான கதாபாத்திரங்களின் ஒவ்வொரு பார்வையிலும் கதை பார்க்கப்படும்போது கதைக்கு ஒரு பன்முகத்தன்மை கிடைத்துவிடுகிறது.

பழைய நினைவுகளைச் சுமந்து வாழும் ஒரு வயதானவர், பழையதை நினைத்து இப்போது ஆகப்போவது என்ன, நடக்கவேண்டியதைப் பார்ப்போம் என்று எதார்த்தத்தில் வாழும் ஒரு பெண், நிகழ்காலச் சூழ்நிலையை எண்ணி அந்தப் பெரியவரின் உணர்வுகளை ஒதுக்கிவிடமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு அவரை அனுசரித்து நடந்துகொள்ளும் பேரன் என மூன்று விதமான உணர்வுகள் ஒன்றை ஒன்று கை கோர்த்தபடி கதை நிகழும்போது அது ஒரு அற்புதமான உணர்வைக் கொடுக்கிறது. இதில் கதை சொல்கிறேன் என்ற நினைப்பில் எந்த ஒரு உணர்வையும் செயற்கையாக முன்னிலைப்படுத்தாமல் அதனதன் போக்கிலேயே செல்லவிடுவதால் ஒரு நிஜமான நிகழ்வை படித்ததுபோன்ற ஒரு உணர்வைப் பெற முடிகிறது.

கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் கதை நிகழும் சூழலையும் ஓரிரு வார்த்தைகளில் கதையை வாசிப்பவர்களுக்கு உணர்த்திவிடும் திறன் வியப்பை ஏற்படுத்துகிறது. அனைத்துக் கதைகளிலுமே இதை உணர்ந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக முகம் போன்ற ஒரு கதையைப் படிக்கையில் ஒவ்வொரு முகமும் எப்படி இருக்கும், அதன் உணர்வுகள் எப்படி இருக்கும் என உணர்த்திட இந்தத் திறன் பெரிதும் உதவியிருக்கிறது.

இரவு கதையைப் படிக்கும்போது அது ஒரு கதைபோலத் தோன்றவில்லை; ஆசிரியரின் சொந்த அனுபவத்தைப் படித்ததுபோன்ற உணர்வைத்தான் கொடுத்தது. அவ்வளவு தத்ரூபமாக எழுதப்பட்டுள்ளது. நாம் எவ்வளவு கட்டுப்பாடுகளை நம் மனத்திற்கு விதித்துக்கொண்டாலும் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது நம் தீர்மானங்கள் நம்மை கைவிட்டு மறைந்து நமக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சியை, அந்த சூழ்நிலை நம்மை சுற்றியமைக்கும் வலையை விட்டு மீளமுடியாத ஒரு நிலையைப் பற்றி எழுதப்பட்டுள்ளதைக்கூட பாராட்டாமல் விட்டுவிடலாம். ஆனால் அப்படி ஒரு கைவிடப்பட்ட நிலையில் அந்தச் சூழ்நிலை நம்மைச் சுற்றி பின்னும் வலையைப் பற்றியும் அதில் இருந்து மீண்டு வர ஒரு அதிர்ச்சி தேவை என்பதைப் பற்றியும் எழுதியிருப்பதைப் படிக்கையில் நிச்சயம் நிச்சயமாக பாராட்டும் மனநிலைக்கு நாம் வந்துவிடுவோம். மேலும் இது ஒரு உண்மை அனுபவமாக இருக்குமோ என நினைக்கத் தோன்றுமளவிற்கு கதை அமைந்துள்ளது.

இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் ஒரு தனித்தன்மையான களத்தை அல்லது விஷயத்தை கதைக்காக எடுத்துக்கொண்டிருக்கிறது. ஒரு சிறுகதையைப் படிக்கையில் அதில் கதைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் அதற்கு முன்பு படித்ததாகவோ அல்லது வேறு வகையில் நாம் உணர்ந்ததாகவோ இருக்கும். இந்தச் சிறுகதைகள் இதற்கு முன்பு படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தாமல் புதியதாகத் தோன்றுகின்றன. பல கதைகளில் பழைய விஷயங்கள் பேசப்பட்டாலும் அவை புதியதுபோல தோன்றக் காரணம் அவை இங்கே ஒரு விஷயமாக பேசப்படவில்லை, மாறாக கதைகளின் விளைவாக அவை வெளிப்படுகின்றன. கதைகளைப் படித்து நாமாகவே அவற்றை உணர்ந்துகொள்ளும் விதமாக வெளிப்படுகிறது.

நாவல் படிக்கையில் அந்தக் கதையின்மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டுவிட்டால் இடைவெளி விடாமல் அல்லது குறைந்த இடைவெளியில் அந்த நாவலை படித்து முடித்துவிடுவோம். ஆனால் சிறுகதைப் புத்தகத்தைப் படிக்கையில் அவை தனித்தனியான கதை என்பதால் அதிகபட்ச இடைவெளி எடுத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிப்போம். ஆனால் இந்தச் சிறுகதைகளை ஒரு தொடர்ச்சியான நாவலைப்போல தொடர்ந்து வாசிக்க முடிந்தது. எங்கேயும் போதும் நிறுத்திவிடலாம் என்று தோன்றவில்லை. அதற்கு ஆசிரியரின் எழுத்தின் தன்மையே காரணம் என்று நினைக்கிறேன். ஒரு நல்ல புத்தகத்தை வாசித்த அனுபவம் கிடைத்தது.

பா. பூபதி

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-377-9.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: