Home » Poetry » உண்மைக்குத் திரை ஏது?

உண்மைக்குத் திரை ஏது?

நூலாசிரியர் பற்றி:

இந்த நூலின் ஆசிரியர் நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான, தமிழ் இசையை உலகமெங்கும் கேட்கக் காரணமான இசை உலகின் ராஜா இளையராஜா அவர்கள்தான். இவர் ஏற்கெனவே சில நூல்கள் எழுதியுள்ளார். அதை வாசித்த அனுபவத்தால் இந்த நூலையும் படிக்க ஆர்வம் வந்தது. இது பத்து வருடங்களுக்கு முன் வந்த அவரின் எழுத்து.

கவிதையா? கட்டுரையா?

நூலின் தலைப்பைப் பார்த்ததும், திரைத்துறையில் அவரின் அனுபவங்களை எந்த ஒளிவுமறைவு இன்றி எழுதியிருப்பார் போல என எண்ணித்தான் வரவழைத்தேன். ஆனால் புத்தகத்தைத் திறந்ததும் சின்ன அதிர்ச்சி. காரணம் இது கவிதை நூல்.

 


உண்மைக்குத் திரை ஏது?, இசைஞானி இளையராஜா, கவிதா வெளியீடு, ரூ. 40

இதில் உள்ளது கவிதையா என்ற குழப்பம் என்னைப்போலவே இளையராஜாவுக்கும் வந்திருக்கும் போல, அதனாலேயே அவரின் முன்னுரையில் “இது வசன கவிதையாக வடிக்கப்பட்டிருக்கிறது, கவிதை அல்ல! என நீங்கள் மறுத்தாலும் சரியே” என கூறுகிறார். எனவே இனி அவரை ஏதும் சொல்லமுடியாது.

இதில் “தூய மலர்”, “ஈஸ்வர ஷர்வ பூதானாம்” மற்றும் “என் இனிய உயிரே! மனமே!” என்ற மூன்று கவிதைகள் இடம் பெற்றுள்ளன. நான் பெரிய கவிதை ரசிகன் இல்லை, கவிதையை விமர்சிக்கும் அளவுக்கு தகுதியும் இல்லை. எனவே இந்த நூலில் நான் படித்ததில் சில வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன. அவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தூய மலர் :
காலை வேளையில் கடவுளுக்கு பூஜை செய்ய மலர் தேடி அலைவதுபோல அமைந்துள்ளது முதல் கவிதை. வாடிய மலர் வேண்டாம் என்று எண்ணி புதுமலர் வாங்க கடைக்குச் சென்றால் அங்கும் பூ இல்லை, அந்த இடத்தில் வரும் ஒரு வரி மிகவும் அருமையாக உள்ளது.

“கடைவீதி சென்றேன்
பூக்கடையே காத்திருந்தது
இன்னும் பூக்கள்
வரவில்லையாம்.”

வந்த பூ கூட நேற்று பறித்த மலர் என்பதால் அவர் மனம் வேண்டாம் எனச் சொல்ல, பூ வாங்காமல் செல்லும் இவரை பூக்கடைக்காரர் நக்கல் செய்யும் அழகை மிக அழகாகச் சொல்கிறார்.

“காலங்காத்தால
சரியான சாவுகிராக்கி
எனக்கு சிரிப்பு வந்தது!
அவனும்கூட சாவுகிராக்கிதானே?”

மரணம் என்பது அனைவருக்கும் பொதுவானது என அறிந்தும் மற்றவரை இப்படிக் கூறுவதை நாசூக்காக கோடிட்டுக் காட்டுகிறார். தனது தோட்டத்தில் பறித்த பூகூட தூய்மையானதாக தோன்றவில்லை இவருக்கு. அதனால் தனது மனதையே பூவாக்கி பூஜை செய்வதாகச் செல்கிறது இந்தக் கவிதை.

ஈஸ்வர ஷர்வ பூதானாம் :
ஈஸ்வர ஷர்வ பூதானாம் என்ற இரண்டாவது கவிதையில் சூரியனையும் அதனைச் சுற்றும் கோள்களையும் பற்றி எழுதியுள்ளார். இந்தக் கவிதை சூரியன் பார்வையில் இருந்து எழுதப்பட்டுள்ளது. கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் ஆன்மிகம் கொஞ்சம் ஆதங்கம் கலந்து எழுதப்பட்டுள்ளது.

பூமி மற்றும் இதர கோள்கள் சூரியனிடம் இருந்து பிரிந்ததையும், அதன் சுற்றுவட்டப் பாதைகள் அதன் குணநலன்கள் என அனைத்தையும் அழகாகக் குறிப்பிடுகிறார். அமாவாசையன்று ஈன கடல்கள் உள்வாங்குகிறது, நிலா ஒளிர காரணம், இரவு பகல் ஏன் தோன்றுகிறது என சின்னச் சின்ன விஷயங்களை சிறு சிறு வரிகளில் சொல்லியுள்ளார்.

அணு சக்தி பற்றியும் இதில் வருகிறது. ஆக்க சக்தியான இது அழிக்கும் சக்தியாகவும் உள்ளது என்ற மனக்குமுறலை கீழ்க் கண்ட வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

“மனித இனம்
காட்டுமிராண்டியாக வாழ்ந்தபோது
அவன் ஆயுதம்
அடுத்தவர்களை மட்டுமே தாக்கும்
ஆனால் இந்த அணு ஆயுதமோ
உபயோகப்படுத்துகின்றவர்கள்
யாராக இருந்தாலும்
அவர்களையும்
சேர்ந்து தாக்கும்.”

மற்றொன்று…
“நம் அழிவுக்குக் காரணம்
நாமே” என்று
தெரிந்துகொள்ளக்கூட இயலாமல்
மனித இனம்
மறைந்துவிடும்.”

என் இனிய உயிரே! மனமே! :
இந்தக் கவிதை கடவுளைத் தேடும், உணரத் துடிக்கும் ஒரு சாதாரண பக்தனின் பார்வையில் இருந்து எழுதப்பட்டுள்ளது. பக்தனாக தன்னையே உருவகப்படுத்திக்கொள்கிறார். பக்தி எவ்வளவு முக்கியமோ அந்த அளவு கல்வியும் முக்கியம் என சொல்கிறார்.

அவரது குருவான ரமண மகரிஷியைப் பற்றியும் இடையில் சொல்கிறார். இதில் பல வரிகள் இருந்தாலும் அதில் வரும் ஒரு வரி இப்போது அவரின் வாழ்க்கைக்கே பொருந்திவருகிறது போல் தோன்றியது. ஒருவேளை இதைத்தான் தீர்க்க தரிசனம் என சொல்வார்களோ?

“பையன்
தலைக்கு மிஞ்சிப்
போய்விட்டால்
தட்டிக் கேட்பது
கஷ்டமல்லவா?”

இந்த வரி படிக்கும்போது யுவன் சங்கர் ராஜா ஏனோ மனதில் வந்துபோகிறார்.

முடிவாக…
எனக்கு இந்த நூல் என்னவோ 100% திருப்தி தரவில்லை. காரணம் இது முழுமையான கவிதையாகவோ அல்லது கட்டுரையாகவோ இல்லை. இரண்டுக்கும் நடுவே உள்ளது. இதில் சுனாமியைப் பற்றி 1997லேயே எழுதிவிட்டேன் என இளையராஜா சொல்லியுள்ளார். ஆனால் நான் படித்தவரை அப்படி ஒரு செய்தி இதில் வந்ததாகத் தெரியவில்லை. (அமாவாசையன்று கடல் உள்வாங்கும் என்று சொன்னதைச் சொல்லியுள்ளாரா என தெரியவில்லை!) முன்னுரையில் “இறைவனடி” இளையராஜா என போட்டுள்ளனர். இது சரியான பதமா? உயிருடன் உள்ள ஒருவரை அப்படிப் போடலாமா என தெரியவில்லை.

ஆனால் இதைப் படித்த நண்பன் “ஆஹா, ஓஹோ” என்றான். இது படிப்பவரின் ரசனையைப் பொறுத்து மாறும். எனவே படித்துப் பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள்.

ராஜபாட்டை ராஜா

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0000-096-4.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: