Home » Articles » மருத்துவத்துக்கு மருத்துவம்

மருத்துவத்துக்கு மருத்துவம்

மருத்துவம் குறித்த கட்டுரைகள் நானே எழுதினாலும், பிறரது கட்டுரை விவாதங்களில் நான் பங்கெடுத்தாலும் மருத்துவர் ஹெக்டே அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டி அங்கே ஒரு எதிர்வினை முன்வைக்கப்படும். சில நேரங்களில் உண்மையிலேயே இப்படியாக மருத்துவர் ஒருவர் எழுதியிருக்கிறாரா என்று தோன்றும். ஏதோ நாள்/வார இதழில் வெளிவந்த ஒரு பத்தியைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட சரியான அனுமானம்தான். ஆனால் ஒரு பத்தி அல்ல. பல பத்திகள். சில மருத்துவக்கூட்டங்களில் பேசிய உரைகள். அவைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். மருத்துவர் ஜீவானந்தம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். (தமிழாக்கத்தில் சில இடங்களில் திணறியிருக்கிறார். Guinea pig எனப்படுவது ஒருவகை சோதனை எலி. இவர் பன்றி என்று அப்படியே தமிழ்ப்படுத்தியிருக்கிறார்.)

maruthuvam

மருத்துவத்துக்கு மருத்துவம், பி.எம். ஹெக்டே, தமிழினி, ரூ. 100

புத்தகம் மருத்துவ உலகின் நுணுக்கங்கள், அரசியல், வியாபாரம் (ஜெயமோகன் மொழியில் சேவை வணிகம்) பற்றி அரைகுறையாக பேசுகிறது. அரைகுறை என சொல்லக் காரணம் பெரும்பாலான பத்திகள் யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது என்ற specificity இல்லாத தொனியில் இருக்கிறது. அதாவது மருத்துவர்களுக்கா அல்லது நோயாளிகளுக்கா அல்லது அரசாங்கத்திற்கா என்ற தெளிவு இல்லை.

புத்தகத்தின் நோக்கமும் புரியவில்லை. குறைகளை முன்வைக்கிறதா, அப்படியெனில் அந்த சம்பந்தப்பட்ட குறை எந்த மட்டத்தில் நடக்கிறது, அவைகளுக்கு தீர்வு காணும் சாத்தியம் உண்டா, எப்படியான தீர்வு, அதற்கான முதற்படி எங்கிருந்து தொடங்கவேண்டும் இப்படியான பல கேள்விக்கொக்கிகள் புத்தகம் முடியும்போது கொட்டிக்கிடக்கின்றன.

பிரதானமான குறையாக ஆசிரியர் முன்வைப்பது ஆய்வு முடிவுகளின் நம்பகத்தன்மை பற்றிய ஐயம். மருத்துவ ஆய்வுகள் பெரும்பாலும் மேற்கில்தான் நடக்கின்றன. இந்த முடிவுகளின் நம்பகத்தன்மையை இவர் சந்தேகிக்கக் காரணம், இவை பெரும்பாலும் மருந்து நிறுவனங்களின் பொருளாதார துணையுடன் நடக்கும் ஆய்வுகள் எனும்பட்சத்தில், முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக மாற்றி வெளியிடப்படுகிறது என்பதே. அதேபோல பெரும்பாலான உயர்த்தொழில்நுட்ப பரிசோதனை கருவிகளின் பயன்பாடும் இந்த ஆய்வுகளின் முடிவின் அடிப்படையிலேயேதான் புழக்கத்திற்கு வருகின்றன எனும்பட்சத்தில் அந்த முடிவுகளும் biased ஆக இருக்கும் என சந்தேகிக்கிறார். இதுவரைக்கும் சரி.  இன்னும் ஒரு படி மேலே சென்று, 120/80 தான் சராசரி இரத்த அழுத்தம் என்றும், <200 என்பது சராசரி கொழுப்பு அளவு என்றும் எதை வைத்து நம்புவது என்று நெற்றியை சுருக்குகிறார். அப்போதுதான் குழப்பம் ஆரம்பமாகிறது. அதாவது இரத்த அழுத்த மருந்துகளும், கொழுப்பு குறைப்பு மருந்துகளும் அதிக அளவில் சந்தையில் இறங்க மருந்து நிறுவனங்களே நிர்ணயித்த அளவுகோல்கள்தாம் இந்த 120/80, <200 எல்லாம் என்கிறார்.

ஒரு கணம் இத்தனை வருடம் கற்ற மருத்துவம் மொத்தமும் போலியாக இருக்குமோ என்று எனக்கு நானே கேட்டுக்கொள்ளுமளவிற்கு இந்த வாதங்களை கொண்டு செல்கிறார். மருத்துவக் கல்வியைப் பொருத்தவரை பெரும்பாலான புத்தகங்கள் அமெரிக்கா அல்லது இங்கிலாந்து நாட்டின் ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களே. ஏனெனில் அவற்றை எழுதுவதற்கான களப்பணிகள் மற்றும் ஆய்வுகள் அங்கேதான் பிரசித்தம். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இந்திய நவீன மருத்துவம் (பெயரளவில் மட்டும்) கொஞ்சமேனும் செயல்படத் துவங்கியது. உடனே அறுவை சிகிச்சையின் தந்தை சுஷ்ருதா நம்மவர் என்ற பஞ்சாங்கத்தைத் தூக்கிக்கொண்டு வரக்கூடாது. அவர் நம்மவர்தான். சித்தர்கள் நம்மவர்கள்தான். ஆயுர்வேதம் நம்முடையதுதான். எதிலுமே நமக்கு தனித்துவம் இல்லாமல் போக கடைசியாக சுதந்திரம் பெற்ற பின்னும் நாம் மேற்கின் அடிமைகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். குறிப்பாக மருத்துவத்துறையில்.

என்னுடைய முதலாமாண்டு இளநிலை மருத்துவப்படிப்பு முதலே நான் மேற்கைதான் வாசிக்கிறேன். இந்திய ஆசிரியர்கள் அவற்றை இந்திய ஆங்கிலத்தில் கோனார் நோட்ஸ்களாகவே பெரும்பாலும் எழுதிவருகின்றனர். அவற்றை best-sellerகளாக இப்போதைய மாணவர்கள் மாற்றியிருப்பது மிகப்பெரிய சங்கடம். நேரடி ஆய்வின் அடிப்படையிலான இந்திய மருத்துவ புத்தகங்கள் மிக மிக சொற்பம். தமிழகத்தின் தலைசிறந்த மற்றும் முதன்மையான மருத்துவக் கல்லூரியாகிய சென்னை மருத்துவக் கல்லூரியின் வாயில் பதாகையில் இருந்த Research Institute என்ற சொற்கள் 2003-04’ல் நீக்கப்பட்டது. இதுதான் நம் நிலை. அப்பட்டமான அசிங்கமாக இருப்பினும், நாம் மேற்கில் சொல்லும் நோய்களைதான், அவர்கள் சொல்லும் பரிசோதனைகளைதான், அவர்கள் தரும் அளவுகோல்களைதான், அவர்கள் சொல்லும் மருந்துகளைதான், அவர்கள் வழிகாட்டும் அறுவை சிகிச்சைமுறைகளைதான் நாம் கற்கிறோம். நாம் செயல்முறைப்படுத்துகிறோம். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. நம் அரசாங்கம் மருத்துவத்திற்காக ஒதுக்கும் நிதியில் சிகிச்சை கிடைப்பதே பெரும்பாடாக இருக்கும்போது ஆய்வு நடத்துவதற்கான சாத்தியம் எதுவும் இருந்தால் ஆச்சர்யம்.

அதே மேற்கின் தாக்கம்தான் மருத்துவர் நோயாளி உறவு விரிசலுக்கும் பெரும் காரணம். மேற்கின் மருத்துவ காப்பீடுகளும், வழக்காடல்களும் (litigations) இந்திய மட்டத்தில் பெரும் விளைவுகளை உண்டாக்கியுள்ளதை ஹெக்டே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு உதாரணம் – குடல் புற்றுநோய்க்கான நோய்க்குறிகளுடன் ஒருவர் என்னிடம் வருகிறார். அவரிடமும், அவர் மகனிடமும் சாத்தியக்கூறுகளை விளக்கிச் சொல்லி அதனை அவர்கள் கையொப்பத்துடன் ஆவணப்படுத்துகிறேன். அடுத்த நாள் endoscopy/biopsy செய்கிறேன். புற்றுநோய் ஊர்ஜிதமாகிறது. சி.டி. ஸ்கேன் செய்தால் நோய் எந்த அளவிற்கு பரவியிருக்கிறது என்பது தெரியும் என்று சொல்லி செய்யச் சொல்கிறேன். செய்கிறார்கள். அறுவை சிகிச்சை – வயிற்றைத் திறந்ததும் புற்று குடல் – திரையில் பரவியிருக்கிறது. (இதனை ஸ்கேனில் கண்டுபிடிப்பதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதும் முன்னரே விளக்கிச் சொல்லி கையொப்பம் வாங்கியிருக்கிறேன்) புற்று நீக்கத்தைக் கைவிடுகிறேன். அறுவை அரங்கிற்கு வெளியே வந்து அவர் மகனிடம் விவரிக்கிறேன். ஒப்புக்கொள்கிறார். அடுத்த நாள் நோயாளியின் இன்னொரு மகனும் ஒரு வக்கீலும் வருகிறார்கள். என் மீது வழக்கு போடப்போகிறார்களாம். முதல் வாதம் நான் எடுத்த ஸ்கேனே தேவையில்லையாம். இரண்டாவது எம்.ஆர்.ஐ ஸ்கேன்தான் அதற்கு எடுக்க வேண்டுமாம். மூன்றாவது, நோயாளிக்கு புற்றுநோயே இல்லையாம். வெறுமனே வயிற்றைக் கிழித்து மூடிவிட்டேனாம்.

இப்போது அவர்கள் வழக்கு போட்டிருந்தால் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி, கோட்பாடுகளுக்கு உட்பட்டு சிகிச்சை அளித்ததனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒரு வேளை, நான் அந்த சி.டி. ஸ்கேன் எடுக்காமல் இருந்திருந்தால், நோயாளியின் சிகிச்சை முடிவில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. ஆனால் வழக்கில் நான் மிக மோசமாக தோற்பேன். ஸ்கேன் எடுத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பிழையில்லை. ஸ்கேன் எடுக்கவில்லை என்றால் என் பாட்டன் கோவணம் வரை உருவப்படும். இதுதான் இன்றைய மருத்துவ வழக்காடலின் நிலை. மேற்கத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பரிசோதனைகளை மனதளவில் தேவையில்லை என்றாலும் இது போன்ற வழக்குச் சிக்கல்களை மனதில் வைத்து அவசியம் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மருத்துவச் செலவுகள் கட்டுப்பாடின்றி உயருகின்றன. ஒரு மிகமோசமான போக்கு.

ஸ்டெதெஸ்கோப்பின் பயன்பாடு பற்றியும், மருத்துவர் நோயாளியை அணுகவேண்டிய முறை குறித்தும், மருந்து நிறுவனங்களின் வியாபாரத்திற்கு மருத்துவர் தன் சுயத்தை இழக்கக் கூடாது என்பது பற்றி குறிப்பிடும் பத்திகள் முக்கியமானவை. மருத்துவர்கள் மனதில் பதிய வேண்டியவை. அல்லோபதியைவிட ஆயுர்வேதம் இன்று செலவு மிகுந்ததாக மாறும் நிலை இருக்கிறது. கெமிக்கல் இல்லையாம். உடம்புக்கு கேடு இல்லையாம். ஆயுர்வேதம் என்ற பெயரில் அரளிவிதையை அறைத்துக்கொடுத்தால்கூட நம்பி உண்ணும் போக்கு மக்களிடம் காணப்படுகிறது. ‘போலி சூழ் உலகு’.  இந்த போலிகளினால்தான் சித்தாவும் ஆயுர்வேதமும் மேன்மையை இழந்தது. இதுவும் புத்தகத்தில் பேசப்பட்டிருகிறது.

ஹெக்டே முன்வைக்கும் முன்னேற்றத்திற்கான சில வழிகள்:

1) இந்தியாவின் மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவந்து ஏழ்மையை அகற்றுவது. கிராமப்புறங்களுக்கான சிறப்பு மருத்துவப் பயிற்சி.

2) அனைத்து இந்தியர்களுக்கும் நல்ல குடிநீர், உணவு, சுகாதாரமான உறைவிடம்.

3) புகை, மது ஒழிப்பு.

4) சிறு நோய்களுக்கு சித்தா, ஆயுர்வேதம். பெரு நோய்களுக்கும், அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கும் நவீன மருத்துவம்.

5) இந்தியாவிற்கு உயர் சிறப்பு மருத்துவப் பிரிவுகள் தேவையில்லை. அடிப்படை அளவு மருத்துவம் போதும்.

6) மருந்துகளைவிட வாழ்வுமுறை மாற்றமே சிகிச்சை.

7) ஸ்க்ரீனிங் பரிசோதனைகள் மனிதகுலத்தை நோயாளி என முத்திரை குத்தவே வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை அவசியமே அல்ல.

எப்படி இருக்கிறது..?

இந்தப் புத்தகத்தில் எந்தவொரு தீர்வும் இல்லை. அதுதான் மிகப்பெரிய சிக்கல். மருத்துவர்களைக் கொஞ்சம் குழப்பும். மற்றவர்களை இன்னும் மோசமாக. சொல்லப்போனால் சிகிச்சைகளின் மீது நம்பிக்கை குறைய இந்தப் புத்தகம் ஒரு காரணமாக அமையும் எனும் பட்சத்தில் இது ஒரு மருத்துவர்-நோயாளி உறவில் இன்னொரு கீற்று விரிசலை உண்டாக்கவல்ல ஆபத்துகள் நிறைந்த புத்தகம். மருத்துவர்கள் ஏதோ அதீத நச்சுத்தன்மை வாய்ந்த வஸ்துக்களை தம் மீ்து திணிப்பதாக நோயாளிகள் அஞ்சக்கூடும். ஒரு மருத்துவன் தானே நோய்வாய்ப்பட்டால், தன் நோயாளியை மேற்கொள்ளச்சொல்லும் அதே பரிசோதனைகளை அவனும் மேற்கொள்கிறான், அதே மருந்துகளைதான் அவனும் உட்கொள்கிறான்.  இன்றைய சிகிச்சைகள் அனைத்தும் evidence based medicine எனும் வட்டத்தில் வருபவை. ஹெக்டே அந்த evidence’ல் சந்தேகம் கொள்வது வரவேற்கத்தக்கது. ஆனால் மேற்குலகம் நமக்கு பாடம் எடுக்கும் முறையை மாற்ற நம் இந்திய அரசு ஒரு இராட்சத புலி பாய்ச்சலுக்கு எத்தனிக்காதவரை ஹெக்டே’வின் ‘மருத்துவத்துக்கு மருத்துவம்’ just மற்றுமொரு புத்தகமே.

மயிலன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0000-002-1.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


2 Comments

 1. c.mayilan says:

  //இன்னும் ஒரு படி மேலே சென்று, 120/80 தான் சராசரி இரத்த அழுத்தம் என்றும்,//

  இந்த வாக்கியம் நிறைவு பெறாமல் இருக்கிறது. அர்த்தம் அப்படியே மாறிப்போகும் வாய்ப்பு உள்ளது. சரி செய்ய கோருகிறேன்.

  மதிப்புரையைப் பிரசுரித்தமைக்கு நன்றி

  Like

 2. c.mayilan says:

  சரி செய்தமைக்கு நன்றி 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: