Home » Novel » அரசூர் வம்சம்

அரசூர் வம்சம்

“புஸ்தகம் பத்தில்லாம் என்னாண்ட சொல்லாதேடி. நான் படிக்கமாட்டேன்” என்றபடியே அவளை இடித்துக்கொண்டு உட்கார்ந்தான் சங்கரன்.

“செத்த தள்ளி உக்காருங்கோ. அலுக்காதா உங்களுக்கு?” மோகனவல்லி அலுத்தாள்.

“விதம் விதமா போகம் பண்ற பொஸ்தவம் ஒண்ணு இருக்கே? அத பத்தி வேணா சொல்லு, கேக்கறேன்… இதெல்லாம் வேணாம்.”

அரசூர் வம்சம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், ரூ. 265

 “கையை எடுங்கோ. இதிலும் அந்த மாதிரி நிறைய வர்றது” மோகனவல்லி சொன்னதும் சங்கரன் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தான். இப்படிச் சொல்லி இவனை இழுக்க வேண்டியிருக்கே என்று யோசித்தபடியே மோகனா தொடர்ந்தாள்.

“வம்சாவளியா வந்த பதவி டாம்பீகம்லாம் இழந்துட்டு, வெள்ளக்கார துரை கிட்ட கையேந்துர ஜமீந்தார். அவர் மனைவி. அவாளின் பக்கத்து வீட்டில் அதே மாதிரி வம்சாவளியா வர்ற தொழில் இல்லாம புது விஷயங்கள்ல இறங்கி வியாபாரம் செய்யும் பிராமணாள் குடும்பம். இந்தக் குடும்பம் அரசூர்ல செழிப்பா ஜீவிதம் பண்றா. அதில் இரண்டாவது பையனுக்கு கல்யாணம் கட்ட மலையாளக்கரை பக்கம் பிரயாணம் போகும்போது அங்கே சமையல் தொழில் செய்யும் தமிழ் குடும்பங்களின் கதையும் தெரிஞ்சிக்கிறோம்.”

“அவாள பத்தில்லாம் நான் ஏன் தெரிஞ்சிக்கணும்?” என்று சங்கரன் கேட்டதும் மதிப்புரை எழுதுபவர் இது நாவலில் வரும் சங்கரனும் தாசியும் இல்லையோ என்று ஒரு நிமிடம் திகைத்து, இல்லையென்றாலும் எல்லாம் ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டு தட்டச்சை தொடர்கிறார்.

“ஏன்னா, கதைல நீங்களும் இருக்கேள். நீங்கயில்லாம இன்னும் நூறு பேரும் இருக்கா. நமக்கு வாய்ச்ச கொஞ்ச வாழ்நாள்ல விதம் விதமான வாழ்க்கைய, நாமளே வாழ்றது போல் பக்கத்துல இருந்து பாக்கறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கறதில்லையா? அதும் வேற காலத்து வாழ்க்கை.”

“இந்த வித விதமான வாழ்க்கை, வித விதமா போகம் பண்ற மாதிரி சுகமா இருக்குமா?”

முறைத்தாள் மோகனா. “நீங்க போகத்த எப்போதான் வெறுப்பேள்?”

“போகம் முடிச்ச ரெண்டொரு நிமிஷம் மட்டும்.”

“இந்த வித விதமான மனுஷாள பத்தி படிக்கும் போதும், முடிச்ச பிறகும் கூட நமக்கு களிப்புதான் பொங்கும். அதுனால நீங்க சொல்றத விட அதிக சந்தோஷத்த இதுல அடையலாம்.”

“சரி, மேலே சொல்லு இந்தக் கதைய பத்தி.”

“இன்னும் நூத்தியம்பது வருஷத்துக்குப் பிறகு நோலன்னு ஒருத்தர் இன்டெர்ஸ்டெல்லார்னுட்டு நூதன நாடகம் போடுவா. அதுல காலத்த கண்ணெதிரே பாக்கும்படிக்கு காட்டுவா. அது மாதிரி இந்தக் கதையிலும் காலம் பாத்திரங்களா வர்றது.”

“என்ன துரை பாஷையா பேசற? ஒண்ணுமே புரியல.”

“சும்மா ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தான்னு கதை சொன்னா கேப்பீங்களோ? அதனால் கதைல நிஜத்துல பாக்க முடியாத பல மந்திர விஷயங்கள் வர்றது. இது கதை சொல்றதுக்கு ஒரு உத்திதான். அதுவே கதாசிரியருக்கு ஒரு பெரிய பலமாவும் வசதியாவும் அமஞ்சிடுத்து. புகுந்து விளாடிருக்கார். வயசானவர் ஒருத்தர் மூத்திரம் பேஞ்சிண்டு பறப்பார் பாருங்கோ, சிரிச்சி சிரிச்சி உருண்டுட்டேன் நேத்திக்கு. மட்டுமில்லாம கஷ்டம்கிறது யாருக்கும் தொடர்ந்து வராது, குனியிறவா ஒரு காலத்துல நிமிர்வான்னு வர்றதும் சந்தோஷமா இருந்தது. ஆனா அப்படியும் சொல்ல முடியாது. வேலைக்காரன் அய்யனை மட்டும் அடுத்த தலைமுறையிலே ராஜாவா ஆகியிருக்கப்போறான். அதுமில்லாம சுப்பம்மா கிழவி வாழ்க்கையே எத்தனை சோகம்? பொம்மனாட்டிலாம் பாவம்.”

அழுதாள் மோகனா.

“ஏண்டி அழற அசடே, எப்படி மூச்சு இரையறது பாரு. மாரை தடவி விடறேன் வா” நெருங்கியவனைத் தள்ளிவிட்டு தொடர்ந்தாள்.

“ஆனா செல்வம், அதிகாரம், காமம், நம்ம காலத்து விதிகள், மீறல்கள், வாழையடி வாழையா வந்த வழக்கங்கள், அதில் புதுச் சங்கதிகள் ஏற்படுத்தும் மாற்றங்கள், சாப்பாடு வகையறா, பிரயாணம், சிவகங்கைனு பேர் வரப்போற ஊரை நினைவு படுத்தும் கற்பனை அரசூர், மதராச பட்டினம்,மலையாளக்கரைல அம்பலப்புழைனு நோலன் காலத்தவா தெரிஞ்சிக்க ஏதுவா இருக்கும் இந்தக் கதை. அதிலும் வெறும் வார்த்தைகள்லேயே வாசனை, ருசி, நிறம், காட்சி, சங்கீதம், பாஷைன்னு துல்லியமா நமக்கு காட்றதில் கதாசிரியர் வல்லவர். இன்னும் அடுத்த நூத்தாண்டுல தமிழ்ல வரப்போகும் மகாக்கதைசொல்லிகளின் லாகவம் எல்லாம் இவருக்கு வாய்ச்சிருக்கு. நானும் கூட கதையைப் படிச்சிட்டு அந்த பாஷையிலேயே மூழ்கி யோசிக்க ஆரம்பிச்சி, ராத்தூக்கத்தில் கூட அதே கனாதான்.”

“கனாவில் நான் உண்டோடி பெண்ணே?”

“நேர்ல படுத்தறது போதாதாக்கும்? கதைல நிறைய காட்சிகள் நிரந்தரமா நம்ம மனசில தங்கிடறது. மூட்டை அடுக்கியிருக்கும் வைப்பறையிலே போகம் பண்ணிண்டு இருக்கும் அய்யன் பின்பக்கம் எலி விழுந்து ஓட்ற காட்சி மாதிரி.”

“அப்பிடியா? எந்தப் பக்கத்திலடி வர்றது இந்தக் காட்சி?”

“போதுமே? வையுங்கோ புஸ்தவத்தைக் கீழே. அந்த அரசூர் பிராமணா குடும்பம் அம்பலப்புழையிலே சம்பந்தம் பேசையிலே இங்க அரசூர்ல விபத்து ஒண்ணு நடந்திடறது. மனச திசைதிருப்பவும் வியாபார விருத்திக்கும் அந்தப் பையனை பட்டினத்துக்கு அனுப்பி வைக்கிறா. தெற்கில இருந்து வர்றவா தாம்பரம் கிண்டி மைலாப்பூர்னு போற பாதை, நுங்கம்பாக்கம் நிறுத்தத்துல பீச் வண்டிக்கு நிக்கறதுன்னு நோலன் காலத்தவா படிச்சா அடடே அப்பவே இருந்திருக்கேன்னு வியப்பா. அப்படியே சடங்கு சம்பிரதாயம் சிலதையும் நல்லாவே கிண்டல் பண்ணியிருக்கா. மிட்டாய கடிச்சி மிழுங்கிறா மாதிரி வேகமா படிக்கிறாப்ல எழுதியிருந்தாலும் கொஞ்சம் கவனிச்சி படிச்சா அதே மிட்டாய சப்பி சாப்பிடறாப்போல நீடிச்ச இன்பமா இருக்கு.”

கப்பலில் வரும் குழுக்களியாட்டத்தைச் சொல்லலாமா என்று யோசித்து, அப்புறம் கதையில் அது மட்டும்தான் இருக்கு என்று நினைத்துக்கொண்டு விடுவான் என்பதால் அதைத் தவிர்த்தாள்.

“கவனிச்சி படிக்க வேண்டிய இந்த பொஸ்தவம் உனக்கு அவ்வளவு புடிச்சிருக்கா? உண்மையில் உனக்கு எப்ப எது பிடிக்கும், என்னல்லாம் நினைப்பு ஓடுதுன்னு எனக்கு இன்னும் கண்டுபிடிக்கத் தெரியல. பொம்பள மனசு ஆழம்னு சும்மாவா சொல்றா?”

“ஆழம் இல்ல, உசரம். உலகத்தில் உள்ள அத்தனை மனுஷாளும் ஒருத்தர் மேலே ஒருத்தர் ஏறி நின்னா வர்ற உசரத்தில் இருக்கு அது. ஏறி பாத்துக்குங்கோ.”

“அப்போ ஆம்பிள மனச பாக்க எங்க போகணும்?”

“அரசூர் வம்சம் படிங்கோ.”

பிரசன்னா

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-81-8368-008-0.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: