Home » Politics » ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

மாலை வேளையில் தேநீர்க் கடைகளில் பஜ்ஜி போடுவார்களே, அது போல சுடச்சுட வெளியாகியிருக்கிறது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய முதல் புத்தகம். எழுதியிருப்பவர் கோமல் அன்பரசன். முதல் சில அத்தியாயங்கள் படித்ததுமே இதையெல்லாம் எழுதியவர் நிச்சயமாக சார்பு நிலைப்பாடு கொண்டவராகத்தான் இருக்கவேண்டும் என்று ஒரு சந்தேகம் எழுகிறது. பின்புல பரிசோதனை செய்ததில் அது கிட்டத்தட்ட உண்மைதான். அதனாலென்ன, பூனைக்கு யார் மணி கட்டினால் என்ன?

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, கோமல் அன்பரசன், கிழக்கு பதிப்பகம், ரூ. 140

முதல் அத்தியாயம் செப்டம்பர் 27, 2014 அன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அடுத்த அத்தியாயம் காலச்சக்கரத்தில் பின்னோக்கி 1991ஆம் ஆண்டுக்குச் செல்கிறது. அடுத்த சில அத்தியாயங்கள் மிகவும் முக்கியமானவை. 1991–1996 ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா செய்த அழிச்சாட்டியங்களை எல்லாம் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் கோமல். அதிலிருந்து ஒரு பத்தி…

அரசியல் ரீதியாக எதிர்த்தவர்கள் தடா சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்டனர். உருட்டுக்கட்டைகளும் ஆட்டோவும் ஆட்சி பரிபாலனத்தின் அங்கங்களாயின. நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டார். ஸ்பிக் நிறுவனப் பங்கு விற்பனை விவகாரத்தில், வாக்குவாதம் முற்றி அழகைப் பேசிய தோழியான ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகாவின் முகம் ஆசிட் வீச்சில் கோரமாக்கப்பட்டது. அப்போதுதான் தமிழ்நாட்டுக்கு ஆசிட் கலாசாரம் முதலில் அறிமுகமானது. நிலக்கரி இறக்குமதி வழக்கில் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணனை மிரட்டுவதற்காக அவரது மருமகன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டது. பிடிக்காதவர் வீடுகளில் கஞ்சாவை வைத்து வழக்கு பதியும் முறை அப்போதுதான் தொடங்கியது.

ஜெயலலிதாவைப் பற்றிய வரலாறு தெரியாத இளம் தலைமுறையினருக்கு மிரட்சியையும் அதிர்ச்சியையும் தருகின்றன முதல் சில அத்தியாயங்கள். முதலமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர அனுமதி அளித்தது, வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம், வழக்குகளிலிருந்து விடுபட வாஜ்பாய் அரசுக்கு நெருக்கடி கொடுத்தது, தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவம் என்று பல முக்கியமான தகவல்களை சுவாரஸ்யமாகச் சொல்கின்றன முதல் ஐந்து அத்தியாயங்கள்.

ஆறாவது அத்தியாயத்திலிருந்து தரவுகளின் ராஜாங்கம் துவங்குகிறது. சாட்சிகளின் பட்டியல், சொத்துப் பட்டியல், அவற்றின் அன்றைய மற்றும் இன்றைய மதிப்பு, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வாதங்கள், விவாதங்கள் என பல விவரங்களுடன் தொடர்கிறது. வழக்கில் இறுதித் தீர்ப்பு கொடுத்த ஜான் மைக்கேல் டி.குன்ஹாவை நமக்கெல்லாம் ஊடகங்கள் வாயிலாகத் தெரியும். அதற்கு முன்பே வழக்கினை விரைந்து முடிக்க முயற்சித்த பச்சப்புரே (15/9/2004 – 17/1/2006) மற்றும் மல்லிகார்ஜுனைய்யா (5/8/2009 – 31/8/2012) ஆகிய நீதிபதிகளைப் பற்றிய தகவல் புதியதாக இருக்கின்றன.

சிறையில் ஜெயலலிதாவின் நாட்களைப் பற்றியும், அவர் சிறையில் அடைக்கப்பட்டதையொட்டி தமிழகத்தில் நடைபெற்ற அத்துமீறல்கள், ஜாமீன் படலம் போன்றவற்றை விளக்கும் கடைசி சில அத்தியாயங்கள். ஜெயலலிதாவின் கைதுக்கு மற்ற தமிழக அரசியல்வாதிகளின் கருத்துகளையும், ஜெயலலிதாவின் மீது தொடுக்கப்பட்ட மற்ற வழக்கு விவரங்களையும் பட்டியலிட்டு நிறைவு பெறுகிறது. அரசியல் ஆர்வலர்களுக்கு சர்வ நிச்சயமாக இது ஒரு பொக்கிஷம் என்றுதான் சொல்லவேண்டும். எனினும் சில சின்னச் சின்ன குறைகளை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

1. உள்ளடக்கம் அட்டகாசமாக இருந்தாலும் முன்னட்டையில் உள்ள படங்கள் தவறான முன்னுதாரணங்களாக இருக்கின்றன.
2. 192 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் விலை ரூ.140. ஆனால் தாளின் தரமோ மலிவு விலை பிரதியைப் போல இருக்கிறது.
3. வழக்கு மேல் முறையீட்டிற்குச் சென்றுள்ள நிலையில் இறுதியான தீர்ப்பு வெளியாகும் வரை காத்திருந்து புத்தகத்தை வெளியிட்டிருக்கலாம்.

மற்றபடி, கோமல் அன்பரசன் எழுதியிருக்கும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு அம்மையாரைப் பற்றிய எந்த வரலாற்றுப் பின்னணியையும் தெரிந்துகொள்ளாமல் ‘அந்தம்மா இரும்பு மனுஷிய்யா’ என்றோ ‘ஏன்? அவங்க பண்ணலையா?’ என்றோ வக்கணையாகப் பேசும் தற்போதைய தலைமுறையினர் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் அடங்கிய புத்தகம்.

என்.ஆர். பிரபாகரன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-5135-190-0.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: