Home » History » இலங்கை : பிளந்து கிடக்கும் தீவு

இலங்கை : பிளந்து கிடக்கும் தீவு

978-93-8414-902-4_b-01

இலங்கை : பிளந்து கிடக்கும் தீவு
(திஸ் டிவைடட் ஐலண்ட் – சமந்த் சுப்ரமணியன்,
தமிழில் ஜவர்லால், கிழக்கு பதிப்பக வெளியீடு
பக் 200; விலை 160)

ஸ்ரீலங்காவில் நடந்த உள்நாட்டுப் போர் தொடர்பான செய்திகளை ஒரு பயண நாவல் வடிவில் தொகுத்திருக்கிறார் ஆசிரியர் சமந்த் சுப்ரமணியன். ஸ்ரீலங்கா ஏதோ தங்கம் கொட்டிக் கிடக்கும் தீவுபோலவும், முதலில் கால் வைத்தவர் யாரோ அவருக்குத்தான் எல்லாமும் சொந்தம் என்பதுபோலவும் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நடந்து வந்த போர்களைச் சித்திரித்திருக்கிறார். மகாவம்ச காலத்தில் இருந்தே ஆரம்பமாகிவிட்ட போர் அது. சம காலத்தில் ஆல்ஃப்ரெட் துரையப்பாவின் உடலில் பாய்ந்த பிரபாகரனின் முதல் துப்பாக்கி குண்டில் ஆரம்பித்து 2009 கோடைக்காலத்தில் பிரபாகரன் அதேபோன்ற இன்னொரு துப்பாக்கியால் படுகொலை செய்யப்பட்டதுடன் முடிவுக்கு வந்த இன்றைய உள்நாட்டுப் போரை கனக்கும் இதயத்துடன் விவரித்திருக்கிறார்.

1950 களில் நடந்த தமிழர் படுகொலை, கறுப்பு ஜூலைப் படுகொலை ஆகியவற்றில் ஆரம்பித்து போர் முடிந்த காலகட்டத்தில் தமிழர் பகுதிகளை சிங்களமயமாக்கும் செயல்கள் வரை சிங்கள அரசின் அராஜகங்களும் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் விடுதலைப் புலிகள் எந்த அளவுக்கு வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை இவ்வளவு ஆணித்தரமாக தமிழில் இதுவரை எந்தப் புத்தகமும் விவரித்ததில்லை. முள்ளி வாய்க்காலில் கடைசி போர் காலகட்டத்தில் பெண்கள் மல ஜலம் கழிக்க ஆறு, ஏரிக்கரைக்குப் போனால் அங்கு காத்திருக்கும் புலிகள் பிடித்துச் சென்று தோளில் துவக்கை மாட்டி சிங்கள ராணுவத்தின் முன் கொண்டு நிறுத்திவிடுவார்கள் என்று பயந்து, இருக்கும் இடத்திலேயே தற்காலிக கழிப்பறைகள் தோண்டிக்கொண்ட கண்ணீர் கதைகளும் பள்ளிகளில் இருந்து சிறுவர் சிறுமிகளை இழுத்துக்கொண்டுசென்று போர்க்களத்தில் நிறுத்துவதை தடுக்க தமிழ் பெற்றோர் பள்ளிக்கூட வாசல்களில் தவம் கிடந்து குழந்தைகளை அழைத்துச்சென்ற கதைகளும், இது தமிழ் மக்களின் பேரில் புலித் தீவிரவாதிகள் நடத்திய அராஜகப் போர் என்ற அடிப்படை உண்மையை அழுத்தமாகச் சொல்கின்றன.

விட்டதைப் பிடிக்கிறேன் என்று சொல்லி இருந்ததையெல்லாம் கோட்டைவிட்ட சூதாட்டம். மனித உயிர்களைப் பகடைக்காய்களாக உருட்டி நடந்த மரண சதுரங்கம். வன்முறையைச் சாத்தானைத் தொழுதால் வலியும் கண்ணீருமே ஆசியாகக் கிடைக்கும் என்பது மீண்டுமொருமுறை உலகுக்கு எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, ஆங் சான் சூசி என உலகம் இந்தியாவின் காந்தியிடமிருந்து அஹிம்சையைக் கற்றுக்கொண்டு போராட அதன் காலடியில் இருக்கும் தேசமோ சிங்கமும் புலியும் உலவும் வன்முறைக்காடாக சிதைந்து அழிந்திருக்கிறது.

இலங்கையில் பல முறை கள ஆய்வு, நூற்றுக்கணக்கான அகதிகள், புலம் பெயர்ந்த தமிழர்கள், புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தவர்கள், புலி ஆதரவாளர்கள், இலங்கை பவுத்த துறவிகள் எனப் பலருடனான விரிவான பேட்டிகள் மூலமாக நூலாசிரியர் சமந்த் சுப்ரமண்யம் ஒரு கொடுங்கனவினூடாக நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறார்.

தமிழர்கள் இந்தப் போரை மொழியை மையமாக வைத்து நடத்தியிருக்கக்கூடாது. அவர்களில் பெரும்பான்மையினரின் மதமான இந்து மதத்தை மையமாக வைத்து நடத்தியிருக்கவேண்டும். அப்படி நடத்தியிருந்தால் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்தியா இந்தப் போரில் வேறு நிலைப்பாடு எடுத்திருக்கும் என்று நூலின் தொடக்கத்தில் தமிழர் ஒருவர் சொல்கிறார். யோசித்துப் பார்த்தால் இதில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது.

மகாவம்ச காலத்தில் நடந்த போருக்குமே மதம்தான் அடிப்படைக் காரணம். அன்றும் சிங்கள பவுத்தர்கள், தமிழ் இந்துக்களை அடக்கி ஒடுக்கினர். இன்றும் அதுதான் நடந்திருக்கிறது. அன்று இந்து அடையாளம் இன்றைப்போல் அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கவில்லை. இன்று இந்தியா என்று ஒரு பெரும் தேசமாக உருவாகியிருக்கும் நிலையில் நிச்சயம் இந்தப் போரின் விதியை மாற்றியிருக்க முடியும். ஆனால், தந்தை செல்வநாயகத்தில் ஆரம்பித்து தளபதி ஆண்டன் பாலசிங்கம் வரையான கிறிஸ்தவர்களாலும் மேற்கத்திய மத்தியஸ்தத்தினாலும் வழிநடத்தப்பட்ட போராட்டம் இந்து அடையாளத்தைப் பின்னுக்குத் தள்ளியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆல்ஃபிரெட் துரையப்பாவை நடுங்கும் கரங்களுடன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைத்துச் சுட்டுக் கொன்ற இளைஞனாக நாவலில் பிரபாகரன் அறிமுகமாகிறார். பொங்கிப் பிரவகித்த அழிவுப் பேராற்றின் முதல் ரத்த ஊற்று. அதன் பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை. ஆறு என்றைக்குத் திரும்பிப் பாய்ந்திருக்கிறது.

பிரபாகரனுடைய இளமைக்காலம் பற்றிய குறிப்புகள் டெம்ப்ளேட் திரைப்படக் கதைபோல் இருக்கின்றன. இள வயது பிரபாகரனுக்குக் கவண்கள், பொய்த் துப்பாக்கிகள்கொண்டு அணில்கள், ஓணான்களை அடிப்பதில் ஆர்வம் இருந்திருக்கிறது; பள்ளியின் ரசாயனக்கூடத்திலிருந்து கொண்டுவந்த ரசாயனங்களை வைத்து வெடிமருந்து தயாரித்திருக்கிறார்; கராத்தே கற்பதில் ஆர்வம் இருந்திருக்கிறது. சிறு வயதிலேயே கொஞ்சம் பிடிவாதமும் பொஸசிவும் கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.

 • துரையப்பாவைப் கொன்ற பிறகு பிரபாகரன் ஒரு தேர்ந்த போராளியாகச் சிந்திக்கவும் நடந்து கொள்ளவும் செய்தார். தன் வாழ் நாள் முழுவதும் ஓர் இடத்தில் நாலைந்து நாட்களுக்கு மேல் தங்கியதில்லை. நதியைப்போல் ஓடிக்கொண்டேயிருந்தார். அப்போது முழுக்கைச் சட்டையும் லுங்கியுமே அவரது ஆடையாக இருந்தது. சைக்கிளில்தான் யாழ்ப்பாணம் முழுதும் சுற்றினார். காவலர்கள், செக்போஸ்ட் அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் குறுக்குப் பாதையில்தான் எப்போதும் பயணம் செய்வார். அரசு நிறுவனங்களை அறவே அணுகுவதில்லை. மஞ்சக் காமாலை வந்தபோதுகூட அரசாங்க ஆஸ்பத்திரிக்கோ அரசு மருத்துவரையோ நாடவில்லை. தானாக மெல்லக் குணமாகட்டும் என்று விட்டுவிட்டார். அவர் சம்பந்தமான புகைப்படங்களைத் திட்டமிட்டு அழித்தார். அவரைத் தேடிய போலீஸ் மிகப் பழைய ஒரு பள்ளிக்கூடப் புகைப்படத்தை வைத்தே தேட வேண்டியிருந்தது.

இதைவிட முக்கியமான விஷயம் அவருடைய அப்பா பற்றிய சித்திரம். வேலுப்பிள்ளை சிங்கள அரசில் பணி புரிந்திருக்கிறார். எல்லாரும் சிங்கள மொழியைக் கற்றுக் கொண்டாகவேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தபோது அதைப் பொறுப்பாகக் கற்றுக்கொண்டிருக்கிறார். மகனின் வன்முறைப் பாதை அவருக்குப் பிடிக்கவில்லை. முழு நேரப் போராளியாக ஆன பிறகு, அதாவது, கொலை கொள்ளைகளுக்குக் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக ஆன பிறகு அப்பா இல்லாத நேரமாகப் பார்த்து வந்து அம்மாவுடன் பேசிச் செல்வதுதான் பிரபாகரனின் வழக்கம். போரின் இறுதிக் காலத்தில் வேலுப்பிள்ளையும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களோடு மக்களாக இருந்திருக்கிறார்.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வருகிறது. பிரபாகரனின் வன்முறைப் போராட்டத்தை விரும்பாத அவர் ஏன் வேறு நாட்டுக்குப் புலம் பெயர்ந்திருக்கவில்லை.  தன் மகன் செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாகத் தானும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அங்கேயே தங்கிவிட்டாரா… அல்லது அவர் வெளியில் செல்ல விரும்பியும் முடியாமல் முடக்கப்பட்டாரா.. அவர் உயிருடன் இருந்தபோது யாரும் அவரைப் பேட்டி கண்டுவெளியிட முடிந்திருக்கவில்லை. புலி ஆதரவு ஊடகங்களில்கூட அவருடைய பேட்டியாக எதுவும் வெளிவந்திருக்கவில்லை. என்ன காரணம்?

***

புலிகள் இயக்கத்தில் சேர்ந்த இளைஞர்கள் பலருக்கும் அது ஓர் சாகசச் செயலாகவே இருந்திருக்கிறது. பிரபாகரனுக்கு அரசியல் தெளிவு அறவே இல்லை என்று புலிகள் இயக்கத்தில் இருந்து தப்பித்த ஒருவர் சொல்கிறார். அவர் ஆரம்பகட்டத்திலேயே புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்தவர்களில் ஒருவர். தனது பாணி போராட்டத்துக்கு எதிரான அனைவரையும் பிரபாகரன் மனச்சிதைவடைந்தவரைப்போல் கொன்று குவிக்க ஆரம்பித்ததைப் பார்த்து மனம் வெறுத்து அதில் இருந்து விலகி வெளிநாடு சென்றுவிட்டவர். வேறு குழுவில் சேர்ந்துவிடுவார் என்று சிறு சந்தேகம் இருந்தால்கூட அவர்களைக் கொன்றுடுவிடுவாராம். புலிகள் படையில் சேரவரும் புதியவர்களைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி: உன் சகோதரன் PLOTE (இன்னொரு தமிழ் போராளி இயக்கம்) இயக்கத்தில் சேர்ந்தால் அவனைக் கொல்வாயா என்பதுதான். சிங்களர்களைத் துணிச்சலாகக் கொல்வாயா என்று கேட்காமல், இப்படி ஒரு கேள்வி கேட்டு அதற்கு சரி என்று சொல்பவர்களையே பிரபாகரன் சேர்த்துக்கொண்டதாக மனம் கசந்து சொல்கிறார்.

மேலும் அவர் சொல்பவை புலிகள் பற்றி தமிழகத்தில் உருவாக்கப்பட்டுவரும் பிம்பத்துக்கு முற்றிலும் மாறானது. ராஜிவ் காந்தியோடு அப்பாவிகள் பலரையும் சேர்த்துக் கொடூரமாக கொன்றதைத் தொடர்ந்து இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் புலிகள் இயக்கத்தை ஒரேயடியாகக் கைகழுவிவிட்டார்கள். 1983 கலவரத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் எழுந்த எழுச்சி ராஜீவ் கொலையோடு முற்றாக வடிந்துவிட்டது. எனினும் புலிகளின் முழு சொரூபம் தெரியாமல்தான் அந்தச் சரியான முடிவை எடுத்திருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் முன்னாள் புலிப் போராளி சொல்லும் தகவல்கள் அந்த முடிவை வலுவாக உறுதிப்படுத்துகின்றன.

 • ஈழக் கோரிக்கை தொடர்பான விடுதலைப் புலிகளின் பயணம் என்பது அடுத்தடுத்த அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியான நகர்வாக அல்லாமல் படுகொலைகளின் அணிவரிசையாகவே இருந்திருக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், தமிழ்க் குடும்பங்கள் தங்கள் குடும்பத்து வாரிசு ஒருவரை புலிகள் இயக்கத்துக்கு அனுப்பியாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். குடும்பத்துக்கு ஒருவர் போதும் என்று உறுதி அளித்த புலிகள், போர் தொடர்ந்தபோது இன்னும் அதிக ஆட்கள் தேவை என்று திரும்ப வந்தார்கள். சிறுவர்களையும் சிறுமிகளையும் சேர்த்துக்கொண்டு சரியான பயிற்சி கொடுக்காமல் போர்முனைக்கு அனுப்பி அவர்களின் சாவைத் துரிதப்படுத்தினார்கள். கழுத்தில் சயனைட் குப்பிகளை அணியுமாறும், பிடிபட்டால் அதை விழுங்கிச் செத்துப் போகுமாறும் நிர்ப்பந்தித்தனர்.
 • ராணுவ வீரர்களையும் அரசியல்வாதிகளையும் கொன்றார்கள். அனுராதபுரத்தின் கம்பீரமான புத்த தேவாலயத்தில் புத்த பிட்சுகளையும் தல யாத்திரைக்கு வந்த பக்தர்களையும் கொடூரமாகக் கொன்றார்கள் புலிகள். நாடெங்கிலும் இருந்த சிங்களப் பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்தார்கள். விமானங்களையும், ரயில்களையும் தகர்த்தார்கள்.
 • விவசாயிகள் வயல்களில் நாற்று நடுவதுபோல் புலிகள் நாடு முழுவதும் கண்ணிவெடிகளைப் பதித்தனர். அவையெல்லாம் போர் முடிந்து நான்காண்டுகள் ஆகியும் இன்னமும் முழுமையாக அகற்றப்படவில்லை. அந்த வேலை முடிவு பெற 2020-ம் ஆண்டுவரை ஆகலாம் என்று அனுமானிக்கப்பட்டிருக்கிறது. நாடெங்கிலும் பஸ்களிலும், ரயில்களிலும், கட்டடங்களிலும் புலிகள் குண்டுகள் வைத்தவண்ணம் இருந்தனர். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் எந்தத் தாய்க்கும் மாலை முழுதாகக் குழந்தையைத் திரும்பப் பார்க்கமுடியும் என்கிற நம்பிக்கை இருந்திருக்கவில்லை.

புலிகள் பற்றி தாயகத் தமிழர்களுக்கு நல்லபிப்ராயம் எதுவும் கிடையாது என்றாலும் சமீபகாலமாக பாலசந்திரன் மரணம், எழுவர் தூக்கு போன்ற விஷயங்கள் மூலமாகவும் ஈழத்தமிழர் பட்ட துன்பங்கள் மூலமாகவும் புலிகள் மீது அனுதாபத்தைக் குவிக்கும் முயற்சிகள் அவ்வப்போது நடந்தேறிவருகின்றன. ஊழல் மற்றும் வாய்தா ராணியான ஜெயலலிதா தமிழ் (தேசிய) செண்டிமெண்ட்டைத் தனது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்திய தேசியத்தை எதிர்க்கும் சக்திகள் ஈழத்தை வைத்துத்தான் தமது கடையைப் பரப்பிவருகிறார்கள். புலிகளின் உண்மை சொரூபம் தமிழர்களுக்குத் தெரிந்தாகவேண்டியது காலத்தின் கட்டாயம். அந்தவகையில் இந்தப் புத்தகம் புலிகள்பற்றி இதுவரை தெரிந்திராத பல தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

 • பிரபாகரன் ஒரு மிகச் சிறந்த கொரில்லா. ஆனால் சுத்தமாக அரசியல் நிபுணத்துவம் இல்லாதவர். வன்னிக் காடுகளில் போதை மருந்து, ஆயுதப் பரிமாற்றம், பணப் பரிவர்த்தனை ஆகியவற்றுக்கான வலைப்பின்னல்களை அபாரமாக உருவாக்கி வைத்திருந்தார். இந்த லாபத்தில் பல ஆண்டுகளாகத் தன் ஆட்களைச் சந்தோஷமாக வைத்திருந்தார். நேரடிப் போரில் ஈடுபடாமல் தந்திரமான தாக்குதல்களில் மட்டுமே ஈடுபடச் செய்தார். ஆனால் இலங்கை அரசுக்குத் தன்னை ஒருங்கிணைப்போடு வைத்திருக்கும் திறமை இருக்காது என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டார். சமாதானப் பேச்சுவார்த்தைகள் தான் எதிர்பார்த்த ஈழத்தைத் தராது என்று தொடர்ந்து அதை நிராகரித்து வந்தார்.

9/11க்குப் பிறகு தீவிரவாத பிரிவினைவாதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க சர்வதேச சமூகம் மறைமுக ஒப்புதல் தந்துவிட்டது என்ற உண்மையை பிரபாகரன் கடைசிவரை புரிந்துகொள்ளவே இல்லை. மக்கள் மத்தியில் பதுங்கி இருந்து, தற்காப்பு ஆட்டம் ஆடுவோம். அரசு நம்மைக் கொல்லும் முயற்சியில் அப்பாவி மக்களையும் கொல்லும். அதை சர்வதேச சமூகத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டி நம் தனி நாடு கோரிக்கையை வலுப்படுத்திக்கொள்ளலாம் என்று போர் வியூகம் வகுத்தார். அல்லது வகுத்துத் தரப்பட்டது. அது மீட்சிக்கான கயிறு அல்ல. கழுத்துக்கு வீசப்பட்ட தூக்குக் கயிறு என்று அவர் புரிந்துகொள்வதற்குள் குரல்வளையை அது நெரித்துவிட்டது.

இது கடைசிகட்ட போர் தோற்றதற்கான காரணம். ஆனால், இந்த யுத்தம் தோற்றதற்கான முக்கிய காரணம் அது ஆரம்பித்த போதே இருந்த சகோதரச் சண்டையும், சர்வாதிகார மனோபாவமும்தான். சக இயக்கத்தைச் சேர்ந்த தமிழர்களைச் சிறைப்பிடித்து பூவா தலையா போட்டுப் பார்த்து பூ விழுந்தால் உன்னைக் கொல்வேன். தலை விழுந்தால் இன்னொருவனைக் கொல்வேன் என்று விளையாடியிருக்கிறார்கள். சிங்கள ராணுவத்தினரைக் கொல்லுதல், சிங்களத் தலைவர்களைக் கொல்லுதல் என்று மட்டுமே இருந்திருக்கவேண்டிய ஒரு இன மானப் போராட்டம் சக தமிழர்களைக் கொன்று குவிப்பதாக ஆகிவிட்டது. ஆரம்பித்த பத்தே வருடங்களில் இத்தகைய வீழ்ச்சி அடைந்ததை முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்கிறார் அந்தப் பூவா தலையா விளையாட்டில் பூ விழுந்ததால் தலை தப்பிய போராளி ஒருவர்.

 • 1990 க்கும் 1995 க்கும் இடைப்பட்ட காலம் யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு விரும்பத் தகாத, எதிர்பாராத உணர்வை ஊட்டியது. அருகில் ஸ்ரீலங்கா என்கிற எதிரி இருக்கும்போது, தமிழ் ஈழம் என்ற தனி நாடு எவ்வளவு துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை அந்தக் காலகட்டம் உணர்த்தியது.
 • விவசாயிகள் உரம் வாங்க முடியாமல் தங்கள் நிலங்களை விட்டுப்போயினர். பாதுகாப்புக் கெடுபிடியின் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 11,000 திறமையான தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். அப்படி வேலை இழந்தவர்கள் ஒன்று புலிகள் அமைப்பில் சேர்ந்து விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சண்டையிட்டார்கள். அல்லது ஆயுதங்கள், படகுகள் மட்டுமின்றிக் குளிர் பானங்கள், தோல் பொருட்கள் செய்யும் புலிகளின் தொழிற்சாலைகளில் வேலைக்குச் சேர்ந்தார்கள்.
 • புதுப் புது வேலைகள் உருவாயின; உதாரணத்துக்கு அற்பக் கூலிக்கு வரிசைகளில் ஒருவருக்குப் பதிலாக மணிக்கணக்கில் காத்திருப்பது, வங்கிகளுக்குப் போய் காசோலையை மாற்றுவது, கடிதங்கள் எழுதித் தருவது இப்படி. செய்தித்தாள் நிறுவனத்தினர் தினமும் கடைக்குப் போய் எந்தக் காகிதம் கிடைத்தாலும், அது அட்டையோ, பழுப்புக் காகிதமோ, பள்ளிகளுக்கு விற்கும் கோடு போட்ட காகிதமோ வாங்கி, செய்திகளை எழுதி வெளியிட்டார்கள்.
 • சம்பாத்தியமும் வரிகளும் புதுமையான மாற்றத்தை அடைந்தன. இலங்கை அரசு வழங்கிய ஊதியத்துக்கும் ஓய்வூதியத்துக்கும் மக்கள் புலிகளுக்கு வரி கட்டினார்கள். இவ்விதம் வடக்கு மாகாணத்தில் வரி வசூல் செய்தாலும் புலிகள் லண்டனிலும், கனடாவிலுமாகச் சேர்த்து மாதந்தோறும் நாற்பது லட்சம் டாலர் வசூலித்தார்கள் என்று இலங்கை அமைச்சர் ஒருவர் கணக்கிட்டுச் சொன்னார். மிக அத்தியாவசியப் பொருட்களும், உணவுப் பொருட்களும் மட்டுமே இலங்கையிலிருந்து வந்தன. ஆனால் அவை புலிகளின் கையில்தான் கிடைக்கும், கிடைத்ததும் விநியோகிக்கப்படும் வழிகள், முறைகள் மாறுபடும். புலிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உணவுப் பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. இதர மக்கள் கொழும்புவில் கிலோ 17 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசியை முப்பது ரூபாய்க்கு வாங்க வேண்டியிருந்தது.

***

முட்டையின் வெள்ளைக் கருவையும் மஞ்சள் கருவையும் பிரித்துப் பார்ப்பதுபோல் தமிழர் பிரச்னையையும் புலிகளையும் பாகுபடுத்திப் பார்க்கவேண்டும். இதுதான் அங்கிருக்கும் தமிழர்களின் எளிய வேண்டுகோள். இந்திய நடுநிலைவாதிகளும்கூட இதைச் சொல்வதுண்டு. ஆனால், யதார்த்தத்தில் இது எப்படிச் சாத்தியம்? இரண்டும் ஒரே ஓட்டுக்குள்தானே இருக்கின்றன. உவமையை முழு அளவில் பொருத்திப் பார்த்தால், பிறக்கப் போகும் புதிய குஞ்சுக்கு மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் சேர்ந்துதானே உயிர் தருகின்றன. அப்படி இரண்டும் ஒற்றை இலக்கில் சென்று சேரும்போது இரண்டையும் எப்படி விலக்கிப் பார்க்க முடியும்?

அப்பாவிகள் கொல்லப்பட்டது தவறுதான். ஆனால், அப்பாவிகளே தீவிரவாதிகளை அடையாளம் காட்டாமல் இருக்கும்பட்சத்தில் அப்பாவிகளைக் கேடயமாகப் பயன்படுத்தும் தீவிரவாதிகளை எப்படித்தான் வெல்வது?. இதற்கான ஒரே வழி, தீவிரவாதிகள் என்ன இலக்குகளுக்காகப் போராடுகிறார்களோ அதில் நியாயமானவற்றை நிறைவேற்றி மக்கள் மத்தியில் இருந்து தீவிரவாதிகளைத் தனிமைப்படுத்தியிருக்கவேண்டும். இலங்கை விஷயத்தில் கூட்டாட்சி என்ற எளிய தீர்வு முன்வைக்கப்பட்டது. ஆனால், புலிகள் அதை முற்றாக நிராகரித்து தனி நாடுதான் ஒரே தீர்வு என்று முழங்கினார்கள். அவர்கள் கெரில்லா தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருந்தவரையில் ”வெற்றி மேல் வெற்றி’யைக் குவித்துக்கொண்டிருந்தார்கள். வடக்கு, கிழக்கு பகுதியைக் கைப்பற்றித் தனி தேசமாக ஆளத் தொடங்கியபின் முறையான ராணுவத்துடன் போர் புரிய வேண்டிய நிலை வந்தபோது அவர்களால் அது முடியாமல் போனது. பிரபாகரன் தன் ஒருவரைத் தவிர வேறு யாரையும் வளரவிடவில்லை. எனவே, அவரைக் கொன்றதோடு போராட்டமும் முடிந்துவிட்டது. மக்களாட்சி காலகட்டத்திலும் மன்னராட்சி காலம் போலவே ஒரு போர் நடந்து முடிந்திருப்பது வேதனையான விந்தையே.

***

மொழி தொடர்பான சிக்கலில் இலங்கை ராணுவத்தின் மேஜர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்ற செல்லையா துரைராஜா (தமிழர்) முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்கிறார். ஃபிரான்ஸ் தேசத்தில் நீங்கள் ஒரு வேலைக்குச் செல்வதானால், ஃபிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொள்வீர்களா மாட்டீர்களா..? அதுபோல் சிங்களத்தையும் கற்றுக் கொண்டால் என்ன? என்கிறார். அவர் பதவியில் சேர்ந்த 1980 களில் ராணுவத்தில் நிறைய தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், போர் தீவிரமடையத் தீவிரமடைய ராணுவத்தில் இருந்த ஒற்றைத் தமிழராக தனித்துவிடப்பட்டிருக்கிறார். பெரும் கூட்டத்துடன் நடந்து சென்றவர் ஒருகட்டத்தில் திரும்பிப் பார்க்கும்போது தான் மட்டுமே நின்று கொண்டிருப்பதுபோன்ற ஒரு நிலை.

அந்நிய தேசத்தில் பணி புரியும் நிர்பந்தம் சார்ந்து ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதற்கும் சொந்த நாட்டிலேயே பெரும்பான்மையின் மொழி வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதற்கும் இடையில் வேறுபாடு நிச்சயம் உண்டு. ஆனால், இதே தமிழர்கள் எந்த நிர்பந்தமும் இல்லாமலேயே தமிழகத்தில் தமிழைக் கைவிட்டு விட்டு ஆங்கிலத்துக்கு வெகு இயல்பாக மாறுவதும் நடந்திருக்கிறது. ஆக, மொழி சார்ந்து நடத்தப்படும் அடிப்படைவாத அரசியலுக்கும் மக்களின் போக்குக்கும் எப்போதும் இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. அனுமதித்திருந்தால் சிங்களத்தையும் ஈழத் தமிழர்கள் எளிதில் கற்றுக்கொண்டு நிம்மதியாக இருந்திருக்கக்கூடும்.

இரண்டு மொழி கற்பவன் இரண்டு பேருக்கு சமம் என்பார்கள். அந்நிய மொழியைக் கற்றுக் கொள்ளும் ஒருவர் தனது மொழியில் இருக்கும் கலைச் செல்வங்களோடு பிற மொழியின் கலைச் செல்வங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பு பெறுகிறார். தமது மொழியின் செல்வங்களைப் பிற மொழிக்குக் கொண்டு செல்லவும் பிற மொழியில் இருந்து தாய் மொழிக்குக் கொண்டுவரவும் அவரால் முடியும்.

தமிழகத்தில் ஹிந்தி படிக்கச் சொல்லும்போது தமிழகத் தெருக்களில் பானி பூரி விற்பவர்களைச் சுட்டிக்காட்டி, ஹிந்தி படித்தால் நாமும் அந்தப் பானி பூரிக்கு பக்கத்து கடைதான் போட வேண்டியிருக்கும் என்று அதி புத்திசாலித்தனமாகப் பேசுபவர்கள் கோட்டைவிடும் முக்கிய விஷயம் ஒன்று உண்டு. பானி பூரி விற்பவர் ஹிந்தி படித்ததால்தான் அந்த நிலைக்கு வந்தாரா? ஷாரூக்கானுக்கு ஹிந்தி தெரியும். ஹிந்தி படித்தால் நீங்களும் ஷாரூக்கான் ஆகிவிட முடியுமே என்று ஒருவர் பதில் கேள்வி கேட்கமுடியுமே.

ஹிந்தி தெரிந்து வட நாட்டுக்குப் போனால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று சொல்வது பொய்; ஹிந்திக்காரரே பானி பூரி விக்க இங்குதான் வந்திருக்கிறார் என்று சொல்லவருகிறார்களா..? அப்படியென்றால், வட இந்தியாவில் நமக்கென்று வேலை வாய்ப்பே இல்லையா என்ன? பொருளாதாரம், வர்த்தகம், மருத்துவம், பொறியியல், கணிப் பொறி போன்ற துறைகளில் ஒருவர் உரிய கல்வித் தகுதி பெற்று ஹிந்தியும் கற்றிருந்தால் அந்த ஊரில் நிச்சயம் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டுதானே? அந்தக் கல்வித் தகுதி இல்லாதவர்கள் நம்மூருக்கு பானிபூரி விக்க வந்தால் அதை வைத்து நமக்கு அங்கு வேலை வாய்ப்பே இல்லை என்று எப்படிச் சொல்லமுடியும்? இங்கிலாந்தில் பிச்சை எடுப்பவர்கூட ஆங்கிலம் தான் பேசுகிறார். அதை வைத்துக்கொண்டு ஆங்கிலம் பேசுபவர்கள் எல்லாரும் பிச்சை எடுக்கத்தான் வேண்டியிருக்கும் என்று சொல்ல முடியுமா என்ன?

இதில் இன்னொரு வேதனையான வேடிக்கை என்னவென்றால், இந்த ஹிந்தி எதிர்ப்பை தமிழகம் முழுவதும் முன்னெடுத்த கருணாநிதியின் குடும்பத்தில் ஹிந்தி படிக்கத் தடை இருந்திருக்கவில்லை. கேட்டால் நாங்கள் திணிப்பைத்தான் எதிர்த்தோம்…. படிப்பதை எதிர்க்கவில்லை என்று இத்தனை வருடம் கழித்து சமத்காரமாக ஒரு சமாதானம் சொல்லப்படுகிறது. இதை முதலில் சொல்லியிருக்கவேண்டியதுதானே…

இந்த அதீத வெறுப்பின் மூலம் என்ன நடந்தது? இந்த வலையில் விழாமல் ஹிந்தி படித்த பிராமணர்கள் வட இந்தியாவுக்குச் சென்று வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிந்தது. திராவிடக் கண்மணிகள் குண்டுசட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட வேண்டியிருந்தது. அப்படியே இடம் பெயர்ந்த தமிழர்கள் பம்பாய் போன்ற நகரங்களில் தமிழ் சேரிகளை உருவாக்கிக்கொண்டுதான் குப்பைகொட்ட முடிந்தது. மொழிப் பற்று வெறியாகும்போது என்ன நடக்கும் என்பதற்கு தமிழர்களைப்போல் நல்ல உதாரணம் உலகில் வேறு எங்கும் இருக்க முடியாது.

இந்தியாவிலும் இப்போது இந்த சிக்கல் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஹிந்தியை மத்திய அரசு தேசத்தின் இணைப்புமொழியாக ஆக்க விரும்புகிறது. காங்கிரஸும் முன்னெடுத்த விஷயம்தான் என்றாலும் எதையுமே பி.ஜே.பி. செய்யும்போது மட்டுமே எதிர்ப்பது என்ற உயரிய கொள்கையுடன் இயங்கும் போராளிகள் தக்க தருணத்துக்காகக் கச்சை கட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள். இந்தியாவில் பல மொழி மாநிலங்கள் இருப்பதால் இலங்கையைப்போல் ஹிந்தியை திணித்துவிட முடியாதுதான். ஆனால், இதைவைத்து ஒரு கலகம் வெடிக்கவும் பெரிய அளவில் அழிவுகள் நடக்கவும் நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதை புத்திசாலித்தனமாகக் கையாளவேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் தாய் மொழிக் கல்வியை பன்னிரண்டாம் வகுப்புவரை கட்டாயப்படுத்தவேண்டும். ஐந்தாம் வகுப்பில் இருந்து ஹிந்தியையும் ஆங்கிலத்தையும் தனி மொழிப் பாடமாகக் கற்றுத் தரவேண்டும். ஹிந்து கற்பிப்பதை ஊக்குவிக்கும்வகையில் பரிசுகள், வட மாநிலப் பயணங்கள் என மாணவர்களையும் பெற்றோரையும் கவரவேண்டும். மாநில மத்திய அரசுப் பணிகளில் தாய்மொழியில் படிப்பவர்களுக்கு முதலிடம், ஹிந்தி தெரிந்தவர்களுக்கு இரண்டாம் இடம், ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மூன்றாம் இடம் என்று முன்னுரிமை அளிக்க வேண்டும். எதையுமே வலுக்கட்டாயமாகத் திணிக்கக்கூடாது. நோயாளி மீது அக்கறை உள்ள மருத்துவர் கசப்பு மருந்தை தேனில் குழைத்துத் தான் தருவார். ஆனால், இன்றைய இந்திய தேசியக் கட்சிகளுக்கு அந்த நிதானமும் அறிவும் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கை ஓர் எளிய பாடத்தை நமக்கு மிகப் பெரிய இழப்புகளுடன் சொல்லித் தந்திருக்கிறது. நாம் அதைக் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

***

கடந்த முப்பது ஆண்டுகளாகத் தீவிரமாக நடந்த இந்தப் போரின் காரணங்களை சமந்த் வரிசையாகப் பட்டியலிடுகிறார். இந்திய வம்சாவழித் தமிழர்கள் (மலையகத் தமிழர்கள்) முதலில் சொந்த நாட்டுக்கு ஈழத்தமிழர்களின் ஒப்புதலோடு திருப்பி அனுப்பபட்டார்கள். ஈழத் தமிழர்கள் இந்திய வம்சாவழித் தமிழர்களோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாததால் இந்த நாடு கடத்தல் எளிதில் நடந்துமுடிந்தது. அதன் அடுத்தகட்டமாக ஈழத் தமிழர்கள் குறிவைக்கப்பட்டார்கள். அமெரிக்க திருச்சபைகள் இலங்கைத் தமிழர்களின் பகுதிகளில் ஏராளமான பள்ளிகளை 1900 களிலேயே ஆரம்பித்துவிட்டிருந்ததால் தமிழர்கள் நன்கு படித்து அரசு வேலைகளில் எளிதில் இடம்பிடித்துவிட்டிருந்தார்கள். 20% இருந்த தமிழர்கள் எந்த தவறோ ஒடுக்குமுறையோ செய்யாமலேயே சுமார் ஐம்பது சதவிகிதத்துக்கு மேற்பட்ட அரசுப் பணிகளைக் கைப்பற்றிவிட்டிருந்தனர். சிங்களர்களின் அதிருப்திக்கும் தமிழர் மீதான வெறுப்புக்கும் மூல முதல் காரணம் இதுவே.

சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று முதலில் அறிவிக்கப்பட்டது. தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர சிங்களர்களைவிடக் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று சொல்லப்பட்டது. வண்டிகளின் எண் பலகையில் சிங்கள ஸ்ரீ எழுதப்படவேண்டும் என்று சொல்லப்பட்டது. இவற்றையெல்லாம் எதிர்த்த தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் அமைதியான முறையில் போராடிய தமிழர்கள் வன்முறைப் பாதையில் செல்ல ஆரம்பிக்கிறார்கள். அதன் முதல் மற்றும் முன்னணித் தளபதியாக ’தம்பி’ பிரபாகரன் திகழ்ந்தார்.

இலங்கைக்கு இணையான செயல்பாடுகள் ஒருவகையில் தமிழகத்திலும் நடந்தேறி இருக்கின்றன. இங்கு 3 % இருந்த பிராமணர்கள் அரசுப் பணிகளில் 50-60%க்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியிருந்தார்கள். பிரிட்டிஷார் தந்த கல்வியின் மூலம் அந்த முன்னிலைக்கு பிராமணர்கள் வந்திருந்தனர். அதை சமன்செய்ய பிரிட்டிஷ் காலகட்டத்திலேயே ஒருவகையான இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இந்தியா சுதந்தரம் பெற்ற பின் இடை நிலை சாதிகள் தமது அதிக எண்ணிக்கை மூலம் இயல்பாகவே உரிய இடங்களைப் பெற ஆரம்பித்தனர்.

பிராமணர்கள் தமது முந்தைய முன்னணி இடத்தை இழக்க ஆரம்பித்ததைத் தவிர்க்க முடியாத மாற்றமாக (வேண்டா வெறுப்பாகத்தான் என்றாலும்) எடுத்துக்கொண்டனர். புதிய அதிகார மையங்களை உருவாக்கிக் கொண்டனர். தனியார் துறை, வெளி நாட்டு வேலை வாய்ப்பு என தமது முன்னிலையை அரசுப் பணிகளைச் சாராமல் தக்கவைத்துக்கொண்டனர். ஈழத்தமிழர்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டிய புறநானூற்றுப் பாரம்பரியம் கொண்டவர்கள் அல்லவா… சிங்கத்தை அதன் குகையிலேயே எதிர்க்கத் துணிந்தார்கள். ஆனால், இலங்கையில் அவர்கள் புலிகள் அல்ல… சிறுபான்மைப் பூனைகள்தான் என்பதை மறந்துவிட்டார்கள். அதன் விளைவே இன்றைய அவல நிலை. இயக்கக் கொடியில் உறுமும் புலியை வரைந்து வைத்துக்கொண்டால் எதிரிகள் பயந்துவிடுவார் என்று நினைத்துவிட்டார்கள். புலி டிரஸ் போடுவதால் மட்டுமே பூனையைக்கண்டு எல்லாரும் பயந்துவிடமாட்டார்கள் அல்லவா?

***

இலங்கை ஒரு தீவு… இரண்டு தேசங்கள் என்பது தமிழர்களின் வாதம். ஒரே நாடு…. அதுவும் பவுத்தர்களுக்காக பவுத்தர்களால் ஆளப்படும் பவுத்தர்களின் ஒரே நாடு என்று சிங்களர்கள் சொன்னார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றபோது இரு இனத்தினரையும் உள்ளடக்கிய ஒரே நாடாக ஸ்ரீலங்கா உருவானது. அன்று செய்த ஒப்பந்தத்தை இரு தரப்பினருமே மறந்ததால் உலகுக்கு ஒரு மோசமான பாடமாக ஸ்ரீலங்காவின் சரித்திரம் ஆகிவிட்டிருக்கிறது. நவீன மக்களாட்சி உருவான காலகட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் 20% மட்டுமே இருந்தனர். சிங்களர்கள் 80% இருந்தனர். இலங்கையில் முதலில் கால் பதித்தது யார் என்ற கேள்விக்கு யாரிடமும் வரலாற்று ரீதியான, விஞ்ஞானபூர்வமான ஆதாரம் எதுவும் கிடையாது. எனவே, அதை மையமாக வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது. நவீன காலத்தில் நவீன ஒப்பந்தத்துக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும். ஒரு நாட்டில் பெரும்பான்மையாக இருப்பவர்களின் நியாயமே உலகில் எங்குமே செல்லுபடியாகும், இந்துக்களைப் போல் எல்லாரும் ஏமாளிகளாக இருக்கமாட்டார்கள். புலிகளின் கடந்த காலப் பெருமிதமும் நவீன மாற்றங்களை ஏற்கத் தயாராக இல்லாத ஈகோயிஸமும்தான் ஊருக்கு வெளியே இருந்த ராணுவத்தை வீட்டுக்கு வாசலில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

ஒரு கோணத்தில் கண்ணீர்த்துளிபோல இருக்கிறது இலங்கையின் வரைபடம். இன்னொரு கோணத்தில் அது கை எறி குண்டைப் போலவும் திரி இருக்கும் இடத்தில் மிகப் பொருத்தமாக யாழ்ப்பாணம் இருக்கிறது என்றும் ஆசிரியர் சொல்லிக் காட்டும்போது அவரது எழுத்து நயத்தை ரசிப்பதோடு ஓர் மின் அதிர்வு உள்ளுக்குள் சட்டென்று பரவுகிறது. யதேச்சையாகப் பேச்சுக் கொடுக்கும் ஒருவர் உங்கள் வீட்டில் நடந்த இறப்பு பற்றிச் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு கை விரல்களை ஒவ்வொன்றாக விரித்து பட்டியலிடத் தொடங்குகிறார். கை விரல்களுக்குள் அடங்காமல் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் நீள்வதைத் தாங்க முடியாமல் உறைந்து நிற்கிறார் சமந்த். தரையில் கிடக்கும் ஒரு கல்லை விலக்கிப் பார்த்தால் வரிசையாகப் பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கும் கல்லறையைத் திறந்ததுபோல் அதிர்ந்ததாகச் சொல்கிறார். நூல் முழுவதும் விரவியிருக்கும் இத்தகைய உவமைகள் வெறும் ரசனைக்குரியதாக மட்டுமே நின்றுவிடாமல் நம் மனத்தை ஒரு நிமிடம் உலுக்கிவிடுன்றன.

***

போர் நினைவாக யாழ் நூலகத்தில் நடத்தப்பட்ட கண்காட்சியை ஒரு இடத்தில் விவரிக்கிறார்.

 • இறந்து போன மகள்களின் பொம்மைகள், மரணச் சான்றிதழ்கள், குண்டு வெடிப்பில் எரிந்த வீடுகளின் சாம்பல், தங்களால் இப்போது கடக்க முடியாத கடல் நீரைப் புட்டியில்கொண்டு வரும் மீனவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் கொண்டுவந்த சுமார் 500 பொருட்களைக் வெல்வெட் துணியில் வைத்துக் கண்ணாடி ஜாடிகளால் மூடிக் காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. ஒரு நகைமுரண் என்னவென்றால் 1981ம் ஆண்டு சிங்களக் கலகக்காரர்களால் எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தின் ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களின் சாம்பலும் இந்தக் காட்சியில் அடக்கம். இந்த நூலகம் 2003ம் ஆண்டு புனரமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டாலும் பெரும்பாலும் காலியாகவே இருந்தது. போரினால் தீக்கிரையாக்கப்பட்ட நூலகத்தில் புத்தங்களுடைய இடத்தை போர் நினைவுப் பொருட்களின் அணிவரிசை பிடித்துக்கொண்டிருந்தது!

புலம் பெயர்ந்து போனவர்கள் பல வருடங்கள் கழித்துத் தமது வீடுகளுக்குத் திரும்பியபோது வெறிச்சோடிக் கிடக்கும் சொந்த ஊரைப் பார்த்து மவுனமாக உதிர்த்த கண்ணீரால் இந்த நூல் நனைக்கப்பட்டிருக்கிறது. புதர் மண்டிய வீடுகள், காற்று இறங்கி துருப்பிடித்தபடி கிடக்கும் வாகனங்கள். ஷெல் தாக்குதலில் சிதிலமடைந்த வீடுகள், துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட சுவர்கள், இத்தனை போர்க் களேபரத்திலும் கருக்குலையாமல் கிடக்கும் கோழிக் கூண்டு, சோஃபாவுக்குக் கீழே கிடந்த சிலேட்டு என ஒரு காவிய சோகம் மெல்லிய தூரிகையால் தீட்டப்படுகிறது. இந்தப் பேரழிவுக்கு மவுன சாட்சியாக நின்ற பனை மரங்களின் ஓலைகள் முடிவற்று வீசும் காற்றில் நடுங்கியபடி மெள்ளச் சடசடத்துக்கொண்டிருக்கின்றன, மனித இனத்தின் காயம்பட்ட ஆன்மா போல்.

***

இந்த பயண ஆவணத்தின் மிக முக்கியமான பாகம் இஸ்லாமியர்களைப் புலிகள் பந்தாடியவிதம்தான். காட்டான் குடி பள்ளிவாசல் படுகொலை, சொந்த ஊரிலேயே அகதிகளாக அடித்து துரத்தப்படுதல், கடத்திச் சென்று மிரட்டிப் பணம் பறிப்பு என இஸ்லாமிய சமூகம் புலிகளால் பட்ட துயரங்களைப் படித்த பிறகும் ஒருவர் புலிகளின் ஆதரவாளராக இருக்கிறார் என்றால் வாய்ப்புக் கிடைத்தால் அவரும் அதே வன்முறையைச் செய்யக்கூடிய கொடூரமான மனம் படைத்தவராகத்தான் இருக்கவேண்டும்.

அதிலும் காட்டான்குடிப் படுகொலை ரத்தத்தை உறையவைக்கும் விதத்தில் நடந்தேறியிருக்கிறது. ஜாலியன்வாலாபாக், பெஷாவர் படுகொலைகளைவிடப் படு கொடூரமாக பள்ளிவாசலின் முகப்பில் நின்றுகொண்டு சரமாரியாகச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். சிறியவர் பெரியவர் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. சுட்டு முடித்தவர்கள் அதோடு நிறுத்தாமல் யாருக்கேனும் உயிர் இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க விரும்பியிருக்கிறார்கள். இருளடைந்த மசூதிக்குள் டார்ச் லைட்டை அடித்தபடியே யாருடைய உடலிலாவது அசைவு தென்படுகிறதா என்று தேடியிருக்கிறார்கள். அசைவு தென்பட்ட இடத்தில் இன்னொரு ரவுண்ட் சுட்டிருக்கிறார்கள்

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து, சுட்டவங்க எல்லாம் போயிட்டாங்க. காயம் பட்டவங்க இருந்தா எந்திரிங்க… ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வந்திருக்கோம் என்று சொல்லியிருக்கிறார்கள். துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாகத் தப்பிய ஆறு வயதுச் சிறுவன் அக்ரம் அதை நம்பி துள்ளிக் குதித்து எழுந்து நின்றிருக்கிறான். அருகில் நின்று கொண்டிருந்த புலி அந்தச் சிறுவனின் அருகில் சென்று வாய்க்குள் துப்பாக்கியைச் செலுத்தி சுட்டுக் கொன்றிருக்கிறார். நாலைந்து உடல்களுக்குக் கீழே மாட்டிக்கொண்டதால் உயிர் தப்பிய ஒருவர், வாய் பேச முடியாமல் இதைப் பார்த்தபடி ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். சிங்கள ராணுவத்தினர்தான் கொன்றதாக ஒரு வதந்தி கிளப்பட்டது. ஆனால், அன்று வந்தது தமிழர்கள்தான்… புலிகள்தான் என்று அவர்களுடைய பேச்சில் இருந்து எனக்குத் தெரியும் என்கிறார். கண்ணால் கண்டவர் சொல்லும் சாட்சி பொய்யாக வாய்ப்பில்லையே.

ஓர் இனிய அதிகாலையில் ஊருக்குள் நுழையும் ஜீப் ஒன்றில் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி உங்களை உங்கள் மசூதிக்கு வரும்படி உத்தரவிடுகிறது. அங்கு அனைவரும் வந்து சேர்ந்ததும், உயிர் வேண்டுமானால் இன்றைய சூரியன் மறைவதற்குள் ஊரை விட்டே ஓடி விடுங்கள் என்று ஒற்றை உத்தரவு இடப்படுகிறது. அதை மீறி இருந்தால் உங்கள் பெண்களின் கற்புக்கும் உயிருக்கும் நாங்கள் உத்தரவாதமல்ல… உங்கள் பணம் எல்லாம் இந்தத் தமிழ் மண்ணில் இருந்து நீங்கள் சுரண்டிச் சேர்த்தவை. எனவே அனைத்தையும் விட்டுவிட்டு இன்றே ஓடிப் போய்விடுங்கள் என்று ஒற்றை மிரட்டல்.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் உயிரைக் கையில் பிடித்தபடி, உயிரை மட்டுமே கையில் பிடித்தபடி, மேற்கொள்ள நேர்ந்த அந்த பயணம் மறக்க முடியாத கொடுங்கனவாக நீள்கிறது. இஸ்லாமியரை அள்ளிக்கொண்டு செல்ல வந்திருந்த பேருந்தில் ஸ்பீக்கரில் போடப்பட்ட கேலிப்பாட்டு, பணம் இருந்தவர்களை மட்டுமே அழைத்துச் செல்வேன் என்று அதட்டிய வாகன ஓட்டுநர், பச்சைத் தண்ணீர் கூடக் கொடுக்காமல் பல மணி நேரம் பட்டினியாகப் போட்டு பரிசோதனை, இயற்கையின் பங்குக்குக் கொட்டும் மழை, நடுங்கும் குளிர் என கொழும்புவில் இருந்த சக இஸ்லாமியர்களுடைய வீட்டுக்குச் சென்று சேர்வது வரையிலான அந்தப் பயணம் இன்ஃபர்னோவைவிடக் கொடூரமானது.

இஸ்லமியர்களுக்கு எதிராகப் புலிகள் மட்டுமல்ல சிங்கள அரசுமே அப்படியான கொலை வெறியுடன்தான் இருக்கிறது. போர் முடிந்த பிறகு அங்கு நடந்த மசூதி இடிப்பு நாவலில் பதைபதைப்புடன் விவரிக்கப்படுகிறது.

 • ரிஸ்வி அந்த மசூதி இடிப்புக் காட்சிகளை வீடியோவில் எடுத்திருந்தார். அதைப் பார்த்தேன்.  துறவிகள் காவி உடையை அணிந்திருந்தனர். உடன் வந்தவர்கள் வெள்ளை உடை அணிந்திருந்தனர். கையுறைகள், கடப்பாரைகள் எனத் தேவையான கருவிகள் அனைத்தையும் கொண்டுவந்திருந்தார்கள். தங்களை யாரும் தடுக்கமாட்டார்கள் என்ற துணிச்சலும் நம்பிக்கையும் அதில் தெரிந்தது. சிங்கள ரவையா அமைப்பின் கொடிகள் முதலில் பக்கத்தில் இருந்த மரத்தில் கட்டப்பட்டன. இந்தப் புனிதமான திருப்பணியைச் செய்வது யார் என்பது உலகுக்குத் தெரிந்தாகவேண்டுமல்லவா. அதன் பிறகு தர்காவின் சுவர்களை இடிக்க ஆரம்பித்தார்கள். பச்சை நிறத்தில் சமாதி மீது துணி போர்த்தப்பட்டிருந்தது. அதைக் கிழித்துத் தீ வைத்துக் கொளுத்தினார்கள். அங்கு இரண்டு குர்ரான் புத்தகங்கள் இருந்தன. ஒன்றைக் கிணற்றில் வீசி எறிந்தார்கள். இன்னொன்றைத் தீயில் இட்டுக் கொளுத்தினார்கள். தீயில் எறிந்ததைப் பார்க்க முடியவில்லை. ஆனால், ஒரு புத்தகம் தீயில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு துறவி அனைத்தையும் நின்று மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தார். கேமரா மெள்ள வேறொரு பக்கம் திரும்புகிறது. அங்கே தற்காலிகக் காவல் மையத்தில் ஒரே ஒரு காவலர் அங்கு நடப்பவற்றுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் மௌனமாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

இந்தச் சித்திரங்கள் இலங்கையில் அமைதி நிலவுகிறது, ஆனால் அது மயான அமைதி என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

***

மலையகத் தமிழர்களுக்கும் யாழ்ப்பாணத்தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளி நுட்பமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண் மலையகத் தமிழர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதில் இருந்த சிக்கல் லேசாகக் கோடிகாட்டப்பட்டிருக்கிறது. சக போராட்டக்குழுக்களைச் சேர்ந்த தமிழர்கள், புலிகளின் வன்முறையை விமர்சனம் செய்த தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என அனைத்து தரப்பையும் எதிரியாகக் கருதிய புலிகள் கடைசியில் யாருக்காகப் போராடினார்கள் என்ற கேள்வி ஒருவருக்கு எழுவது இயல்பே. இந்தப் படுகொலைகள் எல்லாமே துரோகி, சிங்கள அரசுக்கு உதவியவர் என்ற ”நியாயமான’ காரணத்தைச் சொல்லியே நடத்தப்பட்டிருக்கின்றன.

அதிலும் போரின் இறுதிக்கட்டத்தில் புலிகள் செய்த செயல்கள் அவர்கள் மீதான கொஞ்ச நஞ்ச அனுதாபத்தையும் அழித்துவிடுகின்றன. கடைசி கட்டத்தில் புலிகள் தோற்றுப் போய்விட்டார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் தமிழ் மக்கள் புலிகளின் கண்ணில் படாமல் ராணுவத்தின் முகாமுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்கிறார்கள். அதைப் பார்த்துவிடும் ஒரு புலிப் போராளி அவர்களைப் போகவிடாமல் தடுக்கிறார். வயதானவர் ஒருவர், தம்பி… இனியாவது எங்களைப் போகவிடுங்கோ என்று கெஞ்சுகிறார். அடுத்த விநாடியே புலியின் துப்பாக்கியில் இருந்து குண்டு சீறிப் பாய்ந்து அவரைக் கீழே சாய்க்கிறது. வாயை மூடு என்பதைத்தான் புலிகள் தமக்குத் தெரிந்த மொழியில் சொல்லியிருக்கிறார்கள்.

நோ ஃபயர் ஜோன் என்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருந்தபடி ராணுவத்தின் விமானங்களைத் தாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். மேலிருந்து பார்க்கும் ராணுவத்தினருக்கு துப்பாக்கி குண்டு வரும் திசையில் திருப்பித் தாக்க மட்டுமே தெரியும். தாக்கினார்கள். மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தார்கள். ஏற்கெனவே, புலிகளை மட்டும் தனிமைப்படுத்தி அழிக்க முடியாது என்பதால் ராணுவம் கண்மூடித்தனமாக தாக்க ஆரம்பித்திருந்தது. மக்களைக் கேடயமாகப் பிடித்துக்கொண்ட புலிகளின் இத்தகைய நடவடிக்கை ராணுவத்துக்கு வேலையை எளிதாக்கியது. அவர்கள் சர்வ தேச விசாரணை மன்றத்தில் வெகு எளிதாக, நாங்கள் சிவிலியன் பகுதிகளைக் குறிவைத்துத் தாக்கவில்லை. ராணுவத்துக்கு இணையான பலம் கொண்ட தீவிரவாதிகள் மக்களைக் கேடயமாகப் பிடித்து வைத்ததாலும் அவர்கள் மத்தியில் இருந்து தாக்கியதாலும் இழப்பு தவிர்க்க முடியாமல் ஆகிவிட்டது என்று சொல்லித் தப்பித்துவிட்டார்கள்.

இப்படி இரண்டு புறமும் இருந்து சுட்டுக் கொள்ளும் படைகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட மக்களின் நிலைதான் ஆகப் பரிதாபமானது. யானைப் போரை மேட்டில் இருந்து பார்க்கும் யோகம் அவர்களுக்குக் கிடைத்திருக்கவில்லை. குறைந்தபட்சம் தப்பி ஓடும் வழியாவது இருந்திருக்கலாம்..

***

பிரபாகரனின் மறைவுக்குப் பிறகு அவருடைய வீடு இருந்த இடத்தைப் பார்க்க ஆசிரியர் போன சம்பவம் மனதைப் பிசையும் வகையில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

 • பிரபாகரனின் வீடு இருந்த இடத்துக்கு வழி கேட்டோம். சொன்னார். ராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில் இருக்கும் அந்த இடத்தில் ஆட்டோவை நிறுத்த வேண்டாம் என்று எச்சரித்தார். பிறகு கொஞ்சம் யோசித்துத் தானும்கூட வருவதாகச் சொன்னார். அவர் அந்தப் பகுதிக்காரர் என்பது ராணுவத்தினருக்குத் தெரியும் என்பதால் பிரச்னை இருக்காது. அந்த இடத்தில் வீடெதுவும் இல்லை. கட்டடம் இடிந்த கற்களும் அவற்றைச் சுற்றிலும் புல்லும் புதர்களுமே இருந்தன. அடுத்த வீட்டைக் காட்டி ‘பிரபாகரன் வீடு இது போல்தான் இருந்தது’ என்றார் லலித் குமார்.
 • போர் முடிந்ததிலிருந்து இந்த வீட்டைப் பார்க்க ஏராளமான தமிழர்களும் ஏன் சிங்களர்களும்கூட வர ஆரம்பித்தார்கள். இந்த இடம் ஒரு நினைவுச் சின்னமாக, ஒரு புனித இடமாகப்போய் பிரபாகரனை வழிபட ஆரம்பித்து விடுவார்கள் என்கிற அச்சம் ஏற்பட்டது ராணுவத்துக்கு. ஆகவே உடனடியாக அதை இடித்துத் தள்ளினார்கள். அதற்கப்புறமும் மக்கள் வருவது நிற்கவில்லை. வந்து கையில் கிடைத்த சிதிலங்களை ஞாபகத்துக்கு எடுத்துப் போக ஆரம்பித்தார்கள். அந்த இடத்தை சுத்தமாக வாரி லாரியில் ஏற்றிக் கண்காணாத இடத்தில்கொண்டுபோய்க் கொட்டினார்கள்.
 • வண்டியை மெதுவாக ஓட்டிச் சென்று அருகில் இருந்த தேநீர் கடைக்கு முன்னால் நிறுத்தினோம். கடைக்காரருக்கு நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பது தெரிந்திருந்தது. நிழலோரமாக நின்றபடியே முன்பு பிரபாகரனின் வீடு இருந்த இடத்தில் இப்போது இருந்த சூனியத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தோம்.

ஒரு தனி தேசத்தை வென்றெடுப்பேன் என்று சபதம் இட்டவர் தனக்கென ஆறடி மண் கூட இல்லாமல் துடைத்து அழிக்கப்பட்.

***

ஆரம்பத்தில் எங்கள் பக்கம் (கொஞ்சம்) நியாயம் இருந்தது. ஆயுதம் ராணுவத்தின் கையில் இருந்தது. நாங்கள் ஆயுதத்தைக் கையில் எடுத்தோம். நியாயம் ராணுவம் பக்கம் போய்விட்டது. எல்லா போராட்டத்துக்குமான பாடம் இது.

தமிழகத்தில் ஈழப் பிரச்னையை வைத்து பழ நெடுமாறனில் ஆரம்பித்து, வைகோ, சீமான், மே. 17 இயக்கம் என பல நச்சுப் பாம்புகள் சுதந்தரமாக உலவிக்கொண்டிருக்கின்றன. சிறுபான்மையான தமிழர்களின் பேரில் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை, அதை அடக்குகிறேன் என்ற பெயரில் குடிமக்கள் – தீவிரவாதிகள் என்ற வித்தியாசம் பார்க்காமல் அழித்தொழித்த சிங்கள அரசு செய்த தவறுகள் இவை அனைத்துக்கும் இந்தியாவே காரணம் என்று இவர்கள் முழங்கிவருகிறார்கள். காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு, அணு உலைகள், மீத்தேன், நியூட்ரினோ ஆய்வு என பல விஷயங்களில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக முழங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சாராயத்தைப் பெருகெடுத்து ஓடச் செய்தது, தமிழ் வழிக் கல்வியைப் பின்னுக்குத் தள்ளி ஆங்கிலத்தை முன்னுக் கொண்டுவந்தது. மின்சார உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் சிறு தொழில்களை அழிவின் விளிம்புக்குத் தள்ளியது, தேர்தல் ஜனநாயகத்தை பண நாயகத்தால் வீழ்த்தியது, நலத்திட்டங்களில் ஊழல் என்ற நிலை போய் ஊழலுக்காகவே திட்டங்கள் என்று ஆக்கியது, விவசாயத்தை நசியவிட்டது, ஆறுகளை அழியவிட்டது, மணல் கொள்ளை என தமிழர்களால் நமக்கு நாமே  தோண்டிக்கொள்ளப்பட்ட குழிக்குள் இருந்து அவர்களைக் காப்பாற்ற ஒப்புக்குக் குரல் கொடுத்துவிட்டு இலங்கை அரசும் புலிகளும் சேர்ந்து செய்த படுகொலைகளுக்கு இந்திய அரசை மூர்க்கத்தனமாகக் கட்டம் கட்டித் தாக்கும் இந்தத் தமிழ் வியாபாரிகள் இலங்கையைப் போலவே தமிழகத்திலும் ரத்த ஆறை ஓடவைக்க முடிவெடுத்துவிட்டிருக்கிறார்கள். 1947-ல் உருவான இந்தியா 2047-ல் இருக்காது என்று சூளுரைக்கிறார்கள்.

ஈழத்தமிழர்கள் காந்தியின் தேவையை நினைத்து அழும் நேரத்தில் இங்கு இவர்கள் இப்படிப் பேசத் தொடங்கியிருப்பது மிகவும் அபாயமானது. ஒரு கல்லை அகற்றி முதல் ஊற்றைக் கொப்பளிக்க வைத்துவிட்டால் அது அதன் பிறகு காட்டாறாகப் பொங்கிப் பிரவகிக்க ஆரம்பித்துவிடும். காஷ்மீர், பஞ்சாப், வட கிழக்கு மாநிலங்கள், மாவோயிஸ்ட் பகுதிகள் என நமக்குப் பல முன் அனுபவங்கள் உண்டு. தமிழகத்தையும் அந்தப் பட்டியலில் சேர்த்துவிடத் துடிக்கும் சக்திகள் பலம் பெறத் தொடங்கியிருக்கின்றன. இலங்கை நிகழ்வுகளே அவர்களின் மூல வேர். இன்று சிறிய முள் செடிதான். ஆனால், அது இளையதாக இருக்கும்போதே வெட்டி எறிந்துவிடவேண்டும். இல்லையென்றால், நம்மை அழித்துவிடும்.

இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் நிஜக் கதைகள், ஓர் அரசும், போராளி இயக்கமும் எப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதை வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறும் எளிய மக்களின் குரல்களினூடாக நமக்குத் தெரிவிக்கின்றன. பக்கத்து நாட்டில் அது கேட்டபோது நாம் மவுனமாக இருந்துவிட்டோம். அதுவே தவறுதான். அந்த வன்முறை நம் நாட்டிலும் பரவும் என்ற அபாயம் இருக்கும்நிலையில் இனியும் நாம் மவுனமாக இருந்தால் அந்த அலறல் நம் வீட்டிலேயே கேட்கத் தொடங்கிவிடும்.

கோட்சேக்கு சிலை வைப்பதை எதிர்க்கும் அதே நேரத்தில், பிரபாகரனை மாவீரனாகச் சித்திரிக்கும் போக்கை நூறு மடங்கு வலிமையுடன் நாம் எதிர்த்தாக வேண்டும். ஏற்கெனவே ராஜபக்சே கொடுங்கோலன் என்பது உலகுக்குக் குறிப்பாகத் தமிழ் மக்களுக்குத் தெரிந்துவிட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் புலிகளின் உண்மை சொரூபத்தை விரிவாகச் சித்திரித்திருப்பதன் மூலம் ஒரு முக்கிய சரித்திரக் கடமையைச் செய்திருக்கிறது. நாம் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளப்போகிறோமா..? சரித்திரம் மீண்டும் திரும்புமா..? பட்டுத் தெரிந்துகொள்பவன் முட்டாள். பார்த்துத் தெரிந்துகொள்பவனே புத்திசாலி. நாம் புத்திசாலியாக இருக்கப்போகிறோமா..? முட்டாளாகப் போகிறோமா? இது வெறும் அறிவு சார்ந்த தேர்வு அல்ல. வாழ்க்கைக்கும் மரணத்துக்குமிடையிலான தேர்வு.

B.R.மகாதேவன்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-8414-902-4.html
ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: