Home » History » மலாலா: ஆயுத எழுத்து

மலாலா: ஆயுத எழுத்து

மேற்குலக ஆளும் வர்க்கம், உலகளவிலான ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிம்பம் மலாலா என்று பரவலான குரல் மலாலாவுக்கு எதிராக எழுப்பப்படுகிறது. அது முழுதும் மறுக்க முடியாத கருத்து என்றாலும் அது மட்டுமே மலாலா அல்ல.

மேற்குலக நாடுகளின் ஆதரவும், ஐ.நா. சபையின் விருதுகளும், நோபல் பரிசும் மட்டுமே மலாலா என்பதாக ஒரு பிம்பம் கட்டியமைக்கப்படுகிறது. கூடுதலாக தாலிபான்களை எதிர்த்துப் பேசியவர் என்பது பின்னொட்டாகச் சொல்லப்படுவதுமான நபர் மட்டுமே மலாலா அல்ல.


மலாலா ஆயுத எழுத்து, ரஞ்சனி நாராயணன், கிழக்கு பதிப்பகம், ரூ. 90

என்னைப் பொறுத்தவரை மலாலா ஒரு குறியீடு. தாலிபான்களும், மத அடிப்படை வாதமும், பெண் கல்வியும் கட்டுப்படுத்தப்படும் ஒரு பிராந்தியத்தில் இருந்து அத்தனைக்கும் எதிராக கிளர்ந்தெழுந்து நிற்கும் ஒரு குறியீட்டுக்கான பெயர்தான் மலாலா.

என்னுடைய இந்தக் கருத்தை என்னுடைய முற்போக்கு நண்பர்கள் சிலரே கூட இடது கையால் புறந்தள்ளியிருக்கிறார்கள். இஸ்லாத்துக்கு எதிரான ஒரு முகமாக மலாலா மேற்குலகால் தூக்கிப்பிடிக்கப்படுவதாக அவர்களது எதிர்வாதம் அமையும். அப்படியே தூக்கிப்பிடிக்கப்படும் முகமாக இருந்தாலும் மலாலா எதிர் நிறுத்தப்படும் ‘பெண் கல்விக்கும், சிறார்க் கல்விக்கும் எதிரான சக்தி’களுக்கு இப்படி ஒரு வலுவான முகம் தேவையும் கூட என்பதே என் கருத்து.

எனக்கு இன்னுமொரு வழித்துணை நூலாக கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள “மலாலா – ஆயுத எழுத்து” புத்தகம் இருக்கிறது.

ஆயுதங்களுக்கு எதிரான குரலாக தன் எழுத்தால் வெளித்தெரியத் துவங்கிய மலாலா பற்றிய புத்தகத்துக்கு “மலாலா – ஆயுத எழுத்து” என்பதைத் தவிர வேறு என்ன பொருத்தமான பெயர் வைத்திருக்க முடியும்?

மலாலாவை இந்தப் புத்தகம் அணுகும் வழிமுறை அதன் பின் அட்டையிலேயே தெளிவாக பின்வருமாறு சொல்கிறது.

“…பலரும் நினைப்பதைப் போல தாலிபானால் சுடப்பட்டதாலோ, மரணத்தோடு போராடி மீண்டு வந்ததாலோ மலாலாவுக்கு வரலாற்றில் இந்த இடம் கிடைத்துவிடவில்லை. நோபல் பரிசு கிடைத்ததால் மட்டும் அவர் மீதான நம் மதிப்பு கூடிவிடவில்லை. இவையெல்லாம் முக்கியம் என்றாலும் மலாலா தொட்டிருக்கும் உயரம் இதையெல்லாம் விட அதிகமானது…”

புத்தகத்தின் துவக்கத்திலே கூட இதே கருத்தைக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர் “ஷிவம் விஜ்” அவர்கள் ட்ரிப்யூன் பத்திரிகையில் மேற்கூறிய என் கருத்தை ஒட்டிய ஒரு கருத்தோடு துவங்குகிறது.

மலாலாவின் வாழ்க்கையை அறிந்துகொள்ள விரும்பும் துவக்க நிலை வாசகர்களுக்கான மிகச் சிறந்த புத்தகமாக இதை நாம் மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.

‘மலாலாவின் பேச்சும் எழுத்தும் பின்னாலிருந்து ஒருவர் (பெரும்பாலான சமயங்களில் மலாலாவின் தந்தை) எழுதிக்கொடுப்பதைப் பேசும் கிளிப்பிள்ளை போல் இருக்கிறது’ என்பது சில கூர்நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் துவக்கப் பகுதிகள் இந்தக் கருத்துக்கான மறுப்பாக அமைந்திருக்கிறது. ‘மலாலா பிபிசி இணையதளத்துக்காக எழுதத் துவங்கியது அவளுடைய பதினோராம் வயதில், அத்தனைக்கும் மேலாக அவளுடைய தந்தை மலாலாவை ஒரு சுதந்திரச் சிந்தனையாளராக வளர்த்துள்ளதையும் முதல் சில அத்தியாயங்கள் கூறுகின்றன. மலாலாவின் தந்தை கல்விக்காகவும், தாலிபான்களுக்கும் எதிரான குரலெழுப்பும் நபராக அந்தப் பகுதியில் திகழ்ந்திருக்கிறார். ஆணாதிக்கச் சமூகத்தைச் சாடும் குரலாகவும் அவருடையது இருக்கிறது. அவருடைய இந்த மேற்கோள்களும் புத்தகத்தில் இருக்கிறது.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக மலாலா இல்லை. அவளுடைய மரபும் (தந்தை வழி தாத்தா சிறந்த பேச்சாளராம்.) சூழ்நிலையும் – சமூகச் சூழலும், குழந்தை வளர்ச்சியின் மைய இடமான குடும்பச்சூழ்நிலையும் – வளர்த்தெடுத்த ஒரு காட்டுச்செடியாக மலாலா இருக்கிறாள் என்பதை புத்தகம் பதிவு செய்திருக்கிறது. மூன்றாம் அத்தியாயம் முழுக்க மலாலாவின் தந்தையின் மேற்கோள்கள்தான். மலாலாவின் இத்தனைத் துணிச்சலுக்கான காரணமாக

“…பறக்க நினைத்த அவளின் இறக்கைகளை நான் வெட்டவில்லை. அவ்வளவுதான்.”

இதைத்தான் அவர் கூறுகிறார். அவர் பறக்கவும் சிறுவயது முதலே தூண்டி வந்திருக்கிறார் என்பதை அவரது வார்த்தைகளே கூறுகின்றன. மலாலாவின் தந்தை பெண்ணுரிமை குறித்த குரல்கள், கல்விக்கான அவரது குரல் என்று பலவற்றைப் புத்தகம் பதிவு செய்திருக்கிறது. அப்படியே இடதுசாரி சித்தாந்தங்களோடு அவருக்கு இருந்த தொடர்பையும் பதிவு செய்திருக்கலாம், புத்தகம் அதைச் செய்யத் தவறிவிட்டது என்பதில் எனக்குச் சிறிது வருத்தமே.

மலாலாவின் தந்தை, சூழல் பற்றி சரிபாதி புத்தகம் அமைந்திருந்தாலும் அடுத்தடுத்து பாகிஸ்தானின் கல்வி நிலைமை, அதிலும் குறிப்பாக பெண்களின் கல்வி நிலைமை, மலாலா சுடப்பட்ட சம்பவம், தாலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் மலாலாவுக்கு எழுதப்பட்ட கடிதம், தாலிபான்களின் செய்தி அறிக்கை, மலாலாவுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் அதுகுறித்த சர்ச்சைகள், என் நண்பர்களைப் போலவே மலாலாவுக்கு எதிரான பலரின் மாற்றுக்கருத்துகளும், அவதூறுகளும் என்று அடுத்தடுத்த பகுதிகள் இவற்றைப் பதிவு செய்திருக்கின்றன. கூடவே இந்தச் சர்ச்சைகளுக்கான பதில்களும், அவதூறுகளுக்கான பதில்களும் பதிவு செய்திருக்கின்றன.

மலாலாவின் நாட்குறிப்பிலிருந்து சில பகுதிகள் இடம்பெற்றிருப்பது சிறப்பு. கனவில் கூட தாலிபான்களும் ராணுவமும் வருகின்ற சூழலில் இருந்ததையும், பள்ளிக்குச் செல்வதும், பெண் கல்வியும் எத்தனை அச்சுறுத்தல் என்பதும் கூட மலாலாவின் வார்த்தைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மலாலாவின் தந்தை கூறியிருப்பதைப் போல ஒரு சிறுமிக்குரிய விளையாட்டுத்தனங்களும் அவளுக்கு உண்டு என்பதையும் நாட்குறிப்பில் இருந்து நாம் அறிகிறோம்.

மலாலா அப்படி என்ன சாதித்துவிட்டாள் என்பவர்களுக்கான ஒரு சிறு பதில் நூலின் இறுதி அத்தியாயத்துக்கு முந்தையதில் இருக்கிறது. பாகிஸ்தான் பெண்கள் மத்தியிலும், சிறுமிகள் மத்தியிலும் எழுந்த நம்பிக்கை அலையைப் பற்றியும், ஒரு சிறுமி எழுதிய நாட்குறிப்பின் சில பகுதிகளும், 65 ஆண்டுகளாக பாகிஸ்தானின் பெண்ணுரிமை அமைப்புகள் சாதிக்காத, பெறாத கவனத்தை மலாலா பெற்றுத் தந்திருக்கிறாள். ஒரு சிறு பொறியானாலும் அவசியமான பொறி மலாலா.

நூலின் இறுதிப் பகுதிகள் “மலாலா என்பது பெயரல்ல”. இந்த அத்தியாயம் நான் முதலில் சொல்லியதைப் போல மலாலா ஒரு குறியீடு என்பதை வலுவாகச் சொல்கிறது. காந்தியைப் போல புத்தரைப் போல மலாலாவும் வெறும் பெயரல்ல ஒரு குறியீடு. பெண் கல்விக்கான குறியீடு என்பதை வலுவாகச் சொல்கிறது.

இப்புத்தகத்தின் பக்கம் 57 கடைசி வரியிலிருந்து ஒரு தகவல் பிழை துவங்குகிறது. “நோபல் பரிசு பெற்ற முதல் பாகிஸ்தானியாக…” ஆனால், 1979 ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல இயற்பியல் அறிஞர் அப்துஸ் சலாம் நோபல் பரிசு பெற்றிருக்கிறார். மலாலா இரண்டாவது பாகிஸ்தானிதான். அப்படி முதல் என்ற பட்டத்தைச் சேர்க்க வேண்டும் என்றால் நோபல் பரிசு பெற்ற முதல் பாகிஸ்தான் பெண் என்று சேர்த்துக்கொள்ளலாம். அடுத்த பதிப்புகளில் திருத்தப்பட்டால் நலம்.

கிழக்குப் பதிப்பகம் துவங்கிய சில காலத்தில் வெளிவந்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் புனைகதைகளுக்கு உரிய மொழிநடையோடும், ஒரு திரைப்படத்துக்கான திரைக்கதைக் கட்டமைப்போடும் அமைந்திருந்திருக்கின்றன. அது சில புத்தகங்களுக்கு தோதுப்பட்டு வந்தாலும், ஃபிடல் கேஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது சிகார் புகை பக்கத்தில் வீசுவது எரிச்சலாக இருக்கும். அந்தமான் சிறையின் இருட்டு நம்மைச் சூழ்வது திகிலாக இருக்கும். இதெல்லாம் வரலாற்றை வாசித்தலுக்கும் ஆய்வுக்குமான தடைக்கற்களாக நான் கருதினேன்.

ஆனால், இந்தப் புத்தகத்தின் மொழிநடையும் திரைக்கதை கட்டமைப்பு இல்லாததும் ஆசுவாசமளிக்கிறது. அந்த வகையில் கிழக்குப் பதிப்பகம் மேலெழுந்து வருகிறது.

புத்தகம் என் கைக்குக் கிடைத்த இரண்டு மணி நேரத்தில் இந்தப் புத்தகத்தை படித்து முடித்திருக்கிறேன். புத்தகம் அளவில் சிறியது என்றாலும், மலாலாவின் சுருக்கமான வரலாறு இது என்றாலும், மலாலா ஏன் அவசியம், மலாலா ஒரு குறியீடு என்பதையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கும் புத்தகம் இது.

– த. பழனி

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-8414-900-0.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 

 


2 Comments

 1. ranjani135 says:

  Reblogged this on ranjani narayanan and commented:
  எனது புத்தகம் ‘மலாலா- ஆயுத எழுத்து’ பற்றிய முதல் மதிப்புரை. நன்றி திரு பழனிகாந்த்

  Like

 2. yarlpavanan says:

  சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: