Home » Articles » அமெரிக்க அனுபவங்கள்

அமெரிக்க அனுபவங்கள்

அமெரிக்க வாழ்க்கை பற்றி எத்தனையோ புத்தகங்கள், பயணக் கட்டுரைகள் இருந்தாலும், இந்தப் புத்தகம் தனித்தன்மையோடு இருக்கக் காரணம் இதன் ஆசிரியரே.

எந்தவொரு சமூகத்திலும் சில ஆண்டுகளாவது வாழ்ந்தால்தான் அதை சரிவர புரிந்துகொள்ள முடியும். இந்நூலின் ஆசிரியர் பத்து ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் வாழும் வாய்ப்பைப் பெற்றவர். 1960-களிலும், 2000-க்குப் பிறகும், அமெரிக்க வாழ்க்கையை நேரில் அறிந்தவர். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழகத்தின் ராமநாதபுரத்தில் பிறந்து வளர்ந்த பெண்மணி. எந்த அரசியல் சார்பு நிலையும் இல்லாதவர். ஆசிரியரின் இத்தகைய சிறப்பு அம்சங்களே, அமெரிக்கர்களின் அன்றாட வாழ்வின் நிறை குறைகளை உள்ளது உள்ளபடி எழுதச் செய்துள்ளது.

அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை, நாகேஸ்வரி அண்ணாமலை, அடையாளம் பதிப்பகம், ரூ. 165

“அமெரிக்காவைப் பற்றி வரும் கட்டுரைகளையும், துணுக்குகளையும் படித்திருக்கிறேன். பெரும்பாலான துணுக்குகள் அவை எழுதப்பட்ட, சொல்லப்பட்ட சூழ்நிலையைப் பற்றிக் கூறாததால் படிப்பவர்களுக்கு வேறு விதமான அர்த்தத்தைக் கொடுத்திருக்கக் கூடும்; அவை சில சமயம் உண்மையைத் திரித்துக் கூறுவது போலவும் இருக்கும்” என்று கூறும் ஆசிரியர், புத்தகத்தில் தான் விவரித்திருக்கும் விஷயங்களை மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார்.

அமெரிக்கக் கனவில் வாழும் இந்திய மென்பொறியாளர்களும், ‘க்ரீன் கார்ட்’ கனவு கொண்ட அமெரிக்க வாழ் இந்தியர்களும் படிக்கவேண்டிய அத்தியாயம், ‘இந்தியர்களின் இக்கட்டு நிலை’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் நிலை குறித்த ஆசிரியரின் கருத்துகள். இவர் விளக்கியுள்ள பல சம்பவங்கள் வேதனை அளிக்கக் கூடியதாகவே உள்ளன. அமெரிக்காவில் குடியேறியுள்ள பிள்ளைகளின் பெற்றோரின் நிலை குறித்து மிகச் சிறப்பாக உணர்ந்து சொல்லியிருக்கிறார். தம் இறுதிக் காலங்களை பிள்ளைகளுடன் கழிக்க விரும்பி அமெரிக்காவில் சென்று தங்கும் முதியவர்களுக்கு ஏற்படும் மிக முக்கியமான மருத்துவக் காப்பீட்டுப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை இவர் அலசியுள்ள விதம், அங்கு சென்று தங்க விரும்பும் ஏனையோருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும். குடியேறிய நாட்டின் கலாசாரத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதின் சிரமங்களையும் இழப்புகளையும் அலசி ஆராய்ந்திருக்கிறார்.

பெண்ணியமும் பெண் சுதந்திரமும் முதலில் அமெரிக்காவில் தோன்றியதற்கான காரணம் அவர்களின் பொருளாதார சுதந்திரம் என்றாலும், அமெரிக்காவில் குடும்பம் என்ற சமூக நிறுவனம் குலையத் தொடங்கியதும். குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுவதும் அதனால்தான் என்ற உண்மையை விரிவாகப் பேசுகிறார்.

இன்றைய அமெரிக்கப் பொருளாதாரம் கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதுதானே உண்மை. இவர்களுக்குப் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டால் அது மொத்த அமெரிக்காவையே பாதிக்கக்கூடிய சூழ்நிலையில்தானே இருக்கிறது. ஜனாதிபதி ரீகன் காலத்திலிருந்து, அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதாரம் வேறு பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. இந்த முப்பது ஆண்டுகளில்தான் ஏழை, பணக்காரர்களுக்கிடையே இடைவெளி அதிகமாகி இருக்கிறது. அமெரிக்கா போகும் திசையைத் திருப்ப ஜனாதிபதி ஒபாமா எவ்வளவோ முயன்று கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி இதை ஒபாமாவின் சோஷியலிசம் என விமர்சனம் செய்கிறது. ‘அமெரிக்க ஜனநாயக நாகரீகம் பற்றிப் பெருமையாகப் பேசப்பட்டாலும் அமெரிக்காவை இப்போது ஆள்வது பணம் படைத்த அமெரிக்க கார்ப்பரேட்டுகள்தான், அமெரிக்காவின் உண்மை நிலையை ஓரளவிற்குப் படம்பிடித்துக் காட்டவேண்டும் என்ற என் ஆசையின் விளைவே இந்தப் புத்தகம்’ என்று சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

மேலும், அமெரிக்காவின் நான்கு பருவநிலைகள், அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய பல நாட்டு உணவு வகைகள், உணவு உற்பத்தி முறைகள், அதிக அளவில் வீணாக்கப்படும் உணவுகள், தோட்டப் பராமரிப்பு உட்பட பெரும்பாலான வேலைகளுக்கு மெக்சிகோவிலிருந்து வரும் குடியேறிகள், நீண்ட ஆயுள் கொண்டவர்களாக இருக்கும் அமெரிக்கர்கள் முதுமையில் படும்பாடு, பொதுப்பணித் துறைகளில் தேவை அறிந்து சேவை செய்பவர்கள் மற்றும் அன்பான மருத்துவ சேவை செய்பவர்கள், கடன் அட்டைகளின் பிடியில் சிக்கித் திணறும் அமெரிக்கர்கள், அமெரிக்க நீதிமன்றங்களின் சிறப்பான செயல்முறைகள் என பல்வேறு அனுபவங்களை தெளிந்த நீரோட்டமாக எழுதிச் செல்கிறார்.

மொத்தத்தில் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது ‘அமெரிக்காவும் நிறைகளும் குறைகளும் கலந்த ஒரு நாடு தான். அமெரிக்கர்களும் மனிதர்கள்தான்’ என்பதை யதார்த்தமாக உணர்ந்துகொள்வீர்கள். அதுவே இப்புத்தகத்தின் வெற்றி.

எஸ். சொக்கலிங்கம்

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0001-308-9.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: