Home » Novel » ராம ராவண யுத்தம்

ராம ராவண யுத்தம்

பாரத்வாஜரின் இந்த ராம ராவண யுத்தம் புதுமையான புதினம் எனக் கொள்ளலாம். ஆரம்பத்தில் ஸ்லோகமாகவும் பின்னர் கவிதையாகவும் எழுதப்பட்டது ராமாயணம். அதற்குப் பிறகு நமக்குப் புரியவேண்டும் என்பதற்காக விளக்க உரையாக பலர் நமக்கு ராமாயணத்தை புரிய வைக்க முயன்று வெற்றியும் பெற்றனர். அதனால் ராமாயணமும் மகாபாரதமும் விரைவாக இந்தக் கால தலைமுறையிடம் சென்றடைந்தது என்றால் மிகை அல்ல.

ராம ராவண யுத்தம், வ. பாரத்வாஜர், காவ்யா பதிப்பகம், ரூ. 200

ஆனால் இன்று அதையும் மீறி ஒலி ஒளியாக நமது தொலைக்காட்சிப் பெட்டிகளில் இடம் பெற்று மிகுந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இன்று இந்தியா முழுவதும் ஏதும் அறியாத பாமர மக்களும்கூட நமது புராண இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தைப் பற்றியும், மகாபாரதத்தைப் பற்றியும் விலாவாரியாக அலச ஆரம்பித்திருக்கும் இந்த வேளையில் நமது ஆசிரியர் மீண்டும் ராமாயணத்தை புதுக் கவிதை வடிவில் தந்திருப்பது ஒரு புதுமையே. ஆனால் இன்றைய தலைமுறையிடம் இது எந்த அளவிற்கு எடுபடும் என்பதை சற்று பொறுத்திருந்தே காண முடியும்.

புலவர் திரு. குழந்தையின் ராமாயணத்தை நான் இதுவரை படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் திரு. பாரத்வாஜரின் இந்தப் புதினம் கொஞ்சம் அவரின் கருத்தை ஒட்டி அமைந்திருக்கலாம் என எண்ணுகிறேன். அவ்வளவு பெரிய மகா ராமாயணத்தை பல இடங்களில் சுருக்கி சின்னதாக்கி கொடுத்திருந்தாலும் சுவை குறையாமல் இருக்கிறது. இன்றைய fast food காலத்திற்கு ஏற்றது போலவே அமைந்துவிட்டது எனலாம்.

கதையை ராமனே திசை திருப்புவதாக ஆரம்பித்து நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் ஆசிரியர். வீணாக கூனியை சாடவில்லை, கைகேயியை குறை சொல்லவில்லை. ராமனே ராமாயணம் உண்டாகக் காரணம் என்பதாக கதையை ஆரம்பிக்கிறார். பாவம், தசரதன் இறந்து போகவும் ராமன்தான் காரணம் என்பதை நமக்கு விளங்க வைக்கிறார். இது நாள் வரை நாம் கைகேயியும் கூனிக் கிழவியும் செய்த சதியில் தசரதன், ராமனைக் காட்டுக்கு அனுப்பிய சோகத்தில் இறந்தார் என்றல்லவோ நினைத்திருந்தோம்.

இப்படி வித்தியாசமாக கதை தெரிதலும் ஒரு வகை புரிதலே.

ஜடாயுவும் வானரர்களும் கருடன் போலவும் குரங்கு போலவும் வேஷமிட்டு இருந்தார்கள் என இவர் கூறியிருப்பது நிச்சயமாக உண்மையான சமாசாரமாக இருக்கவேண்டும். இன்றைக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல் வேறு பகுதிகளிலும் மக்கள் தங்கள் கலாசாரப்படியும் பண்பாட்டுப்படியும் உடையணியும் வழக்கம் உள்ளதுபோல இவர்களின் கலாசாரம், பண்பாடு அப்படி இருந்திருக்கலாம். இதை நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். கருடனும் குரங்குகளும் மனிதர்களைப் போன்று பேசுவது, மனிதர்களைப் போன்று குடும்பம் நடத்துவது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிராமல் நடப்பு உலகின் நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது சாலச் சிறந்தது.

இன்றைய உலகின் நவீன கண்டுபிடிப்புகளில் ஒன்றான விமானம் இவரை மிகவும் பாதித்துள்ளது என நினைக்கிறேன். ராவணனின் விமானமும் சாரணர்களின் விமானமும் இவரது விமர்சனத்தில் இன்றைய காலத்து விமானங்களின் பயன்பாட்டைப் போலவே விவரித்துள்ளார். அனுமானும், சாரணர்களும் விமானத்தில் பறப்பது நாம் இன்றைக்கு விமானத்தில் பறப்பது போன்று உருவகப் படுத்தியிருக்கிறார் ஆசிரியர். கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் கேட்க (படிக்க?) சுவையாக உள்ளது.

பல இடங்களில் இப்புத்தகம் நமக்கு நவீன காலத்து துப்பறியும் நாவல் ஒன்றை படிப்பது போன்ற எண்ணத்தைக் கொடுக்கிறது.

கதையில் பல இடங்களில் இவர் கூறும் சம்பவங்கள் நமக்குக் கொஞ்சம் புதுமையாகவே இருக்கிறது. ராவணனின் தங்கையான சொர்ண நகை நமக்கு சூர்ப்பனகையாகவே தெரிந்திருந்தது. மாயமானாக சென்றது சொர்ண நகையின் வேலையாட்களில் ஒருவனாக சித்திரிக்கிறார். ஆனால் நாம் இது வரை ராவணனின் மாமாதான் மாய மானாக சென்றதாக படித்திருக்கிறோம். பல இடங்களில் நம்பத் தகுந்தாற்போல பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ராவணனின் மகளாக இன்றும் நாம் நம்பும் சீதையை அவன் கடத்திச் சென்ற காரணமும் அசோக வனத்தில் வைத்து சீராட்டிய விதமும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.

ராமன் சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் காடு புகுவது முதல் சீதை கடத்தப்படும் வரையும் அதன் பின்பு இலங்கை செல்ல கிழக்குக் கடற்கரை வரும் வரை ஆசிரியர் என்னமோ அவர்கள் இந்தக் காலத்தில் பிக்னிக் போவது போல மிக இனிமையாக அனுபவித்து எழுதியிருக்கிறார். காவி உடை தரித்து ஆரண்யம் வந்ததுபோல தெரியவில்லை.

நாட்டின் பல பகுதிகளில் வாழும் ரிஷிகள் ராமனையும் சீதையையும் யாரென்று தெரியாமல் விசாரிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆரண்யம் புகுவது மட்டும் தெரியும் என்பதாகச் சொல்கிறார்கள். எல்லா ரிஷிகளுக்கும் வாசலில் ஒரு ரிஷிப்பெண் அவர்களை வரவேற்கக் காத்திருக்கிறாள். இவர்கள்தான் பின் நாளில் ரிஷப்ஷனிஸ்ட் எனப்படுகிறார்களோ?

மொத்தத்தில் இனிமை… அழகான நீரோட்டமாக கதையைக் கொண்டுபோயிருக்கிறார்.

அசோக்ராஜ்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-410-2.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: