Home » Articles » நூல் ஏணி – தலித் பார்வையில் ஆசிரியர்கள்

நூல் ஏணி – தலித் பார்வையில் ஆசிரியர்கள்

“வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி முக்கியமானது. அதைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் வாழ்க்கையில் நீடித்திருக்கக்கூடிய விளைவுகளை உருவாக்குகிறார்கள்” என்கிறார் சாலமன் ஓரிட்ஸ். இது உண்மைதான். ஏதாவது ஒரு வழியில் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் அவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் பாதிப்பு இருந்தே தீரும். இதை யாரும் மறுக்க முடியாது. அது பெரும்பாலும் நமது நல் வாழ்க்கைக்கான வித்தாக அமைந்திருக்கும். சில ஆசிரியர்கள் தங்களது மாணவர்களிடையே பாரபட்சம் காண்பிப்பதும் உண்டு.

நூல் ஏணி – தலித் பார்வையில் ஆசிரியர்கள், ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், ரூ. 80

கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு ரீதியில் நடைபெற்று வரும் சம்பவங்கள் வருத்தமளிப்பதாக இருந்து வருகின்றன. அதற்கு உதாரணமாக பல நிகழ்வுகளை (பாகுபாடு காட்டப்படுவதால் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திய மாணவர்கள், தலித் மாணவர்களோடு ஒன்றாக அமர மறுத்த மாணவர்கள், செருப்பு அணிந்து சென்ற மாணவனுக்கு நேர்ந்த கொடுமை…) தனது முன்னுரையில் தொகுப்பாசிரியர் திரு. ரவிக்குமார் குறிப்பிட்டிருக்கிறார்.

`நூல் ஏணி’ என்கிற இந்தப் புத்தகத்தில் தமிழ் `தலித் எழுத்தாளர்கள்’ சிலர் தம்மைப் பாதித்த, தம் மீது செல்வாக்கு செலுத்திய `தலித் அல்லாத’ ஆசிரியர்கள் சிலரை நினைவு கூர்ந்துள்ளனர். சமத்துவத்தில் மதிப்பு கொண்ட, அதைப் போற்றும் ஆசிரியர்களாகவே இவர்கள் தெரிகிறார்கள். இந்த முன்னுதாரணம் மேலும் பல ஆசிரியர்களை அந்தத் திசை நோக்கி ஈர்க்கும் என நம்புவதாக இப்புத்தகத்தின் தொகுப்பாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

மறைந்த தலித் தலைவர் எல். இளையபெருமாளின் `சித்திரை நெருப்பு’ என்கிற நூலின் ஒரு பகுதியிலிருந்து ஆரம்பிக்கும் இந்தப் புத்தகம், 1969 ஆம் ஆண்டு மத்திய சமூக நலம் மற்றும் சட்டத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்த “Report of the committee on untouchability, Economic and Educational Development of the Scheduled Castes and Connected Documents” என்கிற அறிக்கையின் மொழிபெயர்ப்புடன் முடிகிறது.

கட்டுரையாசிரியர் இளையபெருமாள் 1930களில் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தபோது ஒவ்வொரு வகுப்பறையிலும் தண்ணீர் குடிக்க பானை வைப்பதுண்டு எனவும், அந்தப் பானையில் `பறையன் பானை’ என எழுதப்பட்டிருந்ததாகவும் இதைப் பார்த்து கோபமுற்ற அவர் இரவு ஏழு மணிவரை பள்ளிகூடத்திலேயே தங்கி அனைவரும் சென்றபின் அந்தப் பானையை உடைத்துவிட்டு வீட்டுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு மாத காலம் நடந்திருக்கிறது. ஒரு நாள் பானையை உடைக்கும்போது தலைமையாசிரியர் பார்த்து, `இளையபெருமாள் நிறுத்து’ எனக் கூறியிருக்கிறார். மறுநாள் அவரை அசெம்ப்ளியில் வைத்து ஏன் பானைகளை உடைத்தாய் எனக் கேட்க, அதற்கு அவர் தனது கோபத்தையும், ஆதங்கத்தையும் தெரிவித்திருக்கிறார். அன்றிலிருந்து தலைமையாசிரியராக இருந்த கோவிந்தசாமி பிள்ளை அவர்கள் இது மாதிரி பானையில் ஜாதிப் பெயர் எழுதக்கூடாது. இனிமேல் பானையில் தண்ணீரும், குவளையும் இருக்கும். இஷ்டமில்லாதவர்கள் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து குடிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். அன்றிலிருந்து அவருடைய பிஞ்சு மனதில் இப்படிப் போராடினால் நாம் வெற்றி பெற முடியும் என்று பதிந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அது போல ஊரில் செருப்புப் போட்டுக்கொண்டு நடப்பதையும் சாத்வீக போராட்டத்தின் மூலம் சாதித்திருக்கிறார்.

அடுத்து ஓவியர் சந்துரு ஹைஸ்கூலில் படித்தபோது அவரது படம் வரையும் திறமையைப் பார்த்து நாயுடு சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமசாமி தன்னை ஊக்குவித்ததாகக் கூறியிருக்கிறார். அது தவிர பல்வேறு கால கட்டங்களில் தலித் அல்லாத ஆசிரியர்களான சந்தானராஜ், முனுசாமி, கன்னியப்பன் செய்த உதவிகளைக் குறிப்பிட்டு தனது அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார்.

தொகுப்பாசிரியர் ரவிக்குமார் தன்னை `புத்தகங்களைச் சாப்பிட்டு ஆசிரியர்களிடம் வளர்ந்தவன்’ என்று குறிப்பிடுகிறார். இவர் மேரிபாபு டீச்சரின் செல்லப்பிள்ளையாக இருந்ததாகவும், தனது நகம் கடிக்கும் பழக்கத்தை கைவிடச் சொல்லி ஆசிரியர் கண்ணையன் எடுத்த முயற்சியையும் குறிப்பிட்டிருக்கிறார். அதற்குப் பிறகு, கனிவான முகம் கொண்ட கமலமூர்த்தி சார், ட்ராயிங் மாஸ்டர் கபீர்தாஸ், தமிழாசிரியர்கள் சிதம்பர நடராசன், கல்யாண சுந்தரம், ஞானஸ்கந்தன் ஆகியோர் பற்றி குறிப்பிட்டு தனது `கற்றனைத்தூறும்’ என்கிற நூலை ஆசிரியர் ஞானஸ்கந்தனுக்கு சமர்ப்பித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இவரை மைக்கில் பேச வைத்த அறிவியல் ஆசிரியர் ராமமூர்த்தி, கல்லூரி ஆசிரியர்கள் ஜெயபால் ஆகியோரை அன்போடு நினைவு கூர்ந்திருக்கிறார். தனது வாழ்க்கையை வடிவமைத்தவர்கள் ஆசிரியர்கள் எனும் சிற்பிகள்தான் என நெகிழ்ந்து எழுதியிருக்கிறார்.

அழகிய பெரியவன் தனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திய சுப்பிரமணி ஆசிரியர், மேடைப் பேச்சுக்கு வித்திட்ட அமீர்ஜான், அறிவுரைகள் பல சொன்ன அய்யர் வாத்தியார் (ஆசிரியரின் பெயர் யாருக்கும் தெரியாதாம்!!) ஆகியோர் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கங்களை வர்ணிப்பு ஏதுமின்றி ரத்தினச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

இவர்கள் தவிர, அபிமானி, விழி பா. இதய வேந்தன், அ. ஜெகநாதன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிவா. சின்னப்பொடி ஆகியோர் தங்களுடைய ஆசிரியர்கள் குறித்தும், வெவ்வேறு காலகட்டங்களில் இருந்த சமூக அமைப்பு அவர்களிடையே ஏற்படுத்திய பாதிப்பு குறித்தும் எழுதியிருக்கிறார்கள். தமிழகத்துடன் ஒப்பிடும்போது இலங்கையும் இந்த சாதிப் பாகுபாட்டில் குறைந்ததில்லை என்பது சின்னப்பொடியின் கட்டுரையிலிருந்து தெரிய வருகிறது. அதையும் மீறி சில ஆசிரியர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏணியாக அமைந்திருந்தது பாராட்டத்தக்கது.

அழகிய பெரியவன், சாதியற்ற ஆசிரியப் பெருமக்களும், சாதியக் கொடுமைகள் குறித்த பாடங்களும் இருந்தால் இந்தியாவில் சாதி ஒழிந்துவிடும் என்று தோன்றுவதாக எழுதியிருக்கிறார். சாதி ஒழிகிறதோ இல்லையோ சாதிகளுக்கிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளாவது குறையும். இங்கு உதாரணப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் போல அனைவரும் மாணவர் கரம் கோர்த்து கரை சேர்ப்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக ஒரு புதிய பாரதம் பிறக்கும்! இதற்கு அரசும் சமூகமும் பொறுப்பேற்பதுடன், சட்டங்களை செயல்படவைக்கும் அரசியல் உறுதியும் வேண்டும்.

சித்தார்த்தன் சுந்தரம்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-339-3.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: