Home » Novel » பகடையாட்டம்

பகடையாட்டம்

ஒரு ஓவியர் தன் ஓவியத்தை வரைவதை முதல் தீற்றிலிருந்து முழுமை பெரும் வரை அருகிருந்து பார்க்கும் பேரனுபவத்திற்கு ஈடானது இந்நாவல் வாசிப்பனுபவம். செய்தித்தாளில் ஒரு பத்திச் செய்தியாகக் கடந்து போகும் நிகழ்விற்குப் பின் எத்தகு சிலந்திவலை அமைப்புள்ளது, அதில் நாம் அல்லது நமக்கு வேண்டியவர்கள் எவ்விதமான விளைவுகளைக் காண நேரிடும் என்பது வியப்பளிக்கும் விஷயம். மிக எளிய கதையை சொல்லல் முறையின் தனித்துவத்தால் கதாபாத்திரங்களின் கதைகளில் பகடையாட்டம் ஆடுவது மட்டுமல்லாது வாசகனின் வாசிப்புத் திறமையுடன் பகடை ஆடுகிறார் ஆசிரியர். தமிழில் தவற விடக்கூடாத அற்புதமான நாவல்!

பகடையாட்டம், யுவன் சந்திரசேகர், கிழக்கு பதிப்பகம், ரூ. 175

ஆசிரியர் இந்நாவல் சொல்லல் முறையில் அபாரமாக வெற்றிபெற்றுள்ளார். நாவல் கச்சிதமான உருவத்துடனும் அழகியலுடனும் நம்மை ஈர்க்கிறது. வெறும் 300 பக்க நாவலில் கற்பனையில் உருவான ஸோமிட்ஸிய நாடு, அதற்கான மதம், அம்மதத்திற்கான ஒரு கிரந்தம், ஆம் கிரந்தம்!, அந்நாட்டின் அரசியல், 14 முக்கிய கதாபாத்திரங்களின் முழுமையான வாழ்க்கை, அண்டை நாடுகளின் அரசியல் நிலவரம் என இத்தனையும் ஒருங்கமைவது அபூர்வம். கதை ஒரே நேர்கோட்டில் சொல்லப்படாமல் பல்வேறு கதாபாத்திரங்களின் வாழ்க்கைச் சித்தரிப்பின் ஊடாக விரிகிறது.

க்ருஷ் எனும் கிருஷ்ணமூர்த்தி என்ற இராணுவத் தலைவரிடம் ஸோமிட்ஸிய-இந்திய எல்லையில் தொடங்கும் நாவல் அவரின் சொந்த ஊரில் முடிகிறது. க்ருஷின் அனுபவமாக நாம் அறிவதுடன், செல்லசாமி எனும் ஆசிரியர் படிக்கும் சிறு செய்தியாக, ஜூலியஸ் லுமும்பா – ஹான்ஸ் வெயிஸ்முல்லர் எனும் இரு நண்பர்களின் ஊர் சுற்றல் அனுபவமாக, ஈனோங் – வாங்யே என்ற இரு உயர்மட்ட ஸோமிட்ஸிய பிரமுகர்களின் வாழ்க்கைச் சித்தரிப்பாக, அமித் மிஸ்ரா எனும் செய்தியாளரின் செய்திக் கட்டுரையாக, பகதூர் சிங் எனும் இந்தியனின் இறுதி நாளாக, வாங் சுக் & இல் சுங் எனும் இரு ஒற்றர்களின் விவரணையாக, பூ தோர்ஜி எனும் இராணுவ சமையற்காரனின் அவதானிப்புகளாக நாவல் கதையோட்டம் ஒன்றை ஒன்று நிரப்பி நகர்கிறது.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்வும் சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது. ஜூலியஸ் லுமும்பாவின் ஆப்ரிக்க பழங்குடி வாழ்க்கை, அவன் இனபேதத்தின் இகழ்ச்சிகளுக்கு ஆளாவது, அவனில் உறையும் யாதும் ஊரே என்ற மனோபாவம், பறவை அவதானம் மற்றும் மலையேற்றத்தில் வாழ்வை அற்பணித்த தூய பழங்குடி மனம். இதில் ஹான்ஸ் வெயிஸ்முல்லர் எனும் ஜெர்மானியன் கதாபாத்திரம், ஆசிரியர் Seven Years in Tibet எனும் நாவலின் பாதிப்பில் உருவாக்கியுள்ளார். 26ஆம் ஸோமிட்ஸு என்ற பதின்வயதுச் சிறுவன் ஸோமிட்ஸியாவின் அரசன். அவனில் நவீன அறிவியல் மற்றும் உடல் விடுதலை மீதான தாக்கங்களை ஹான்ஸ் எழுப்புகிறார். இந்தப் பகுதிப் புனைவை நிஜ வாழ்க்கையில் தலாய் லாமா – Heinrich Harrer உறவாக நாம் Seven Years in Tibet நாவலில் காணலாம். (The Devil’s Guard எனும் மற்றொரு நாவலின் தாக்கமும் உள்ளதாக ஆசிரியர் பின் குறிப்பில் சுட்டுகிறார்).

சிறுவனை அரசனாக்கி அனைத்து அதிகாரங்களையும் வைத்திருக்கும் பிற்போக்கு ஈனோங் மற்றும் ஸோமிட்ஸியாவை நவீன சோஷலிசப் பாதையில் கொண்டுபோக வினையும் வாங் யே இடையிலான அரசில் மோதல்கள் சுவாரசியம். இவற்றில் யாரெல்லாம் பகடைகள் ஆகின்றனர் என்பது விறுவிறுப்பாக விரிகிறது. அமித் மிஸ்ரா கதாபாத்திரம் மூலம் எழுதும் செய்திக் கட்டுரை நமக்கு ஸோமிட்ஸியாவின் முழு விவரங்களையும் அதன் அரசியலையும் மக்களின் நம்பிக்கைகளையும் சொல்ல நமக்கு முழுச் சித்திரம் கிடைக்கிறது. மிக நல்ல உத்தி. ஸோமிட்ஸியாவின் நில வர்ணனைகளும் அங்கு வாழும் மக்களின் எளிமையான வாழ்வும் சுருங்கச் சொல்லி விரிக்கிறார் ஆசிரியர். நிருபா மற்றும் லேக்கி என்ற இரு பெண்கள், ஸோமிட்ஸுவின் அம்மாவாக உருப்பெறும் ஒரு பெண், இல் சுங் எனும் ஒற்றனின் வீட்டில் காணப்பெறும் இரு பெண்கள் என அனைவருமே ஆண்களுக்கு அடங்கியோ அல்லது ஆண்களால் வஞ்சிக்கப்பெற்றோ காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஸோமிட்ஸியாவின் பூர்வ கிரந்தம் ஒரு கவிதையாக, தத்துவமாக, தர்க்கங்களாக, சட்டங்களாக, ஸோமிட்ஸியாவின் ஆதி தோற்றுவாயாக, பூடகமான கனவு மொழியில் அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. கதைக்கு ஒட்டாமல் இருப்பதுபோல் முதலில் தோன்றினாலும் அதன் உள்ளடுக்குகள் நாவலின் சிறப்பு. மீள் வாசிப்பைக் கோரும் சிறந்த வரிகள். ஆசிரியர் யுவனின் அங்கதம் பெரும்பாலோர் அறிந்ததே. இங்கேயும் பல பகுதிகளை, இக்கட்டான தத்துவக் கட்டங்களையும், நாம் புன்னகையுடனே கடக்கவேண்டும். மிக சுவாரசியமான மொழி நடைகள். தமிழகத்தில் நடக்கும் கதைக்கான நடை, ஸோமிட்ஸியாவின் நடை, ஸோமிட்ஸிய கிரந்தத்தின் நடை, ஐரோப்பிய ஆப்ரிக்கக் கதை மாந்தர்களின் சொல் நடை என பலவும் கையாளப்பட்டுள்ளது.

கதையின் முடிவு மூன்று முக்கிய கதைமாந்தர்களின் சுய விளக்கங்களைக் கூறி எதிர்பாராத விதமாக முற்றுப் பெறுகிறது. நம்மில் வாழ்வின் மேல் சக மனிதர்களின் மேல் பல்வேறு கேள்விகளையும் ஐயங்களையும் விதைத்து ஆசிரியர் வெற்றியுடன் விடை பெறுகிறார்.

 

– சதீஷ் குமார்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-81-8493-516-5.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: