Home » Novel » மாதொருபாகன்

மாதொருபாகன்

பெருமாள் முருகன் தான் இனி எதுவும் எழுதப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். இது ஒரு தற்காலிக அறிவிப்பாகவே இருக்கவேண்டும். அவர் மீண்டும் எழுதவருவார் என்றே நினைக்கிறேன். பிரச்சினைகள் ஓய்ந்த பிறகு அவர் மீண்டும் எழுதவரவேண்டும் என்றே விரும்புகிறேன். பெருமாள் முருகன், ஐ’ம் வெயிட்டிங்.

மாதொருபாகன், பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம், ரூ 175

மாதொருபாகனை முன்வைத்து நடக்கும் பிரச்சினைகள் மிகவும் மோசமான முன்னுதாரணமாக அமைந்திருக்கின்றன. எங்கோ வெளியான திரைப்படம் ஒன்றுக்கு சென்னை ஸ்தம்பித்தபோது நாம் அதிர்ந்தோம். இன்று திருச்செங்கோடு ஸ்தம்பித்திருக்கிறது. அது அமெரிக்கா, இது திருச்செங்கோடு என்பார்கள். உண்மைதான். ஆனால் என்னளவில் உணர்வளவில் இந்த இரண்டும் ஒன்றே. இது இப்படியே வளர்ந்து நாளை அங்கே செல்லக்கூடும். திருச்செங்கோட்டு மக்களை அந்த நாவல் வசைபாடவில்லை. அது ஒரு புனைவு மட்டுமே. புனைவுக்கும் ஒரு எல்லை உண்டு என்பது சரி. அப்படி அந்த எல்லை மீறப்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழி இதுவல்ல.

புத்தகத்தை எரித்ததும், நீதிமன்றத்துக்குச் சென்றதும் சரியான வழியே. (புத்தகத்தை எரிப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் உகந்தது அல்ல. ஆனால் அது அமைதியான போராட்ட வடிவம் என்றே நினைக்கிறேன்.) ஒரு குழு அல்லது பல குழுக்கள் சேர்ந்து பஞ்சாயத்து செய்வதும், அவர்களுக்காக ஓர் எழுத்தாளர் பின்வாங்குவதும் என்ன விதமான நியாயம்? சில குழுக்கள் சேர்ந்து விஸ்வரூபத்தை மிரட்டியதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? சென்சார் கிடைத்த படத்தை வெளியிட சில குழுக்கள் ஆதரவு தேவை என்பதற்கும், அரசு தடை செய்யாத ஒரு புத்தகத்தை விற்க சில குழுக்களின் ஆதரவு தேவை என்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம்? ஜார்ஜ் புஷ் உயிரோடு இருக்கும்போதே, அவரைக் கொலை செய்ததுபோல் திரைப்படம் எடுத்தார்கள். மோடி உயிரோடு இருக்கும்போது இப்படி ஒரு படம் எடுத்தால் என்ன ஆகும் என்று யோசிக்கிறேன். நாம் இத்தனை பின் தங்கி இருக்கத் தேவை இல்லை என்ற ஆதங்கமே எழுகிறது.

பெருமாள் முருகன் நடக்காத ஒன்றை எழுதியிருந்தால், நீதிமன்றத்துக்குச் சென்று அதற்குத் தடை வாங்குவதே சரியான வழி. அதை விட்டுவிட்டு பெருமாள் முருகனை தங்களோடு வீதிக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

இப்பிரச்சினை இத்தனை வலுவானதாக மாறியதற்கு ஊடகங்களே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இதே குழுக்கள் இதே ஊடகங்களால் எத்தனை இன்னல்களை அடைந்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் இன்று இவர்கள் இதே ஊடகங்களைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு அதையே செய்கிறார்கள். பொதுவாக பிராமணர்களின் உயர்சாதி ஆதிக்கத்தை சாடும் இடைசாதிக் குழுக்கள், இன்னொரு வழியில் அதே சாதி ஆதிக்கத்தை அடைய முயலும் வெறிக்கும் இதற்கும் வித்தியாசமில்லை.

இந்தக் குழுக்கள் செய்வது நல்லதற்கல்ல. இது மோசமான முன்னுதாரணமாக அமையும். இன்று பெருமாள் முருகன் என்பதால் இதனைச் செய்து வெற்றி என்று காண்பித்துக்கொள்ள முடிந்தது. நாளையே வேறு ஒரு பதிப்பகத்தில் வேறு ஓர் எழுத்தாளர் எழுதினால் இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. தொடர்ந்து பலர் எழுதினால் என்ன செய்துவிடமுடியும்? ஆரியப் படையெடுப்பு ஒன்று நிகழ்ந்ததாகத்தான் இன்றுவரை பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை எப்படி கருத்தால் எதிர்கொள்கிறோமோ அப்படியே இதை எதிர்கொள்ளவேண்டும்.

சிலர் மிகச் சாதாரணமாகக் கேட்கிறார்கள். பெருமாள் முருகனின் மனைவியோ அம்மாவோ இப்படி செய்தார்களா என்று. இவர்களுக்கு இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாது. இலக்கியத்தை எப்படி வாசிக்கவேண்டும் என்றும் தெரியாது. புனைவு என்றால் மருந்துக்கும் பழக்கமில்லை. ஆனால் பிரச்சினையில் தங்கள் வாயைத் திறக்க முதலில் வந்து நிற்பார்கள். இந்நாவலில் தன் மனைவி குழந்தைக்காக இன்னொருவனுடன் போனதை அறிந்த கணவன், மனம் துடித்து மனைவியை வெறுத்து ‘தேவடியா முண்ட ஏமாத்திட்டியேடி’ என்கிறான். இதை எந்தக் குழுவும், இந்த சிலரும் கணக்கில் கொண்டதாகவே தெரியவில்லை. ஏனென்றால் இவர்கள் இந்த நாவலை வாசிக்கவில்லை. ஒரு நாவலை இவர்களால் வாசிக்கவே முடியாது. வாசித்தாலும் எழுத்துகளையும் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் மட்டுமே இவர்கள் வாசித்திருப்பார்கள். மனிதர்களை அல்ல.

பெருமாள் முருகன் இந்நாவலுக்கு சரியான ஆதாரத்தை அளிக்கவில்லை என்பது முக்கியமானதுதான். ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களைப் பற்றிய வரலாற்றை எவ்வித ஆதாரமுமில்லாமல் உருவாக்குவது அந்தக்கால பிரிட்டிஷ் ஆசிரியர்களின் வழிமுறை. இந்தியாவை அவர்கள் கண்டுணர்ந்த விதம் அது. அதை பெருமாள் முருகன் செய்வது ஆச்சரியமே.

பெருமாள் முருகனின் மாதொருபாகன் கொண்டாடத்தக்க நாவல் அல்ல. புறக்கணித்தக்க நாவலும் அல்ல. மிக அழகான விவரணைகள் உள்ள நாவல். கிராமம் பற்றியும், குடிக்க இடம்தேடி அலைந்து புதிய புதிய இடங்களைக் கண்டடையும் விவரிப்புகள் அருமை. மண் சார்ந்த எழுத்துகள் மனத்தை அள்ளும். இந்நாவலும் அப்படியே.

குழந்தை இல்லாவிட்டால் ஒரு சமூகம் எப்படி ஒருவரை பேசும் என்பதைப் பற்றிய அனைத்துச் சித்திரிப்புகளும் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன. அதிலும் கிராமத்துப் பகுதிகளில் இவற்றை நாம் இன்றும் கேட்கலாம். இந்நாவல் நடப்பதோ கிட்டத்தட்ட 1940களில். அப்போது இன்னும் இது தீவிரமாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இதை ஒட்டியேதான் நாவலின் மிகப்பெரிய பலவீனமும் அமைந்துள்ளது. காளிக்கும் பொன்னாளுக்கும் பிள்ளையில்லை. ஆனால் அவர்கள் உறவில் எந்தக் குறையும் இல்லை. அவர்களது காமம் மிக விரிவாகவே இந்நாவலில் விளக்கப்பட்டுள்ளது. பிள்ளை இல்லாததற்குக் காரணம் காளியா பொன்னாளா என்பது பற்றி யாருக்கும் தெரியாது. இன்றும்கூட ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால், பெண்ணுக்குத்தான் குறை இருக்கும் என்று நினைக்கும் சமூகம் நமது சமூகம். அன்று இந்நிலை இன்னும் ஆழமாகவே இருந்திருக்கும். இதனால் இயல்பாகவே காளியின் அம்மா காளியை இரண்டாவது திருமணத்துக்கு வற்புறுத்துகிறாள். பொன்னாளின் அம்மாவுக்கும் இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. இதுவரை நாவலில் எல்லாம் சரி. மிக யதார்த்தமாகவே உள்ளது.

ஆனால் திடீரென்று காளியின் அம்மாவும் பொன்னாளின் அம்மாவும் பேசி, பொன்னாளை திருவிழாவின் கடைசி நாளில் இன்னொருவனுடன் கூடி சாமி குழந்தை பெறச் சொல்லி அனுப்பி வைக்க முடிவெடுக்கிறார்கள். இது என்ன தர்க்கம்? இவர்கள் இருவரும் காளிக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க முடிவெடுத்ததன் காரணமே, பொன்னாளுக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது என்று அவர்களுக்கு தோன்றியிருக்கவேண்டும் என்பதுதானே. பின்னர் எப்படி பொன்னாளை இன்னொருவனுடன் கூட அனுப்பிகிறார்கள்? காளிக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் சக்தி இல்லை என்று இவர்களுக்கு மட்டும் தெரியுமா? ஆனால் அப்படி எந்த ஒரு சூழ்நிலையிலும் நாவலில் சொல்லப்படவில்லை. காம விவரிப்பில் காளிக்கோ பொன்னாளுக்கோ அப்படி தோன்றுவதும் இல்லை. அப்படியே ஒருவேளை காளிக்கு சக்தி இல்லை என்றால், ஏன் அவனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய நினைத்தார்கள்? நாவல் படு மோசமாகத் தோற்கும் இடம் இது.

இன்றளவும் ஒரு பெண் உடல் என்பது ஆணின் சொத்து. அதனால்தான் ஓர் ஆண் ஒரு பெண்ணை இப்படி பாதுகாக்கிறான். தனது குழந்தை என்பது பற்றிய உத்திரவாதம் ஓர் ஆணுக்கு மிகத் தேவையான ஒன்று. அது அவனது வம்சத்தின் ஆணிவேர். இது இன்றளவும் செல்லுபடியாகிக்கொண்டிருக்கிறது. இன்றளவும் பொதுப்புத்தியில் ’என் குழந்தை’ என்னும் சொல் தரும் மமதையை விவரிக்கமுடியாது. இது இத்தனை காலூன்றியதற்குப் பின்னால் உள்ள மனப்பதிவு ஒருவேளை ஆண்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது இன்றளவும் அப்படியே நீடித்திருப்பதற்குப் பெண்களும் காரணம் என்பதே என் எண்ணம். தன் கணவனுக்குத் தவிர யாருக்கும் தன்னை தந்ததில்லை என்பதே இன்றைய பெரும்பாலான பெண்களின் உச்ச மகிழ்ச்சி, பெருமை. ஆனால் பொன்னாள் அதை மிக எளிதாகத் தாண்டுவதும், அதையே பொன்னாளின் மாமியாரும் அம்மாவும் சொல்வதும் கடும் அதிர்ச்சி அளித்தது. ஒருவேளை என் கலாசாராம் சார்ந்த ‘பிற்போக்கு’ வாசிப்பின் ஒரு அம்சமாக இது இருந்திருக்கலாம். உண்மையில் பொன்னாள் யாரோ ஒருவனைத் தேடி அலைந்து அவனைப் பார்த்து புன்னகைத்து ஒதுங்கும்போது என்ன இவ என்றுதான் தோன்றியது என்பதை மறைக்க விரும்பவில்லை. ஒருவேளை இந்த அதிர்ச்சி முடிவை நோக்கியே ஒட்டுமொத்த நாவலும் செலுத்தப்பட்டதோ என்றும் தோன்றியது.

க்ளைமாக்ஸை முடிவு செய்துகொண்ட, திரைப்படத்தின் திரைக்கதை நகர்த்துவதுபோல், இப்படித்தான் உச்சகட்டம் இருக்கவேண்டும் என்று பெருமாள் முருகன் முடிவெடுத்துவிட்டு நாவலை எழுதிருக்கிறார் போல. ஆனால் அதற்கான வலுவான தர்க்கங்களை அவர் முன்வைக்கவில்லை.

புள்ளியியல் விவரப் பிழைகள் இருந்தால் அதை நீக்கிவிட்டு அதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு அடுத்த பதிப்பைக் கொண்டுவந்துவிடலாம். ஆனால் ஒரு நாவலின் உணர்வாதாரமே தர்க்கப் பிழையால் தடுமாறுமானால் அதை திருத்திவிடமுடியாது. வருத்தம் மட்டும் பட்டுக்கொள்ளலாம்.

நாவலில் எல்லா சாதியனரைப் பற்றிய கிண்டலான குறிப்புகள் வருகின்றன. ராஜாஜியைப் பற்றிய ஒற்றை வரிக் கிண்டலும் வருகின்றது. தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பற்றிய அந்தக் கால உயர் / இடைநிலை சாதியினரின் மனச்சித்திரிப்பு அப்படியே இடம்பெற்றுள்ளது. மேல்நிலையாக்கம் பெற்ற கோவில்களைவிட சிறுதெய்வ வழிபாட்டை விதந்தோதும் மனநிலையும் இந்நாவலில் உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் யாரோ ஒருவர் வெளிப்படையாக கெட்டவார்த்தை பேசுவதைப் போல, இந்நாவலில் காளியின் சித்தப்பா பேசுகிறார். அதிலும் இரண்டு இடங்கள் இவர் பேசும் ’கெட்ட’ வசனங்கள் புன்னகைக்க வைக்கின்றன.

சாதாரணமாக கடந்துபோயிருக்கவேண்டிய நாவலை வரலாற்றில் இடம்பெற வைத்ததுதான் இந்த சில குழுக்கள் செய்திருக்கும் சாதனை.

– ஹரன் பிரசன்னா

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-372-2.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


6 Comments

 1. […] வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே […]

  Like

 2. sevvel says:

  புஸ்தக யாவாரிகளிடம் வேறு என்ன மாதிரி மதிப்புரையை எதிர்பார்க்க முடியும்? இந்த நாவல் சம்பாதித்துள்ள விளம்பரத்தை ஹிந்துத்த்வர்கள் கூட வியாபாரமாக மாற்ற துடிக்கிறார்கள்..

  முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்க.. கட்டப் பஞ்சாயத்து செய்வதோ, அதிகாரம்செய்வதோ எங்கள் நோக்கம் அல்ல.. ஜாதி சாயம் பூச நினைக்கும் கருணாநிதியின் குள்ளநரித்தனம் உங்களுக்கு ஏன்? இங்கே எல்லா ஜாதிகளுமே சேர்ந்து போராடினோம். இது மக்கள் போராட்டம்.

  வன்முறை, பஞ்சாயத்தெல்லாம் செய்ய நினைத்திருந்தால் எங்களை தடுக்கும் சக்தி இங்கே அரசாங்கத்துக்கும் இல்லை. ஆனால் எங்கள் நோக்கம் அதுவல்ல. நியாயமான முறையில் இதை பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்பதே. நாங்கள் முறையாக கொர்ட்டுக்குத் தான் போனோம். போலிஸ் ஸ்டேசனில் எங்கள் வழக்கை பதியவே மறுத்தார்கள். பல நாட்கள் சொல்லியும் கேட்கவில்லை. அதனால் தான் போராட்டம் வலுத்தது. ஸ்ட்ரைக் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாயிரம் பெண்களைத் திரட்டி நாமக்கல் உண்ணாவிரதம் அறிவித்தபோதுதான் அரசாங்கத்திடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்தது; நாங்கள் மறுத்தோம். இருந்தாலும் முற்போக்கு குழுக்கள் நடத்திய நாடகம் கலக்டர் ஆபிசொடு முடிக்க வைத்தது. கோர்ட் செல்ல விடாமல் தடுத்ததே பெ.முருகனின் முற்போக்கு மாபியாவும், அரசாங்கமும் தான். இந்த தகவல்கள் எதுவும் தெரியாமல் கருத்து சொல்லி கண்டதையும் எழுதி உங்கள் மதிப்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

  இதற்கு முன்னும் பெ.முருகன் ஜாதிகலத் தாக்கி புனைவு என்னும் போர்வைக்குள் ஒளிந்து நாவல் எழுதியபோது யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த நாவலின் முன்னுரையில் கள ஆய்வில் நான் கண்டுபிடித்த உண்மை என்கிறார். ஆதாரம் கேட்டோம் அதை இதுவரை எந்த முற்போக்கும் வாய் திறந்து பேச மறுக்கிறார்கள்.

  Like

 3. கண்ணன் says:

  அதை பெருமாள் முருகன் செய்வது ஆச்சரியமே. – இப்படி ஆச்சர்யப்படுவதுதான் ஆச்சர்யம்;

  Like

 4. jeyakumar72 says:

  ஹரன்பிரசன்னா தான் எழுதிய விமர்சனத்தை மீண்டும் படித்தாலே ஏன் பிரச்சினை ஆனது என்பது புரிந்திருக்கும். ஆதாரம் இல்லாதொரு விஷயம் ஒரு ஊரின் ஒட்டு மொத்த பெண்களையும் விபச்சாரியாக் சித்தரித்து விட்டு மக்கள் தங்கள் தரப்பு நியாயத்தைக் கேட்டால் அது தவறா? ஊர் பெயரை கற்பனையான இன்னொரு ஊரில் நடப்பதாக எழுதியொருந்தால் யார் கேட்கப்போகிறார்கள். ஆனாலும், ஆனாலும் என என்னதான் நீட்டி முழக்கினாலும் பெருமாள் முருகன் செய்தது அநியாயம். நியாயவானாக இருந்திருந்தால் ஆதாரம் இல்லாமல் எழுதியது தவறு எனச் சொல்லி மன்னிப்பும் கேட்டிருப்பார். ஊருக்கு இளைச்சவனாக ஹிந்த்துக்களை நினைக்கும் கபட வேடதாரிகள்தான் இன்றைய முற்போக்கு பேசும் தமிழ் எழுத்தாளர்கள். மனுஷிய புத்திரன் எனும் ஹமீது பெருமாள் முருகனுக்கு ஆதரவாக வாணத்துக்கும் பூமிக்குமாக குதித்துவிட்டு இன்று கார்ட்டூன் வரைந்தவர்களைக் கொன்றவர்கள் இஸ்லாமியர்கள் என்றதும் மத நம்பிக்கைகளை விமர்சிக்க வரையறை வேண்டும் என சாத்தானாக வேதம் ஓதுகிறார். இவர்கள்த்ாஅன் ஒவ்வொரு டீவியிலும் சென்று கருத்து சொல்லும் அறிவுஜிவி. இவர்களெல்லாம் காலாவதியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதைக்கூட ாறியாத நிர்மூடர்கள். புணைவு எனில் புனைவாகவும், உண்மையாக நடந்ததை எழுதும்போது ஆதாரத்துடன் எழுதவேண்டும் என்பதைக்கூட அறியாதவர்களா இன்றைய எழுத்தாளர்கள்? இல்லை. ஹிந்து மத நம்பிக்கைகளை, ஹிந்துக்களை அவமதித்தால் கேட்க நாதியில்லை என்ற நம்பிக்கையில் தொடர்ந்து செய்து செய்த செயல்களுக்கு முதன்முறையாய் கிடைத்த எதிர்வினை. இனியாவது நியாயமாக எழுதுவதே எழுத்தாளர்கள் முன்னுள்ள ஒரே வழி. பெருமாள் முருகனும் நடந்தவைகளுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். அவர் நல்ல படைப்புகளை தொடர்ந்து எழ்உதவேண்டும் என்பதே எனது ஆசையும். ஜெயக்குமார்

  Like

 5. aaru says:

  markandavimarsanamum athankeelkanda marupuraium oru unmaiyai unarthukiradhu !?hindukal thanmanamelandu wzhkirarkal!!!!!!aaru

  Like

 6. david says:

  இந்த பதிவில் இருக்கும் உண்மைகளையும் கொஞ்சம் பார்க்கவும்.. காழ்புணர்ச்சியின் அடிப்படையில் தனது எழுத்தாற்றலை ஆயுதமாக பயன்படுத்துவதால் பொய்கள் உண்மையாகாது..

  http://www.karikkuruvi.com/2015/04/blog-post.html

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: