Home » Articles » கொலை கொலையாம் காரணமாம்

கொலை கொலையாம் காரணமாம்

தினத்தந்தி போன்ற நாளிதழ்கள், ஜூனியர் விகடன் போன்ற புலனாய்வு இதழ்கள் மீது ஊரில் நடக்கும் அத்தனைக் கொடூரங்களையும் வெளியிடுகின்றன என்றொரு புகார் பல தரப்பில் இருந்தாலும், அது நாட்டுக்குத் தேவையானது என்பது எனது கருத்து. என் கருத்துக்குக் காரணம் வரலாறு எழுதுதலோடு தொடர்புடையது.

வரலாறு எழுதுதலில் இது போன்ற குற்றச்செயல்களுக்கும், சிறு நகர, கிராம குற்றச்செயல்களுக்கும் என்ன முக்கியத்துவம் இருந்துவிடப்போகிறது என்பது உங்கள் எண்ணமாக இருந்தால் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். வரலாறு எழுதுதலில் பல துணைக்கருவிகளில் இந்த வகை இதழ்கள் நமக்குக் கிடைத்திருக்கும் புதுவகையான ஆதாரங்கள்.

கொலை கொலையாம் காரணமாம், கோமல் அன்பரசன், விகடன் பிரசுரம், ரூ. 140

அசோகனது காலத்தில் கள்ளக்காதல் சமாசாரங்கள், கொலைகளும் சகோதரக் கொலைகளும் எதுவுமே நடந்திருக்காதா என்ன? அக்காலத்திய இத்தகைய குற்ற நிகழ்வுகள் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்துக்காகக் கூட பதிவு செய்யப்படவில்லை. நம் காலத்தில் இவை பதிவு செய்யப்படுகின்றன. இவற்றைப் பதிவு செய்வதால் என்ன நன்மை என்கிறீர்களா? வரலாற்றில் மனிதன் எப்போதும் மனிதனாக மட்டுமே இருந்திருக்கிறான். பொற்காலங்கள் என்று எதுவும் இல்லை என்பதை நம் எதிர்காலத்துக்கு நாம் பதிவு செய்துவிட்டுச் செல்கிறோம். ஏனெனில் வரலாறுகள் வெகுவாகத் திரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. குற்றவியல் வரலாறும் பதிவு செய்யப்படுவது காலத்தின் அவசியம்.

மிழகத்தின் புகழ்பெற்ற சில வழக்குகளை “கொலை கொலையாம் காரணமாம்” என்ற பெயரில் புத்தகமாக விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் துவங்கி, நம் மூளைச்செல்களிலிருந்து மங்கிவிடாத தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு, தா.கி. கொலை வழக்கு வரை என்று, ஒரு நூற்றாண்டு கால வழக்குகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நூலிலிருந்து ஒரு துறை ரீதியான வரலாற்று ஆய்வாளராக இல்லாமல், ஒரு சாதாரணராக வரலாற்றைப் புரிந்துகொள்ள, வரலாற்றுப் பார்வையைப் பெற்றுக்கொள்ளும் விதமான சில தகவல்களை நாம் பெறலாம். நீங்கள் தீவிரமாக இறங்கி ஆராய்ந்தாலும் சில தகவல்கள் இந்நூலில் உங்களுக்குக் கிடைக்கும்.

இன்றைக்கு ஊடகங்கள் ஒரு நிகழ்வை ஊதிப் பெரிதாக்குகின்றன. ஊடகங்களின் எண்ணிக்கையால் சில சிறிய நிகழ்வுகள் கூட பெரிதாகப் பேசப்படுகின்றன என்ற வாதம் முன்வைக்கப்படுகிறதே, அது இன்று புதிதாக நடப்பதல்ல. ஆளவந்தார் கொலை வழக்கின்போது அப்போது புதிதாகத் துவங்கப்பட்ட ‘தினத்தந்தி’ நாளிதழ் இக்கொலை வழக்குத் தொடர்பாக பல செய்திகளைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்ததை இந்நூலிலிருந்து நாம் அறிகிறோம். அதேபோல ஆட்டோ சங்கர் வழக்கில் ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை ‘நக்கீரன்’ இதழ் பதிவு செய்ததையும் நாம் அறிகிறோம்.

அன்றைய காலகட்டத்தில் வழக்குகளோடு தொடர்புடைய வழக்கறிஞர்களாக, நீதிபதிகளாக இருந்த பல பிரபலங்கள் நமக்கு அறிமுகமாகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் வெள்ளையர்களாகவும், பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதையும் இந்த நிலை இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு மாறியிருக்கிறது என்பதையும் சமூகவியல் ஆய்வாக மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு பார்வையை வழங்க இந்த நூல் உதவி புரியும்.

தமிழகத்தில் நடந்த கொலை வழக்குகள் என்றால் சுருக்கென முதலில் வந்து போகும் ஆட்டோ சங்கர் முதல் (ஆட்டோ சங்கருடைய சில புகைப்படங்களைப் பார்க்கும் போது விஜய் சேதுபதியின் முகஜாடை ஒத்துப் போகிற மாதிரி தோன்றுவது எனக்கு மட்டும்தானா? ஆட்டோ சங்கரை இன்னொரு முறை திரையில் கொண்டு வர யாரும் விரும்பினால் விஜய் சேதுபதி சரியான தேர்வாக இருப்பார்.) பிரேமானந்தா, சரிகா ஷா, நாவரசு, ஆளவந்தார், டாக்டர் பிரகாஷ் என்று நம் ஊடகங்களில் பல முறை அடிபட்ட பெயர்கள் அது தொடர்பான வழக்குகள் என்று புத்தகம் தொகுக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம் இன்றைய தலைமுறை அறியாத சில வழக்குகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளைப் போல தொடர்ச்சியான கொலைகள் பற்றிய வழக்கு தமிழகத்தில் நடந்திருக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கொலைவழக்கில் தடயவியல் துறையில் மிகத் திறமையான ஒரு மருத்துவரை இந்தப் புத்தகம் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. வாச்சாத்தியில் நடந்த அரச பயங்கரவாதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விடுதலைக்கு முந்தைய காலத்தின் சுதந்திரப் போராட்டங்கள் தொடர்புடைய வ.உ.சியின் வழக்கும், வாஞ்சிநாதன் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி தமிழகத்தின் இருபத்தைந்து முக்கிய வழக்குகள் பற்றிய தெளிவான அறிமுகமாக இப்புத்தகம் அமைந்திருக்கிறது.

சட்டத்துறையில் அமலில் இருந்த, காலப்போக்கில் நீக்கப்பட்ட சில வழக்கங்களையும், சில அமைப்புகளையும் இந்நூல் பேசுவது சட்டத்துறை வரலாற்றை நாம் அறிந்துகொள்ள உதவுகிறது. நீதித்துறையில் மதச்சட்டங்களுக்கு இருந்த முக்கியத்துவம் ஒரு இடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜூரி அமைப்பு முறை, லண்டனிலிருந்த பிரிவி கவுன்சில் போன்றவற்றைப் பற்றிய தகவல்கள் ஆகியவற்றையும் இந்நூல் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மிழ் பதிப்பகங்களுக்கு மெய்ப்புத் திருத்துநர்களுக்கு அடுத்ததாக தொகுப்பாசிரியர்களின் (Editor) தேவை அவசியமான ஒன்று என்பது என்னுடைய நெடுங்காலக் கருத்து. இந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டிருக்கும் முறை என்னுடைய அந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

புத்தகத்தின் தலைப்பு சொல்வதைப்போல இருபத்தைந்து வழக்குகளுமே கொலை வழக்குகள் மட்டுமே அல்ல. மருது பாண்டியர் நகைகள், அன்னிபெசன்ட் – ஜே.கே, எம்.ஜி.ஆர் கொலைமுயற்சி, வாச்சாத்தி, வைஜெயந்தி மாலா தொடர்பான வழக்கு என்று புத்தகத்தின் ஒரு குறிப்பிடத்தகுந்த பகுதி கொலை வழக்குகள் அல்லாதவையும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைக் குறையாகச் சொல்லவில்லை. புத்தகத்தின் தலைப்போடு முரண்படுவதைச் சுட்டிக்காட்டுகிறேன். இருபது கொலை வழக்குகள் அடங்கிய ஒரு தொகுப்பாக வெளியிட்டு இந்தப் பெயர் வைத்திருக்கலாம். அல்லது புத்தகத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து கொலை வழக்குகள் அல்லாதவற்றுக்கு அதை ஒதுக்கி இருக்கலாம்.

புத்தகத்தில் இந்த வழக்குகள் கால வரிசைப்படியும் அடுக்கப்படவில்லை, ஒரு வகைப்பாட்டியலின் அடிப்படையில்கூட தொகுக்கப்படவில்லை. அப்படித் தொகுக்கப்பட்டிருக்கலாம். வ.உ.சிக்கு எதிரான வழக்கைப் பற்றிப் பேசிய பத்து அத்தியாயங்கள் கடந்து வாஞ்சிநாதன் வழக்குப் பற்றி எழுதப்பட்டு இருக்கிறது. கால வரிசைப்படி அமைக்கப்பட்டிருந்தால் இவ்விரு வழக்குகள் பற்றிய பதிவுகள் அடுத்தடுத்ததாக அமைக்கப்பட்டிருக்கும், அது சரியானதாகவும் இருக்கும். இன்னும் சில வழக்குகளும் இப்படி குறிப்பிட்ட வகைப்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தால் புத்தகம் இன்னும் முழுமையுடையதாக இருக்கும்.

புத்தகத்தின் வழக்குகளை வகைப்பாட்டியலின் அடிப்படையில் அமைப்பதாக இருந்தால் கூட விடுதலைக்கு முந்தைய வழக்குகள், பிந்தைய வழக்குகள் எனப் பிரித்திருக்கலாம். அல்லது கொலை வழக்குகள், அரசியலோடு தொடர்புடைய வழக்குகள், eve teasing & ragging ஆகியவற்றுடன் தொடர்புடைய வழக்குகள், குற்றவாளிகள் கண்டறியப்படாத வழக்குகள், திரைத்துறையோடு தொடர்புடைய வழக்குகள் என்ற ஒரு வகைப்பாட்டின் அடிப்படையிலும் தொகுத்திருக்கலாம்.

புத்தகம் முழுக்க பெட்டிச்செய்திகளாக வழக்கோடு தொடர்புடைய பல தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்படியே ஜூனியர் விகடனுடைய வழக்கம். புத்தகத்தின் உள்ளடக்கம், மொழிநடை ஆகியவை மெகா சைஸ் ஜூனியர் விகடனைத்தான் படிக்கிறோம் என்ற எண்ணம் தருவதாகவே உள்ளது, அதில் ஒரு குறையும் இல்லை.

மாமூலன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-409-3.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: