Home » History » மகாத்மா காந்தி கொலை வழக்கு

மகாத்மா காந்தி கொலை வழக்கு

நாகசுப்பிரமணியன் சொக்கனாதனைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்களுக்கு அவர் ஒரு சுவாரசியமான ஆளுமை. வலைப்பூக்களிலும், முகநூலிலும் எழுதித்தள்ளுகிறார். ட்வீட்டுகிறார்; நாவல்கள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு நூல்கள் எழுதியிருக்கிறார், ‘தினம் ஒரு பா’ கொடுத்தவர், கொஞ்சம் மிரட்சி கொடுக்கக்கூடிய அளவுக்கு ஆழ்ந்த கம்பராமாயண வாசகர்! அவரது எழுத்துக்களில் இருக்கும் சகஜம், மரபுக்கவிதைகளில் இருக்கும் எளிய இனிய சொற்பெருக்கு வசீகரமானது. இந்நூலிலும் அந்த எளிதான சொல்லாடலுடனேயே, ஒரு அடர்த்தியான பன்முக நிகழ்வினை எளிதான மொழிநடையில் எழுதியிருக்கிறார்.

மகாத்மா காந்தி கொலை வழக்கு, என். சொக்கன், கிழக்கு பதிப்பகம், ரூ. 200

மகாத்மா காந்தி கொலை, வரலாற்றில் நடந்த குறிப்பிடத்தக்க துர்சம்பவம். 66 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், புதிதாகச் செய்திகளும் ஆவணங்களும் இனி வெளிவரப்போவதில்லை. ஆனால், தற்கால இந்துத்துவ அரசியல் மேலெழும் நிலையில் நிகழ்ச்சியின் காரணகாரியங்களைப் பற்றிய கருத்தலசல்களின் கோணங்களும் சிந்தனைகளும் அறியாத சராசரித் தமிழ் வாசகரைக் குழப்பும்படி வெளியிடப்படுகின்றன. ஏன், திரித்துக்கூறத்தலைப்படுகின்றன என்று கூடச்சொல்லலாம்! ஆகவே, அரசாங்கப் புலனாய்வு, நீதிமன்ற ஆவணங்கள், விசாரணைக்குழு விவரங்கள், ஆய்வுப்புத்தகங்கள், தண்டனை பெற்றவர் சிலர் பிற்பாடு புலப்படுத்திய புதுத்தகவல்கள் என ஆராய்ந்து தொகுக்கப்பட்ட நடுநிலை எழுத்தாக சொக்கனின் புத்தகத்தைக் கொள்ளலாம். அவர் முயற்சி புத்தகத்தில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது.

முக்கிய ‘கதாநாயகர்களா’ன கோட்ஸே, ஆப்தே, கர்கரே, சாவர்க்கர், படுகே ஆகியோரின் பின்னணியிலிருந்து ஆரம்பித்து, அவர்களில் சிலரின் அதீத இந்துத்துவச் சிந்தனைகளையும் செயல்களையும் விவரித்து, பிறகு காந்தி மேலெழும் வெறுப்பும் அவரைக் கொலை செய்யுமளவுக்கு உண்டான வெறியும் விவரிக்கப்படுகின்றன. இந்திய சுதந்திரம், இருநாட்டுப்பிரிவினை தொடர்பான மதக்கலவரங்கள் ஆகிய வரலாற்றுப் பின்னணி வெளிப்படுகிறது. வலதுசாரி இந்துத்துவக் குழுக்கள் (குறிப்பாக ஹிந்து மகாசபை) காந்தியின் அரசியலை வெறுக்கத் துவங்கி, அது கொலைக்குத் தூண்டுமளவுக்கு உயர்த்தும் முதன்மைச் சம்பவங்கள் ஊடாகத் தரப்பட்டிருக்கின்றன. இப்பின்னணிச் செய்திகள் நூலில் கிட்டத்தட்ட பரவலாக வருகின்றன. இன்னும்கூட வரலாற்றில் கூர்மையாக விவாதிக்கப்படும் சம்பவங்கள் கோடிகாட்டப்படுகின்றன.

உதாரணமாக, நாட்டுப் பிரிவினையின்போது, பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டனின் மேற்பார்வையில் உறுதிசெய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்றானது, இந்திய அரசு பாகிஸ்தானுக்குப் பொருளாதார உதவியாகக் கொடுக்க ஒப்புக்கொண்ட 75 கோடி ரூபாய். ஆனால், முதல் இருபது கோடி தரப்பட்டபின் மீதி 55 கோடியை நேருவின் அரசு பாகிஸ்தானால் உண்டு செய்யப்பட்ட காஷ்மீர் பிரச்சினையைப் பற்றிய ஆட்சேபணையின் பேரில் நிறுத்திவைத்தது. இதைத் தவறென்று கருதிய மவுண்ட்பேட்டன் காந்தியின் பார்வைக்குக் கொண்டுவந்தார். சொக்கன் இதைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“காந்தியைப் பொறுத்தவரை நேரு அரசாங்கம் எடுத்த இந்த முடிவு நியாயமல்ல. பாகிஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்காகத் தரவேண்டிய ஐம்பத்தைந்து கோடி ரூபாய் பாக்கியையும் எல்லைமீறல் பிரச்(சி)னைகளையும் இணைத்துப் பார்ப்பது சரியில்லை என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.

அதே சமயம், ‘உடனடியாக ஐம்பத்தைந்து கோடி ரூபாயை பாகிஸ்தானுக்குத் தரவேண்டும்’ என்று அவர் மிரட்டவில்லை…

…ஜனவரி பன்னிரண்டாம் தேதி காந்தி தனது முடிவை அறிவித்தார். ‘இந்து – முஸ்லிம் ஒற்றுமை ஏற்படும்வரை நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்’…

…இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக உண்ணாவிரதம் உட்கார்ந்த காந்தி, இந்தியா பாகிஸ்தானுக்குத் தரவேண்டிய 55 கோடி ரூபாய்ப் பணத்தைப் பற்றி நேரடியாகப் பேசவில்லை. ஆனால் அதுவும் அவருடைய உண்ணாவிரதத்துக்கு ஒரு காரணம்… பாகிஸ்தானுக்குத் தரவேண்டிய ஐம்பத்தைந்து கோடியை உடனடியாகத் தந்துவிடலாம் என்று (மந்திரிசபையினர்) முடிவெடுத்தார்கள்…

…உண்மையில் பலரும் நினைப்பதுபோல் காந்தியின் உண்ணாவிரதத்துக்காக அவர் முன்வைத்த கோரிக்கைகளில் அந்த ஐம்பத்தைந்து கோடி ரூபாய் விவகாரமே இல்லை. அவரைச் சமாதானப்படுத்துவதற்காக நேரு அரசாங்கம் அப்படி ஒரு முடிவெடுத்ததே தவிர காந்தி இதில் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை.”

தற்கால அரசியல் நிலையில், காந்திமேல் வைக்கப்படுகின்ற பழிகளில் ஒன்று இந்த 55 கோடி ரூபாய் விவகாரம். இந்துத்துவ அமைப்புகள், ‘இது காந்தி செய்த சதி’ எனக் கூறுகின்றன. (அன்றே, கோட்ஸே காந்தியைக் கொலை செய்ய முடிவெடுக்குமளவு வெறி வந்ததற்கு இந்நிகழ்வும் ஒரு காரணம்). காந்தியவாதிகள், ‘காந்தி என்ற ஒரு உன்னதமான ஆளுமையை அறிந்தவர்கள், அவர் இவ்வாறு தன்மையையெல்லாம் கடந்த ஒரு ஆத்மா. அவ்வுண்ணாவிரதம், காந்தியைப் பொறுத்தவரை இந்து – முஸ்லிம் ஒற்றுமையை மட்டும் கருதி அவர் மேற்கொண்ட ஒரு புனிதச்செயல். ஆகவே இது வரலாற்றில் திரித்துக் கூறப்படுகின்ற ஒரு நிகழ்ச்சி’ என்றே இன்றும் கூறுகின்றனர். (பின்னாளில், 1964-இல் கபூர் கமிஷனின் விசாரணையில், காந்தி மீது கோட்ஸே முதலில் நடத்திய தாக்குதல் 1944-இல் என்பது வெளியாகும்போது, இந்த 55 கோடி ரூபாய் விவகாரம் இந்தக்கோஷ்டி காந்தியைக் கொலை செய்யத் தீர்மானித்ததன் அறுதிப் பின்னணி அல்ல என்பது புலப்பட்டது). ஆனால், பாகிஸ்தான் நமது வரலாற்று எதிரியாக மாறியிராவிட்டால், இது ஒரு பொருட்டாகவே கருத்தில் கொள்ளப்பட்டிருக்காது என்பதை எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை!

ஆக, விவரிப்பதற்குக் குழப்பமான ஒரு நிகழ்வை, அதிகம் ஆராய்ச்சி மொழியில் எழுதிக் குழப்பாமலும், எந்தவொரு அதீதப்பார்வை பக்கமும் சாயாமலும் சொக்கன் எழுதியிருக்கும் விதம், இந்நூலில் பரவலாகத் தோன்றும் பொதுத்தன்மை. நேரு – பட்டேல் நெருடல்கள், சதியில் சாவர்க்கரின் பங்கு ஆகிய பலவற்றையும் கவனமாகவே எழுதுகிறார். இதுவே அவர் எழுத்தின் பலம்.

நூலின் பெரும்பான்மையான பகுதி, 1948 ஜனவரி 20-ஆம் தேதி நிகழ்ந்த தோல்வியடைந்த கொலை முயற்சியையும், அதன்பின் 30-ஆம் தேதி நடந்துமுடிந்த துப்பாக்கிச்சூட்டையும், ஒரு நாவல்மொழியில், சரளமான நடையில் விவரிக்கின்றது. இரு உதாரணங்கள்:

“அப்போது ஆப்தேவுக்கு ஒரு யோசனை. ‘பேசாம இந்த பாட்ஜேவையும் நம்மோட டெல்லிக்குக் கூட்டிகிட்டுப் போய்ட்டா என்ன?’
இதற்குள் பாட்ஜே தன்னுடைய விளக்க உரைகளை முடித்திருந்தார். ‘அவ்ளோதான்ப்பா, ஆளை விடுங்க!'”

“போலீஸ் மதன்லாலைக் கூட்டிக்கொண்டு மெரீனா ஹோட்டலுக்குச் சென்றது. ‘ரூம் நம்பர் நாற்பதுல தங்கியிருக்கறவங்க எங்கே?’
‘அவங்க இப்பதான் காலி செஞ்சுட்டுப் போனாங்க சார்.’
‘பரவாயில்லை. அந்த ரூமைத் திறந்து காட்டுங்க. சர்ச் செய்யணும்.'”

இதுபோன்ற எழுத்தோட்டம், நூலுக்கு ஒரு விறுவிறுப்புத் தன்மையை அளிக்கலாம். ஆனால், விரிவாகச் சொல்லக்கூடிய செய்திகளும் கருத்துகளும் இருக்கக்கூடிய இடத்தை அடைத்துக்கொண்டு, வாசிப்புத் தொய்வையும், சிறிது சலிப்பையும்கூட ஊட்டுகின்றன. எதனால் ஆசிரியர் இவ்வாறு எழுதியிருக்கிறார்? காந்தி கொலை பற்றிப் பல நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. சொக்கனே புத்தகத்தில், ‘Freedom at Midnight’ – டொமினிக் லேபியர் & லேரி காலின்ஸ் மற்றும் ‘Let’s Kill Gandhi’ – துஷார் காந்தி, ஆகிய நூல்களை ஆதாரங்களாகத் தந்திருக்கிறார்; அவற்றில் குறிப்பிடப்பட்ட செய்திகளை எடுத்தாண்டிருப்பது போலவும் தெரிகிறது.

ஆகவே, தமிழில் காந்தியைப் பற்றியும் அவரது கொலை பற்றியும் உலகமே மறந்துவருகின்ற நேரத்தில், அவற்றைப் பற்றிய ஆராய்ச்சி நூலாக இல்லாமல், முதற்கதவைத் திறப்பதற்காகவே இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது என்று படுகிறது. அதனால்தான், இந்நூலைத் தேடிவரும் எளியநிலை வாசகர்களுக்காக இவ்வாறு ஒரு கதைசொல்லும் மொழியை எடுத்தாள்கிறார் என்று கொள்ளவேண்டியதுதான். இணையத்தில் தமிழில் காணப்படாத செய்திகள், தமிழ் வாசகர்களுக்குச் சென்று சேரும் முதற்திறப்பாகவும் கொள்ளலாம்.

பல சுவாரசியமான தகவல்கள் கூறுப்படுகின்றன:

கோட்ஸே உபயோகித்த ‘பெரெட்டா’ துப்பாக்கி, முசோலினியின் படைத்தளபதிகளில் ஒருவரிடமிருந்து பல கைமாறி குவாலியரை வந்தடைந்து, கடைசியில் பர்ச்சுரே உதவியால் கிடைத்தது.
கோட்ஸே ஒரு காஃபி பிரியர்! துப்பறியும் நாவல் பிரியர்.
நாராயண் ஆப்தே, பெண்கள் விஷயத்தில், கொஞ்சம் ‘அப்படி இப்படி’!
முதல் சம்பவமான ஜனவரி 20-க்கும், காந்தி சுடப்பட்ட ஜனவரி 30-க்கும் இடைவெளியிலான காவற்துறை மெத்தனத்தின் முதற்காரணம், தில்லி பம்பாய் காவலர்களிடையே இருந்த இணக்கமில்லாமை!

இப்பகுதியில்தான், கோட்ஸே தையல்காரராகவும், ஆப்தே ரைஃபிள்ஸ் கிளப் அமைத்தும் வாழ்க்கையைத் தொடங்கி, சாவர்க்கரின்பால் ஈர்க்கப்பட்டு, அக்ரணி பத்திரிகை தொடங்கி, பின் கடைசியில் காந்திமேல் வெறுப்புக்கொண்டு, ஆயுதங்கள் திரட்டி, கடைசியாக அவரைக் கொலை செய்யும் வரை நிகழ்ந்தவை விவரிக்கப்படுகின்றன. இந்த இடைப்பகுதியின் மிகப்பெரிய செய்தி, சதிகாரர்களின் திட்டங்களும் செயல்பாடுகளும் அதிக மூளைத்திறனில்லாமல் கற்றுக்குட்டித்தனமாகவே இருந்தன என்று உணர்த்துவதுதான். இதை வெளிக்கொண்டு வந்திருப்பதற்காக சொக்கனைப் பாராட்டலாம்.

காந்தியைக் கொலை செய்யச் சென்ற கோஷ்டி, தில்லி பிர்லா மந்திருக்கு 1948 ஜனவரி 18-ஆம் தேதி காலையிலேயே, இடத்தை நன்கு கவனித்து, கொலைத்திட்டம் தீட்டச் செல்கிறார்கள். ஆசிரியரும், ‘அவர்களோடு சேர்ந்து நாமும் பிர்லா இல்லத்தின் வரைபடத்தைப் பார்த்து விடலாம்’ என்கிறார். பிரச்சினை என்னவென்றால், வரைபடம் அச்சிடாமல் விடுபட்டுவிட்டது! இது ஒரு பெரிய ஓட்டை – வரைபடம் முதற்சம்பவத்தை இன்னும் நன்றாக விளக்கியிருக்கும். இத்தவறு ஆசிரியரையும் பதிப்பகத்தையும் சம அளவில் சேரும் என்று நினைக்கிறேன்.

நூலின் கடைசிப்பகுதியான சுமார் 40 பக்கங்களில், அனைவரும் மாட்டிக்கொள்வதும், துப்புத்துலங்கிய செய்திகளும், நீதிமன்ற நிகழ்பாடுகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. வரலாற்றில் நிகழ்ந்தவை சுவாரசியமாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

சில மராத்தியப் பெயர்கள் தவறாகத் தரப்பட்டுள்ளன. இந்நூலின் முதன்மை ‘நாயகன்’ பெயர் ‘நாதுராம் கோட்ஸே’ என்று வருகிறது. சரியான மராத்தி உச்சரிப்பில், இது நத்துராம் கோட்ஸே என்று தரப்பட்டிருக்க வேண்டும். முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவரான திகம்பர் படுகே பெயரும் அவ்வாறே. (திகம்பர் பாட்ஜே என்று தரப்பட்டுள்ளது). மிகச்சரியாகக் கூறவேண்டுமென்றால், இப்பெயரைப் பின்வருமாறு உச்சரிக்கவேண்டும்: ‘ப’ – ‘ப’யங்கரம் என்பதில் உள்ளது போல; ‘டு’ – மா’டு’; ‘கே’ – ‘Ga’me. தவறாகக் கூறப்பட்டிருக்கின்ற மற்ற பெயர்கள் தத்தாத்ரய பர்ச்சுரே (‘தத்தாத்ரேய பார்ச்சுர்’), சாங்லி (‘சங்க்லி’), பிக்கு தாஜி பிலாரே (‘பிக்கு தைஜ் பைலாரே’) போன்றவை. வரலாற்றின் இன்றியமையாத சம்பவத்தைப் பற்றிய எழுத்தில், இத்தவறுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல. பிறமொழிப்பெயர்களின் உச்சரிப்பை முடிந்த அளவு சரியாகத் தருவதில் பிழை இருந்திருக்கக்கூடாது.

எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் மிகச்சிறிய அளவில் தென்படுகின்றன. தவிர்த்திருக்கலாம். பல தமிழ்ச்சொற்கள் (புரியாதவைகூட!) ஆங்கிலத்திலும், தமிழிலும் நேரடியாக எழுதப்பட்டிருக்கின்றன – ‘கன்-காட்டன் ஸ்லாப்’, செல்லுலார் ஜெயில், Nominee, Recruiter போன்றவை. வாசகருக்குப் புரிகிறதோ இல்லையோ, தமிழ்ப் படைப்பாளிகள் இவ்வாறாக, சட்டென்று மொழிபெயர்க்கக் கடினமான சொற்களை அர்த்தங்களை விளக்காமல் நேரடியாக ஆங்கில / தமிழ் உருக்களில் எழுதுவது தவறென்று படுகிறது. இவ்வாறான எழுத்துக்கள் மவுனமாக அங்கீகரிக்கப்படுவது, காலப்போக்கில் ஆங்கில ஊடுருவலும் மொழிச்சிதைவும் நடக்க ஒரு காரணமாக அமையலாம். ஆனால் இவை இப்புத்தகத்திற்கு மட்டுமேயான தனித்தவறுகளல்ல – ஒரு பொது விவாதத்திற்குரியவை என்றும் கொள்ளலாம்.

வி. சரவணன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-81-8493-596-7.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


1 Comment

  1. என். சொக்கன் says:

    விரிவான அறிமுகத்துக்கும் பிழைகளைச் சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி திரு. வி. சரவணன். இக்குறைகள் இனிவரும் நூல்களில் இல்லாதபடி பார்த்துக்கொள்வேன்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: