Home » Articles » கோணல் பக்கங்கள் 3

கோணல் பக்கங்கள் 3

நண்பர் ஒருவர் நல்ல வாசகர். தேர்ந்தெடுத்து வாசிப்பவர். இணையப்பரிட்சயம் அதிகமில்லாதவர். சமீபத்தில், சாருவெல்லாம் வாசிப்பீர்களா என்றார். விவாதிக்க விரும்பும் தொனியில் கேட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நானும் ஆர்வமாக வாசித்த நூல்களைச் சொன்னேன். சாருவின் படைப்புகளை அணுகவேண்டுமெனில் அவற்றில் எதை முதலில் வாசிக்கலாம் என்று கேட்டுவிட்டார். எத்தனை சிக்கலான கேள்வியது? 2008 பிற்பகுதியில் ஸீரோ டிகிரி வாசித்தேன். நான் வாசித்த முதல் சாரு படைப்பு அதுதான். பாதி கூட வாசிக்கமுடியவில்லை. காரணம் அதற்கு முன்பு நான் புதினங்களென வாசித்தவையனைத்தும் கதைகள். சூன்யத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன். ஆனால் அதன்பிறகு வருடமொரு முறையேனும், முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாக, எதேச்சையாக நடுவிலிருந்து, இப்படியாக பிய்த்துப் பிய்த்தாவது வாசித்து ஏழெட்டு முறை கடந்தாகிவிட்டது. இன்றைய நிலைப்பாட்டில் என் மதிப்பீட்டில் அதுதான் அவரது மிகச்சிறந்த சிருஷ்டி. ஆனால் இதன் அடிப்படையிலேயே நண்பருக்கு அதனை சாருவிற்கான கதவாக திறந்துவைத்தால் தெறித்து ஓடிவிடுவார்.

கோணல் பக்கங்கள் 3, சாரு நிவேதிதா, கிழக்கு பதிப்பகம், ரூ. 225

எனக்குப் புரிந்தவரை, சாரு எந்த விதத்தில் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுகிறாரெனில், அவரை வாசிக்கும்போது, நல்லதாகவோ கெட்டதாகவோ மனத்தில் நமக்கு அவரைப்பற்றிய ஒரு பிம்பம் தேவைப்படுகிறது. ரசித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும், திட்டிக்கொண்டும் வாசிப்பதற்கு அந்த பிம்பம் அவசியமாகிறது.

அது இல்லாவிடில் அந்தப் புத்தகம் கலையிழக்கிறது. புத்தகத்தின் அட்டையிலிருந்து அவரது பெயரை எடுத்துவிட்டால் அதன் மதிப்பு மிகச்சொற்பம். கோணல் பக்கங்களுக்கு இது சரியாய் பொருந்தும். இது அவருக்குப் பெருமையா என்றும் எனக்கு சொல்லத் தெரியவில்லை. அவரது auto-fiction பாணிகூட ஒரு விதத்தில் இதற்குக் காரணம் என்று சொல்வேன். அந்த பிம்பம் இன்று இணைய புழக்கத்தில் வாசகர் வட்டமாகவும் விமர்சகர் வட்டமாகவும் அல்லோலகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டு வட்டத்திலும் எனக்கு ஈடுபாடுண்டு. நடுநிலை என்றெல்லாம் பிதற்றவரவில்லை. இந்த அணுகுமுறைதான் அவருக்கான உகந்ததும்கூட.

இப்புத்தகம், இணையத்தில் எழுதப்பட்ட சாரு-முத்திரை கட்டுரைகளின் தொகுப்பு. நான் பதினோறாம் வகுப்பு படித்த காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இன்று அந்த கட்டுரைகளையெல்லாம் வாசிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதே இதன் நூல்வடிவத்தின் பெருவினை. மொத்தம் 58 கட்டுரைகள். ஒவ்வொன்றையும் விவாதிக்கும் அளவிற்கு ஒவ்வொன்றிலும் தனித்தனி சிறப்பான உட்பொருளெல்லாம் இல்லை. வாசகர் கடிதங்கள், மது போத்தல்கள், அவந்திகா பத்திகள், அவ்வப்போதான தினசரி-பாணி கிசுகிசு இரக தொகுதிகள், அவரது பயணக்குறிப்புகள், திடீரென வெடித்துச் சிதறும் அவரது சமூக அக்கறை வரிகள், தமிழ் எழுத்தாளனின் அவலம், கேரள பெருமை, சக தமிழ் எழுத்தாளர்கள் மீதான நையாண்டி, சினிமாக்காரன் மீதான வரட்டுக்கோவம் மற்றும் ஆங்காங்கே ஒரு தேக்கரண்டி அளவில் உலக இசை/இலக்கியம் என சாருவை நமக்கு என்னவெல்லாமாக தெரியுமோ அத்தனையும் இதிலுமுண்டு. ஆனால் அவைகளுக்கு நடுவேதான் சில முக்கியமான பதிவுகளையும் தொகுத்திருக்கிறார்.

முதலில், வாசகர் கடிதங்கள். கிட்டதட்ட 350 பக்கங்கள் இருக்கும் புத்தகத்தில், இக்கடிதங்களை அகற்றிவிட்டால், பாதிக்குப் பாதி எடை குறைந்துவிடும் என்று நினைக்கிறேன். பெரும்பாலான கடிதங்கள் ஆங்கிலத்திலிருந்து சாரு மொழிபெயர்த்து எழுதியிருப்பதால், அவரது நடையிலேயே இருக்கிறது. இதனாலேயே அவை புனைக்கடிதங்களோ என்று தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை. சம்பவங்களின் நம்பகத்தன்மையை ஆராயாமல் எழுத்தை அப்படியே எடுத்துக்கொள்ளும் வாசகர்களுக்கு இந்தக் கடிதங்களில் உறுத்தலேதுமில்லை. சில கடிதங்கள் ஸீரோ டிகிரியை விவாதிக்கும் பாணியில் தொடங்குகின்றன. ஆனால் சாரு அவைகளை வெறும் கடிதமாக காட்டிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். வி்வாதம் இல்லை. பெண்கள் தங்களின் அகவாழ்வைப் பற்றி ஒரு மனநல நிபுணரிடம் பகிர்வது போல சாருவிடம் பகிர்கின்றனர். சிலர் முதல் கடிதத்திலேயே. அதிலும் ஓரிருவர் சாருவை வாசிக்க ஆரம்பிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். இது எந்த மாதிரியான தர்க்கசாஸ்திரம் என்பது விளங்கவில்லை. அமெரிக்க-வாழ் பெண்களின் கணவர் கொடுமை கடிதங்கள்தான் எக்ஸைலில் அஞ்சலியின் புலம்பல்களாக மறுவியிருக்கின்றன போலும். அமெரிக்காவில் பிறந்த இந்தியர்களைப் பற்றி பேசும் கட்டுரை அருமை. (American born confused Desis)

ஒரு சந்திப்பில் பேத்தி வயதில் இருக்கும் (அவரே அப்படிச் சொல்கிறார்) தாரிணி என்ற வாசகி, குடிப்பதைப் பற்றி எழுதாதீர்கள் என்று சொல்கிறாள். அதற்கு சாரு, தான் அறிமுகப்படுத்தும் இலக்கியங்களையும் இசையையும் நீங்கள் ஏன் தேடிச் செல்வதில்லை என்று கேட்கிறார். மிகச்சரியான கேள்விதான். ஆனால் இதே கட்டுரைத் தொகுப்பில் Famous Grouseக்கு தனி கட்டுரை. VAT69 பற்றிய அவரது ஏக்கம், தாகம் எல்லாம் சொல்லப்படுகிறது. நாவல் தலைப்புகள் தலைப்புகளோடு முடிந்துவிடுகிறது. நிச்சயம் ஒரு உந்துதலைக் கொடுக்கக்கூடிய வகையில் அவர் அவைகளைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.  சொல்லப்போனால் ‘ஜேஜே சில குறிப்புகளு’க்கு சாரு எண்பதுகளில் எழுதியிருந்த அந்த நான்கு ரூபாய் விமர்சனப் பிரதிதான் எனக்கான அவரின் பிம்பம் உருவாக மிகப்பெரிய காரணி. (முதல் பத்தியில் குறிப்பிட்டிருந்த நண்பருக்கு அதைத்தான் முதலில் படிக்கக் கொடுத்தேன்) அப்படியாக, இலக்கிய விமர்சனம் அக்குவேறாய் ஆணிவேறாய் எழுதக்கூடியவரின் ஒரு கட்டுரைத் தொகுப்பில் ஒரு முழுமையான இலக்கிய விமர்சனம்கூட இல்லாததை எப்படி எடுத்துக்கொள்வது?

திருநங்கையாக மாற அறுவை சிகிச்சை செய்துகொள்ளச் சென்ற சம்பவம் அவரின் பாணியான அதிர்ச்சி வரிகளாக பதியப்பட்டுள்ளது. நரிக்குறவர்களுடன் திரிந்தது, நடுவில் வரும் ஓஷோவின் ஒரு கதை, தான் ஒரு கேளிக்கையாளன் அல்ல என நெற்றிப்பொட்டில் அடிக்கும் ஒரு கட்டுரை (இதனை முன்னுரையில் நாஞ்சில் நாடனும் ஆமோதித்திருக்கிறார்), கமல்ஹாசனின் ஒரு கடிதம் (சாருவின் நடையில் நாம் ஓடும்போது, கமல் நாற்காலி போட்டு உட்காரவைத்து பேசுகிறார். அருமை), சிங்கப்பூர் sriகணேஷ் என்பவரது கடிதங்கள் (இவர் அறிமுகம் செய்துள்ள Catch22 என்ற நாவலை amazon’லிருந்து இறக்குமதி செய்துவிட்டேன். கடித ஆழம் அப்படி), ‘எங்கெல்ஸ் மன்னிக்கவும்’ என்ற கட்டுரை (குறிப்பாக அதில் வரும் ஆங்கிலவாசகத்தின் குறும்பு), Hopscotch (julio cortazzar), Feast of the goat (Llosa) போன்ற நாவல்களுக்கான அறிமுகம், குமாஸ்தா வாழ்க்கை என்ற கட்டுரை, இடைப்பட்ட நாட்களில் ஜேப்படித் திருடனாக இருந்தது பற்றிய குறிப்புகள் என புத்தகம் முழுக்க சிலாகிக்கக்கூடிய விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஆனால் அவரது தேய்வழக்குகளை நாம் தாங்கிக்கொள்ளவேண்டும். மணி, அவந்திகாவின் தோழி, நித்யா இந்த வார்த்தைகளை அகற்றிவிட்டு இதனையும் lipogrammatic பட்டியலில் சேர்த்திருக்கலாம்.

நாஸ்திகன் என்பார். குரு ஹஜ்ரத் ஒரு தீர்க்கதரிசி என்பார். ஆனால் அது ஜோசியம் அல்ல என்பார். அதிர்ஷ்டக் கல் மோதிரம் வாங்கி அணிந்துகொள்வார். நடிகை கிரணையும், மீரா ஜாஸ்மினுக்கும் ஜொள்விடுவார். அடுத்த சில பக்கங்களிலேயே சமுதாயம் பெண்ணை போகப்பொருளாகத்தான் பார்க்கிறது என அறச்சீற்றம் கொள்வார். கீரை, வாழைப்பூவெல்லாம் ஆய்ந்து, தேங்காய் துருவி, தாளித்து, காஃபி போட்டுக்கொடுத்து, மனைவிக்கு மருந்து கலந்து கொடுத்து அலுவலகத்திற்கு அனுப்பும் விளிம்பில் தவறாமல் கன்னத்தில் மனைவியின் முத்தம் பெறுவதுவரை தன் அன்றாடத்தை அங்கலாய்ப்பார். அடுத்த கட்டுரையிலேயே தான் குடும்பம், மனைவியெல்லாம் துறந்து வாழும் கலைஞன் என்பார். இப்படி சாருவிற்கே உரித்தான கோக்குமாக்கான எழுத்தைப் படிக்க நமக்கும் ஒரு கிறுக்குத்தனம் அவசியம். அந்த கிறுக்குத்தனம் ஒருவர் எந்த மாதிரியான சாரு பிம்பத்தைக் கையாள்கிறார் என்பதைப் பொறுத்தது. சொல்லப்போனால் அவரே அப்படி ஏதோவொரு பிம்பத்தை நிறுவும் முயற்சியிலேயேதான் தன் எழுத்தைக் கவனித்துக்கொள்கிறார் என்று தோன்றுகின்றது.

புது வாசகர் எவரும் இதில் பரவசப்பட முடியாது என்பதே இதன் அபாயம். எனவே இப்புத்தகத்தை ஏற்கனவே அவரைப் பற்றியான ஒரு பிம்பம் இருப்பவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கிறேன். நிச்சயம் அவஸ்தையும் ஆனந்தமும் கலந்த வாசிப்பின்பம். புத்தகத்தை ஒரே நாளில் எல்லாம் படிக்க முயற்சிக்கக்கூடாது. கிட்டதட்ட 160 பக்கங்களை (முன்னும் பின்னுமாகத்தான்) தொடர்ச்சியாக வாசித்துமுடித்ததும், ஏதோ ஒரு விதமான ஒவ்வாமை. அப்படியான ஒரு பித்தநிலையில், கேசவன் யானை, நாய் குரைக்கிறது, குரைத்துக்கொண்டேயிருக்கிறது, சல்ஸா நடனம், ஆயிரம் பக்கங்கள் எல்லாம் நினைவில் வர ‘புது எக்ஸைலை’ முன்பதிவு செய்துவிட்டேன்.

bonjour.

மயிலன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-81-8493-768-8.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: