Home » Novel » தலையணைப் பூக்கள்

தலையணைப் பூக்கள்

இது பாலகுமாரன் அவர்கள் எழுதிய குடும்ப நாவல். பெரிய திருப்பங்கள் ஏதும் இல்லாத கதை. ஒரு வரியில் சொல்வதானால் கிராமத்தில் இருந்து விவசாய நிலங்களை விற்றுவிட்டு நகரத்துக்கு வரும் தந்தை தனது மகன்கள் உதவியுடன் மங்கலம் அண்ட் கோ எனப்படும் ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார். அவரும் அவரது மகன்களும் சந்திக்கும் வெற்றி தோல்விகள் மற்றும் அவர்களது சொந்த வாழ்வில் நிகழும் சம்பவங்கள் தான் கதை.

தலையணைப் பூக்கள், பாலகுமாரன், திருமகள் பதிப்பகம், ரூ. 90

கதையின் நாயகன் அவரின் மூத்த மகன் சுந்தரா என்று அழைக்கப்படும் சுந்தராஜன். அவரின் மற்ற இரு மகன்கள் நடராஜன் மற்றும் நாகராஜன் கதையில் வரும் மற்ற முக்கிய பாத்திரங்கள். அவர்கள் சுந்தராவுடன் தொழிலில் துணையாக இருக்கிறார்கள். காலப்போக்கில் அவர்களது மனைவிகளும் தொழிலில் துணையாக இருக்கிறார்கள். கதைப்படி சுந்தராதான் கதாநாயகன் என்றாலும் கதாநாயகனின் கதாநாயகன் அவரின் தந்தை.

தந்தை கற்றுத் தந்த இலக்கணப்படி வாழ்பவன் சுந்தரா. சுந்தரா தங்களது அனுபவங்களைச் சொல்வதாக கதை அமைகிறது. கதையில் பெரிய ஏமாற்றம் திருப்பங்கள் இல்லாததுதான். அடுத்த பக்கத்தில் என்ன இருக்கும் என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது. அவர்களின் வீட்டில் வளர்ந்து திருமணத்திற்குப் பின் அவர்களுக்கு எதிராக மாறும் மல்லிகா மற்றும் நடராஜனின் மாமனார் மூலமாக கதையில் ஒரு முக்கிய திருப்பம் வருகிறது.

அடுத்த முக்கிய திருப்பம் சுந்தரா மரணம் அடைவது. இவை தவிர கதையில் பெரிய  திருப்பங்கள் இல்லை. எல்லாம் சுந்தரா எண்ணியபடி நடக்கிறது, அவனது மரணம் உட்பட. மேலும் கதையில் வரும் நிகழ்வுகள் சற்று நம்ப முடியாத வகையில் அமைவதும் ஏமாற்றம் தருகிறது.

நான் படித்தது 5-ஆம் பதிப்பு. முதல் பதிப்பு வந்த காலகட்டத்தில் அப்படிப்பட்ட நிகழ்வுகள் சத்தியமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.  நாவலின் சிறப்பு கதையில் வரும் பாத்திரங்களின் படைப்புதான். அனைத்து பாத்திரங்களிலும் ஒரு தனித்தன்மை உள்ளது. சுந்தரா பாத்திரத்திடம் தலைமைப் பண்பு தெரிகிறது. நாகராஜன் உள்ளத்தில் வீரம் இல்லாவிட்டாலும் வெளியே வீரனாகக் காட்டிக்கொள்ளும் மனிதன். நடராஜன் தனக்குத் தெரிந்த துறையில் மட்டும் கவனம் செலுத்தி மற்றவைகளில் பங்கு எடுக்காமல் இருப்பவன்.

இவர்கள் தவிர இவர்களின் மனைவிகளின் பாத்திரப் படைப்பும் சற்று வித்தியாசமானது. சுந்தராஜன் மனைவி சிறந்த குடும்ப நிர்வாகி. நாகராஜன் மனைவி பல வெளிநாடுகள் பார்த்தவள் என்றாலும் கணவன் காலடியில் வாழ நினைப்பவள். நடராஜன் மனைவியோ மாமனாரிடம் தந்தையிடம் பேசுவதுபோல் சகஜமாக உரையாடும் நாகரீக நங்கை. இந்த பன்முக பாத்திரப் படைப்பும் அதனால் நிகழும் சுவாரசியங்களும் ரசிக்கத் தகுந்தவை.

உதாரணமாக சுந்தரா எல்லா முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் காஞ்சிப் பெரியவரின் ஆசி வாங்கச் செல்வதை நடராஜ் விமர்சிக்கும் இடத்தில் நடக்கும் விவாதம் நன்றாக இருந்தது. அந்த விவாதத்தை சுந்தரா தனது தந்தையிடம் சொல்வதும் அதற்கு அவர் சொல்லும் மாற்றுக் கருத்துகளும் சிறப்பாக எழுதப்பட்டு இருந்தது.

மேலும் நான் ரசித்த மற்றொரு இடம் சுந்தராஜனின் மரணத்தை விவரிக்கும் இடம். ஒரு மனிதனின் அனைத்து அனுபவங்களையும் ஒரு எழுத்தாளன் எழுதிவிட முடியும். எந்த ஒரு ஆசிரியராலும் குற்றமின்றி எழுத முடியாத அனுபவம் மரணமாகத்தான் இருக்கும். பாலகுமாரன் அவர்கள் மரணத்தை விவரிக்க மிகச் சிறந்த முயற்சி எடுத்துள்ளார். ஒரு உயிர் உடலை விட்டுப் பிரிகையில் ஏற்படும் பயம், தவிப்பு, இயலாமை, இறுதியில் ஏற்படும் அமைதி போன்ற உணர்வுகளை தனது பாணியில் எழுதி உள்ளார். இன்னும் ஒன்று இரண்டு பக்கங்கள் சுந்தராஜனின் மரண அனுபவத்தை விவரிக்க ஒதுக்கி இருக்கலாம் என்று தோன்றியது.

எல்லாம் சரிவர நடந்து கதையில் சுப முடிவு என நாம் எண்ணும் வேளையில் சுந்தரா மறிக்கிறான். அவனது மரணத்துடன் கதை முடிகிறது. முழுக் கதையிலும் சுந்தரா நம்முடன் உரையாடுவதால் அவனது மரணம் நம்மை சற்று பாதிக்கிறது. மற்ற பாத்திரங்கள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. நாவலின் சிறப்பு பாத்திரப் படைப்பு மற்றும் அவர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல். நாவலின் ஏமாற்றம் யூகிக்க முடிந்த கதை.

ஆனந்த வேல்முருகன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0001-272-5.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: