Home » Novel » லஜ்ஜா – அவமானம்

லஜ்ஜா – அவமானம்

வங்கதேசத்தின் தஸ்லிமா நஸ்ரின் அவர்கள் எழுதியை லஜ்ஜா (அவமானம்) என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து இருப்பவர் கே.ஜி. ஜவர்லால். இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் விளைவையும் அப்பொழுது வங்க தேசத்தில் இருந்த அசாதாரண சூழலைப் பற்றியும், தேசபக்தி கொண்ட ஒரு இந்துக் குடும்பத்தின் வாயிலாக இந்தப் புத்தகம் விளக்க முற்படுகிறது. சுதாமயி ஒரு மருத்துவர், அவரது மனைவி கிரண்மயி, அவர்களுக்கு மாயா என்ற கல்லூரி செல்லும் மகள், கல்லூரி முடித்து வேலை தேடும் சுரஞ்சன் என்ற மகன், இவர்களை மையப்படுத்தியே இந்த நாவல் நடைபெறுகிறது.

லஜ்ஜா – அவமானம், தஸ்லிமா நஸ்ரின், தமிழில்: கே.ஜி. ஜவர்லால், கிழக்கு பதிப்பகம், ரூ. 200

பாபர் மசூதி என்ற ஒரு நிகழ்வை வைத்துக்கொண்டு வங்காளத்தில் இந்து மக்களுக்கெதிராக கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையையும், இந்துக் கோயில்களுக்கு உண்டான நிலையையும் படிக்கும் எவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். எந்த ஒரு இந்திய ஊடகமும் இதைப்பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை.

இந்த நாவலைப் படிக்கும் பொழுது நான் கவனித்த மிகப்பெரிய விஷயம் இந்தியாவைப் போன்ற மத பேதமில்லாத நாட்டிற்கும் ஒரு மதத்தின்பால் பற்றுக்கொண்ட ஒரு நாட்டிற்குமான ஒரு பெரிய வித்தியாசம். அவ்வாறான இரு நாடுகளும் தன்னுடைய சிறுபான்மையினரை எப்படி நடத்துகின்றன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அதே போல் ஒரு நாட்டின் மதம் சார்ந்த சம்பவம் உலகளாவில் எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இந்த நாவலின் மையக் கரு சொந்த நாட்டிலேயே ஒருவர் இரண்டாம் தரக் குடிமகனாக நடத்தப்படுவதன் வலி என்று சொல்லலாம். இந்த வலியை படிப்படியாக சுதாமயி குடும்பத்தின் வாயிலாக ஆசிரியர் அருமையாக விளக்கி இருப்பார். மத பேதம் இல்லாமல் இருக்கும் ஒரு நாடு எப்படி அடிப்படைவாதிகளின் கைகளில் சிக்கி அதனால் ஒரு அப்பாவிக் குடும்பம் படும் பாடு என்ன என்று படிப்படியாக அழகாக விவரிச்சி இருப்பார். ஒரு சின்னப் பொறியைக் கூட அடிப்படைவாதிகள் தமக்கு சாதகமாக மாற்றி தங்களுடைய வெறியாட்டத்தைக் காட்டுவார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். சொந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடிய ஒருவரை அடிப்படை வாதமும், மதவெறியும் எப்படி சீரழிக்கிறது, தாய்நாட்டிற்காக உயிரையே தியாகம் செய்யத் துணியும் ஒருவருடைய மன நிலையை எப்படி மாற்றுகிறது என்பதை நாவலில் சிறு சிறு உரையாடல்கள் மூலமும், சம்பவங்கள் மூலமாகவும், அழகாக உணர்த்துகிறார்.

லஜ்ஜாவைப் படிக்கும் பொழுது எனக்கு “Train to Pakistan” நாவலைப் பற்றிய நினைவுகள் எழுந்தன. லஜ்ஜாவின் தாக்கத்தை விட பல ஆயிரம் மடங்கு தாக்கத்தை “Train to Pakistan” நாவல் என்னுள் ஏற்படுத்தியது. அதற்கான காரணம் குஷ்வந்த் சிங்கின் மொழிநடை, பாத்திரப்படைப்பு. லஜ்ஜாவில் சுரஞ்சனின் தான்தோன்றித்தனமான வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகள் படிப்பவர்களுக்கு ஒரு வித எரிச்சலையே தருகிறது. அதே போன்று சுதாமயியின் பிடிவாதமும் ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும் பிற்பாடு சலிப்பைத் தருகிறது.

இந்த நாவலின் இன்னொரு பலவீனம் நாவலின் ஊடே பல்வேறு பாத்திரங்களின் வழியாக கொடுக்கப்படும் statistics. இங்க அவ்ளோ பேரை கொன்னுட்டாங்க அங்க அவ்ளோ பேரை கொன்னுட்டாங்க, அத்தனை கோயில்களை இடிச்சிட்டாங்க, இந்த விஷயங்கள் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் திரும்பத் திரும்ப ஒன்றுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள் இதைச் சொல்லுவதால் இது நாவலா இல்லை புள்ளியியல் துறையின் ஆண்டு அறிக்கையான்னு தோன்ற ஆரம்பிக்கிறது. அதே போல் நாவலின் நடையும் சிறிது அயர்ச்சியைத் தருகிறது.

அதையும் தாண்டி இந்த நாவலின் வெற்றி என்று சொன்னால் இந்த நாவல் தூண்டும் பல்வேறு வகையான சிந்தனைகள். முக்கியமாக ஒரு நாடு அடிப்படைவாதிகளின் கைகளில் சிக்கினால் என்ன பாடுபடும் என்பதை வங்காளத்தின் வரலாற்றின் வழியே நாவலாசிரியர் விளக்கியுள்ளார். இந்த நாவலின் தாக்கம் இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் சில நாட்களேனும் இருக்கும்.

சந்தோஷ் குமார்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-5135-158-0.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: