Home » Poetry » உண்மைக்குத் திரை ஏது?

உண்மைக்குத் திரை ஏது?

இந்த உலகில் தன்னைப்பற்றி, தன் பிறப்பு, வாழ்வு குறித்ததான, நான் ஏன் பிறந்திருக்கிறேன், என் வாழ்வின் கடமை என்ன, எப்படி என் வாழ்வை இந்த இறைவனுக்கு அர்ப்பணிப்பது என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி, இறை பற்றி சிந்திப்பவனை இந்த உலகத்தில் தனித்துப்பார்ப்பதுதான் ஏனையோருக்கு வழக்கம்.

அவனைப் புரிந்துகொள்வதானால் நாம் அவனுடைய மன அலை நிலைக்குச் செல்லவேண்டியிருக்கும். இறை பற்றி சிந்திப்பதும், அவனை அறிய நினைப்பவனுக்காக தாழ்வதும், பணத்தைத் தேடி பண்பைத் தொலைக்கும் இக்கால மாந்தரல்ல, எக்கால மாந்தருக்கும் தகாததொரு செயலாகும்.

உண்மைக்குத் திரை ஏது?, இசைஞானி இளையராஜா, கவிதா பப்ளிகேஷன், ரூ. 40

பிறப்பில் விழுந்த முடிச்சைப் பற்றிக்கொண்டு, இந்த நூலின் நுனி எங்கே, யாரிடமிருக்கிறது என்று அதன் வழியே சென்று தேடுவது வெகு சிலருக்கே நிகழும். அந்த வரிசையில் இளையராஜாவும் சேர்ந்திருக்கிறார். இசையில் இசைஞானி, தனித்த ஞானியாகவும் இந்த “உண்மைக்குத் திரை ஏது?” நூலில் அறியப்படுகிறார்.

ஒரு காட்சியை கண்ணால் வெறுமனே காண்பதற்கும், கண்டு அனுபவித்து, உணர்ந்து மகிழ்வதற்கும் நிறைய வித்தியாசமுண்டு. இந்த நூலை இரண்டாம் நிலையிலிருந்து படித்தீர்களானால் இந்த இசைஞானியை, ஞானியாகவும் அறிந்துகொள்வீர்கள். அந்தக் காட்சிகளோடும் உங்களை பிணைத்துக்கொள்வீர்கள்.

தன் முன்னுரையிலேயே, இந்த நூலில் ஒரு கட்டுரையும், ஒரு கதையும், வசன கவிதையாக வடிக்கப்பட்டிருக்கிறது… கவிதை அல்ல, என்று நீங்கள் மறுத்தாலும் சரியே… என்று ஒப்புக்கொள்கிறார். கருத்தும், காட்சியும் மனக்கண்ணில் விரிந்தால் அது, கட்டுரை, கதை, கவிதை இல்லை வேறு எப்படியிருந்தால்தான் என்ன?

தூய மலர் எனும் தலைப்பில், கோவில்களில் வாயில்காப்போன் (துவாரபாலகர்கள்) பயமுறுத்தும் உருவத்தோடு “உள்ளே நீ எவ்வளவு பெரிய ஆளை பார்க்கப்போகிறாய் தெரியுமா? புரிந்துகொள், பணிவு கொள்க” என்பதாக… சொல்லப்போகும் பெரிய செய்திக்கு முன்னால், அந்தப் பெருவெளி, வெட்டவெளி, இறையை எப்படி நாம் அணுகப்போகிறோம் தெரியுமா என்று, இந்த நூலில் தூய மலர் கொண்டு பயணத்தைத் துவக்கிவைக்கிறார்… ஆனால் அப்படியான தூய மலர்கூட களங்கமென எண்ணி, மனதை அர்ப்பணிக்க நினைத்து அதுவும் ஆசை, சினம், காமம், கடும்பற்று, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் (நன்றி. வேதாத்திரி மகரிஷி) இவற்றால் சிக்குண்டு தரமிழந்திருக்கிறதே என்று வருந்தி… உனக்காக பூஜிக்க ஒருபொருளும் இல்லாதவனாக இருக்கிறேனே… என்று முடிக்கிறார்.

ஈஸ்வர ஸ்ர்வ பூதானாம் எனும் தலைப்பில், மிக நீண்ட, ஆதி, அண்டம், உயிர், வாழ்க்கை குறித்து அதுவே தானாகவும், தனியாகவும் பேசிக்கொள்வதாக எழுத்துவடிவம் கொண்டிருக்கிறது. “தன்முனைப்பு அழித்தால் தன்னை அறியலாம்” என்பது இறை அறியச்சொல்லும் சிறு சொற்றொடர். ஆனால் அதுவே தானாக இருப்பதன் அர்த்தம் அதில் ஆழ்ந்தவருக்கே புரியும். பக்தியில் ஆழ்ந்தாலும், தியானப் பழக்கத்தில் ஆழ்ந்தாலும், யோகியின் அருகாமையிலும் இந்நிலை வசமாகும். நான்தான் இறைவன் என்பதற்கும், இறைவனே நானாக இருக்கிறான் என்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுதல் முக்கியம்.

ஒன்றுமில்லா ஒன்றிலிருந்து எல்லாம் வந்ததை விவரிக்கிறார். அந்த அது, தன்னிடமே கேள்வி கேட்டு, தனக்கே பதில் சொல்வது அறிந்து, என்னடா இது?! என்று குழப்பம் வந்தால், படிப்பவர் இறையிலிருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கிறார் என்பது தெரியவரும். படிப்பவர், அதில் ஆழ்ந்து மீண்டும், மீண்டும் படித்தாலொழிய இது புரிவதற்காகாது.

எல்லாவற்றிற்கும் பிறப்பொன்று இருக்கிறது, பிறப்பதால் வாழ்வும் இருக்கிறது, மரணமும் இருக்கிறது என்கிறார். இரவையும், பகலையும் மனித மனதோடு ஒப்பிடுகிறார். கண்டுபிடிப்பு என்பது…

இருப்பதை பார்க்காது
இருந்துவிட்டு – திடீரென்று
எப்போதோ பார்ப்பதுதான்

என்று புன்னகை பூக்கவைக்கிறார். மனிதன் தன் உடலுக்குள் அன்றாடம் வாழ்ந்து மடியும் நுண்ணுயிரிகளை எங்ஙனம் காண முடியவில்லையோ, அதுபோலவே உன்னையும் (இறையை) காண முடியாதிருக்கிறார்கள், மறுக்கிறார்கள் என்கிறார்.

இறையை, இயற்கையை, மனித மனம் மட்டும் அவமதித்து தானே தன் இனத்தை அழிப்பது மட்டுமன்றி, இந்தப் புவியில் உள்ள பிற உயிரினங்களையும் அழிக்கப்போகும் நிலை உணர்த்துகிறார். முத்தாய்ப்பாக…

நம் அழிவுக்குக் காரணம்
நாமே என்று
தெரிந்துகொள்ளக்கூட இயலாமல்
மனித இனம்
மறைந்துவிடும்

அப்படியானால், எல்லாம் அழிந்தபின் மிச்சம் என்ன? என்று கேட்டால்…

மறுபடி மண்ணில்
மனித இனம் தோன்றப்
பலபல கோடி
யுகங்களாகும்! – என்று மனதிற்குள் கிலி ஏற்படுத்துகிறார்.

என் இனிய உயிரே! மனமே! எனும் தலைப்பில் தன் நிலை தாழ்த்திக்கொண்டு, தன்னைப் பணிந்து, இறைவனை நோக்கி வேண்டுதல்கள் வைக்கிறார்.

மனம்
காலியாக இருக்கிறது…
இந்தப்
பரந்தவெளியில்
என்ன கண்டாய்?
……….

வா
வா
நெஞ்சு
காலியாக இருக்கிறது!
அதை – நீ வந்து அமர்வதன் மூலம்
உலகில்
எங்கும் இல்லாத – யாரும் காணாத
உயர்ந்த ஓர்
கோவிலாக்கு!

இதன் தொடர்ச்சியாக, தன் மனமும், உடலும் எவ்வாறெல்லாம் உன்னை, உன்னை வணங்குதலை தவிர்க்கிறது, எத்தகைய கொடுமையில் என்னை ஆட்கொள்கிறது, இந்தப் பிறவியின் நோக்கத்திலிருந்து என்னைப் பிரிக்கிறது என்றெல்லாம் புலம்பி என்னை ஆட்கொள்ள வா, என் சுமையை இறக்க எனக்கு உதவமாட்டாயா என்று கேட்டுத் தவிக்கிறார். தன்னைப்போலவே பிறரும் இப்படி இருக்கிறார்களே என்றும் நினைக்கிறார்.

சிவபுரத்து பெருவாசல்
திறந்தே கிடக்க
வருவாரில்லை, போவாரில்லை

சரி, இது எப்படி முடியும், தொடங்கும் என்றால் அதற்கும் பதிலளித்து தன் எழுத்தை நிறைவு செய்கிறார் இசைஞானி, இல்லை, ஞானி இளையராஜா!

சுகுமார்ஜி

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0000-096-4.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: