Home » Novel » முத்துச் சிப்பி

முத்துச் சிப்பி

ஒரு சமூகம் அதன் முந்தைய தலைமுறையிடமிருந்து மரபு உரிமையாகப் பெற்று பேணிக் காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டிய பண்பாட்டுக் கலைகளில் சிற்பம், தொழில்நுட்பம், பழமொழிகள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவை மிக முக்கியமானவை. இந்தக் கலைகளை எத்தனை மாற்றங்கள் வந்தபோதும் தமிழ்நாட்டின் முக்கிய சமூகமான பரதவர்கள் எனப்படும் மீனவர்கள் காப்பாற்றி வந்துள்ளார்கள் என்பதே வரலாறு. அப்படிப்பட்ட மீனவர் வாழ்க்கையை பாண்டிய நாட்டுச் சரித்திரத்துடன் இணைத்து ‘முத்துச் சிப்பி’ என்று சரித்திர நாவலாக (இரண்டு பாகங்கள்) அழுத்தமாகப் படைத்திருக்கிறார் டாக்டர் எல். கைலாசம்.

muthu sippy 1

முத்துச் சிப்பி, எல்.கைலாசம், பேலஸ் பதிப்பகம், ரூ. 450

‘விரோதியின் மகளாக இருந்தாலும் அவள் வேறு உயிர். விரோதியின் உணர்வுகளிலிருந்து அவள் உணர்வுகள் வேறுபட்டவை. விரோதியின் மகளைத் துணைவியாக ஏற்பதில் தவறில்லை’ என்ற சாணக்கியரின் கருத்தே இந்தப் புதினத்தின் அடிப்படை. 15ம் நூற்றாண்டில் தென்னிந்தியா எதிர்கொண்ட ஐரோப்பிய நாகரீகத்தின் வரவும், அது மீனவர் வாழ்விலும், நம்பிக்கையிலும் ஏற்படுத்திய மாற்றங்களையும், அதன் காரணமாக நிகழ்ந்த அசம்பாவிதங்களையும், சமூக நிலைகளையும் கண் முன் விவரித்து பயணிக்கிறது நாவல்.

தென்பாண்டிநாட்டுக் கோடியில் கடலோரமாக அமைந்த சிப்பிகுளம் கிராமத்திலிருந்து துவங்கும் கதை, அத்தி, அங்கி, நீலன் (பராக்கிரம பாண்டியன்), அஞ்சாப்புலி, ஆரவளை, பெரோஸ், சுலோதையம்மாள், ஆசுவராமன், மாறன், குலசேகரன், பார்வதி, ராதை… என்று படிப்படியாய் விரிந்து, மறக்க முடியாத (மனதில் நிற்கும்) மீனவ சமுதாய மனிதர்களையும், பாண்டிய வம்சாவழியினரையும், தமிழக வரலாற்றையும் ஒன்றிணைத்து சுவாரஸ்யமாய் நகர்கிறது.

அங்கியின் முத்துமாலை கூட கதையில் ஒரு கதாபாத்திரமாக மாறி முத்துச்சிப்பியின் இரண்டு பாகங்களிலும் வலம் வருகிறது.

நீலன்தான் (பராக்கிரம பாண்டியன்) கதையின் நாயகன். அத்தியுடனான அவனது காதல், அஞ்சாப்புலியுடன் வெளிப்படுத்தும் வீரம், சமூக மக்களிடமான அன்பு, தியாகம், பொறுமை என்று பல்வேறு பரிமாணங்களோடு பரிணமித்தாலும், முதல் பாகத்தோடு நீலன் முடிவுறுவது (கொல்லப்படுவது) சற்று ஏமாற்றத்தைத் தருகிறது. அதே நேரம் மற்ற கதாபாத்திரங்களுடன் கதை அடுத்த தலைமுறை கண்டு பயணப்படுவது நல்ல ஆறுதல். எளிய மனிதர்களோடு பாண்டிய வம்சாவழியையும் இணைத்துச் செல்லும் கதையின் போக்கு வசீகரிக்கவே செய்கிறது.

மனிதர்களுக்குள் இருக்கவேண்டிய முக்கியமான குணம் அன்புதான் என்பதை ஓங்கிச் சொல்லியதோடு, நல்லோரைக் காத்து தீயோரைத் தண்டிக்கும் கடலம்மையிடம் இருக்கும் நம்பிக்கையே மீனவர் வாழ்வின் ஆதாரம் என்பதை மையச் சரடாகக் கொண்டு நிள்கிறது. அதற்குப் பின்னணியாய் மீனவர்களின் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், கலாசாரம், மீன்பிடித் தொழிலில் இருக்கும் அரசியல், கடற்கரையோர வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள், கடல் வழியே ஆன கடத்தல்கள், யுத்தத்தந்திரங்கள், இயற்கையோடு எதிர்கொள்ளும் அபாயங்கள், ஆட்சியாளர்களுடனான தொடர்பு… என்று பரந்துபட்ட வெளியில் விரிவதோடு, 1507 முதல் 1534 வரை பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் பற்றிய குறிப்புகளையும் தந்து கற்பனைச் சிறகுடன் கடல்புறாவாகப் பறக்கிறது நாவல்.

வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்து 18 ஆண்டுகளுக்குப்பின் 1516ம் ஆண்டு டோமினிக் என்ற சாமியார் போர்ச்சுக்கலில் இருந்து இந்தியா வர பிரியப்பட்டார். அவர் ‘இந்திய மொழிகளைக் கற்று வந்தால்தான் இந்திய மக்களுடன் பேச முடியும்’ என நினைத்தார். அதற்காகவே அவர் தமிழையும் மலையாளத்தையும் கற்றுக் கொண்டார் – போன்ற சரித்திர விவரங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன.

மீன்பிடி தொழிலில் புழங்கும் சொற்களைக்கொண்டு நீளும் வர்ணனைகளும், வசனங்களும் ஆரம்பத்தில் தடுமாற வைத்தாலும் போகப்போக பழகிவிடவே செய்கிறது. (மச்சம் – மீன், மாசா – அலை, துளவை – துடுப்பு, தாவுகடல் – ஆழ்கடல், மடி – வலை, ஆலாத்து – கயிறு).

அயராத உழைப்பும், எளிமையும், கற்பு நெறியும் கொண்ட மீனவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை தெளிவாகக் காட்டுவதோடு, கதை நடக்கும் காலம் 500 வருடங்களுக்கு முன்பு என்பதால், அந்தக்காலப் பின்னணிக்கேற்ற தொய்வில்லாத நடை. அதேசமயம் விறுவிறுப்பான சரித்திர நாவல்களுக்கே உரித்தான பெரிய பெரிய வர்ணனைகளும், சிறிய சிறிய வசன வீச்சுகளுமாக (‘சமையல்ல எத்தனை சாமர்த்தியம் இருந்தாலும் கடல் தண்ணீல சமைக்க முடியுமா?’) நீண்டு பாண்டிய நாட்டு வரலாற்றை முழுவதுமாய் படிக்கத்தூண்டும் ஆர்வத்தை விதைக்கிறது நாவல்.

சரித்திரப்ரியர்களை விரும்பிப் படிக்க வைக்கும் நாவல்.

ஸ்ரீநிவாஸ் பிரபு

 

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: