Home » Novel » மெய்நிகரி

மெய்நிகரி

நாளிதழ்களில் கவிப்பேரரசு வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் “மெய்நிகரி” என்ற தலைப்பில் நாவல் எழுதி வெளியிட்டிருக்கிறார் என்ற தகவலைப் படித்தவுடன் புத்தகத்தின் தலைப்பே புதுமையானதாகப்பட்டது. ஆங்கில நாளிதழ் ஒன்றில் நூல் பற்றிய செய்தியைக் கண்டவுடன் நாவலின் தலைப்பைக்கூடச் சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை. ஆனால் காட்சி ஊடகம் (Visual Media) தொடர்பான நாவல் என்று அறிந்துகொண்டபோது உடனே அந்த நூலினைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் துளிர்விட்டது.

மெய்நிகரி, கபிலன்வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், ரூ. 125

நேர்த்தியாக அச்சிடப்பட்ட அந்த நாவலின் உள் அடக்கமும் மொழி நடையும் இளமைத் துள்ளலுடன் இருப்பதை அறிய முடிந்தது. ஒரு சின்னத் திரைச் சேனலின் எடிட்டிங் அறையில் தொடங்கும் இந்த நாவலை ஒரு மூச்சில் படித்து முடித்தவுடன் ஒன்று மட்டும் புரிந்தது. புலிக்குப் பிறந்தது பூனையில்லை என்று அறிய முடிந்தது. மர்ம நாவலைப் போன்ற விறுவிறுப்புடன் நகரும் கதை ஐந்து நவநாகரீக இளைஞர்களின் நட்பையும் அவர்களுக்குள் அவ்வப்போது நிகழும் உரசல்களையும் மாநகர வாழ்வின் யதார்த்தத்துடன் இணைந்துசெல்கிறது.

மெய்நிகரி என்றால் என்ன என்பதன் பொருள் விளக்கத்தோடு நாவல் தொடங்குகிறது. மெய்க்கு நிகரானது. ஆனால் மெய் அல்ல. உண்மைபோல் தோற்றமளிக்கும் நிகழ்ச்சிகளை சின்னத்திரையில் உருவாக்குவது பற்றிய நாவல் இது. புற்றீசல் போலப் புறப்பட்டிருக்கும் சேனல்களுக்கு புதிய புதிய நிகழ்ச்சிகளைத் தயாரிப்பது பெரிய சவால். மக்களைத் தனது நிகழ்ச்சியுடன் ஒன்றிடச் செய்ய அனைத்து வகைக் கற்பனை சக்தியையும் அவர்கள் உபயோகிக்க வேண்டியுள்ளது. அதுவும் இளைஞர்களை ஈர்ப்பது சாதாரண செயல் அல்ல. இதற்காக சின்னத்திரை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் படும்பாட்டை இந்த நாவல் சுவாரஸ்யமாக விவரிக்கிறது. நீயா நானா, ஜூனியர் சிங்கர், சொல்வதெல்லாம் நிஜம், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளைத்தான் மெய்நிகரிகள் என்று நூலாசிரியர் விவரிக்கிறார்.

டெரனஸ் பால் என்ற அதிநவீன இளைஞன் தனது நான்கு இளம் நண்பர்களுடன் இணைந்து ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியை உருவாக்குகிறான். அந்த உருவாக்கத்தில் அவர்களுக்குள் ஏற்படும் பிணக்குகள், ஏமாற்றங்கள், சந்தோஷங்களை சரளமான நடையில் நாவல் சொல்கிறது. இடைஇடையே அவர்களுக்குள் பூத்துக் குலுங்கும் காதல் உணர்வுகளும் நூலினை இளம் துள்ளலுடன் படிக்கத் தூண்டுகின்றன.

அடுத்த தலைமுறை சந்திக்கப் போகும் மிகப் பெரிய பற்றாக்குறை எது தெரியுமா? தண்ணீரா? இல்லை. மின்சாரமா? இல்லை. பணமா? இல்லை. பிறகு எது? கற்பனைதான். கற்பனை வளம் இல்லாமல் எதிர்காலத் திரைப்படத்துறை வறண்டு போகப் போகிறது என்று நூலில் ஒரு கதாபாத்திரம் எச்சரிக்கிறது. அடுத்த சேனலை மிஞ்ச வேண்டும். டி.ஆர்.பி. ரேட் எகிற வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்பதை நேர்த்தியாகப் பதிவு செய்கிறது இப்புத்தகம். இந்த நாவலைப் படிக்கும்போது எழுதப்பட்டிருப்பது கற்பனைச் சம்பவங்களா அல்லது உண்மையில் நடந்த நிகழ்ச்சியா? என்ற ஐயமே எழுகிறது.

ஒரு ரியாலிட்டி ஷோ சூட் செய்வதை தொழில்நுட்ப ரீதியாக உருவாக்கும்போது இந்த நாவல் தகவல் தொழில் நுட்பத்தைக் கற்பிக்கும் பாடநூல் போலவும் தெரிகிறது. கபிலனின் யதார்த்தமான மொழி நடை படிப்பதற்கு எளிமையாக இருக்கிறது. அன்றாட வாழ்வில் இளைஞர்கள் உச்சரிக்கும் ஆங்கிலச் சொற்களை தமிழில் மொழி பெயர்க்காமல் அப்படியே தமிழில் கையாண்டிருப்பது நாவலை உயிரோட்டமுள்ளதாக்குகிறது. ஆங்காங்கே சிந்திக் கிடக்கும் நகைச்சுவை வாசகனுக்கு சுவை ஊட்டுகிறது.

சிறு சிறு பகுதிகளாக ஒவ்வொன்றும் ஐந்து பக்கங்களுக்கு மேற்படாமல் பிரித்து எழுதப்பட்டிருப்பது நூலை எளிமைப்படுத்தியிருக்கிறது. பெண் கதாபாத்திரங்கள் உலா வரும் நாவலில் பெண்களை மயக்கும் வில்லன்களும் இருக்கத்தானே செய்வார்கள். ஆனால் அதுவும் ஒரு வரையறைக்குள் முகச்சுளிப்புக்கு உட்படாமல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மிக விரைவாக நாவல் முடிந்துவிட்டதே என்பதைத் தவிர குறையேதும் இல்லை. இளைஞர்களுக்கு, குறிப்பாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காதல் கொண்டவர்களைக் கவரும் அற்புதமான நாவலைத் தந்த கபிலனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். படியுங்கள். சின்னத்திரை ரகசியங்களை நாமும்தான் அறிந்துகொள்வோமே.

தி.இரா. திருவேங்கடராஜ்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/meinigari.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


1 Comment

  1. K.JAYASELVAM says:

    KABILAN, VAIRAMUTHUVIN MAGAN. INDHA ORE ORU ADAIYAALAM PODHUME. AVAN YEDHA YEZHAVAI KIRIKKI THALLINAALUM PUGAZHA. YEPPADA? NEENGALLAAM THIRUNDHA POREENGA. INDHA KABILANAI VIDA ORU LATCHAM ORU KODI THIRAMAIYAANA ILAINGNARGAL VAAIPPU ILLAAMAL IRUKKURAANGA.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: