Home » Novel » டான் குயிக்ஸாட் – இரண்டாம் பாகம்

டான் குயிக்ஸாட் – இரண்டாம் பாகம்

1605ஆம் ஆண்டில் ஸ்பானிய இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவராக கருதப்படும் “மிகுயெல் த செர்வான்ட்டிஸ்” எழுதிய டான் குயிக்ஸாட் என்ற இக்கதைதான் இலக்கிய சரித்திரத்தில் வெளியான முதல் நவீன புதினம் என்று கருதப்படுகிறது.

உலகெங்கிலும் மிக அதிகம் பேரால் வாசிக்கப்பட்டு, மிக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களில் இந்தப் புத்தகமும் ஒன்று. இந்தப் புத்தகத்தின் வாயிலாகத்தான் டான் தமிழிலும் அடி எடுத்து வைக்கிறார் போலும்!

டான் குயிக்ஸாட் – இரண்டாம் பாகம், செர்வான்ட்டிஸ், சந்தியா பதிப்பகம், ரூ. 470

‘புத்தக ஆசிரியர் தனக்கு கிடைக்கப்போகும் பாராட்டுகளை விட பணத்தைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறார்’ என்று சாம்சன் கேரஸ்கோ என்ற கதாபாத்திரம் மூலம் மூல ஆசிரியர் கூறும்போது இவர் ரொம்ப குசும்பு பிடிச்ச ஆளா இருப்பார் போல என நினைத்தால், இவர் வறுமையால் உயிரிழந்தார் என்று அறிந்தபோது திடுக்கிட்டது.

இதன் முதல் பாகத்தைப் படித்துவிட்டு இப்புத்தகத்தைப் படித்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும் என்று தோன்றியது. மூல ஆசிரியரின் எழுத்துநடையிலும் சொற்பிரயோகத்திலும் மொழிபெயர்ப்பு ஆசிரியர் எந்த விதத்திலும் தலையிடவில்லை என்று தோன்றுகிறது. கொஞ்சம் தமிழ் வழக்கிற்கு மாற்றி எழுதி இருக்கலாம் என்பது என் கருத்து.

இக்காலத்தில் சினிமா நடிகர்களுக்கு இளைஞர்கள் ரசிகர்கள் என்பதை மீறி சினிமாவில் நடிப்பதை நம்பி தன் ஹீரோ வீரனென்றும் பராக்கிரமசாலி என்றும் நம்புவதைப்போல் 17 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் கதைகளில் வரும் பாத்திரங்களின் அடிமையாகி இருந்ததை இப்புதினத்தின் மூலம் அறிய முடிகிறது.

கதை முழுக்க ஐரோப்பிய புராணங்களின் மேற்கோள்கள் விரவிக் காணப்படுகின்றன. ஐரோப்பிய வரலாறு மற்றும் ஐரோப்பிய புராணங்கள் தெரிந்தவர்களுக்கு இப்புதினம் இன்னும் நெருக்கமாக இருக்கும். தெரியாதவர்களுக்கு ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அடிக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

முதல் பாகத்தோடு கதையை முடித்துவிடலாம் என்றுதான் கதாசிரியர் நினைத்திருப்பார் போலும். கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தை எழுதி இருப்பார் என்று தோன்றுகிறது. முதல் பாகத்தில் டான் குயிக்ஸாட் மனநோயாளியாக இறுதியில் சித்தரிக்கப்பட்டு கதை முடிவுறுகிறது. இரண்டாம் பாகத்தில் டான் குயிக்ஸாட்டை மனநோயாளி நிலையிலிருந்து மீட்டு அவனை பயணத்துக்கு ஏற்பாடு செய்வதற்கு ஏழு அத்தியாயங்கள் ஆகிவிட்டது!

பிடல் காஸ்ட்ரோவுக்கும், சே குவேராவுக்கும் பிடித்த இலக்கியப் பாத்திரம் டான் குவிக்ஸாட் என்பது உண்மையிலேயே ஆச்சரியமான தகவல்தான்.

டான்குயிக்ஸாட்டின் வரலாற்றை மூன்று பேர் கூறுவது போல் இப்புதினம் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர் சிட் ஹேமட்டி பெனன்கெலி என்ற பெயருடைய அரேபிய வரலாற்றாசிரியர். இரண்டாமவர் அரபியில் எழுதப்பட்ட நூலை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்த ஒரு மூர் இனத்தவர். மூன்றாமவர் நமக்கு கதை சொல்பவர் டீ செவான்ட்டிஸ். இதில் டீ செவான்ட்டிஸ் தான் ஒரிஜினல். மற்ற இருவரும் கற்பனை பாத்திரங்கள்.

டான் குயிக்ஸாட்டின் கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள அவனுடைய உதவியாளன் சான்கோ கூறும் விஷயம் உதவியாக இருக்கும்: “நாங்கள் ஏதோ வைக்கோல் மெத்தையில் படுத்துறங்கிக்கொண்டு இருப்பதாக நினைக்க வேண்டாம்… நாங்கள் காலணிகளை அணிந்துகொண்டு புறப்படத் தயாராகத்தான் இருக்கிறோம். எந்தக்கால் நொண்டியாகப் போகிறது என்று இனிதான் பார்க்க வேண்டும்!”

ஒரு கட்டத்தில் ராமன் அனுமனிடம் சீதை எவ்வாறு இருப்பாள் என்று சொல்லி அனுப்புவதைப்போல் குயிக்ஸாட் சான்கோவிடம் தனது நாயகியைப் பற்றி வர்ணிக்கிறான்: “என் பெயரைக் கேட்டவுடன் சஞ்சலப்படுகிறாளா, தன் இருக்கையை விட்டு எழுந்து நிற்கிறாளா, தன் கால்களை மாற்றி மாற்றி நிலத்தில் ஊன்றிக்கொள்கிறாளா, தான் சொல்ல வந்ததை திரும்பத் திரும்ப சொல்கிறாளா…” இதைப் படித்தவுடன் அஞ்சான் பட டயலாக் நினைவுக்கு வருகிறது. காலம் மாறினாலும் மனிதனின் சிந்தனை மாறவில்லை!

ஃபேஸ்புக்கில் தத்துவங்களை தங்கள் ஸ்டேட்டஸாகப் போடுவார்கள். இந்தப் புதினத்தில் தத்துவங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. மூல நூல் ஆசிரியர் தன் சமகாலத்தை, அதன் தவறுகளை விமர்சனங்களாக வெளிப்படுத்துகிறார். அக்கால எழுத்துலகத்தைப் பற்றிய அவரது விமர்சனங்களில் காரமும் அதிகம், நையாண்டியும் அதிகம்!

இறுதியில் இக்கதையை எழுதிய பேனா கூறுவதாக இவ்வுலகத்துக்கு மூல நூல் ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்: “டான் குயிக்ஸாட் எனக்காகவே பிறந்தான். நான் அவனுக்காகவே பிறந்தேன். அவன் வீரச்செயல்களை நான் மட்டுமே எழுதுவேன். டான் குயிக்ஸாட் இறந்துவிட்டான். அவன் மூன்றாவதாக ஒரு பயணம் மேற்கொள்ள அவனிடம் சக்தியில்லை. இனியும் வீரசாகசங்களைப் பற்றிய முட்டாள்தனமான புத்தகங்கள் வருவதை நான் விரும்பவில்லை!”

கோ. இளையராஜா

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0001-728-0.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: