Home » Health » மனித நோய்கள்

மனித நோய்கள்

அறிவியல் சார்ந்த நூல்கள் படிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும், அந்தவகையில் சமீபத்தில் நான் படித்த புத்தகம் ‘மனித நோய்கள், உயிர் வேதியியல் பார்வை’. மருத்துவர் அருள்செங்கோர் எழுதிய இந்நூல் தமிழ்க்கோட்டம் வெளியீடாக வந்துள்ளது. அறிவியல் சார்ந்த புத்தகம் எழுதுவதில் இருக்கும் மிகப் பெரிய சிக்கல்கள் என்னவென்றால் கலைச் சொற்களைக் கையாள்வது. பெரும்பாலான அறிவியல் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் இல்லாத காரணத்தால் சுவாரசியமான மொழி நடையில், தமிழில் அறிவியல்  புத்தகங்கள் மிகவும் குறைவாகவே வெளிவந்துள்ளன. மேலும், ஆழமான அறிவியல் கருத்துகளை விளக்கும் தமிழ்ப் புத்தகங்களும் சொற்ப அளவே உள்ளன என்ற ஏக்கத்துடன் இப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். புதிய தகவல்கள் பலவற்றைத் தெரிந்துகொண்ட திருப்தியைத் தந்தது. துறைசாராதவர்களும் படித்துத் தெரிந்துகொள்ள செய்யப்பட்டிருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.

மனித நோய்கள் (உயிர் வேதியியல் பார்வை), மருத்துவர் க.அ. அருள்செங்கோர், தமிழ்க்கோட்டம், ரூ. 125

மொத்தமாக இருபத்தாறு தலைப்புகளில், மனிதனுக்கு ஏற்படக்கூடிய நோய்களைப் பற்றிய அறிமுகமும், அவை ஏன், எப்படி ஏற்படுகின்றன என்ற காரணங்களையும், ஒரு சில நோய்களுக்கு தடுப்பு முறைகளையும் அறிமுகப் படுத்துகிறது இந்நூல். இரத்தப் பரிசோதனை முதல் முதுமை வரையிலான விசயங்கள் சுலபமாக அனைவருக்கும் புரிந்திடக்கூடிய வகையில் எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது இதன் பலம்.

திருநர் பற்றிய கட்டுரை மிக முக்கியமான பதிவு என்றுதான் சொல்லவேண்டும். நம் சமுதாயத்தில் திருநர்கள் நடத்தப்படும் விதம் மிகவும் கொடூரமானது. பெற்றோர்களே தன்னை வீட்டில் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்று எனது இரயில் பயணத்தின்போது ஒரு திருநங்கை என்னிடம் கூறினார். மனமுதிர்ச்சி அடைய இம்மாதிரியான அறிவியல் விளக்கங்கள் அதிகமாகப் பதியப்பட வேண்டும்.

இன்று நம்மிடையே மிகவும் பரவலாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மாரடைப்பு, புற்றுநோய், குடிப்பழக்கம், புகைபிடித்தல் மற்றும் சிறுநீரகக் கல் போன்ற நோய்கள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு விதமான நோய்களைப் பற்றி விளக்குவதால் புத்தகத்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் படிக்கலாம்.

பிற்சேர்க்கையாக கலைச் சொல் அட்டவணை இணைப்பு, வார்த்தைகளுக்கு தவறான அர்த்தங்களை கற்பிதம் செய்துவிடாமலிருக்க செய்யப்பட்டிருக்கும் ஒரு நல்ல முயற்சி. மேலும், சொல்லப்பட்டிருக்கும் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் விதமாக தக்க சான்றுகள் இணைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

ஆங்காங்கே சில இடங்களில் ஆங்கில மூலத்திலிருந்து அப்படியே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பது நெருடலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. படங்கள் அப்படியே வலைத்தளங்களிலிருந்து எடுத்தாளப்பட்டிருப்பது தவிர்த்து, தமிழ் விளக்கங்களுடன் மறுஆக்கமோ அல்லது புதிதாக விளக்கப் படங்களை உருவாக்கி சேர்த்திருக்கலாம். புத்தகத்தின் பொழிவை சிதைக்காமல் இருந்திருக்கும். சில இடங்களில் பாடப்புத்தகத்தைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இவற்றைத் தவிர்க்க, சிறு உதாரணங்களுடனும், சிறிய சம்பவங்களின் மூலமும் விளக்கியிருந்தால் சொல்லவரும் விசயத்தைப் பற்றிய புரிதலை அதிகப்படுத்தியிருக்கும்.

புத்தகத்தின் முன்பகுதியில் உள்ள ‘என் நன்றி உரை’யில் எழுதப்பட்டுள்ள சுய புராண சமாசாரங்கள் கொஞ்சம் ஓவராகப்படுகிறது. தான் எங்கு பிறந்தேன், எந்தத் தெருவில் குடி பெயர்ந்தேன், அந்த சம்பவம் எந்த நாளில் நடந்தது என்று வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் எழுதப்படவேண்டிய விசயங்களை மிகவும் விரிவாக சொல்லியிருப்பதைத் தவிர்த்து புத்தகத்தின் நோக்கம், உருவான விதம், எழுதும்போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்திருக்கலாம். ஏனெனில், மனித நோய்கள் பற்றி எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகத்தைப் பற்றிய சிறு குறிப்பைக் கூட அதில் காணவில்லை.

மனித நோய்களை மிக நெருக்கமாக அறிமுகப்படுத்தியிருக்கும் இப்புத்தகம் அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று. இது நமக்காக, நம்மைப்பற்றி நாமே புரிந்துகொள்ள தமிழில் எழுதப்பட்ட ஒரு ஆவணம்.

தா. அருள் செல்வம்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-353-3.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: