Home » Novel » விஸ்வரூபம்

விஸ்வரூபம்

சொம்புக்குள் அஸ்தியாக ஒரு கேரெக்டர் படைக்க முடியுமா? விஸ்வரூபத்தில் செய்திருக்கிறார் இரா. முருகன். ( Era Murukan Ramasami) காசிக்குப் போய் கங்கையில் கரைக்க வேண்டி விசாலம் மன்னியின் அஸ்தி கை மாறி ஆள் மாறி கடைசியில் கங்காவில் கரைகிறது. நாவல் முழுக்க ஆளை அடித்துப்போடும் வசனங்கள் மற்றும் வர்ணனைகள்.

விஸ்வரூபம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், ரூ. 400

மகாலிங்கய்யன். வேதத்தில் ஏறிய ஜான் கிட்டாவய்யன். தெரிசா. நீலகண்டன். நாயுடு. கற்பகம். ரெட்டி. பீட்டர். 102 அத்தியாயங்கள். ஐந்து நிமிடங்களுக்குள் மடியில் சாய்த்துக்கொள்ளாமல் புஸ்தகத்தைக் கையில் வைத்துப் படிக்கமுடியாதபடி 790 பக்கங்கள். பிரம்மாண்டமான நாவல்.

//மனசை வெல்லமும் தேனும் விட்டுக் கரைத்து பிரியத்தோடு இண்டு இடுக்கு விடாமல் நிரம்பி வழியும் வாத்சல்யம்.// அம்மாவின் அன்புக்கு இப்படியொரு இடம்.

“கிருஷ்ண பகவானோ கிறிஸ்து மகரிஷியோ இல்லை ரெண்டு பேரும் கூடிப் பேசியோ அவளை தடுத்தாட்கொள்ள ஏதாவது உருவில் வந்துவிடுவார்கள்” என்று காசர்கோட்டுக் குடும்பத்திலிருந்து வேதம் ஏறி தேவ ஊழியம் செய்யும் தெரிசாவின் திடமான நம்பிக்கையாக வருகிறது.

திடீர் திடீரென்று சுவரில், அறை மூலையில், கூட்டத்தில் என்று பித்ருக்கள் மசமசவென்று பிரசன்னமாகிறார்கள். வேண்டியவர்கள் காதுபட பேசுகிறார்கள். நாவல் பக்கங்கள் முழுக்க தீனமாக ஒரு அமானுஷ்யக் குரல் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கிறது. பிரிட்டீஷ் கால சென்னை. மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம். எடின்பரோவில் செத்தவன் கையிலிருந்து ரொட்டி எடுத்துச் சாப்பிட்டு பசியாறுவது உறையவைக்கும் சீன்.

திருக்கழுக்குன்றத்தில் ரெட்டியக் கன்னிகை கேரெக்டர் இளசுகளுக்கு கிளுகிளு. கப்பலேறிப் போய் காப்பிரிச்சி லோலாவோடு மகாலிங்கய்யன் அடித்த கொட்டமெல்லாம் புஸ்தகத்தை மூடாமல் படிக்க வைக்கும் பக்கங்கள். வைத்தாஸ் என்கிற புத்திரபாக்கியம் வேற.

//ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாடை. நீலகண்டன் நினைப்பில் கற்பகம் எப்போதும் கறிவேப்பிலை வாடையோடுதான் வருகிறாள்.// அசர அடிக்கும் இடம். படிக்கும்போது யார் யாருக்கு என்னென்ன வாசனை என்று வாசகனின் மூக்கு மூளைக்கு உத்தரவு போடுகிறது.

1800களின் இறுதியும் 1900களின் முற்பகுதிகளிலும் கதையை அசால்ட்டாய் நகர்த்துகிறார்.

மகாலிங்கய்யன் ஸ்த்ரீலோலன். சம்போகமே வாழ்க்கையாக இருந்தவன். யாருக்கேனும் லிகிதம் எழுதிக்கொண்டே இருக்கிறான். இப்படி கடிதார்த்தமாக கதை சொல்லுவதுகூட வாய்பிளக்க வைக்கிறது.

காராகிரஹத்திலும் அந்நிய தேசத்திலும் அடிபட்டு லோல்பட்டு கப்பலேறி மதராஸ் வந்திறங்கும் மகாலிங்கய்யன் என்கிற வரதராஜ ரெட்டி என்கிற ஒருவனைப் பற்றிய விஸ்தாரமான நிகழ்ச்சி முடிப்புகள் கதையெங்கும். அங்கங்கே கொஞ்சம் ‘அ’ந்த வாசனை தாராளமாய்க் கதையோடு இழைந்து வருகிறது.

கடைசி அஞ்சாறு அத்தியாயத்தில் காசியின் கங்காதீரத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறார். ஸ்தாலிச் சொம்போடு பகவதி காசி வீதிகளில் நடப்பது பற்றிய விவரணைகள் அபாரம். நாமும் வீதிவீதியாக அவள் பின்னே அலைகிறோம்.

ராம் நாம் சத்ய ஹை, ராம் நாம் சத்ய ஹை என்று மணிகர்ணிகா கட்டத்தில் பிரேதம் சுமந்து செல்பவர்களின் கோஷம் படிக்கப் படிக்க வெகு அருகாமையில் கேட்கிறது.

ஆவியோ பித்ருவோ ஏதேனும் ஒரு ரூபமெடுத்து ப்ரியப்பட்டவர்களிடம் பேசுவார்கள், தொடர்பில் இருப்பார்கள் என்பது தொன்றுதொட்டு நம் மக்கள் நம்புவது. அதை எடுத்துக்கொண்டு பேயாட்டம் ஆடியிருக்கிறார் இரா.மு.

அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியாக நாலு பக்கம் சிறுகதையாக எழுதலாம் என்று “மா நிஷாத” கேட்டதாக முன்னுரையில் எழுதியிருக்கிறார். இதை நாலு பக்கத்தில் எழுதமுடியுமா என்ன? நானூறு பக்கத்திலேயே அடங்கவில்லை.

ஹாலுக்கு வெளியே என் பாட்டி படம் தொங்குகிறது. இப்படியும் அப்படியும் கடக்கும்போது “என் அஸ்தியை கங்கேலே கரைக்கலயேடா….” என்று உதடசைந்து குரல் கேட்கிறது. விஸ்வரூபம் எஃபெக்ட்.

வெங்கடசுப்ரமணியன் ராமமூர்த்தி

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-81-8493-749-7.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: